இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா

உனது வீடு: பங்களாவா? ஓலைக் குடிசையா? தெரு வீதியா?

திருத்தூதர் பணி 01:1-11
எபேசியர் 1:17-23
மத்தேயு 28:16-20

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே எல்லோரும் நன்றாக இருக்கின்றீர்களா?
இன்று நாம் ஆண்டவர் இயேசு உயிர்த்து 40 நாட்கள் நிறைவு பெற்று இன்று விண்ணகம் சென்றதை நாம் சிறப்பிக்கின்றோம். இது விண்ணேற்றப் பெருவிழாவா? அல்லது விண்ணேற்பு பெருவிழாவா? இன்று நாம் கொண்டாடக் கூடியது ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா. (விண்ணேற்றம் என்பது செய்வினை) ஆகஸ்டு 15-ம் தேதி கொண்டாடுவது அன்னை மரியாவின் விண்ணேற்பு விழா. அதாவது ஆண்டவர் தாமாக விண்ணகம் சென்றார். அன்னை மரியாளோ விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர். எனவே உங்கள் ஒவ்வொருவருக்கும் விண்ணேற்றப் பெருவிழா வாழ்த்துக்கள்!.

ஆண்டவர் ஏன், எதற்காக விண்ணகம் சென்றார்?
யோவான் நற்செய்தி 1:14-ல் “வாக்கு மனிதரானார் நம்மிடையே குடிகொண்டார்.” என வாசிக்கிறோம். நம்மோடு குடியிருக்க வேண்டிய கடவுள் நம்மை விட்டுவிட்டு ஏன் விண்ணகம் செல்ல வேண்டும். (இயேசு விண்ணகம் சென்றால் தான் தூய ஆவியனவர் வருவார். எனவே விண்ணகம் சென்றார் யோவான் 16:7). (துணையாளரை அனுப்புவதற்கு) கடவுள் நமக்கு தேவையா? துணையாளர் நமக்கு தேவையா? கடவுள் நம்மோடு இருக்கும்போது துணையாளர் நமக்கு தேவைதானா? மேலும் இன்றைய நற்செய்தியில் “உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருக்கின்றேன்” என ஆண்டவர் கூறுகிறார். அப்படியிருக்க உலகம் முடியும் வரை நம்மோடு இருப்பேன் என சொல்லிவிட்டு அவர் ஏன் விண்ணகம் செல்ல வேண்டும்? (மக்களின் பதில்)

ஒருமுறை திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலே பேருந்துக்காக காத்திருந்த நேரம் அது. அங்கு அமர்ந்திருந்த ஒரு பிச்சைக்கரார் வழியில் போவோர் வருவோரை அழைத்து அவர்களிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அவர்களும் அதை கேட்டும் கேட்காதது போலவும் சென்று கொண்டிருந்தனர். நாங்கள் அந்த இடத்திற்கு வந்ததும் எங்களிடமும் பேச்சுக் கொடுத்தார். அப்போது அவர் எங்களிடம் தம்பிகளா எனக்கு நல்ல வயிற்று பசி அந்த ஓட்டலில் சென்று எனக்கு சாப்பாடு வாங்கி வர முடியுமா? என்று கேட்டார். சரி எனச் செல்லி எங்கள் சகோதரர் ஒருவர் சப்பாடு வாங்குவதற்காக சென்றார். அப்போது அவர் தம்பி என் பெயர் பாரதன் அந்த ஓட்டலில் சென்று பரதனுக்கு சாப்பாடு எனச் சொல்லுங்கள் அவர்கள் கொடுப்பார்கள் என அந்த சகோதரரை அனுப்பி வைத்தார். நாங்கள் அந்த மனிதரேடு பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தோம்.

அவர் தனது இருக்கைக்கு அருகில் ஒரு திருவிவிலியமும், பகவத்கீதையும் இருந்தது. நாங்கள் அவரிடம் ஐயா நீங்கள் கிறிஸ்தவரா? எனக் கேட்டோம். அதற்கு அவர் இல்லை என்றார். அப்புறம் இந்த திருவிவிலியம் எதற்கு என்று கேட்டோம்? அதற்கு அவர் தம்பி இந்த திருவிவிலியத்தை முழுவதுமாக மூன்று முறை படித்து முடித்துவிட்டேன். படிக்க படிக்க தேன் போல இனிக்கிறது என்றார். நாங்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த சகோதரர் உணவு வங்கி வந்து விட்டார். நாங்கள் அவரிம் 5ருபாய் கொடுத்து அவரை வைத்துக் கொள்ள சென்னோம். அதற்கு அவர் தம்பிகளா என்னிடம் பணம் நிறைய இருக்கிறது எனச்சொல்லி அந்த 5ருபாயை எங்களிடமே திருப்பி கொடுத்து விட்டு தம்பி நிங்கள் செய்த உதவிக்கு நன்றி என்றார். அதற்கு எங்கள் சகோதரர் ஒருவர் ஐயா உங்களிம் பணம் நிறைய இருக்கிறது எனச் சொல்கின்றீர்கள். பிறகு ஏன் பிச்சை எடுக்க வேண்டும்? உங்களது பணத்தை வைத்துக்கொண்டு ஒரு நல்ல வீடுகட்டி சந்தோசமாக இருக்கலாமே என்றார். அதற்கு அவர் ஒரு விநாடி யோசித்து விட்டு தம்பிகளா நீங்கள் கிறிஸ்தவரா? என்று கேட்டார். நாங்களும் ஆமாம் என்றோம். அதற்கு அவர் தம்பி திருவிவிலியத்தில் கடவுள் என்ன சொல்லி விண்ணகம் சென்றார் என்று எங்களிடம் கேட்டார். அதற்கு நாங்கள் பரிசுத்த ஆவியை நமக்கு அனுப்பி வைப்பதற்காக அவர் விண்ணகம் சென்றுள்ளார் என்றோம்.

அதற்கு அவர் நீங்கள் சொல்வது சரிதான் இருந்தாலும் இயேசு என்ன சென்னார் என்றால் யோவான் நற்செய்தி 14:1-3 ல் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்' என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்’ என்றார். அந்த பிச்சைக்காரர் எங்களைப் பார்த்து இயேசு நமக்கு உறைவிடங்கள் (இல்லங்கள் வீடுகள்) ஏற்பாடு செய்கிறேன் எனச் சொல்லி விண்ணகம் சென்றுள்ளார். தம்பிகளா விண்ணகம் தான் நமக்கு நிரந்தரம். மண்ணகம் அழிந்து போய்விடும். பிறகு ஏன் நாம் அழிந்து போகக் கூடிய இந்த உலகில் வீடுகள் கட்ட வேண்டும், சொத்துக்கள் சேர்க்க வேண்டும். இப்போது நான் விவிலியம் படித்துக் கொண்டும், என்னால் முடிந்த அளவு நன்மை செய்து கொண்டும், கிடைப்பதை சாப்பிட்டு விட்டு நான் சந்தோசமாக இருக்கிறேன் என்றார். பல புத்தகங்களை புரட்டி படிக்க வேண்டிய ஞானத்தை அந்த பிச்சைக்காரர் ஒருசில விநாடிகளில் எங்களுக்கு தெளிவு படுத்தினார்.

இயேசுவில் பிரியமானவர்களே! கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ இரண்டு உலகங்களைப் பற்றி கூறுவார் அதாவது ஒன்று அக உலகம் அதாவது அது விண்ணுலகம். மற்றென்று புற உலகம் அது மண்ணுலகம். இவ்விரண்டிலும் அக உலகமே யதார்த்தமானது, உண்மையானது. அதுவே நம்பத்தக்கது என்கிறார். புற உலகமானது அக உலகத்தின் பிரதி என்பார். எனவே மண்ணுலகமானது விண்ணுலகத்தினுடைய ஒரு பிரதி (Xerox Copy). அதாவது நாம் வாழும் இந்த மண்ணுலகமானது உண்மையானது ஆனால் நிலையானது கிடையாது. மாறாக விண்ணுலகமானது நிலையானது, உண்மையானது. எனவே விண்ணுலகம் தான் நமது தாய்வீடு. அங்குதான் நாம் அனைவரும் நிரந்தரமாக குடியிருக்கப் போகிறோம். இதைத்தான் தூய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 3:20 - ல் “நமக்கோ விண்ணகமே தாய்நாடு, இங்கிருந்து தான் நம் மீட்பரான இயேசு வருவார் என காத்திருக்கிறோம்” என்கிறார்.

ஆம் அன்புக்குரியவர்களே கடவுள் வடிவில் விளங்கிய இயேசு தம்மையே வெறுமையாக்கி நிலையான உலகத்தில் இருந்து நிலையற்ற இந்த மண்ணுலகத்திற்கு வந்தார். (கிறிஸ்து பிறப்பு) இந்த மண்ணுலகம் நிலையற்றது எனவே நிலையான உலகத்திற்கு தேவையான சொத்துக்களை சேமியுங்கள் என நமக்கு கற்பித்தார். “மண்ணுலகில் உங்களுக்கென செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும், துருவும் அழித்து விடும். திருடரும் அதை கன்னமிட்டு திருடுவர். ஆனால் விண்ணுலகில் நீங்கள் செல்வத்தை சேமித்து வையுங்கள். அங்கே பூச்சியோ, துருவோ அழிப்பதில்லை. திருடரும் கன்னமிட்டு திருடுவதில்லை” என்றார் மத் 6:19-20. மேலும் இயேசு தன்னுடைய போதனையோடு நிறுத்திவிடாமல் தனது வாழ்வு மூலமாக நமக்கு வாழ்ந்தும் காட்டினார். அதனால் தான் இயேசு இவ்வுலகில் வாழ்ந்த போது “நரிகளுக்கு பதுங்கு குழிகள் உண்டு, வானத்து பறவைகளுக்கு கூடுகள் உண்டு ஆனால் மனுமகனுக்கோ தலைசாய்க்க கூட இடம் இல்லை” (மத் 8:20) என இம்மண்ணுலகில் வாழ்ந்து வந்தார். கடைசியாக நமது தாய் வீடாகிய விண்ணகத்திற்கு திரும்பி விட்டார். அதிலும் அவர் விண்ணகம் சென்ற போது நான் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன் எனச் செல்லிவிட்டு சென்றார். அக விண்ணகம் தான் நமது தாய் வீடு. அந்த விண்ணகத்திலே நமக்கு எப்படிப்பட்ட இல்லங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

ஒரு ஊரில் இருந்து ஒரு மிகப்பெரிய பணக்காரன், ஒரு பரம ஏழை, ஒரு மிகப்பெரிய கஞ்சன் இந்த மூவரும் இறந்த பிறகு நமது தாய்வீடாகிய விண்ணகம் சென்றனர். விண்ணகத் தூதர்கள் அந்த மூவரையும் அழைத்துக் கொண்டு விண்ணகத்தில் உள்ள எல்லா இடங்களையும் அவர்களுக்கு காண்பித்துக் கொண்டிருந்தார். தூரத்திலே மிகப்பெரிய ஒரு பங்களா சகல வசதிகளுடன் காணப்பட்டது. வானதூதர் அந்த பரம ஏழையை அழைத்து இது தான் உனது வீடு. இந்த வீட்டிலே நீ சந்தோசமாக இரு. ஏதாவது தேவை என்றால் என்னை கூப்பிடு என சொல்லிவிட்டு மற்ற இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றது.

இருவரும் மிகுந்த சந்தோசத்தோடு சென்றனர். காரணம் முதல் வீடே மிகவும் அழகாகவும், சகல வசதிகளுடனும் காணப்பட்டது. இதைப்போலவே தங்களுக்கும் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் சென்று கொண்டிருந்தனர். சற்று தெலைவில் சிறிய குடிசையானது தென்பட்டது. அந்த பணக்காரனைப் பார்த்து இதுதான் உனது வீடு. இங்கு நீ சந்தோசமாக இருக்கலாம் எனச் சொல்லி விட்டு அந்த கஞ்சனை அழைத்துக் கொண்டு சென்றது. பணக்காரனுக்கு அளவில்லாத கோபம் இருந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டு இந்த கஞ்சனுக்கு எப்படிப்பட்ட வீடு கிடைக்கும் என பார்ப்பதற்காக அவர்கள் பின்னாலே சென்றான். அந்த வானதூதர் சாலை ஓரமாக அந்த கஞ்சனை நிறுத்தி இது தான் உனது வீடு. இந்த வீதியிலே படுத்துக்கொள் என்றது. உடனே இருவரும் அது எப்படி, வரும்போது மூன்று பேர் வந்தோம் அந்த ஏழைக்கு மட்டும் அழகான வீடு, அந்த பணக்காரனுக்கு குடிசை வீடு, எனக்கு இந்த பிளாட்பாரமா என்று கேள்வி கேட்க தொடங்கினான்.

அப்போது அந்த வானதூதர் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். நீங்கள் கொடுத்த பணத்தை வைத்து எங்களால் இவ்வளவு தான் கட்ட முடிந்தது எனக் கூறினார். அந்த ஏழை மண்ணுலகில் பரம ஏழையாக வாழ்ந்தாலும் ஒவ்வொருநாளும் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் கற்பித்தான், தன்னால் முடிந்த அளவு தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்தான், பசியோடு வந்தவர்களுக்கு உணவும், தாகத்தோடு வந்தவர்களும் நீரும் கொடுத்து உதவினான் இப்படியாக அவன் விண்ணகத்திலே நிறைய செல்வம் சேர்த்தான். அவன் கொடுத்த பணத்தை வைத்து அவனுக்கு இவ்வளவு பெரிய வீடு எங்களால் கட்ட முடிந்தது. இந்த பணக்காரனோ தன்னிடம் செல்வங்கள் பல இருந்தும் ஏழைகளை கண்டுகொள்ளவே கிடையாது, தான், எனது, என் பிள்ளைகள் என சுயநல வட்டத்திலே வாழ்ந்தவர். ஒரே ஒருமுறை அந்த ஊரிலே ஆலயம் கட்டுவதற்கு கொஞ்சம் பணம் கொடுத்தான். இது தான் இவன் செய்த நல்ல காரியம். இவன் கொடுத்த பணத்தை வைத்து எங்களால் குடிசை வீடு தான் கட்ட முடிந்தது. ஆனால் நீயோ உன்னிடம் ஏராளமான செல்வங்கள் இருந்தும் மிகப்பெரிய கஞ்சனாக வாழ்ந்து வந்தாய். ஒரு சிறிய துரும்பைக்கூட மற்றவர்களுக்கு கொடுக்க உனக்கு மனமில்லை. அதனால் விண்ணுலகில் உனக்கான சொத்துக்கள் எதுவும் இல்லை. எனவே எங்களால் உனக்கு வீடுகட்ட முடியவில்லை. எனவே இந்த தெரு வீதிதான் உனது இல்லம் எனச் சொல்லிவிட்டு சென்றதாம்.

பிரியமானவர்களே உங்களுக்கு விண்ணுலகில் எப்படிப்பட்ட வீடு காத்திருக்கிறது? அழகு பங்களாவா? ஓலைக்குடிசையா? தெருவீதியா? சிந்திப்போம்.

இன்று இந்த மண்ணகத்தில் நம்முடைய சொத்தின் மதிப்பு என்னவாக இருக்கும்? எத்தனை பேருக்கு சொந்த வீடுகள் இருக்கின்றன? எத்தனை ஏக்கர் நிலம் உங்களிடம் இருக்கின்றது? வங்கிகளில் உங்களது சொத்தின் மதிப்பு எவ்வளவு இருக்கும்? இவையனைத்தும் நாம் இந்த மண்ணகத்திலே வாழ்வதற்கு நிச்சம் தேவைதான். அழிந்து போகக்கூடிய இந்த மண்ணுலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அன்றாடம் கஸ்டப்பட்டு உழைத்து சொத்துக்கள் சேர்கிறோம். அப்படியானால் அழியாமல் இருக்கும் விண்ணகத்திலே நாம் நிரந்தரமாக குடியிருக்க சொத்துக்கள் சேர்க்க வேண்டாமா? சிந்திப்போம்! மண்ணுலகில் உங்களுக்காக இருக்கும் சொத்துக்களை வைத்து விண்ணகத்தில் வீடுகள் கட்ட போதுமானதா? நிலையற்ற உலகில் சொத்துகள் தேவையா? அல்லது நிலையான விண்ணுலகத்தில் சொத்துக்கள் தேவையா?

ஆண்டவர் இயேசு நான் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன் எனச் சொல்லி சென்றுள்ளார். எப்படிப்பட்ட இடத்தை ஆண்டவர் நமக்கு தயாரித்து வருகிறார்?

இரண்டாவதாக ஆண்டவர் விண்ணகம் சென்ற போது சீடர்கள் விண்ணகத்தை பார்த்த வண்ணம் இருந்தனர்.
ஏன் சீடர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தனர்?

அண்ணந்து பார்ப்பது என்பது ஒருவித எதிர்பார்ப்பை நம்மில் தருகிறது. இயேசுவின் சீடர்களும் ஒருவித எதிர்பார்ப்போடு வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தனர். இன்றும் படைப்புக்கள் பலவும் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றன. உதராணமாக மரம், செடி, கொடிகள் மழையை எதிர்ப்பார்த்து வானத்தை அண்ணந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன. மக்களுக்கு எல்லாம் சோறு போடும் விவசாயி வானத்தை அண்ணந்து பார்த்து எப்போது நல்ல மழை பெய்யும் என பார்த்துக் கொண்டிருக்கின்றான். இன்று நாம் எதைநோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறோம்? நம்முடைய எதிர்பார்ப்பு என்ன?

என்னுடைய எதிர்பார்ப்பு
மனிதர்களை மூன்று இரகமாக பிரிப்பார்கள். ஒன்று கடந்த காலத்தை நினைத்துக் கொண்டே காலம் நகர்த்துபவர்கள். (நான் எப்படியெல்லாம் இருந்தேன். ஒருகாலத்துல நானெல்லாம்…) கடந்த காலத்தை நினைத்துக் கொண்டு நிகழ்காலத்தை தொலைத்து வாழ்பவர்கள். இவர்களால் எந்த பலனும் கிடையாது. இரண்டாவதாக இரகம் எதிர்காலத்தை நினைத்து கனவு காண்பவர்கள். (நான் இப்படி இருந்தால் எப்படி இருக்கும். இயேசுவைப் போல நானும் விண்ணகம் நோக்கி பறந்தால் எப்படி இருக்கும்), இவர்களின் எதிர்பார்ப்பு நல்லது தான். ஆனால் நிகழ்காலத்தில் அந்த எதிர்பார்ப்புக்கான எந்த முயற்சியையும் செய்யாமல் வாழ்வதால் எந்த பலனும் இல்லை. மூன்றாவது நிகழ்காலத்தை நிஜமாக வாழ்பவர்கள். ஒவ்வொரு நாளும் தங்களது கடமைகளை கருத்துடன் நிறைவேற்றுபவர்கள். இன்று நாம் எந்த இரகம். நம்முடைய இரகத்திற்கு ஏற்ப நமது எதிர்பார்ப்புகள் வேறுபடும்.

பலவேளைகளில் நம்முடைய எதிர்பார்ப்பானது நம்மை மிஞ்சியதாக இருக்கிறது. முடவன் பறக்க ஆசைப்பட்ட கதையாக பல மனிதர்கள் அவர்கள் எதிர்பார்த்தது கிடைக்காமலே இவ்வுலகை விட்டு சென்று விடுகின்றனர். அதனால் அவர்களால் இந்த மண்ணுலக வாழ்க்கையையும் அனுபவிக்க முடியவில்லை, விண்ணுலக வாழ்க்கையையும் அனுபவிக்க முடியவில்லை.?

அழியாத விண்ணுலகில் செல்வம் சேர்ப்பது நம்முடைய எதிர்பார்ப்பா? அல்லது அழிந்து போகும் மண்ணுலகில் செல்வம் சேர்ப்பது நமது எதிர்பார்ப்பா?

உங்களுக்கு எப்படிப்பட்ட வீடுகள் தேவை : பங்களாவா? ஓலைக் குடிசையா? தெரு வீதியா?