இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

ஆண்டவரின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழா

நற்கருணை இயேசுவின் பிரசன்னமா? அல்லது சாத்தானின் பிரசன்னமா? நமது உள்ளம் தெளிந்த நீரோடையா? அல்லது அழுக்குகள் நிறைந்த சாக்கடையா?

இணைச்சட்ட நூல் 8:2-3, 14-16
1 கொரிந்தியர் 10:16-17
யோவான் 6:51-58

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே எல்லோரும் நன்றாக இருக்கின்றீர்களா? கடவுள் இருக்கின்றாரா? இல்லையா?

ஒரு முறை ஒரு குமார் என்ற மிகப்பெரிய பணக்காரர் ஒரு முடிவெட்டும் கடைக்குச் முடிவெட்டச் சென்றார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது இந்த முடிவெட்டும் நபர் அந்த குமாரிடம் கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? என்று கேட்டார். அதற்கு அந்த பணக்காரர் கடவுள் உண்மையாகவே இருக்கிறார் என்றார். ஆனால் அந்த முடிவெட்டும் நபர் கூறினார் நிச்சயமாக கடவுள் இந்த உலகத்தில் இல்லவே இல்லை. அவர் இருந்தால் உலகில் எப்படி பஞ்சம், பட்டினி, சாவு, சண்டைகள், இருக்கும். எனவே கடவுள் இவ்வுலகில் இல்லையென்றார். சிறிது நேரம் கழித்து அழுக்கு நிறைந்த தலையுடன் ஒரு பிச்சைக்கரார் அவ்வழியாகச் சென்றார். இந்த பணக்கரார் முடிவெட்டுபவரிடம் இவ்வுலகில் முடிவெட்டுபவர்கள் ஒருவர் கூட இல்லை என்றார். அதற்கு அவர் அதெப்படி சொல்ல முடியும். இங்கு நான்தான் முடிவெட்டும் நபர் என்னைத் தேடி தான் நீங்கள் வந்துள்ளீர்கள். இது தெரியாமல் முடிவெட்டுபவர்கள் இல்லை என்று உங்களால் எப்படி சொல்ல முடியும் என்று கேட்டார். அதற்கு அந்த குமார் அவரைப் பார்த்து அதோபாரும் அந்த பிச்சைக்காரன் எவ்வளவு அழுக்குகள் நிறைந்து, முடிகள் வளர்ந்து மிகவும் அசிங்கமாக இருக்கின்றான். முடி வெட்டுபவர் இருந்திருந்தால் நிச்சயம் இவன் இப்படி இருக்க மாட்டான் என்றார். அதற்கு அந்த முடி வெட்டுபவர் குமாரைப் பார்த்து இதோ பாரும் முடிவெட்டும் கடைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் அந்த மனிதருக்கு தெரியவில்லை. முடிவெட்ட வேண்டும் என்று சொன்னால் அவர்தான் முடிவெட்டும் கடைக்குச் செல்ல வேண்டும் என்றார். அதற்கு குமார் அவரைப் பர்த்து அதைப்போலத் தான், கடவுளும் இவ்வுலகில் இருக்கின்றார். அவரைப் பார்க்க வேண்டும், அனுபவிக்க வேண்டுமென்றால் நீர்தான் அவரை அனுகிச்செல்ல வேண்டும். சாதராண இந்த அழுக்குகள் நிறைந்த முடிவெட்டுபவதற்கே நாம் முடிவெட்டும் கடையை நோக்கி செல்ல வேண்டுமென்றால் இந்த உலகையே படைத்த கடவுள் இருக்கின்றாரா? இல்லையா என்று பார்க்க, உணர வேண்டுமானால் நாம் அவரை நோக்கி செல்ல வேண்டும் என்று கூறினாராம் .

மீண்டும் அந்த முடிவெட்டும் நபர் உன்னுடைய கடவுள் எப்படிப்பட்டவர்? மிகப்பெரியவரா ? சிறிவரா? என்று கேட்டாராம்? அதற்கு குமார் என்னுடைய கடவுள் இந்த உலகத்தையே படைத்த பெரிய கடவுள். அவரால் தான் இவ்வுலகமே இயங்குகின்றது என்றார். மேலும் அவர் என்னுடைய கடவுள் மிகச் சிறிய கடவுளும் கூட. காரணம் இந்த உலகையே படைத்த கடவுள் என்னுடைய சிறிய இதயத்தில் தங்குவதற்கு தம்மையே தாழ்த்திக் கொண்டு அப்ப வடிவில் எனது இதயத்தில் தினந்தோரும் வந்து கொண்டிருக்கிறார் என்றாராம்.

இயேசுவில் பிரியமானவர்களே! இதைத்தான் நமது கத்தோலிக்க மறைக்கல்வி கூறுகிறது ‘அருள்சாதன முறையில் சிறப்பாக நற்கருணையில் கடவுளின் பிரசன்னம் இருக்கிறது’. நற்கருணையில் வீற்றிருக்கும் அவரது பிரசன்னம் தான் கிறிஸ்தவத்தின் ஆணிவேரக இருக்கிறது. கிறிஸ்து இல்லையென்றால் நற்கருணை கிடையாது, நற்கருணை இல்லையென்றால் கிறித்தவமே கிடையாது. ஆக இந்த நற்கருணை பிரசன்னம் தான் இன்றும் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆக இந்த நற்கருணை பிரசன்னத்தில் உண்மையிலே பிரசன்னமாயிருக்கும் தமதாண்டவர் இயேசவை உலகிற்க உண்மைப்படுத்த நமது தாயாம் திருச்சபையோடு ஒன்றினைந்து இன்று ஆண்டவரின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவை நாம் கொண்டாடுகின்றோம்.

நற்கருணையில் கடவுளின் பிரசன்னம் இருக்கின்றதா? இல்லையா?
ஒரு முறை பதிதன் (கடவுள் இல்லை என்று சொல்பவன்) ஒருவன் அந்தோணியாரிடம் வந்து திவ்ய நற்கருணையில் இயேசு நாதர் இல்லை என்று வாதித்தான். அவன் அந்தோணியாரிடம் ஒரு போட்டி வைத்தான். தான் ஒரு கழுதையை மூன்று நாள் உணவு எதுவும் கொடுக்காமல் பட்டிணி போடுவேன். மூன்றவது நாள் நான் கழுதையை தெருவில் நிறுத்தி அதற்கு முன் நான் புல்லு மற்றும் தண்ணிர் வைப்பேன். நீர் நற்கருணையை கொண்டுவாரும். கழுதை முதலில் புல்லு திண்றால் நற்கருணையில் இயேசு நாதர் இல்லை என்று அர்த்தம். மாறாக நற்கருணை முன் வணங்கினால் நான் ஒரு கிறிஸ்தவனாக மாறுவேன். என்றான். அதற்கு அந்தோணியார் சம்மதித்தார்.

மூன்று நாட்களுக்கு பிறகு அந்த வீதியில் மக்கள் பலர் கூடினர். அதில் கிறிஸ்தவர்களும் பதிதர்களும் இருந்தனர். கழுதை கொண்டு வரப்பட்டது அதற்கு முன் புல் போடப்பட்டது. அந்தோணியார் கையில் திவ்ய நற்கருணையுடன் பவணியாக வந்தார். என்ன ஆச்சரியம் மூன்று நாள் பசியாக இருந்த கழுதை தனக்கு முன் வைக்க பட்டு இருந்த புல்லு கட்டுகளை பாராமல் அந்தோணியார் வரும் திசையை நோக்கி முன்னங்கால்களை மடக்கி திவ்ய நற்கருணையை ஆராதித்தது. அந்த நிமிடமே அவன் கூறினான் இந்த ஐந்தறிவு கொண்ட கழுதைக்கு தெரிந்திருக்கிறது நற்கருணையிலே இயேசு உயிரோடு இருக்கின்றார் என்று ஆனால் கடவுளின் சாயலில் படைக்கபட்ட நான் கடவுள் இல்லை என்றல்லவா கூறினேன் என்று சொல்லி அந்த நிமிடத்திலே பதிதனும் மனம் திரும்பி நற்கருணை நாதரை ஆராதித்து வணங்கினானாம். பிரியமானவர்களே இன்று நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் நற்கருனையிலே கடவுளின் பிரசன்னம் இருக்கின்றதா? இல்லையா?

நற்கருணையிலே கடவுளின் பிரசன்னம் இருக்கிறது என்றால் நற்கருணையை நாம் பெற்றக் கொள்ளும் போது யாரை நாம் பெற்றுக் கொள்கின்றோம்? இயேசுவைப் பெற்றுக் கொள்கின்றோமா? அல்லது சாத்தானை பெற்றுக் கொள்கின்றோமா? இயேசு கிறிஸ்து தன்னுடைய ஆசீர்வாத மிக்க கரங்களால், ஆசீர்வதிக்கப்பட்ட அப்பத்தை எடுத்து இயேசு தாமே தான் விரும்பி தேர்ந்துகொண்ட தன்னுடைய சீடருக்கு கொடுக்கின்றார். அப்போது யார் உள்ளே நுழைந்தது? இயேசுவா? சாத்தானா?

யோவான் 13:26-27-ல் “இயேசு அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார், அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்”. இயேசு கொடுத்த அப்பத்திலே குடியிருந்தது சாத்தானா? கடவுளா? இயேசு கொடுத்த அப்பத்தில் சாத்தான் உள்ளே நுழைந்தான் என்றால் இன்று குருக்கள் கொடுக்கும் போது யார் உள்ளே நுழைவர்?

இயேசு தனது கரங்களால் கொடுத்த போது எப்படி சாத்தான் உள்ளே நுழைந்தான்?
அன்புக்குரியவர்களே உதாரணமாக மழைத் தண்ணீர் நல்ல தண்ணீரா? கெட்ட தண்ணீரா? நல்ல தண்ணீர் தான். இப்போது நீங்கள் இரண்டு பாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றிலே நல்ல தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள் மற்றொன்றிலே சாக்கடைத் தண்ணீரை கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். இவை இரண்டையும் மழைத் தண்ணீர் விழும்படியாக வெளியில் வையுங்கள். மழைத் தண்ணீர் நல்ல தண்ணீர் தான். அது நல்ல தண்ணீர் உள்ள பாத்திரத்தில் விழும் போது அது மீண்டும் நல்ல தண்ணீராக மாறுகிறது. அதுவே சாக்கடைத் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் விழும் போது மழைத் தண்ணீர் நல்ல தண்ணீராக இருந்தாலும்; அதுவும் சாக்ககடைத் தண்ணீராக மாறுகிறது. அதைப்போலத் தான் இயேசு தான் விருப்பப்பட்டு 12 சீடர்களை தேர்ந்தெடுத்தார். அதிலே ஒரு சீடர் சாக்கடைத் தண்ணீர் போல இருக்கின்றார். அதனால் தான் இயேசு தனது பரிசுத்த கையில் அப்பத்தை எடுத்துக் கொடுத்தாலும்; அது சென்று சேரும் இடம் சாக்கடையாக இருப்பதால் அங்கு சாத்தான் உள்ளே நுழைகிறான். இன்று நாமும் திவ்ய நற்கருணை வாங்கும் போது நம்மில் சாத்தான் நுழைகின்றானா? அல்லது இயேசு நுழைகின்றாரா? சிந்திப்போம். நம்முடைய உள்ளம் நல்ல தண்ணீர் நிரம்பிய பாத்திரமா? அல்லது சாக்கடை நிறைந்த பாத்திரமா?

நாம் ஏன் திருஉடல் திருஇரத்த பெருவிழாவைக் கொண்டாட வேண்டும்?

01.இது நமது ஆண்டவரின் அன்பின் வெளிப்பாடு

அந்த கம்பெனியிலே பணிபுரிந்து கொண்டிருந்தான் செல்வா என்ற ஒரு மனிதன். தாய்க்கு செல்வா தான் ஒரே மகன். இருவரும் ஒருவரையெருவர் மிகவும் அன்பு செய்தனர். காலச்சூழ்நிலையின் காரணமாக வெளிநாட்டில் உள்ள கம்பெனிக்கு தலைமை அதிகாரியாக பொறுப்பேற்று செல்வா தன்னுடைய தாயை விட்டு பிரிந்து வெளிநாடு செல்ல நேர்ந்தது. அந்த கம்பெனியிலே பிரிவு உபச்சார விழாவின் போது நிறைய மனிதர்கள் அவரைப் பாராட்டி நிறைய பரிசுப்பொருட்களை கொடுத்து வழியனுப்பினர். செல்வா அந்த அனைத்து பரிசு பொருட்கள் அனைத்தையும் தனது அம்மாவிடம் கொடுத்து விட்டு தனது தாயிடமிருந்து ஒரே ஒரு சேலையை மட்டும் கேட்டானம். அதற்கு அங்கிருந்தவர்கள் இவ்வளவு பரிசுப்பொருட்கள் இருக்க இந்த கிழிந்து போன சேலை எதற்கு என்று கேட்டார்களாம். அதற்கு செல்வா நான் பிறந்த பிறகு என்னை இந்த சேலையில் தான் கிடத்தினார்கள், இந்த சேலையை தொட்டிலாக்கி தினந்தோறும் நான் இதிலேதான் உறங்கி வந்தேன், எனக்கு தின்பன்டங்களை எனது அம்மா இந்த சேலையில் தான் முடிந்து வைப்பார்கள், இந்த சேலையும் எனது அம்மாவும் ஒன்று. இந்த சேலை என்னோடு இருந்தால் எனது அம்மா என்னோடு இருப்பதாக நான் உணர்வேன் என்றானாம். சாதாரண சேலை தனது தாயாரின் பிரசன்னத்தை அந்த மகனுக்கு உணர்த்தியது. அப்படியானால் இந்த உலகில் உள்ள அனைவரையும் அன்பு செய்யும் கடவுள் பல வழிகளில் தனது பிரசன்னத்தை வெளிப்படுத்துகிறார்.

உதாரணமாக உலகை படைத்த நொடி முதல் கடவுள் இந்த உலகின் மீது அன்பு கொண்டு வருகின்றார். தன்னுடைய அன்பை வெளிப்படுத்துவதற்கு கடவுள் பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறார். முதலாவதாக அன்பின் வெளிப்பாடாக மனிதனை தனது உருவிலும், சாயலிலும் தனது உயிர்மூச்சைக் கொடுத்து படைக்கிறார். தான் படைத்த மனிதன் தனக்கு கீழ்படியாமல் பாவம் செய்த போதும் அவனை மன்னித்து திருந்தி வாழ மீண்டும் ஒரு வாழ்வு கொடுக்கின்றார். மனிதன் தன்னுடைய சுயநலத்தால் கடவுளை விட்டு விலகிச்சென்ற போதெல்லாம் அவன் பின்னாலே நீதீத்தலைவர்கள், அரசர்கள், இறைவாக்கினர்களை அனுப்பி அவனை காத்து வந்தார். கடைசியாக தனது ஒரே மகனையும் கடவுள் இவ்வுலகிற்கு அனுப்பி மக்கள் மீது தான் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துகிறார்.

இந்த மகன் இயேசு கிறிஸ்து மக்களோடு மக்களாக இந்த உலகம் முடியும் வரை இருக்க ஆசைப்பட்டு தான் பாடுகள் படுவதற்கு முந்தின நாள் நற்கருணையை ஏற்படுத்தி இதோ உலகம் முடியும் வரை நான் உங்களோடு இருக்கின்றேன் என்று சொல்லி தனது அன்பை நற்கருணை பிரசன்னம் வழியாக வெளிப்படுத்துகிறார்.

02. இது நமதாண்டவர் இயேசுவின் ஆசை:-
இயேசுவின் ஆசை என்ன?

பிரியமானவர்களே இன்று ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான ஆசைகள் இருக்கின்றன. உங்களுடைய ஆசை என்ன?... இயேசுவின் ஆசை என்ன என்று யாராவது சொல்ல முடியுமா?

லூக்கா நற்செய்தி 22:15-ல் இயேசு தனது சீடர்களைப் பார்த்து ‘நான் துன்பங்கள் படுமுன் உங்களோடு இந்தப் பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவலாய் (ஆசையாய்) இருக்கிறேன்’ என்கிறார். இயேசு ஆசைப்பட்டது பாஸ்கா விருந்தைக் கொண்டாடுவது. எப்பொழுதெல்லாம் பாஸ்கா விருந்தை நாம் கொண்டாடுகின்றோமோ அப்பொழுதெல்லாம் ஆண்டவரின் ஆசையை நாம் நிறைவேற்றுகின்றோம். லூக் 22:19-20.

03. ஆண்டவரை நாம் நினைவு கூறுகின்றோம்:-
ஒவ்வொரு பாஸ்கா கொண்டாடத்திலும் நாம் ஆண்டவர் இயேசுவை நினைவு கூறுகின்றோம். இயேசு பந்தியில் இருந்த போது ‘அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, "இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" லூக் 22:19. என்றார். ஆக ஆண்டவரை நாம் நினைவு கூறவேண்டுமானால் ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் திருவுடல், திருஇரத்த விழாவைக் நாம் கொண்டாட வேண்டும்

04. புதிய உடன்படிக்கையை புதுப்பித்தல்
பிரியமானவர்களே பழைய ஏற்பாட்டிலே கடவுள் இஸ்ராயேல் மக்களோடு மோயீசன் வழியாக 10 கட்டளைகளைக் கொடுத்து தனது உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். ‘யாரெல்லாம் ஆண்டவரின் உடன்படிக்கையை கடைபிடிக்கின்றனரோ அவர்கள் அனைவரும் ஆண்டவரின் தனிச் சொத்துகளாக தேர்ந்து கொள்ளப்படுவர்’. விப 16:5. அதைப்போலவே புதிய ஏற்பாட்டில் இயேசு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார் அதாவது ‘விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்.

இந்த உலகம் அழியுமா? அழியாதா? எப்பொழுது அழியும்? அல்லது ஏன் அழியாது? இந்த உலகம் 2000-ல் அழியும் என்றனர் அழியவில்லை, 2002-ல் அழியும் என்றனர் அதிலும் அழியவில்லை, 2012-ல் அழியும் என்றனர் அதிலும் அழியவில்லை, நம்முடைய தலைமுறைகள் இருக்கும் வரை உலகம் அழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கின்றேன். காரணம் உலகம் அழிந்து போவதற்காக அல்ல மாறாக உலகம் வாழ்வு பெறுவதற்காகவே கடவுள் நம்மோடு உடன்படிக்கை செய்துள்ளார். விடுதலைப் பயணம் 20:1-6 – ல் "கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது...என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்" (விடுதலைப் பயணம் 20:1-6) . இதுகடவுள் மக்களோடு ஏற்படுத்திய உடன்படிக்கை.

அதாவது என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளை கடைபிடிப்போருக்கு 1000 தலைமுறைக்கும் நான் பேரன்பு காட்டுவேன். இன்று உலகத்திலே ஏதாவது ஒரு மூலையில் கடவுளை அன்பு செய்தும், அவரது விதிமுறைகளை கடைபித்தும் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அப்படியென்றால் அவர்கள் வழியாக 1000 தலைமுறைகள் அழியாது. எத்தனையோ புனிதர்கள், கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் அவர்கள் வழியாக 1000 தலைமுறைக்கு உலகம் அழியாது. இன்று நீங்களும், நானும் கடவுளை அன்பு செய்து, அவரது விதிமுறைகளை கடைபிடித் தோமானால் நம்மால் இன்னும் 1000 தலைமுறைகளுக்கு கடவுள் இரக்கம் காட்டுவார். பிறகு எப்படி உலகம் அழியும். அதனால்த் தான் இயேசு புதிய பாஸ்கா வழியாக நம்மோடு உடன்படிக்கை செய்துள்ளார். அதாவது ‘அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, "இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்றார். அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, "இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை”. ஆக இந்த புதிய உடன்படிக்கைதான் நாம் கொண்டாடும் திருப்பலி கொண்டாட்டங்கள்.

மேலும் இன்றைய நற்செய்தியில் “வாழ்வுதரும் உணவு நானே உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்ட போதிலும் இறந்தனர் உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்”. எனவே நீங்களும், நானும் ஏன் இந்த உலகம் முழுவதுமே வாழ்வதற்காக ஒவ்வொருநாளும் நாம் கொண்டாடும் திருப்பலி வழியாக கடவுள் தன் மகன் வழியாக இவ்வுலகை அன்பு செய்து காத்து பராமரித்து வருகின்றார். எனவே இந்த உலகம் வாழ்வதற்காக ஆண்டவரின் திருவுடல் திருஇரத்தப் பொருவிழாவைக் நாம் ஒவ்வொரு முறையும் கொண்டாடுகின்றோம்.

எப்படிப்பட்ட முறையில் ஆண்டவரின் திருவுடல் திரு இரத்தில் நாம் பங்கெடுக்க வேண்டும்?
இயேசுவில் பிரியமானவர்களே! மோயீசன் ஆண்டவரின் பிரசன்னதிற்கு செல்வதற்கு பயந்து தனது காலடிகளை கழற்றி வைத்துவிட்டு ஆண்டவரை வணங்கச் சென்றான். ஆனால் இன்று நற்கருணையிலே உண்மையிலும் உண்மையாக ஆண்டவர் பிரசன்னமாக இருக்கிறார் எனத்தெரிந்தும் எத்தனைபேர் தகுதியான முறையில் அவரை நாம் உட்கொள்கின்றோம். கத்தோலிக்க மறைக்கல்வி கூறுகிறது ‘பாவநிலையில் இல்லாமல், கடவுளோடும், தம் சகோதர சகோதரிகளோடும் நல்லுறவில் நிலைத்துள்ளவர்கள் மட்டும் தான் ஆண்டவரின் திருவிருந்தில் பங்கெடுக்க வேண்டும்’ எனக் கூறுகிறது.

ஆனால் இன்று உண்மையை மறைத்து பொய் பேசிய வாய், தீய வார்த்தைகளை உச்சரித்த நாக்கு, உதவி செய்ய மறுத்த கரங்கள், எட்டி உதைத்த கால்கள், மேலும் வெற்றிலை, பாக்கு, மற்றும் பலவிதமான போதைப் பொருட்களை குடித்துவிட்டு இன்று எத்தனை பேர் நற்கருணை வாங்குகின்றனர். ஆண்டவரின் பிரசன்னம் எனத்தெரிந்தும் ஏதோ கடையில் மிட்டாய் வாங்கி சாப்பிடுவது போல எத்தனை பேர் நற்கருணை கொண்டாட்டத்தில் பங்கெடுக்கின்றோம். இப்படிப்பட்ட தீய முறையில் நற்கருணை வாங்கினால் நமக்கு என்ன நிகழும் என திருத்தூதர் பவுல் கொரிந்தியர் எழுதிய திருமுகத்தில் கூறுகிறார் “நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும் வரை அறிவிக்கிறீர்கள். ஆகவே எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால், அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார். எனவே ஓவ்வொருவரும் தம்மையே சோதித்தறிந்த பின்பே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருக வேண்டும். ஏனெனில், ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு பருகுபவர் தம் மீது தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக் கொள்கிறார்”. 1கொரிந்தியர்:11:26-29.

பிரியமானவர்களே தகுதியற்ற முறையில் நாம் பங்கெடுக்கும் போது ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகின்றோம். இரண்டவாவதாக ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு பருகுபவர் தம் மீது தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக் கொள்கிறார்.

எனவே இன்று திருப்பலியில் பங்கேற்கும் நாம் நமது அனுகுமுறை எவ்வாறு உள்ளது என்று சிந்திப்போம்.

நற்கருணை ஆசீர்வாதம் மிக்கது அதை பெற்றுக்கொள்ளும் நமது உள்ளம் தெளிந்த நீரோடையா? அல்லது அழுக்குகள் நிறைந்த சாக்கடையா?