இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு

நான் இருக்கும் இடத்திலே நீங்களும் இருப்பீர்கள்

திருத்தூதர் பணிகள் 6:1-7
1 பேதுரு 2:4-9
யோவான் 14:1-12

உயிர்த்த இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே உங்கள் அனைவரையும் இத்திருப்பலி வழியாக சந்திப்பதில் மகிழ்கிறேன். எல்லோரும் நலமாக இருக்கின்றீர்களா?

என்னுடைய முதல் நன்றித் திருப்பலியின் போது எனது முன்னால் பங்குத்தந்தை இவ்வாறாக அவரது மறையுரையைத் தொடங்கினார். ஒருசில மனிதர்களால் அவர்களின் ஊருக்கு பெருமை வரும்
உதாரணமாக புனித சவேரியார், அப்துல்கலாம், வைரமுத்து, புனித சவேரியாரால் கோவாவிற்கு பெருமை, அப்துல் கலாமால் அவரது ஊருக்கு பெருமை வைரமுத்துவால்… அதேவேளையிலே ஒருசில ஊரால் அந்த ஊர்க்காரர்களுக்கு பெருமை வரும்.
உதாரணமாக மணப்பாறை (முறுக்கு) திருநெல்வேலி (அல்வா) ஏய் நான் திருநெல்வேலிக்காரன், நான் மதுரைக்காரன்…ஆக ஒரு மனிதரால் ஊருக்கு பெருமை, ஒரு ஊரால் ஒரு மனிதருக்கு பெருமை என்று சொல்லாம் எது எப்படியாக இருந்தலும் ஒரு குடும்பத்தில் இருந்து ஓருவர் குருவானவராக வந்தால் அந்த ஒரு குருவானவரால் அந்த குருத்துவத்திற்கு பெருமை, திருச்சபைக்கு பெருமை, அவருடைய சொந்த ஊருக்கு பெருமை, அவருடைய பெற்றோர்களுக்கு பெருமை, அவர் எங்கெல்லாம் பணித்தலத்திற்கு செல்கிறாரோ அங்கெல்லாம் பெருமை, கடைசியில் அவர் மரித்தாலும் விண்ணகத்தில் பெருமை. ஆம் அன்புக்குரியவர்களே எப்படி ஓர் யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று சொல்வது போல ஒரு குருவானவர் உலகத்தில் இருந்தால் அவர் இருந்தாலும் இறந்தாலும் பல்லாயிரம் பொன்களுக்கு சமம். இவ்வளவு விலைமதிக்குமுடியாத அளவிற்கு விளங்கும் குருத்துவத்திற்கு அடித்தளம் இறையழைத்தல் தான். இன்று நாம் இறையழைத்தல் ஞாயிரை சிறப்பிக்கிறோம்.

இன்றைய மூன்று வாசகங்களும் அழைப்பைப் பற்றியும், அதன் மேன்மையைப் பற்றியும் எடுத்துரைக்கின்றன. முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் தங்களுடைய நற்செய்திப் பணிக்கு உதவியாக எழுவரை நியமிக்கின்றனர். இந்த ஏழு திருத்தொண்டர்களும் திருத்தூதர்களோடு சேர்ந்து இறைப் பணியாற்றுகின்றனர். இரண்டாம் வாசகத்திலே கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டிடத்தின் மூலைக்கல்லாயிற்று என்ற நம்பிக்கைதரும் வார்த்தையை கொடுத்து “நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர்; அரச குருக்களின் கூட்டத்தினர். தூயமக்களினத்தினர்; அவரது உரிமை சொத்தான மக்கள். எனவே உங்களை இருளிலிருந்து தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்களது பணி” என கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் எப்படிப்பட்ட மகத்துவ மிக்கவர்கள் என தூய பேதுரு குறிப்பிடுகிறார். நற்செய்தி வாசகத்திலே தனது சீடர்களை பார்த்து நான் இருக்கும் இடத்திலே நீங்களும் இருப்பீர்கள் என தனது சீடர்களை தன்னோடு வைத்துக்கொள்ள விரும்புகிறார்.

இறையழைத்தல் என்று சொல்லும்போது கடவுள் நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அவரது பணிக்காகவும், அவரோடு கூடவே இருக்கவும் அழைக்கிறார். இன்று நம்மில் எத்தனை பேர் ஆண்டவரோடு இருக்க ஆசைப்படுகிறோம்? எத்தனைபேர் நமது பிள்ளைகளை ஆண்டவரின் பணிக்காக அனுப்புவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்? எத்தனை பிள்ளைகள் இறையழைத்தலை பெறுவதற்கு தகுதியுள்ளவர்களாக இருக்கின்றனர்? இன்றைய வாசகங்கள் வழியாக ஆண்டவர் நமது குழந்தைகளை அழைக்கிறார். குழந்தைகளை அனுப்புவதற்கு பெற்றேர்கள் தயாரா? பெற்றோர்கள் ஆசைப்பட்டாலும் நமது குழந்தைகள் அதற்கு தயாரா? சிந்திப்போம்.

இறையழைத்தலின் முக்கியத்துவம்
இறையழைத்தலின் முக்கியத்துவத்தை விவிலியம் முழுவதும் நாம் காணலாம். இறையழைத்தல் என்று சொல்லும் போது கடவுளின் அழைப்பை மட்டும் தான் இறையழைத்தல் என்கிறோம். கடவுள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தனக்கு தேவையான மனிதர்களை தனது பணிக்கொன கடவுளே தேர்ந்து கொள்கிறார். உதாரணமாக ஆபிரகாம், மோசே, சாமுவேல், இறைவாக்கினர்கள், என பல மனிதர்களை கடவுள் தேர்ந்துகொண்டார். தேர்ந்து கொள்ளப்பட்ட அனைவரையுமே மிகப்பெரிய கருவிகளாக கடவுள் மாற்றுகிறார். ஆண்டவர் ஆபிராமை நோக்கி அவரின் நாட்டிலிருந்தும் இனத்தவரிடமிருந்தும் புறப்பட்டு தான் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்ல கட்டளையிட்டார். அவ்வாறு செய்தால் ஆண்டவர் அவரை பெரிய இனமாக்கவும் அவருக்கு ஆசி வழங்கவும் வாக்களித்தார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார் . இன்று வரை விசுவாசத்தின் தந்தை ஆபிரகாம் என அழைக்கப்படுகிறார். ஒரு பெரிய இனமாகிய இஸ்ராயேல் குலத்தை வழிநடத்த கடவுள் மோசேவை தேர்ந்து கொண்டார், அரசர்களுக்கு அலோசகர்களாக ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் போன்ற மனிதர்களை தேந்தெடுத்து இறைவாக்கினர்களாக கடவுள் மாற்றுகிறார். கடவுளால் தாயின் கருவரையிலே முன்குறித்து வைக்கப்பட்டு அவரது குரலுக்கு யாரெல்லாம் செவிசய்த்தார்களோ அவர்களுக்கு மட்டும் தான் இந்த இறையழைத்தல் கிடைக்கும்.

இறையழைத்தலின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதற்காக கடவுள் தாமே மனிதராக இவ்வுலகிற்கு வருகிறார். இவரும் தனக்கு தேவையான மனிதர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாக தனியாக சென்று செபிக்கிறார். ஜெபித்து கடவுளின் திட்டத்தை முழுமையாக அறிந்த பிறகு தனது சீடர்களை தேர்தெடுக்கிறார். இன்றைய முதல் வாசகத்திலும் கூட திருத்தூதர்கள் தங்களுடைய நற்செய்திப் பணிக்கு உதவியாக எழுவரை நியமிக்கின்றனர். இந்த ஏழு மனிதர்களும் மக்கள் மத்தியிலே நற்சான்று பெற்றவர்கள், தூய ஆவியின் அருளையும், வல்லமையையும், ஞானத்தையும் பெற்றவர்கள். இவ்வாறு நல்ல மனிதர்களாக இருந்தாலும் கூட திருத்தூதர்கள் தங்களது கைகளை அவர்களின் தலைமீது வைத்து ஜெபிக்கின்றனர். அதன் பிறகுதான் இந்த ஏழு திருத்தொண்டர்களும் திருத்தூதர்களோடு சேர்ந்து இறைப் பணியாற்றுகின்றனர். எனவே இறையழைத்தலை பெற வேண்டுமானால் கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்றிருக்க வேண்டும். இன்று பணமும், படிப்பும் இருந்தால் மருத்துவராகலாம், இன்ஜினியராகலாம், ஆசிரியராகலாம், பல… ஆனால் இறையழைத்தலை பெறவேண்டுமானால் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இன்று நமது பங்கில் எத்தனை குடும்பங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன?

இறையழைத்தலின் முக்கியமான பணிகள்
இயேசு தான் எதற்காக சீடர்களை அழைத்தேன் என்று மாற்கு 3:13-14-ல் “இயேசு மலைமீது ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும், நற்செய்தியை பறைசாற்ற அனுப்பபடவும், பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரையும் நியமித்தார். ஆக 01. ஆண்டவரோடு உடனிருத்தல் 02. நற்செய்தியைப் பறைசாற்றுதல், 03. வல்ல செயல்களை செய்தல் என இம்மூன்றையும் அழைத்தலின் முக்கியமான பணியாக விளக்குகிறார்.

01. ஆண்டவரோடு உடனிருத்தல்
இயேசு கடவுள் தன்மையில் இருந்தாலும் தினமும் தனது தந்தையோடு தனிமையில் உறவாடி ஜெபிக்கலானார். இன்றும் அழைக்கப்பட்ட ஒவ்வொருவரும் கடவுளோடு உடனிருக்க பணிக்கப்படுகின்றனார். ஏன் ஆண்டவரோடு இணைந்திருக்க வேண்டும்?
ஏன் ஆண்டவரோடு இணைந்திருக்க வேண்டும் என யோவன் நற்செய்தி 15-ம் அதிகாரம் முழுவதும் இயேசு விளக்குகிறார். அதாவது “நான் உங்களோடு இணைந்திருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்திருங்கள். கொடி திராட்சை செடியோடு இணைந்திருந்தாலன்றி தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றி கனிதர இயலாது. நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். … என்னை விட்டு பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது” என விளக்குகிறார். ஆக கடவுளோடு இணைந்து இருக்கும் போது தான் இறையழைத்தல் முழுமை பெருகிறது.

02. நற்செய்தியைப் பறைசாற்றுதல்
நற்செய்தியைப் பறைசாற்றுதலே இயேசுவின் முக்கியமான பணி என்பதை நற்செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். “நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே அவர் கலிலோயவிற்கு வந்தார். காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கிவிட்டது மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” (மாற்கு 1:14-15) என தனது பணியைத் தொடங்குகின்றார். மேலும் மாற்கு 1:38-ல் “வாருங்கள் நாம் அடுத்த ஊர்களுக்கும் போவோம். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும். ஏனெனில் இதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்றார். மேலும் நற்செய்தியைப் பறைசாற்றுவதே முக்கியமான பணி என இயேசு தனது சீடர்களுக்கும் கற்பிக்கிறார். நற்செய்தியைப் பறைசாற்றுவதற்காகவே தனது சீடர்களை தேர்ந்தெடுக்கிறார்.

இயேசு தனது சீடர்களை நோக்கி “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” (மாற்கு 16:15) என தனது சீடர்களுக்கு கற்பிக்கிறார். இயேசுவின் உயிர்ப்பிற்கு பிறகு சீடர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையால் ஊர்ஊராக, நாடுநாடுகளாக சென்று இயேசுவின் நற்செய்தியை பறைசாற்றுகின்றனர். இன்று உலகம் முழுவதும் கிறிஸ்தவம் பரவிகிடக்கிறது என்றால் அதற்கு முழுமுதற்காரணம் நற்செய்தியைப் பறைசாற்றுதலேயாகும்.

ஒருமுறை ஆர்.எஸ்.ஏஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கன் ஒன்று கூடி அன்றைய பாரத பிரதமரான நேருவிடம் சென்று இந்திய கலாச்சாரத்தை கட்டிக் காப்பாற்றுதல் என்பது நமது கடமை எனவே அன்னை தெரசாவை இந்தியாவை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று நேரடியாக சென்று நேருவிடமே புகார் வாசித்தார்கள். அந்த அம்மையார் செய்வது அப்பட்டமான மதமாற்றம். இப்பொழுதுதான் முஸ்லீம்களிடம் வங்கத்தின் பாதியை இழந்தோம் இனி கிறிஸ்தவர்களிடம் மேற்கு வங்கத்தை இழக்க போகின்றோம். நீங்களாக அந்த பெண்ணை ஐரோப்பாவிற்கு மூட்டைகட்ட சொல்லுங்கள்.

மிஷினரிஸ் ஆப் சாரிட்டி எல்லாம் விஷயமில்ல, வங்கத்தை கிறிஸ்தவமயமாக்குதலே அந்த சாரிட்டி. அது காளிமாதா மாநிலம், விவேகானந்தர் பூமி, இதற்குமேல் பொறுப்பதில்லை, பொங்கி எழுவோம் என்று சொன்னார்கள். மக்களுக்கு கதற கதற ஞானஸ்நானம் கொடுப்பார்கள். துடிக்க துடிக்க பரிசுத்த ஆவி வர வைப்பார்கள். காதில் ரத்தம் வரும் அளவிற்கு பைபிளை சொல்லுவார்கள், வாயில் நற்கருணை வைத்து திணிப்பார்கள் எல்லாம் நேருவிற்கு காட்டி, முடிந்தால் அன்னை தெரசாவை கயிறுகொண்டு கைகால் எல்லாம் கட்டி அனுப்ப வேண்டும், அப்படி இல்லை என்றால் கொஞ்ச நாளாவது கங்கை கரையில் பாரதசேவை செய்ய சொல்லி தண்டிக்கவேண்டும். அது என்ன அன்னை? இப்படி நடந்தால் அவர் இனி மதமாற்ற தெரசா என்று குழுறிக்கொண்டிருந்தனர்.

நேரு அமைதியாக சொன்னார் உங்களில் சிலபேர் என்னுடன் நாளை அந்த ஆசிரமம் வாருங்கள், நீங்கள் சொன்னபடி அந்த அம்மையார் நடந்துகொண்டிருந்தால் அப்பொழுதே அவரை அவர்நாட்டுக்கு அனுப்புகிறேன் என்றார். அந்த இயக்கத்தாருக்கு பரம சந்தோஷம், நாளையோடு அன்னை காலி, அதன்பின் இது இந்து மாநிலம் என அவர்களாக சந்தோஷபட்டார்கள்.

அந்த நாளும் வந்தது, நேருவோடு அவர்களும் சென்றார்கள். அவர்கள் கண்ட காட்சி மேற்கண்ட கனவுகளை தலைகீழாக்கியது. கதறும் நோயாளிகளின் புண்களை துடைத்தார்கள், துடி துடித்த தொழுநோய் பிணியாளருக்கு மருந்திட்டார்கள். அவர்களுக்கு நற்கருணை கொடுக்கவில்லை உணவு ஊட்டினார்கள், எந்த நோயாளி கையிலும் பைபிள் இல்லை. தொட்டியில் மூழ்கடித்து யாருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை, மாறாக முடவர்களை குளிப்பாட்டினார்கள். கொஞ்சமும் அருவெருப்பில்லாமல் அன்னை தெரசாவும் அவரது அருட்சகோதரி கூட்டமும் அதனைத்தான் செய்தன.
அமைதியாக கேட்டார் நேரு - பதிலளித்தனர் புகார் கொடுத்தவர்கள். “இந்த நோயாளிகள்,மாற்று திறனாளிகள் எல்லாம் யார்?"
- "நமது நாட்டவர்கள், இம்மண்ணின் மைந்தர்கள், பாரத பிரஜைகள்"
"சேவை செய்வது யார்?"
"வெளிநாட்டு பெண்களும், அவர் சீடர்களும்"
"இவர்கள் நமது மக்கள், நம்மாலே புறக்கணிக்கப்பட்ட மக்கள். அவர்களுக்கு சேவை செய்வது நமது கடமை, உங்கள் வீட்டுபெண்கள் இந்த உயர்ந்த சேவையை செய்தால் இவர்களுக்கு இங்கு என்ன வேலை?, அப்படி ஒரு நிலை வரட்டும் உடனே தெரசா வெளியேற்றப்படுவார்" என்றார் நேரு.

ஆம் அன்புக்குரியவர்களே இந்த இயேசுவின் நற்செய்திக்காக எத்தனையோ மனிதர்கள் தங்களது ஊர், மொழி, பழக்கவழக்கங்கள், சொந்த பந்தங்கள், ஏன் உயிரையுமே கையளித்திருக்கின்றனர். புனித சவேரியார், அருளனந்தர், புனித தேவ சகாயம் பிள்ளை…

03. வல்ல செயல்களை செய்தல்
கடவுள் தான் தேர்தெடுத்த மக்களுக்கு இந்த வல்ல செயல்களைச் செய்யும் திறமையையும் கொடுக்கிறார். உதாரணமாக கடவுள் மோயிசன் வழியாக பலவிதமான வல்ல செயல்களைச் செய்கிறார். தண்ணீரை இரண்டாக பிளக்கிறார், வானத்தில் இருந்து மன்னாவை பொழிகிறார், பாறையில் இருந்து தண்ணீர் வரச்செய்கிறார், கையில் இருக்கும் கோலை பாம்பாக மாற்றுகிறார், இப்படி பல செயல்களை செய்து இஸ்ராயேல் என்னும் மிகப்பெரிய இனத்தை அவர் வழிநடத்துகிறார். புதிய ஏற்பாட்டில் இயேசுவும் வல்ல செயல்களை செய்கிறார். தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றுகிறார், பார்வையற்றவர்கு பார்வை தருகிறார், நோய்களில் இருந்து குணம் தருகிறார், இறந்தவரை உயிர்பிக்கிறார், இது போன்ற வல்ல செயல்களை செய்கிறார்.

அதேவேளையில் இயேசு தன்னை பின்பற்றும் மனிதர்களுக்கு இந்த வல்ல செயல்களைச் செய்யும் அதிகாரத்தை கொடுக்கிறார். மாற்கு 16:1—ல் “என் பெயரால் பேய்களை ஓட்டுவர், புதிய மொழிகளைப் பேசுவர், பாம்புகளை தன்கையால் பிடிப்பர், கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்கு தீங்கு இழைக்காது, அவர்கள் உடல் நலமற்றோர் மீது கைகளை வைக்க அவர்கள் குணமடைவர்” என இப்படிப்பட்ட வல்ல செயல்களைச் செய்யும் அதிகாரத்தை அவர்களுக்கு தருகிறார்.

இயேசுவின் உயிர்பிற்கு பிறகு அனைத்து சீடர்களும் அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்கின்றனர். உதாரணமாக புனித இராயப்பர் இறைவேண்டல் செய்ய கோயிலுக்கு சென்றபோது அங்கிருந்த உடல் உனமுற்றவர் சீடர்களிடம் பிச்சை கேட்டார். பேதுரு அவரிடம் எங்களிடம் வெள்ளியும் பொன்னும் இல்லை. ஆனால் எங்களிடம் உள்ளதை உமக்குகொடுக்கிறேன் என்று சொல்லி நாசரேத்து இயேசுவின் பெயரால் எழுந்து நடந்திடும் என்று கூற அவனும் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினான் (தி.தூபணி 3: 1-10). இன்று இறையழைத்தலைப் பெற்றவர்கள் பல விதமான அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்து வருகின்றனர். கோடி அற்புதர் என பெயர் பெற்ற புனித அந்தோனியார், தந்தை பியோ, புனித செபஸ்தியார், இப்படி பல மனிதார்கள் வழியாக கடவுள் வல்ல செயல்களை இன்றும் செய்து வருகிறார்.

இறையழைத்தலினால் வரும் ஆசீர்வாதங்கள்
இறையழைத்தலைப் பெற்ற ஒவ்வொருவருமே ஆசீர்வாதத்தின் கருவிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். காரணம் இவர்கள் அனைவருமே கடவுளால் தாயின் கருவில் இருக்கும்போதே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். உதாரணமாக ஏசாயா இறைவாக்கினர் “கருப்பையில் இருக்கும் போதே ஆண்டவர் என்னை அழைத்தார். என் தாயின் வயிற்றில் உருவாகும்போதே என்னை பெயர் சொல்லிக் கூப்பிட்டார். ஏசாய 49:1.

ஆபிரகாம் இஸ்ராயேல் மக்கள் அனைவருக்கும் ஆசீர்வாதத்தின் கருவியாக விளங்குகிறார். தொடக்கநூல் 12:2-3 –ல் “உன்னை நான் பெரிய இனமாக்குவேன். உனக்கு ஆசி வழங்குவேன். நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோருக்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னை சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார்.

புதிய ஏற்ப்பாட்டில் இயேசுவின் சீடர்கள் இயேசுவிடம் வந்து “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மை பின்பற்றிவர்களாயிற்றற் எங்களுக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்டனர். அதற்கு இயேசு மானிட மகன் மாட்சிமிகு அரியணையில் அமர்ந்திருக்கும் போது என்னை பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவருக்கும் நடுவர்களாய் பன்னிரு அரியனைகளில் அமர்ந்திருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்; என் பொருட்டும், நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதர சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும், சகோதர சகோதரிகளையும், தாயையும், நில புலன்களையும், மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமால் போகான்” (மத் 19:27-30) என்றார்.

ஆம் அன்புக்குரியவர்களே யாரெல்லாம் இறையழைத்தலைப் பெற்றிருக்கின்றனரோ அவர்கள் அனைவருமே ஆசீர்வாதமிக்கவர்கள் தான். இப்படி ஆசீர்வாத மிக்கவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சமுதாயத்தாலும், தன் சொந்த குடும்ப உறுப்பினராலும், புறக்கணிக்க பட்டவர்கள் தான். காரணம் இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என லூக் 4:24-ல் இயேசு தனது சீடர்களுக்கு குறிப்பிடுகிறார். இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் படித்தது போல “கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டிடத்தின் மூளைக்கல்லாயிற்று” என்ற வார்த்தைக்கு ஏற்ப எவர் ஒருவர் தனது வாழ்வில் வரும் தடைகளையும் தாண்டி இறையழைத்தலுக்கு வந்தால் நிச்சயம் அவரல் இந்த உலகிற்கே ஆசீர்வாதம் தான். எங்களது கிரமாத்தில் ஒரு சொல்லாடல் உண்டு “ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் குருவானவராக சென்றால் அந்த குடும்பம் ஏழு தலைமுறைகளுக்கு ஆசிர்வதிக்கப்பட்டதாக இருக்கும். அதேவேளையில் ஒருவர் குருத்துவத்திற்கு சென்று திரும்பி வந்துவிட்டால் ஏழேழு தலைமுறைக்கும் அது சாபமாக விளங்கும்” எனக் கூறுவார்கள். காரணம் இது கடவுளின் அழைப்பு. கடவுளின் அழைப்பை உணராதவர்கள் தான் இறையழைத்தில் இருந்து வெளியேருவர். ஆனால் இறையழைத்தலை உணர்ந்து கொண்டவர்கள் ஆசீர்வாதமிக்கவர்கள்.

இன்றைய சூழலில் இறையழைத்தல்
இன்றைய உலகமானது ஸ்மார்ட் உலகமாக மாறிவருகிறது. ஒரு சிறிய ஸ்மார்ட் போனில் இந்த உலகத்தையே சுற்றிப் பார்க்கும் அளவிற்கு வளர்ந்து வருகிறோம். தாயின் கருவில் இருந்து குழந்தை வெளிவந்தவுடன் முதலில் அந்த குழந்தைக்கு நாம் காட்டுவது இந்த ஸ்மார்ட் போன்தான். போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டு மற்றவர்களிடத்தில் இருந்து பாராட்டுகளை பெருவதைத்தான் பலரும் விரும்புகின்றனர். இப்படியாக குழந்தை பிறந்து முதல் அவன் கல்லறைக்கு செல்லும் வரை ஸ்மார்ட் போனின் ஆதிகம் எங்கும் நிறைந்து இருக்கிறது.

இப்படிப்பட்ட ஸ்மார்ட் போன் உலகத்தில் இறையழைத்தல் தேவைதானா? (மக்களிடம் பதில்)
தேவை என்று சொன்னால் ஏன் உங்கள் பிள்ளைகளை இறையழைத்தலுக்கு அனுப்புவதில்லை?
இறையழைத்தல் என்பது கடவுளின் அழைப்பு, கடவுள் அழைத்தால் அது மிகப்பெரிய ஆசீர்வாதம். ஆசீர்வாதம் அவருக்கு மட்டுமல்ல அவரது குடும்பம், அவரது உறவினர்கள், அவருடைய ஊர், அவருடைய சமுதாயம், அவர் பணிபுரியும் இடங்கள் என பல வகைகளில் ஆசீர்வாதம் வருகிறது. மேலும் கடவுள் சொல்வது போல தாயின் கருவிலே நான் தேர்தெடுத்தேன் என்று சொல்லும்போது அந்த குழந்தையை பெற்றெடுத்த தாயின் கருவரை ஆசீர்வதிக்கப்பட்டது. அந்த கருவைக் கொடுத்த தந்தையும் ஆசீர்வதிக்கப்பட்டவர். இவ்வளவும் நமக்கு தெரிந்திருந்தாலும் …
ஏன் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இறையழைத்தலுக்கு அனுப்ப விரும்புவதில்லை? அதேவேளையில் பிள்ளைகளும் இறையழைத்தலுக்கு வருவதற்கு விரும்புவதில்லை?

ஒரு குழந்தைகள் பிறந்தவுடன் இவன் டாக்டராக, இஞ்சினியராக, ஆசிரியராக, கலெக்டராக என பல பரிவுகளை சொல்லி குழந்தைகளை பெற்றோர்கள் வளர்க்கின்றனர். எத்தனை பெற்றோர்கள் தங்களது குழந்தை ஒரு குருவாக, கன்னியராக வளர வேண்டும் என்று விரும்புகின்றோம்? உதாரணமாக நேற்று பன்னிரென்டாம் வகுப்பிற்கு தேர்வு முடிவுகள் வந்தது. தேர்வு முடிவுகள் வந்த அடுத்த சில வினாடிகளிலே ஒவ்வொரு கல்லூரியிலும் பெற்றோர்களும், மாணவர்களும் பணத்தை கையில் வைத்துக்கொண்டு காத்திருக்கின்றார். எத்தனை பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளை இறையழைத்தல் முகாமிற்கு அழைத்துச் சென்றீர்கள்?

இயேசுவில் பிரியமானவர்களே நம்முடைய குடும்பத்தில் இருந்து, இறையழைத்தல் இல்லையென்று சொன்னால் உண்மையிலே நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களா? நம்முடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களா? நமது குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டதா? நம்முடை பங்கு ஆசீர்வதிக்கப்பட்டதா? சற்று சிந்தித்து பார்ப்போம்?

“அறுவடையோ மிகுதி வேளையாட்களோ குறைவு” என இன்றும் கடவுள் நம் ஒவ்வொருவரையும் தனது பணிக்காக அழைத்துக் கொண்டு தான் இருக்கின்றார். திருவெளிப்பாடு 3:20 –ல் “இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக் கொணடிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவருந்துவேன். அவர்களும் என்னோடு உணவருந்துவார்கள்” என்று அழைக்கிறார். மேலும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் கடவுளின் ஆசை என்னவென்றால் “நான் இருக்கும் இடத்திலே இறையழைத்தலைப் பெற்ற அனைவரும் இருக்க வேண்டும்” என நம்மையும் கடவுளோடு சேர்ந்து வாழ அழைக்கிறார். மேலும் யோவான் 17:24 -ல் “தந்தையே உலகம் தோன்று முன்னே நீர் என்மீது அன்புகொண்டு எனக்கு மட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியை காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என தன்னுடைய விருப்பத்தை தெரியப்படுத்துகிறார்.
இன்று கடவுளோடு இருப்பதற்கு எத்தனை பேர் தயாராக இருக்கிறோம்?
கடவுளின் ஆசையை நிறைவேற்றி இறையழைத்தலைப் பெற்ற ஒவ்வொருவரு குருக்கள், கன்னியர்களுக்காவும் இத்திருப்பலியில் ஜெபிப்போம். மேலும் நமது குடும்பத்திலும், பங்கிலும் இறையழைத்தல் வளர இத் திருப்பலியில் மன்றாடி ஜெபிப்போம்.

நான் இருக்கும் இடத்திலே நீங்களும் இருப்பீர்கள் அதுவே எனது விருப்பம்!