இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு

ஆடுகளும் – ஆயர்களும்

திருத்தூதர் பணிகள் 2:14, 36-41
1 பேதுரு 2:20-25
யோவான் 10:1-10

இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே! இன்று பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறை நாம் சிறப்பிக்கிறோம். இன்றைய ஞாயிறானது நல்லாயன் ஞாயிறு என அழைக்கப்படுகிறது.

ஐ.ஏ.எஸ் தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி ஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிர்களை பட்டியலிடுக? உங்களில் யாருக்கு தெரியும்?

1. உடலால் மட்டும் உணர்வது ஓரறிவு - இது தாவரங்களுக்கு மரம், செடி, கொடி, புல், பூண்டு.
2. உடல், நாக்கால் உணர்வது ஈரறிவு - இது கடல்வாழ் உயிரினங்களுக்கு நத்தை, சங்கு.
3. உடல், நாக்கு, மூக்கால் உணர்வது மூன்றறிவு- இது ஊர்வனங்களுக்கு எறும்பு, கரையான், அட்டை.
4. உடல், நாக்கு, மூக்கு, கண்ணால் உணர்வது நான்கறிவு- இது பூச்சி இனங்களுக்கு நண்டு, தும்பி, வண்டு.
5. உடல், நாக்கு, மூக்கு, கண், காது ஆகிய ஐந்தால் உணர்வது ஐந்தறிவு- இது விலங்கினங்களுக்கு விலங்குகள், பறவைகள்.
6. உடல், நாக்கு, மூக்கு, கண், காது, மூளை ஆகியவற்றால் அறிவது ஆறறிவு- இது மனிதர்களுக்கு.


அப்படியானால் மற்ற படைப்புகளை விட மனிதன் மேலானவன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இன்றைய சூழலில் யார் மேலானவர்கள் விலங்குகளா? மனிதர்களா? என்று பட்டிமன்றம் வைத்தால் விலங்குகள் தான் ஜெயிக்கும். காரணம் மனிதனுக்கு இருக்கவேண்டிய அனைத்து நல்ல குணநலன்களும் இன்று விலங்குகளிடத்தில் தான் காணப்படுகின்றன. உதாரணமாக நாய் வீட்டை காக்கும் நல்ல காவலாளி, சுறுசுறுப்புக்கு எடுத்துக்காட்டு எறும்பு, நன்றிக்கு எடுத்துக்காட்டு நாய், சொன்னதை அப்படியே பேசும் கிளிப்பிள்ளை, அமைதியின் தூதுவராக புறா, கனிவும், சாந்தம் உள்ளது ஆடு, எதையும் சுமக்க வல்லது கழுதை இப்படியாக நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். அதனால் தான் என்னவோ கடவுள் தன்மையில் விளங்கிய நம் கடவுள் மனிதராக உலகிற்கு வந்த போது தம்மை மனிதர்களோடு ஒப்பிடுவதைக்காட்டிலும் விலங்குகளோடு தம்மை ஒப்பிட்டு காட்டுகிறார். தன்னை ஓர் செம்றியாக ஒப்பிடுகிறார் தி.தூ பணி 8: 32. மேலும் தனது சீடர்களைப் பார்தத்து பாம்பைப்போல விவேகமுள்ளவராய் இருங்கள், புறாவைப் போல சாந்தமுள்ளவராய் இருங்கள் என கற்ப்பித்தார்.

மேலும் விவிலியத்தை புரட்டிப் பார்த்தோமானால் பழைய ஏற்ப்பட்டில் வரும் முக்கியமான மனிதர்கள் அனைவரும் ஆடுமேய்ப்பவர்களாகவே இருந்துள்ளனர். ஆபிரகாம், யாக்கோப்பு, மோசே, தாவீது, இறைவாக்கினர்கள் இவர்கள் அனைவரும் ஆடு மேய்த்தவர்கள் தான். இவர்கள் தான் இஸ்ராயேல் மக்களுக்கு ஆயர்களாக இருந்து வழிநடத்தியவர்கள். அதனால் இன்றைய வாசகங்கள் வழியாக நாமும் நல்ல ஆயன்களாகவும், நல்ல ஆடுகளாகவும் வாழ கடவுள் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

யாரெல்லாம் ஆயர்கள்?
"ஆயர்" என்றால் "(ஆடுகளை) மேய்ப்பவர்" என்பது நேரடிப் பொருள் தரும். ஆனால் யாரெல்லாம் மக்களை வழிநடத்துகின்றனரோ அவர்கள் அனைவருமே ஆயர்கள் என அழைக்கப்படுவர். அப்படியானால் திருச்சபையிலே மக்களை வழிநடத்துபவர்கள் ஆயர்கள், சமுதாயத்தில் மக்களை வழிநடத்தும் அரசியல் தலைவர்கள் அவர்களும் ஆயர்கள்தாம், பள்ளிக்கூடத்திலே ஆசிரியர்கள் மாணவர்களை வழிநடத்துவதால் அவர்களும் நல்ல ஆயர்கள் தான்! குடும்பத்தில் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை வழிநடத்துவதால் அவர்களும் நல்ல ஆயர்கள் தான், மேலும் மூத்த குழந்தைகள் இளைய குழந்தைகளை வழிநடத்துவதால் அவர்களும் நல்ல ஆயர்கள் தான். அப்படியானல் மனிதராக பிறந்த ஒவ்வொருவருமே நல்ல ஆயர்கள் தான். அப்படியானால் நல்லாயனுக்குறிய பண்புகள் நம்மிடம் உள்ளனவா என சிந்திப்போம்?

நல்லாயனுக்கான பண்புகள்
01. நல்லாயன் தனது ஆடுகளை நன்கு அறிந்தவன்
ஆண்டவர் யேசு தன்னை நல்ல ஆயனாக தம்மை வெளிப்படுத்துகிறார். இந்த ஆயன் ஆடுகளாகிய நம் அனைவரையும் நன்கு அறிந்தவராக இருக்கிறார். இன்று ஆயர்களாக விளங்கும் நாமும் நம்முடைய ஆடுகளை இணம் கண்டுகொண்டு அவற்றை அறிந்து கொள்ள நம்மை அழைக்கிறார். ஒருமுறை பங்கு பணிக்காக நாங்கள் சிவகங்கை மறைமாவட்டத்திலே ஒரு பங்கிற்கு சென்றிருந்தோம். அந்த பங்குத்தந்தை தனது பங்கில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் நன்கு அறிந்து வைத்திருந்தார். அவர்கள் செய்யும் தொழில், அவர்களின் படிப்பு, குடும்ப சூழல் என ஒவ்வொரு குடும்பத்தையும் நன்கு அறிந்து வைத்திருந்தார். இன்று எத்தனை பங்குத்தந்தையர்கள் தனது பங்கில் உள்ள அனைத்து மக்களையும் அறிந்து வைத்திருக்கின்றனர்? எத்தனை அரசியல் தலைவர்கள் தங்களது மக்களை நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர்? எத்தனை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர்? இன்று எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர்? ஒவ்வொருவரும் நம்மையே சற்று சிந்தித்து பார்ப்போம்!

02. நல்லாயன் தனது ஆடுகளை வழிநடத்துபவன்
நல்லாயன் என்பவன் தனது ஆடுகளை நல்ல பாதையிலே வழிநடத்துபவன். பழைய ஏற்ப்பாட்டிலே கடவுள் நல்ல ஆயனாகவும், இஸ்ராயேல் மக்களை ஆடுகளாகவும் கடவுள் உருவகப்படுத்தி வழிநடத்துவதை நாம் காணமுடியும் இன்றைய பதிலுரைப்பாடல் கூட ஆண்டவரை நல்ல ஆயனாக உருவகப்படுத்துகிறது. மேலும் இறைவாக்கினர் ஏசாயா மெசியாவைப் பற்றி கூறும்போது “ஆயனைப்போல தம் மந்தையை அவர் மேய்ப்பார். ஆட்டுக்குட்டிகளை தம் கையால் ஒன்று சேர்ப்பார். அவற்றை தம் தோளில் தூக்கி சுமப்பார். சினையாடுகளை கவனத்துடன் வழிநடத்திச் செல்வார்” என கூறுகிறார். மேலும் இந்த இஸ்ரயேல் மக்களளை வழிநடத்துவதற்கு கடவுள் வெவ்வேறு காலக்கட்டங்களில் நீதித்தலைவர்கள், அரசர்கள், இறைவாக்கினர்கள், என்று பல மனிதர்களை கடவுள் தேர்ந்தெடுத்து அவர்களை ஆயர் நிலைக்கு உயர்த்தி மக்களை வழிநடத்தினார். மேலும் புதிய ஏற்ப்பாட்டில் இயேசு ஆயனாவும், இயேசுவை பின்பற்றும் ஒவ்வொருவரும் ஆடுகளாகவும் உருவகப்படுத்தி இன்றுவரை கடவுள் அப்போஸ்தலர்கள், திருத்தந்தையர்கள், குருக்கள் வழியாக மக்களை வழிநடத்தி வருகிறார். இன்று ஆயர்களாக விளங்கும் நாம் ஒவ்வொருவரும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை நல் வழியில் வழிநடத்த கடவுள் நம்மை அழைக்கிறார். இத்தருணத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசியல் தலைவர்கள், தன்னார்வத்தொண்டர்கள், திருச்சபைத் தலைவர்களாகிய நாம் நம்முடைய பதை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்று சிந்தித்து பார்ப்போம். நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை உண்மையிலே நல்ல பாதையில் தான் வழிநடத்துகிறோமா என்று சிந்திப்போம்?

03. நல்லாயன் தனது ஆடுகளை பாதுகாப்பவன்
நல்ல ஆயன் தனது ஆடுகளை எத்தீங்கிலிருந்தும் பாதுகாப்பவனாக இருக்கவேண்டும். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக்கண்டு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவர் ஏனெனில் அவர் ஆயனும் அல்ல. ஆடுகள் அவருக்கு சொந்தமும் அல்ல. கூலிக்கு மேய்ப்பவர்களுக்கு ஆடுகளைப்பற்றி கவலையில்லை. இன்று நாம் நல்ல ஆயர்களா? அல்லது கூலிக்கு மேய்ப்பவர்களா? நாம் அனைவரும் நல்ல ஆயன்களாக இருந்தோம் என்றால் ஏன் இன்றும் பெண்கள் தனியாக சென்று வரமுடியாத சூழல் நம்முடைய சமுதாயத்தில் உள்ளது? இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பதைக் காட்டிலும் வேலைக்கார பெண்கள் தான் குழந்தைகளை அதிகம் பாதுகாக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்? பள்ளியிலே எத்தனை ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்கின்றனர்? எத்தனை அரசியல் தலைவர்கள் மக்களை பாதுகாப்பாக வழிநடத்துகின்றனர்? கடவுள் நம்மை ஒவ்வொருநாளும் பாதுகாத்து வருகிறார். நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை நாம் எப்படியெல்லாம் பாதுகாத்து வருகிறோம்? சிந்திப்போமா?

ஆம் அன்புக்குரியவர்களே! ஆயனுக்குரிய கடமைகளை நாம் நன்கு நிறைவேற்றினால் நிச்சம் ஆடுகளாகிய நம் குழந்தைகள் நல்லவர்களாக வாழமுடியும். ஆயர்களாக இருக்கும் நாம் அனைவரும் ஒரு கட்டத்தில் ஆடுகளாக தான் இருந்தோம். சிறுவயதில் இருந்தே ஆடுகளுக்கு உள்ள பண்புகளை நாம் பெற்றிருந்தோமானால் நிச்சயம் நாம் நல்ல ஆயன்தான். ஆனால் இன்றைய சூழலில் நல்ல ஆயர்களாக நாம் வாழாததற்கு கரணம் ஆடுகளாக இருந்தபோது நம்முடைய கடமைகளை நாம் சரிவர செய்யவில்லை என்பதேயாகும். ஆடுகளுக்குரிய பண்புகள் எவை?

ஆடுகளுக்கு உள்ள பண்புகள்
01. ஆடுகள் ஆயரின் குரலை நன்கு அறிந்திருக்கும்
ஆடுகள் ஆயரின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும். இதைத்தான் நம்கடவுள் பழைய ஏற்பாடு முழுவதும் வழியுறுத்துகிறார். ஆபிரகாம் கடவுளின் குரலுக்கு செவிகொடுத்ததால் இன்றும் அவர் நம்பிக்கையின் தந்தையாக விளங்குகிறார். புதிய ஏற்ப்பாட்டிலே யோவான் 10:4-ல் தம்முடைய சொந்த ஆடுகளை வெளியே ஓட்டிவந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரை பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்கு தெரியும். மேலும் யோவா 10:27-ல் என் ஆடுகள் எனது குரலுக்கு செவிசாய்க்கின்றன. என்க்கும் அவற்றை தெரியும். அவையும் என்னை பின்தொடர்கின்றன என்கிறார். ஆனால் இன்றைய சூழலில் நம்மில் எத்தனை பேர் கடவுளின் குரலுக்கு செவிசாய்க்கிறோம்?

ஒருமுறை கடவுள் விண்ணகத்தில் இருந்து தனது படைப்புகள் அனைத்தையும் உற்றுநோக்கிக் கொண்டிருருந்தார். ஒரு கோழியானது இறையைத்தேடி தனது குஞ்சுகளை அழைத்துக்கொண்டு ஒரு குப்பைத் தொட்டிக்குச் சென்றது. அங்கிருந்த குப்பைகளை கிளரிக்கொண்டிருந்தது. குஞ்சுகள் ஆங்காங்கே திரிந்து கொண்டிருந்தன. திடீரென அந்த கோழியானது ஒருவித சத்தத்தை எழுப்பியது. அனைத்து குஞ்சுகளும் கோழியின் அருகே வந்து உணவை உட்கொண்டன. மீண்டும் ஒருவித குரல் எழுப்பியது குஞ்சுகள் வெவ்வேறு இடங்களுக்கு சென்றன. திடீரென ஆகாயத்தில் ஒரு பருந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தது. மீண்டும் அந்த கோழி ஒருவித சத்தத்தை எழுப்பியது அனைத்து குஞ்சுகளும் ஓடி வந்து கோழியின் சிறகினுள் தஞ்சம் புகுந்தன. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கடவுள் அந்த கோழியிடம் வந்து நீ குப்பையைத்தான் கிளருகிறாய் எப்படி உனது குஞ்சுகள் சரியான உனவை தேர்ந்தெடுக்கின்றன என்று கேட்டர்.

அதற்கு அந்த கோழி சென்னதாம் நான் குப்பையை கிளறி சரியான உணவை கண்டுபிடிக்கும்போது ஒருவித சத்தம் எழுப்புவேண் எனது குஞ்சுகள் எனது சத்தத்தை அறிந்து கொண்டு எது குப்பை, எது உணவு, எது ஆபத்து என்று அறிந்துகொள்ளும் என்றது. அப்போது கடவுள் உன்கோழிக்கு இருக்கும் அறிவு கூட என் மக்களுக்கு இருப்பதில்லை. அப்படி இருந்திருந்தால் என்மக்கள் எப்போதோ முன்னேறியிறுப்பார்கள் என்றாராம்.. நான் எவ்வளவு தூரம் அவர்களை அழைத்தாலும் அவர்கள் என்குரலுக்கு செவிசாய்ப்பதில்லை என்று கூறினாராம்.

ஓசேயா இறைவாக்கினர் அழகாக தனது 11வது அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். “இஸ்ராயேல் குழந்தையாக இருந்தபோது அவன்மேல் அன்புகூர்ந்தேன். எகிப்திலிருந்து என் மகனை நான் அழைத்து வந்தேன். எவ்வளவுக்கு நான் அவர்களை வருந்தி அழைத்தேனோ அவ்வளவுக்கு என்னை விட்டு பிடிவாதமாய் விலகிப் போனார்கள்…” . ஆம் அன்புக்குறியவர்களே இன்று பல பெற்றோர்கள் சொல்வது என்னவென்றால் என்குழந்தை என் பேச்சை கேட்பதில்லை. இதற்கு காரணம் பெற்றோர்களின் குரலை குழந்தைகள் அறியவில்லை. ஆசிரியர்களின் குரலை மானவர்கள் அறியவில்லை. அரசியல்வாதிகளின் பொய் பிரச்சார குரல்களை மக்கள் அறிவதில்லை…எப்பொழுது ஆடுகளாகிய நம்முடைய குழந்தைகளும், மக்களும், ஆயர்களாக விளங்கும் தலைவர்களின் குரலை அறிந்துகொள்கிறார்களோ அப்போது தான் நாமும் நமது சமுதாயமும் முன்னேறும்.

02. ஆடுகள் ஆயன் காட்டும் வழியில் பயனிக்கும்
பழைய ஏற்பாடடிலே ஆயராக விளங்கிய கடவுள் காட்டிய வழியில் பயனித்தவர்கள் அனைவருமே வெற்றிவாகை சூடினார்கள். மேயீசன் கடவுள் காட்டிய வழியில் சென்றதால் அற்புதங்களையும் அதிசங்களையும் செய்ய முடிந்தது. தாவீது கடவுள் காண்பித்த வழியில் சென்றதால் கோலியாத்தை வெற்றி பெற முடிந்தது. புதிய ஏற்ப்பாட்டிலே இயேசு காட்டிய வழியில் சென்றதால் சாதாரண மீன்பிடிக்கும் மக்கள் அப்போஸ்தலராக மாறினார்கள், இயேசு காட்டிய வழியில் சென்றதால் சக்கேயு ஆபிரகாமின் மகனாக அழைக்கப்பட்டார். இதைப்போலவே நமது தமிழில் அழகிய பழமொழி ஒன்று உண்டு அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்று. ஆயர்கள் காட்டும் வழியில் மக்கள் அனைவரும் பயனிக்க வேண்டும். பெற்றோர்கள் காட்டும் வழியில் பிள்ளைகள் பயனிக்கும் போதும், ஆசிரியர்கள் கட்டும் வழியில் மானவர்கள் பயனிக்கும் போதும், நல்ல அரசியல் தலைவர்கள் காட்டும் வழியில் மக்கள் பயணிக்கும் போதும் நிச்சயம் வெற்றிகள் நம்மைத் தேடிவரும். நம்முடைய பிள்ளைகள் யாரை பின்பற்றுகினன்றனர்? சினிமா கலைஞர்களையா? விளையாட்டு வீரர்களையா? போலி அரசியல்வாதிகளையா? சிந்திப்போமா?

03. ஆடுகள் ஆயனோடு உடனிருக்கும்
ஆங்கிலத்திலே அழகான சொல்லாடல் ஒன்று உள்ளது. God does not want our ability or inability but he wants our availability இன்று நம்மில் எத்தனைபேர் மற்றவர்களோடு சேர்ந்து நேரம் செவிடுகிறோம். மனிதர்கள் மனிதர்களோடு நேரம் செவிடுவதைக் காட்டிலும் செல்போன், தொலைக்காட்சி, கணிணி, மற்றும் விலங்குகளோடு தான் இன்று அதிகநேரம் செவிடுகின்றோம். அன்று எம்மாவு சீடர்களுக்கு மட்டும் செல்போன் இருந்திருந்தால் நிச்சயம் இயேசுவை கண்டுகொள்ள மறந்து இருப்பார்கள். இன்று கடவுளுக்கு நேரம் ஒதுக்குவதைக் காட்டிலும் செல்போனுக்கு தான் அதிக நேரத்தை நாம் ஒதுக்குகிறோம். இன்று எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடும், குடும்பத்தினரோடும் நேரம் செலவிடுகின்றனர்? எத்தனை குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் நேரம் செவிடுகின்றனர்? எத்தனை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களோடும், மாணவர்கள் ஆசிரியரோடும் நேரம் செலவிடுகின்றனர்? எத்தனை அரசியல் தலைலவர்கள் தங்கள் மக்களுக்காக நேரம் செலவிடுகின்றர்? இன்று மக்களோடும், கடவுளோடும், இருக்கவேண்டிய உடனிருப்பை மனிதன் தான் படைத்த சாதனங்கள் அவனை ஆக்கிரமித்து வருகின்றன.

ஆம் அன்புக்குரியவர்களே நம் கடவுள் இன்றும் நல்லாயனாக செயல்பட்டு வருகிறார். நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல; ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை. நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன் (யோவான் 10:11-15) என்கிறார்.

முதல் வாசகதத்திலே சீடர்கள் நல்ல ஆயர்களாக விளங்கி மக்களை தங்களது பாவங்களில் இருந்து கழுவி கடவுளின் ஆடுகளாக மக்களை வழிநடத்துகின்றனர்.. எனவே இன்றைய நாளில் நாம் அனைவரும் நல்ல ஆயர்களா? அல்லது கூலிக்கு மேய்ப்பவர்களா? மேலும் கடவுளின் வார்த்தையை கேட்டு செயல்படும் நல்ல ஆடுகளா? கடவுளின் வார்த்தையை புறந்தள்ளி வாழும் ஆடுகளா? சிந்திப்போம்! நல்லாயன் இயேசு நம்மையும், நமது குடும்பத்தையும், நமது சமுதாயத்தையும் வழிநடத்துவாராக!