இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

தூய ஆவியானவரின் பெருவிழா

எதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றோம்? எதையெல்லாம் அறிந்து வைத்திருக்கின்றோம்?

திருத்தூதர் பணி 02:1-11
கொரிந்தியர் 12:3-7,12-13
யோவான் 20:19-23

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே எல்லோரும் நன்றாக இருக்கின்றீர்களா?
உங்களது பிறந்தநாள் தேதி தெரியுமா?
இயேசுவின் பிறந்த நாள் தேதி என்ன?
திருச்சபையின் பிறந்த நாள் எது?

அன்பிற்கினியவர்களே! இன்று நமது தாய்திருச்சபையின் பிறந்த நாள் விழாவையும், மூவொரு இறைவனில் மூன்றாம் ஆளாக இருந்து செயல்படும் தூயஆவியானவரின் பெருவிழாவை இன்று சிறப்பிக்கிறோம். எனவே உங்களது வாழ்க்கையின் துணைவரான பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்தி இத்திருப்பலிக்கு வரவேற்கின்றேன்.

இயேசுவில் பிரியமானவர்களே இன்று உங்களுக்கு எதுவெல்லம் தெரியும்? கொஞ்சம் பட்டியலிட முடியுமா? எனக்கு கனினி தெரியும், செல்போன் தெரியும், வாகனம் ஓட்ட தெரியும், படிக்க, பேச, எழுத தெரியும், உலக நாடுகள் இந்தியா, லண்டன், அமெரிக்கா…தெரியும், எனது பெற்றோரை தெரியும், இயேசு யார் என்று தெரியும், பரிசுத்த ஆவி தெரியும், மாதா தெரியும்….ஆக நாம் நிறைய தெரிந்து வைத்திருக்கிறோம். பாரட்டுகள். நன்றி!

இன்று எதையெல்லம் அறிந்து வைத்திருக்கின்றீர்கள்? சிந்திக்கவும். (பதில் தெரியவில்லை, இரண்டும் ஒன்றுதான…)

தெரிந்து கொள்வது என்றால் என்ன? அறிந்து கொள்வது என்றால் என்ன?

பிரியமானவர்களே இந்த தெரிந்து கொள்வதற்கும், அறிந்து கொள்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் உள்ளன. பல வேளைகளிலே நாம் நிறைய தெரிந்து வெத்திருக்கின்றோம். ஆனால் நாம் அறிந்து வைத்துள்ளது மிகவும் கொஞ்சம் தான். எதையெல்லாம் அறிந்துகொள்ள வேண்டுமோ அதையெல்லாம் நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம். எதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதையெல்லம் அறிந்து வைத்திருக்கின்றோம்.

தெரிந்து கொள்ளுதல் என்றால் என்ன?
தெரிந்துகொள்தல் என்பது தகவல் – Information. நமக்கு நிறைய தெரியும். நிறைய தெரிய வேண்டும். உதாரணமாக அமெரிக்க அதிபரின் பெயர் தெரியுமா? புர்க்கினபாசோ தெரியுமா? செல்போன் தெரியுமா? அந்த கடைக்கு வழிதெரியுமா? இவற்றைப்பற்றி தெரிந்தாலும் பிரட்சனையில்லை, தெரியாவிட்டாலும் பிரட்சனையில்லை. ஆனால் அறிந்துகொள்ளுதல் என்பது அப்படி கிடையாது.

அறிந்து கொள்ளுதல் என்றால் என்ன?
ஒரு செயலை, ஒரு நபரை, ஒரு பொருளை தெரிந்து கொள்ளவதற்கு பிறகு வருவது அறிந்துகொள்ளுதல். அதாவது ஒரு செயலையோ, ஒரு நபரையோ, ஒரு பொருளையோ அறிவுப்புர்வமாக சிந்தித்து அது யார்? எது? எப்படி என ஆராய்ந்த பிறகு வரக்கூடிய தகவலுக்கு பெயர்தான் அறிந்துகொள்ளுதல். உதாரணமாக யார் உனது பெற்றோர்? யார் உனது கடவுள்? எது உனது எதிர்காலம்? இப்படியாக இவற்றையெல்லாம் நாம் தெரிந்துகொள்ள கூடாது மாறக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இன்று நீங்கள் இயேசுவை தெரிந்து வைத்திருக்கின்றீர்களா? அல்லது அவரை அறிந்து வைத்திருக்கின்றீர்களா?

பிரியமானவர்களே இயேசு யார் என நாம் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றோம். இயேசு நாசரேத்துரில் பிறந்தவர், சிலுவையில் மரித்தவர், மூன்றாம் நாள் உயிர்த்தவர் என தெரிந்து வைத்திருக்கின்றோம் எப்படி இந்துக்கள், பிறமதத்தினரும் இயேசுவை தெரிந்து வைத்திருக்கின்றனரோ அதைப்போலவே. அப்படியால் பிறமதத்தினருக்கும், உண்மையாக கிறிஸ்தவர்களும் என்ன வித்தியாசம்.? இன்று நீங்கள் இயேசுவை தெரிந்து வைத்திருக்கின்றீர்களா? அல்லது அவரை அறிந்து வைத்திருக்கின்றீர்களா?

ஆண்டவர் இயேசுவையே நாம் தெரிந்து வைத்திருக்கிறோம் என்றால் எப்படி பரிசுத்த ஆவியை அறிந்துகொள்வது?

கடவுள் நமக்குப் பல திறமைகளைக் கொடுத்துள்ளார். அந்த திறமைகள் வழியாக நாம் நமது அறிவை வளர்த்துக் கொள்கிறோம். இந்த அறிவை வளர்ப்பதற்கு பல முறைகளை நாம் கையாளுகின்றோம் உதாரணமாக முதலிலே ஒன்றைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும், அதன் பிறகு அதை அறிந்து கொள்ள வேண்டும், மூன்றாவதாக அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிதலுக்கு பிறகு தான் உணர்வுநிலை பிறக்கின்றது. குறிப்பாக கடவுளை நாம் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டுமானால் அவரை உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஆனால் இன்றைய சூழலில் ஆண்டவனில் இருந்து அமீபா போன்ற சிறிய உயிரினங்கள் வரை அனைத்தையுமே நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம். அவற்றை அறிந்துகொள்வோ, புரிந்துகொள்ளவோ, உணர்ந்துகொள்ளவோ நாம் முற்படுவது கிடையாது. எனவே இன்று தூயஆவியின் துணையோடு தெரிந்துகொண்ட ஆண்டவரை, அறிந்து கொண்டும், அவரை உணர்ந்துகொள்ள முற்படுவோமா?

இயேசுவை ஆண்டவர் என யாரெல்லாம் கூறமுடியும்?
இந்த கேள்வியை ஒரு சிறுவனிடம் கேட்ட போது யாருக்கெல்லாம் பேசும் திறமை உள்ளதோ அவர்கள் அனைவரும் இயேசுவை ஆண்டவர் என கூறலாம் என்றான். இன்று நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்? இயேசுவை ஆண்டவர் என யாரெல்லாம் கூறமுடியும்? இன்றைய வாசகங்கள் வழியாக கடவுள் கூறுகிறார் ‘எவர் ஒருவர் தூய ஆவியால் ஆட்கொள்ள பட்டிருக்கின்றாரோ அவர் மட்டும் தான் இயேசுவை ஆண்டவர் என கூறமுடியும்’ 1 கொரி12:3. உதாராணமாக எலிசபெத் தூய ஆட்கொள்ளப்பட்டு அன்னை மரியாவைப் பார்த்து ‘ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?’ என்றார். சவுல் கிறிஸ்தவர்களை கொல்வதற்கு தமஸ்கு நோக்கி சென்ற போது ஆண்டவரின் ஆவி அவரை ஆட்கெள்கிறது. சவுலே சவுலே ஏன் என்னை துன்புறுத்துகிறாய் என்று கேட்டபோது சவுல் ஆண்டவரே நீர் யார்? எனக் கேட்கிறார். ஆம் அன்புக்குரியவர்களே தூய ஆவியனவர் யாரையெல்லாம் ஆட்கொண்டுள்ளாரோ அவர்கள் மட்டும் தான் உண்மையாக இயேசுவை ஆண்டவர் என கூற முடியும்.

தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்?
01. ஒற்றுமையாக, ஓரே மனநிலையில் இருக்க வேண்டும்:-
உடலின் உறுப்புகள் பலவாக இருப்பினும் இவையனைத்தும் ஒரே உடலில் பொருந்தி இருப்பது போல கிறிஸ்தவர்கள் நாம் அனைவரும் ஒரே மனநிலையில் ஒற்றுமையுடன் கூடியிருக்கும் போது தூய ஆவியால் ஆட்க்கொள்ள முடியும். உதாரணமாக பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள் திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள் அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர் தி.பணி 2:1-4. மேலும் இயேசு மத்தேயு 18:20-ல் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாக கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கின்றேன். அப்படியானல் எங்கெல்லாம் கிறித்தவர்கள் ஒன்றித்து இருக்கின்றனரோ அங்கெல்லாம் இயேசுவின் பிரசன்னம் இருக்கிறது. மாறாக எங்கெல்லாம் கிறித்தவர்கள் பிரிந்து இருக்கின்றனரோ அங்கெல்லாம் இயேசுவின் பிரசன்னம் கிடையாது, தூய ஆவியானவரும் அவர்களை ஆட்கொள்ள முடியாது.

இன்று நமது குடும்பமாக இருக்கட்டும், பங்காக இருக்கட்டடும், ஊராக, நாடாக இருக்கட்டும் எங்கு பார்த்தாலும் மக்கள் பிரிந்து கிடக்கின்றனர். இப்படி கிறிஸ்தவர்களாகிய நாமே பிரிந்து இருந்தால் எப்படி தூய ஆவியானவர் நம்மில் செயல்படுவார்.

அன்று ஒருநாள் கல்லறை திருவிழாவில் மறையுரை நிகழ்த்துவதற்காக ஒரு பங்கிற்கு சென்றிருந்தேன். எட்டு குருக்கள் நான்கு நான்கு பேராக இரண்டு இடங்களுக்கு திருப்பலிக்கு செல்வதற்கு தயாரகிக் கொண்டிருந்தோம். அந்த பங்குத்தந்தை எங்களை அழைத்து அந்த பங்கின் சட்டதிட்டங்களை எங்களுக்கு விளக்கி கூறினார்.

அதாவது அந்த பங்கிலே ஒரே ஒரு பங்கு ஆலயம் ஆனால் இரண்டு கல்லறைத் தோட்டங்கள். மேல் வகுப்பினருக்கு (உயர்ந்த ஜாதி) (எதிலே உயர்ந்தவர்கள் என்று எனக்கு தெரியாது) ஒரு கல்லறைஇ கீழ் வகுப்பினருக்கு ஒரு கல்லறை. இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் தான் திருப்பலி தொடங்க வேண்டும்இ ஒரே நேரத்தில் தான் மறையுரை முடிக்க வேண்டும், ஒரே நேரத்தில் தான் திருப்பலி முடிக்க வேண்டும், ஒரே நேரத்தில் தான் கல்லறைகள் மந்திரிக்க வேண்டும். அப்படி ஒருவேளை யாராவது முன்னதாக முடித்துவிட்டால் அங்கு பெரிய சண்டையே ஆரம்பமாகும். எனவே அந்த பங்குத்தந்தை எங்களது கைபேசியின் எண்களை குறித்துக் கொண்ட பிறகு நாங்கள் வெவ்வேறு இடங்களுக்கு திருப்பலிக்குச் சென்றோம்.

கல்லறைத்தோட்டம் அடைந்த பிறகு பங்குத்தந்தை எங்களுக்கு அழைபேசியில் திருப்பலி ஆரம்பிக்க வேண்டாம் சற்று நேரம் பொறுத்திருங்கள் என தகவல் அனுப்பினார். சிறிது நேரம் களித்து திருப்பலி ஆரம்பித்தது. மறையுரை நேரத்திலே மீண்டும் ஒரு தகவல் மறையுரை இங்கு முடியவில்லை எனவே உங்களது மறையுரையை நிறுத்த வேண்டாம் தொடர்ந்து மறையுரை நிகழ்த்தவும். நாங்கள் திருப்பலியை முடிக்கும் தருவாயில் இருந்தோம் மீண்டும் ஒரு தகவல் திருப்பலியை முடிக்க வேண்டாம் ஏதாவது ஜெப வழிபாடு நடத்துங்கள் என்று. மீண்டும் கல்லறைத் தோட்டம் மந்திரிப்பிற்கு ஒரு தகவல் வந்தது அதன் பிறகு மந்திரிக்க ஆரம்பித்தோம். இப்படியாக அன்றைய திருப்பலி அலைபேசி வழியாகதான் நடைந்தேறியது. இறந்து போய் கல்லறையில் அமைதியாக இருப்பவர்களுக்கு அமைதியான முறையில் கூட எங்களால் திருப்பலி நிறைவேற்ற முடியவில்லை. எந்த அளவிற்கு ஜாதி என்ற பெயரில் நாம் பிரிந்து கிடக்கின்றோம். ஏன் நமது பங்குத்தளங்களை எடுத்துக் கொள்ளுங்கள் பங்கில் உள்ள பக்த சபைகள் அனைத்தும் இணைந்து செயல்பட முடிகிறதா? திருவிழாக் காலங்களில் தேர் இழுக்கும் போது எத்தனை பிரட்சனைகள். ஆனால் கிறிஸ்தவர்கள் என்ற பெயர் நமக்கு தேவை. ஆனால் ஒற்றுமையாக வாழமாட்டோம். இப்படி இருந்தால் எங்கு தூயஆவியானவர் நம்மில் செயல்படுவார். அதனால் தான் என்னவோ காந்தியடிகள் நான் கிறிஸ்துவை விரும்புகின்றேன் ஆனால் கிறிஸ்தவர்களை அல்ல என்றார்.

பிரியமானவர்களே இன்று எத்தனை குடும்பங்களில் பிள்ளைகளும், பெற்றோர்களும், சேர்ந்து வாழ்கின்றனர். அப்படி சேர்ந்து வாழ்ந்தார்கள் என்று சொன்னால் ஏன் முதியோர் இல்லங்கள் பெருகிக் கொண்டே போகின்றன. இன்று நீங்கள் பெற்ற குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்க வேளையாட்களை நியமிக்கும் சூழலுக்கு தள்ளப் பட்டுள்ளோம், அல்லது நீங்கள் 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த உங்களது குழந்தைகள், குடும்பத்திலே வளர்வதற்குப் பதிலாக குழந்தைகள் காப்பகத்தில் வளர்கின்றனர். ஆக எந்த அளவிற்கு உறவுகளிளே விரிசல் உள்ளது. எனவே இப்படி வாழ்ந்தோமானால் உண்மையிலே இயேசு நமது வீட்டில் குடிகொண்றிருக்கிறாரா? அல்லது பரிசுத்த ஆவியின் செயல்பாடுகள் நம்மிடத்தில் உள்ளனவா? சிந்திப்போம்.

பரிசுத்த ஆவியினால் நாம் ஏன் ஆட்கொள்ளப்பட வேண்டும்?
உதாரணமாக 50,000 செலவு செய்து ஒரு மிக அழகான செல்போன் வாங்குகின்றீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அந்த போனில் சார்ஜ் இல்லையைன்றால் எதற்காகவாது அது பயன்படுமா? எவ்வளவு அதிகமாக விலை கொடுத்து நாம் வாங்கினாலும் அதற்கு சார்ஜ் மிகவும் முக்கியம். 1கோடி ரூபாய் செலவு செய்து மிகவும் அழகான கார் வாங்குகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். அதிலே எரிபொருள் பெட்ரோல் இல்லையென்றால் அந்த வாகனம் எதற்காகவாது பயன்படுமா? வாகனம் பயனுள்ளதாக வேண்டுமானால் அதற்கு எரிபொருள் அவசியம். அதைப்போலவே மண்ணுலகில் மனிதனின் வாழ்க்கை பயனுள்ளதாக அமைய வேண்டுமானால் பரிசுத்த ஆவி நமக்கு முக்கியம் தேவை. நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் ஆவியின் வழியாகத்தான் வெளிப்படுகிறது.

பரிசுத்த ஆவியின் செயல்பாடுகள் எந்த விதத்தில் உள்ளன?
ஆவியானவர் அனைத்தையும் புதிய படைப்பாக மாற்றுபவர் :-
ஆவியானவர் உலகம் தொடங்கும் முன்பே இருக்கின்றவர் என்பதை தொடக்கநூல் 1:2-ல் நாம் வாசிக்கின்றோம் 'மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்தத்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது’. மேலும் இறைவனின் தாய் அன்னை மரியாளின் வாழ்வில் தூய ஆவியானவரின் செயல்பாடுகளானது மிகவும் உன்னதமானது. திருத்தூதர் லூக்கா (1:26-38) இறைவசனங்கள் எடுத்துரைப்பது தூய ஆவியானவரின் அபிசேகத்தின் வழியாக உலக மீட்பரை உலகத்திற்கு கொடையாக கொடுக்க இறைவன் ஜென்மபாவம் இல்லாத கன்னியைத் தேடி நசரேத் நகரத்தில் வாழும் அருள்மிகப் பெற்றவராக திகழும் இளம் பெண்னை தேர்ந்தெடுக்கின்றார். 'தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழுந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும் ' என்று காண்கின்றோம். எனவே ஆவியானவர் அனைத்தையும் புதிய படைப்பாக மாற்றுபவர். அருளும்இ ஆற்றலும் நிறைந்து செயல்படுபவர்.

ஆவியானவர் பொது நன்மைக்காக செயல்படக் கூடியவர்
இன்றைய இரண்டாவது வாசகத்தில் ‘பொதுநன்மைக்காகவே தூய ஆவியானவரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது’ என்கிறது. உதாரணமாக இயேசுவின் இறப்புக்குப் பின் இயேசுவின் சீடர்கள் பயந்து, நடுங்கி பிரிந்து கிடந்தனர். இன்றைய நற்செய்தி வாசகத்திலே சீடர்கள் யுதர்களுக்கு அஞ்சி கதவுகளை முடி வைத்திருந்தனர். ஆனால் எப்போது தூய ஆவியை பெற்றுக் கொண்டனரோ பிரிந்து கிடந்த அனைவரும் ஒரே குழுவாக இணைந்து செயல்படத் தொடங்குகின்றனர். பயந்து இருந்த சீடர்கள் தைரியமாக இயேசுவைப்பற்றி போதிக்கின்றனர்.

இதைத்தான் தூய பவுல் 1 கொரிந்தியர் 12:8-10 தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே ஆவியார் அறிவுசெறிந்த சொல்வளத்தை அளிக்கிறார். உதாரணமாக கிறிஸ்தவ ஆசிரியர்கள் வெறும் புத்தகத்தில் உள்ள பாடத்தை மட்டும் கற்பிக்காமல் நல் ஓழுக்கங்களை தங்களது எடுத்காட்டான வாழ்வில் விளக்கும் போது ஒவ்வொரு வருடமும் எத்தணை நல்ல மாணாக்கர்களை எதிர்கால உலகத்திற்கு தயார் செய்ய முடியும். அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார். பெற்றோர்கள் தான் குழந்தைகளின் எதிர்கால நம்பிக்கையின் நங்கூரம். எத்தனைப் பெற்றோர்கள் பிள்ளைகளிடத்தில் கடவுளின் மீது உள்ள நம்பிக்கையை வளர்த்தெடுக்கின்றனர். அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணிதீர்க்கும் அருள் கொடையையும் அளிக்கிறார். உதாரணமாக மருத்துவமனையில் மருந்து அளிப்பவர் மருத்துவர் குணமளிப்பவர் இறைவன் என்ற வாசகங்களை நாம் பார்த்திருக்கின்றோம். எத்தனை கிறித்தவ மருத்துவர்கள் இலவசமாக ஏழைகளுக்கு மருத்துவம் பார்க்க தயாராக இருக்கின்றனர். பணத்துக்கு ஆசைப்பட்டு சுகபிரசவமே மறந்து போய்விட்ட சூழல் காணப்படுகிறது. இப்படியாக தூயஆவியார் ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலையும் இன்னொருவருக்கு இறைவாக்குரைக்கும் ஆற்றலையும் வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலையும் மற்றொருவருக்குப் பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றலையும் பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார். பிரியமானவர்களே கடவுள் கொடுத்துள்ள இத்தனை வரங்களும் தனிப்பட்ட நலனுக்காக அல்ல மாறாக பொதுநன்மைக்காவே ஆவியானவரின் செயல்பாடுகள் நம்மில் வெளிப்படுகின்றன.

பிரியமானவர்களே தூயஆவியானவர் நாம் செய்யும் எல்லா செயல்பாட்டிற்கும் கிரியா ஊக்கியாக இருக்கிறார். உலகத்தை புதுப்படைப்பாக மாற்றிய ஆவியானவர், தொடக்கக்கால திருச்சபையில் அனைவரையும் தனது கனிகளாலும், (அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம், பணிவு நயம், தாராள குணம், நிறை கற்பு - கலாத்தியர் 5:22-23) கொடைகளாலும் (ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், நுண்மதி, ஆற்றல், இறைப்பற்று, இறையச்சம் -எசாயா 11:2) மற்றும் வரங்களாலும் (ஞானம் நிறைந்த சொல்வளம், அறிவு செறிந்த சொல்வளம், இறை நம்பிக்கை, பிணிதீர்க்கும் அருள் கொடை, வல்ல செயல் செய்யும் ஆற்றல், இறைவாக்குரைக்கும் ஆற்றல், ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றல், பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றல் - 1 கொரிந்தியர் 12:8-10) நிரப்பிய இவர், இன்று திருவருட்சாதனங்களின் வழியாக நம் ஒவ்வொருவரையும் நிரப்பி வருகின்றார். இயேசு உயிர்த்த 50வது நாளில் சீடர்கள் அனைவரும் (பெந்தகோஸ்து) என்னும் தூய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டனர். அதைப்போலவே இன்று நாமும் தூயஆவியானவரின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இன்று ஆலயம் வந்துள்ள நம் அனைவரையும் அதே ஆவியானவர் தனது தனது கெடைகளாலும், வரங்களாலும் நிரப்ப மன்றாடுவோம்.

எனவே தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட வேண்டுமானால் நாம் இயேசுவை தெரிந்து வைத்திருந்தால் மட்டும் போதாது. மாறாக அவரை அறிந்து கொண்டும், புரிந்து கொண்டும், உணர்ந்து கொள்ள முற்படுவோமா!