இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

மூவொரு இறைவனின் பெருவிழா

கடவுள் உங்களோடு இருப்பாராக!

விடுதலைப் பயணம் 34:4-6,8-9
2 கொரிந்தியர் 13:11-13
யோவான் 3:6-18

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் உங்கள் அனைவரையும் இத்திருப்பலிக்கு அன்புடன் வரவேற்கின்றேன். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்களா?

கடவுள் எத்தனை ஆட்களாக இருக்கின்றார்? கடவுள் மூன்று ஆள்களாய் இருக்கிறார். தந்தை கடவுள், மகன் கடவுள், தூய ஆவி கடவுள். மூன்று ஆட்களும் ஒரே கடவுளா? அல்லது வெவ்வேறு கடவுளா? விளக்கம் கூற முடியுமா?

ஒரு பங்கிலே ஒரு அன்பியத்தலைவர் மக்களுக்கு இவ்வாறாக விளக்கினார். மூவொரு கடவுள் ஒரு பெண்ணைப்போல அல்லது ஒரு ஆணைப்போல உள்ளவர். உதாரணமாக ஓர் ஆண் – மகனாகவும், தந்தையாகவும், மாமாவாகவும், தாத்தாவாகவும் இருப்பது போல அல்லது ஒருபெண் – மகளாகவும், தாயகவும், அத்தையாகவும், பாட்டியாகவும் என்று விளக்கினார். ஒரே ஆண் மூன்று பண்புகளை உடையவன். ஒரு கடவுள் மூன்று ஆட்களாக இருப்பது போல! இது சரியான விளக்கமா?

மேலும் தண்ணீரைப் போலவும் என்றார். தண்ணீரை குளிருட்டும் போது பனிக்கட்டியாக மாறுகிறது, சூடு படுத்தும் போது ஆவியாக மாறுகிறது. ஆனால் தண்ணீர் ஒன்றுதான். தண்ணீரைப் பார்க்க முடியும் ஆனால் ஆவியாகி செல்வதை நாம் பார்க்க முடியும் ஆனால் அது எங்கு செல்கிறது என்று பார்க்க முடியாது. இதுவும் சரியான விளக்கமா? முவொரு இறைவனும் அப்படித்தான் என்று விளக்கினார். இதுவும் சரியான விளக்கமா?


பிரியமானவர்களே இது இரண்டுமே தவறான விளக்கம். ஒரு மனிதன் மூன்று பண்புகளை உடையவன். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு மனிதனாக மாறுகிறான். தண்ணீர் ஒன்றுதான் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு பொருளாக மாறுகிறது. இது ஒரு தப்பறைக்கொள்கை.( The heresy of modalism)

மூவொரு கடவுள் ஒவ்வொரு காலத்திற்கும் மாறுபவர் அல்ல. என்றும் மாறாதவர். கணிதத்தில் 1+1+1=3 ஆனால் நமது கத்தோலிக்க விசுவாசக் கோட்பாடானது 1+1+1=1 ஆகும். ஒரே கடவுள் மூன்று ஆள்களாய் இருக்கிறார். அம்மூவரும் தந்தை, மகன் (இயேசு கிறிஸ்து), தூய ஆவி ஆவர். இவர்கள் மூவரும் மூன்று தனித்தனிக் கடவுள் அல்ல, மாறாக ஒரே கடவுள். கடந்த வாரத்தில் கடவுளை தெரிந்து கொண்டீர்களா? அல்லது அறிந்து கொண்டீர்களா? என்ற தலைப்பில் சிந்தித்தோம். இங்கு கடவுளை தெரிந்து கொள்ள, அறிந்து கொள்ள பல விளக்கங்களை மனிதன் தேடுகிறான்.

உதாரணமாக வில்லியம் யுங் என்று சொல்லக்கூடிய கன்னட நாட்டு எழுத்தாளர் தன்னுடைய தி ஷேக் “The Shack” என்ற நாவலில் தந்தை – ஆப்பிரிக்க, அமெரிக்க பெண்ணாகவும், மகனை – மத்திய கிழக்கு நாடுகளின் தச்சராகவும், பரிசுத்த ஆவியை – புரிந்துகொள்ள முடியாத ஆசிய நாட்டு பெண்ணாகவும் எழுதியிருக்கின்றார். பிரியமானவர்களே! கடவுள் என்பவர் அனைத்திற்கும் அப்பார்பட்டவர், உலகையே படைத்தவர், அவரை எந்த ஒரு விளக்கத்திலும் நாம் அடக்கிவிட முடியாது. அப்படி அடக்கி விட்டோம் என்று சொன்னால் நமக்கும் கடவுளுக்கும் வித்தியாசம் கிடையாது. எனவே கடவுளை அறிந்து கொள்வதைக் காட்டிலும், அவரை உணர்ந்து கொள்வது தான் சரியான விளக்கமாகும்.

இது எப்படியென்றால் புனித அகுஸ்தினார் வாழ்க்கையில் நடந்த சம்பவம் போல. ஒரு சிறுவன் கடற்கரை ஓரத்தில் ஒரு குழிபறித்து ஒரு சிப்பியில் கடல் நீரை முழுவதையும் அள்ளி அந்த குழியை நிரப்ப ஆசைப்பட்டது போல. கடல் நீர் முழுவதையும் ஒரு சிப்பியில் அள்ளுவது கடினம், அதையே ஒரு சிறிய குழிக்குள் நிரப்புவது இயலாத காரியம். அதைப்போலவே இந்த அண்ட சராசரங்களையும் படைத்த கடவுளை நமக்கு இருக்க கூடிய ஒருசிறிய மூளையில் அடக்கிவிட ஆசைப்படுவதும் இயலாத காரியம் ஆகும்.

இப்படியாக கடவுள் நமது சிறிய மூளைக்குள் அறிய முடியாதவராக இருந்தாலும் இன்றைய காலக்கட்டத்தில் நாம் எந்தவொரு செயலைச் தொடங்கினாலும், அல்லது முடித்தாலும் நாம் மூவொரு இறைவனின் நாமத்தில் தந்தை, மகன், தூய ஆவி என்று தான் ஆரம்பிக்கின்றோம் அல்லது முடிக்கின்றோம். உதாரணமாக திருப்பலி தொடக்கம், முடிவு, நம்முடைய செப வழிபாடுகள், நம்முடைய பயணங்கள், நாம் பெரும் ஆசீர்வாதங்கள் என அனைத்தும் தந்தை, மகன், தூய ஆவி என்று தான் தொடங்குகின்றது, முடிவு பெருகின்றது.

இப்படிப்பட்ட தருணத்தில் மூவொரு இறைவனின் பெருவிழா நமக்கு உணர்த்துவது என்ன? நம்மை காக்கின்ற கடவுள் நம்மோடு இருக்கிறார் என்று ஒவ்வொருநாளும் நம்மை தேற்றி வருகிறார்.

இவ்வுலகில் கடவுள் இருக்கின்றாரா? இல்லையா?
“கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது”என்று ஒருசிலர் நினைக்கின்றார்கள். “கடவுள் இருந்தாலும் சரி இல்லைனாலும் சரி, எனக்கு அதை பத்தி கவலையில்லை”என்று சிலர் கூறுகின்றார்கள். ஒருவர் கூறுகிறார் “கடவுள் இருக்கார்னும் நான் சொல்லலை, இல்லைனும் சொல்லலை. என்னை பொறுத்தவரை, நம்ம வாழ்க்கை நம்ம கையிலதான் இருக்கு, கடவுள் வந்து ஒண்ணும் செய்யப்போறதில்லை” என்கிறார். இன்று நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்? கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? இரண்டுக்கும் நீங்கள் எனக்கு விளக்கம் சொல்ல வேண்டும்.

கடவுள் இருக்கிறாரா இல்லையானு நீங்க என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா? அப்படி கடவுள் இருக்கின்றார் என்றால் அவர் இருக்ககூடிய இடம், அவர் இருக்கும் உலகம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அன்பு, அமைதி, சமாதானம், மகிழ்ச்சி, ஒற்றுமை, சந்தோசம் இவைகள் தானே இருக்க வேண்டும். ஆனால் இன்றைய உலகைப் பார்த்தோமானால் எங்கு பார்த்தாலும் சண்டைகள், போர், மரணம், வன்முறை, பிரிவினை, கொலை, கொள்ளை, தீவிரவாதம் என கணக்கிலடங்காத பல இருக்கின்றன. கடவுள் இருக்கின்றார் என்று சொன்னால் கடவுளுடைய உலகம் சந்தோசம் நிறைந்ததா? அல்லது கண்ணீர் நிறைந்ததா? மகிழ்ச்சி நிறைந்ததா? அல்லது துன்பம் நிறைந்ததா? யோவனுக்கு எழுதிய திருமுகத்தில் மார்த்தா இயேசுவிடம் “நீர் இங்கு இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” அப்படியானல் இயேசு இருக்குமிடத்தில் இறப்பு கிடையாது, இயேசு இருக்குமிடத்தில் அழுகை கிடையாது, இயேசு இருக்குமிடத்தில் துக்கம் கிடையாது. அப்படித்தான? அப்படியானால் இன்றைய உலகை பார்க்கும் போது கடவுள் இல்லை என்றுதான் தோனுகிறது. ஒத்துக் கொள்கின்றீர்களா?

ஒருமுறை வீடுசந்திக்கும் போது ஒருவர் என்னிடம் இதே கேள்வியைக் கேட்டார். கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? என்று. நான் அவரிடம் கடவுள் இருக்கின்றார் என்றேன். அப்படியானல் கடவுள் யார் பக்கம் இருக்கின்றார்? நல்லவர்கள் பக்கம் இருக்கின்றாரா? அல்லது கெட்டவர்கள் பக்கம் இருக்கின்றாரா? இருவர் பக்கமும் இருக்கின்றார் என்றேன். ( உங்களுடைய பதில்)

அப்போது அவர் கடவுள் நல்லவர்கள் பக்கம் இருக்கின்றார். நல்லவர்களும் கடவுள் பக்கம் இருக்கின்றனர் என்றார். மேலும் அவர் இந்த உலகத்தில் நல்லவர்கள் வாழ்கின்றனரா? அல்லது கெட்டவர்கள் வாழ்கின்றனரா? என்று கேட்டார். அதற்கும் நல்லவர்களும் வாழ்கின்றனர், கெட்டவர்களும் வாழ்கின்றனர் என்றேன். ஆனால் அவர் இந்த உலகத்தில் கெட்டவர்கள் மட்டும் தான் வாழ்கின்றனர் என்றார். காரணம் நல்லவர்களை கடவுள் இந்த உலகத்திலிருந்து சீக்கிரமாகவே எடுத்துக் கொள்கின்றார். உதாரணமாக நாம் கேள்விப்பட்டிருப்போம். இறந்தவர்களைப் பார்த்து ‘நல்ல மனுசன் சின்ன வயசுலே போயிட்டாரே, என்றும், வாழ்கின்றவர்களைப் பார்த்து ‘இவனுக்கெல்லம் சாவு வரமாட்டேங்கிதே’ என்கிறோம். இந்த செல்லாடல்களை கேள்விப்பட்டதுண்டா?

அவர் கூறுவதை வைத்து பார்க்கின்ற போது கடவுள் நல்லவர்களை சீக்கிரமாகவே தன்னுடன் இருப்பதற்கு அழைத்துக்கொள்கிறார். உதாரணமாக அசிசியார் வயது 45, குழந்தை தெரசம்மாள் -24, தோமினிக் சாவியோ -15, மரிய கொரற்றி – 12, லாரன்ஸ் -33, இன்னும் பல புனிதர்கள் குறைந்த வயதிலே கடவுளோடு இணைந்து விட்டனர். குறைந்த வயதில் நிறைய சாதித்துவிட்டு நம்மை விட்டு சென்றுவிட்டனர்.இன்னும் கொஞ்சக்காலம் நம்மிடையே இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ நன்மைகளை இவ்வுலகிற்கு செய்து இருப்பார்கள்.


அப்படியானால் இந்த உலகில் நல்லவர்களே கிடையாதா?
நல்லவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களை இவ்வுலகம் கண்டு கொள்வதில்லை என்றார்.

இன்று ஆலயம் வந்துள்ள கடவுள் முன்னிலையில் நம் அனைவரும் நல்லவர்களா? கெட்டவர்களா?

எங்களது வீட்டில் நாங்கள் சிறுபிள்ளைகளாக இருந்தபோது தினமும் ஜெபிக்க வேண்டும் என்பதற்காக எங்களது தந்தையை ஒரு கதையைக் கூறினார். ஒரு ஊரிலே மிகப்பெரிய கொலைகாரன். அவன் மிகவும் கொடுரமானவன். அவன் செய்யாத தவறுகளே இந்த உலகில் கிடையாது. ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு கொலை, கொள்ளை, திருட்டு என்று ஏதாவது செய்து வருவான். அவனைப் பார்த்த அனைவரும் பயந்து இருந்தனர். ஆனால் அவனிடத்திலே ஒரு நல்ல பழக்கம் உண்டு. அதாவது மாலையில் வீடு திரும்பியவுடன் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு இரவு படுக்க போகும் முன் ஒரு ஜெபமாலை சொல்வதுன்டு. தினமும் ஜெபமாலை ஜெபித்து விட்டுத்தான் அவன் தூங்க செல்வான். காலையில் கொலைகள், களவுகள் செய்வது இரவில் ஜெபமாலை சொல்வது என தினமும் வழக்கமாக கொண்டான். ஒருநாள் அவனும் இறந்து விட்டான். அவனடைய ஆன்மா விண்ணகத்திற்கு சென்ற போது அவனது தவறுகளை பார்த்துவிட்டு அவனை நரகத்திற்கு அனுப்பி விட்டார்களாம். அப்படி நரகத்திற்கு சென்று கொண்டிருந்த போது தன்னுடைய ஜெபமாலையை எடுத்து ஜெபிக்கலானான். அப்போது அன்னை மரியாள் அவனை பார்த்துவிட்டு அவனை அன்போடு வரவேற்றார்களாம். அவனுக்காக இயேசுவிடம் பரிந்து பேசி அவனை மோட்ச்சத்திற்கு அழைத்து வந்தாராம். எனவே தினமும் ஜெபிக்க வேண்டும் என்று எங்களது தந்தை எங்களுக்கு கூறினார்.

அப்படியானால் எவ்வளவு தவறு வேண்டுமானாலும் செய்யுங்கள் ஆனால் இரவு படுக்குமுன் ஜெபமாலை சொல்லுங்கள். நிச்சயம் உங்களுக்கு மோட்சம் உண்டு என நான் சொல்லவில்லை. இந்த கதை சிலருக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் அந்த கொலைகாரனைப் போலத் தான் நாமும் பல வேளைகளில் வாழ்ந்து வருகின்றோம். ஒரு நிமிடம் சற்று நம்மையே சற்று சிந்தித்து பாருங்கள். கோயிலுக்கு வரும்போது நாம் நல்லவர்கள் தான். ஆனால் கோயிலை விட்டு வீட்டுக்கு செல்லும் போது நல்லவர்களாகவா வாழகின்றோம். உதாரணமாக, பொய் சொல்லாமல் நம்மலால் வாழ முடிகிறதா, பிறரை குறை சொல்லாமல் வாழ முடிகிறதா? மற்றவர்கள் மீது பொறாமைப்படாமல் இருக்கின்றோமா? எத்தனை முறை தான், எனது, எனக்கு என்ற சுயநல போக்கில் வாழ்ந்து வந்திருகின்றோம், நம்மில் எத்தனை பேர் பகைவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டுள்ளோம், எத்தனை பேர் வீட்டில் உங்களது பெற்றோர்கள் சந்தோசமாக வாழ்கின்றனர், தீய வார்த்தைகள் பேசாமல், அடுத்தவர் பெயரைக் கெடுக்காமல் எத்தனைபேர் நல்லவர்களாக வாழ்கின்றோம். சிந்தித்து பார்ப்போம்? வெளியிலே மற்றவர்களுக்கு மத்தியிலே நாம் நல்லவர்கள் தான் ஆனால் கடவுளுக்கு முன்னிலையில் நாம் எப்படி?

பிரியமானவர்களே இன்றை முதல் வாசகம் கூறுகிறது “ஆண்டவரே எங்கள் கொடுமைகளையும், எங்கள் பாவங்களையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்”. நாம் அனைவருமே கொடுமைகளையும், பாவங்களையும் செய்து வாழ்கின்றோம். மேலும் 1யோவான் 1:8-10-ல் “பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர் நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யராக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும்”. அப்படியென்றால் நாம் கெட்டவர்கள் தானே!. கெட்டவர்களை கடவுள் ஏன் விட்டுவைக்க வேண்டும்?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கெட்டவர்களை கடவுள் ஏன் விட்டுவைக்க வேண்டும் எனக் கூறுகின்றார். அதாவது “தன் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வை பெறும் பொருட்டு” நமக்காக காத்திருக்கின்றார். நாம் திருந்தி வாழவேண்டும் என கடவுள் விரும்புகின்றார். இதைத்தான் இறைவாக்கினர் எசேக்கியேல் 33:11-ல் “தீயோர் சாக வேண்டுமென்பது எனது விருப்பமல்ல மாறாக அத்தீயோர் தம்தீய வழிகளினின்று திருந்தி வாழவேண்டும் என்பதே என் விரும்பம்” என்கிறார். பிரியமானவர்களே எத்தனை பேர் திருந்திவாழா ஆசைப்படுகின்றீர்கள்?

நாம் ஏன் திருந்தி வாழவேண்டும்?
நாம் திருந்தி வாழும்போது கடவுள் நம்முடன் குடிகொள்கிறார். இன்றைய இரண்டாவது வாசகத்தில் தூய பவுல் நம்மைப் பார்த்து “சகோதர சகோதரிகளே, இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வது மகிழ்ச்சியாயிருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்; என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள்; மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார். தூயமுத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக” என்கிறார். நாம் திருந்தி வாழும்போது மூவொரு இறைவன் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துகின்றார்.

கடவுள் நம்மோடு இருக்கின்றாரா இல்லையா என்பதை எப்படி நாம் அறிந்து கொள்வது?
01. மகிழ்ச்சியில்லாமல் வாழ்பவர்களிடத்தில் மூவொரு இறைவனின் பிரசன்னம் கிடையாது.
இன்றைய திருப்பலியின் தொடக்கத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்களா? என்று கேட்டேன். எத்தனை பேர் மகிழ்ச்சியோடு இருக்கின்றேன் என பதில் அளித்தீர்கள்? கடவுள் இருக்கும் இடத்தில் சேகம், துக்கம், கவலை கிடையாது. ஆனால் கடவுளின் சந்நிதியில் அமர்ந்துகொண்டு இன்னும் நம்மில் எத்தனை பேர் சோகமாக இருக்கின்றனர். ஒருமுறை உங்களுக்கு அருகில் இருப்பவரை திரும்பி பாருங்கள்!.

02. தவறான வாழ்க்கை வாழ்பவர்களிடத்தில் மூவொரு இறைவனின் பிரசன்னம் கிடையாது
இன்று நாம் பயணிக்கும் பாதை எப்படிப்பட்டதாக இருக்கின்றது. பாதை சரியானதாக இருந்தால் சரியான இடத்தை நாம் சென்றடையலாம். பாதை தவறானால் இலக்கும் தவறாகும். மனிதர்களை நாம் ஏமாற்றலாம் ஆனால் கடவுளை நாம் ஏமாற்ற முடியாது. மக்களுக்கு மத்தியில் நல்லவர்கள் போல நடித்து வாழ்வதை விட கடவுளுக்கு முன்னிலையில் நல்லவர்களாக வாழ முற்படுவோம்.

03. கேட்க செவியில்லாதவர்களிடத்தில் மூவொரு இறைவனின் பிரசன்னம் கிடையாது
இன்றைய உலகில் மிகவும் எளிமையான வேலை எது தெரியுமா? அறிவுரை கூறுவது தான் மிகவும் எளிமையான வேலை. அந்த அறிவரையைக்கூட இன்று செல்வதற்கு ஆட்கள் கிடையாது. அப்படியே அறிவுரை கூறினாலும் அதை கேட்க யாரும் விரும்புவதில்லை. ‘இதைப் படிக்காதீர்கள்’ என்று சொல்வதைத் தான் அதிகம் விரும்பி படிக்கின்றோம், ‘இந்த வழியில் செல்லாதீர்கள்’ என்று சொன்ன பிறகுதான் அந்த வழியில் அதிகம் பயணிக்கின்றனர், ‘இதைச் செய்யாதீர்கள்’ என்று கூறிய பிறகுதான் அதிகம் செய்கின்றோம். அப்படியென்றால் எத்தனை பேர் நல்ல அறிவுரைகளுக்கு செவிசாய்க்கின்றோம். காதுகள் இருந்தும் கேட்க மனமில்லாமல் வாழ்பவர்களிடத்தில் கடவுள் குடியிருப்பதில்லை.

04. மன ஒற்றுமை இல்லாதவர்களிடத்தில் மூவொரு இறைவனின் பிரசன்னம் கிடையாது
‘ஒற்றுமையே பலம்’, ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்றெல்லாம் நாம் படித்திருந்தாலும் எத்தனை குடும்பங்களில் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். திருமணம் முடிந்த கையோடு தனிக்குடும்பம் செல்வதைத் தான் அதிகம் விரும்புகின்றனர். ஒரே வயிற்றில் ஒட்டி பிறந்த சகோதர சகோதரிகளிடத்திலே மன ஒற்றுமை கிடையாது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை கிடையாது, கூட்டுக் குடும்ப வாழ்க்கை அருங்காட்சியகத்தில் பார்க்கும் காட்சிப் பொருளாகி விட்டது. ஆனால், மூவொரு இறைவன் மூன்று ஆட்களாக இருந்தாலும் அவர்களுக்குள் வேறுபாடு கிடையாது. இன்று அவ்விழாவைக் கொண்டாடும் நாம் நம்மிடையே ஒற்றுமை இருக்கின்றதா என சிந்தித்து பார்ப்போம். மன ஒற்றுமை இல்லாதவர்களிடத்தில் மூவொரு இறைவனின் பிரசன்னம் கிடையாது

05. அமைதியில்லாமல் வாழ்பவர்களிடத்தில் மூவொரு இறைவனின் பிரசன்னம் கிடையாது
நம்முடைய இறைவன் அமைதியின் இறைவன். அவர் மனிதராக பிறக்கும் போதே ‘உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக’ என்று அமைதியை கொண்டு வந்தவர் தான் நம்முடைய இறைவன். அவர் உலகில் வாழ்ந்த போது அமைதியைப் பற்றி போதித்தார், இறந்து உயிர்த்த பிறகு அவர் முதன் முதலில் தனது சீடர்களை உங்களுக்கு அமைதி உண்டாகுக என்று வாழ்த்தியவர் நம் இறைவன். அவரைப் பின்பற்றி வரும் திருச்சபையும் அமைதியை நிலைநாட்ட பல முயற்சிகளை செய்து வருகிறது. உதராணமாக நமது திருத்தந்தை கடந்த வியாழக்கிழமையன்று அனைத்து மக்களையும் ஒரே ஒரு நிமிடம் அமைதிக்காக ஜெபிக்க நம் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். நம்மில் எத்தனை பேர் அமைதிக்காக ஜெபித்தோம். காரணம் நாம் வாழ்கின்ற இன்றைய சூழலில் குடும்பத்தில் அமைதி கிடையாது, மனதிலே, ஊர்களிலே, உலக நாடுகளிடையே அமைதி கிடையாது. கடைசியாக அமைதியின் இறைவனை பின்பற்றும் கிறிஸ்தவர்களிடத்திலேயும், கிறிஸ்தவ குடும்பங்களிடத்திலேயும் அமைதி கிடையாது. அமைதியில்லாமல் வாழ்பவர்களிடத்தில் மூவொரு இறைவனின் பிரசன்னமும் கிடையாது.

எனவே அன்புக்குரியவர்களே மூவொரு இறைவன் நம்மிடத்திலும், நம் குடும்பங்களிலும், நமது பங்குத் தளங்களிலும் இருக்கின்றாரா என சிந்தித்து பார்ப்போம். முதல் வாசகத்தில் மோயீசன் ஜெபித்தது போல நாமும் “ஆண்டவரே எங்கள் கொடுமைகளையும், எங்கள் பாவங்களையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்” என்று மன்றாடுவோம். மூவொரு இறைவன் நம்மையும், நமது குடும்பத்தையும் ஆட்கொண்டு வழிநடத்துவாராக! ஆமென்.