இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









உயிர்ப்பு காலத்தின் இரண்டாம் ஞாயிறு (A)

உறவுகளை உற்சாகப்படுத்துவோம்

திருத்தூதர் பணிகள் 2:42 – 47
1 பேதுரு 1: 3-9
யோவான் 20:19-31

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே கிறிஸ்து உயிர்த்து விட்டார் அல்லேலூயா அல்லேலூயா…
உங்கள் அனைவருக்கும் இறைஇரக்க ஆண்டவரின் ஆசீர்வாதங்கள். இன்று நமது தாயம் திருச்சபையானது இறைஇரக்க ஆண்டவரின் விழாவைச் சிறப்பிக்கிறது. ஆண்டவரின் இரக்கத்தை பெற்று வாழ இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

உங்களுக்கு பிடித்தமானவைகள் எல்லாம் எது? உதாரணமாக…
கடவுளுக்கு பிடித்தவை எது?

சீராக் நூல் 25:1-ல் கடவுள்; கூறுகிறார் என் மனதிற்கு படித்தவை மூன்று. இவை ஆண்டவர் முன்னும் மனிதர் முன்னும் அழகுள்ளவை. 01. உடன் பிறப்புகளிடையே காணப்படும் ஒற்றுமை. 02 அடுத்திருப்பாரோடு ஏற்படும் நட்பு, 03. தங்களுக்குள் ஒன்றித்து வாழும் கணவன் மனைவியர்; அரிஸ்டாடில் கூறுவார் மனிதன் என்பவன் ஓர் சமூக பிராணி. அவனால் தனியாக வாழ்வது இயலாது. மற்றவர்களோடு சேர்ந்து வாழும் கடமை பட்டிருக்கிறான். அதனால் தான் கடவுளே உலகை படைக்கின்ற போது அனைத்து படைப்புகளையும் ஆணும் பெண்ணுமாக சேர்த்து படைக்கிறார். ஆதாமை படைத்த பிறகு மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல எனக் கருதி ஏவளைப் படைக்கிறார். ஆக மனிதர்கள் இந்த உலகத்தில் வாழவேண்டுமானால் ஒருவர் மற்றவரை சார்ந்து வாழ கடமைப்பட்டிருக்கிறார்கள். இதைத்தான் கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும் என இன்றைய வாசகங்கள் நமக்கு கற்பிக்கின்றன. முதல் வாசகத்தில் ஆதிக்கிறிஸ்தவர்களின் வாழ்க்கையை உதாரணமாகவும், நற்செய்தியிலே சீடர்களின் ஒற்றுமையான வாழ்வையும் கிறிஸ்தவர்கள் பின்பற்ற அழைக்கப்படுகிறார்கள்.

இறைஇயேசுவில் பிரியமானவர்களே இன்றைய நவீன உலகத்தில் மனித உறவுகள் சிதைந்து விஞ்ஞானத்தோடு உறவு வளர்ந்து வருகிறது. இன்றைய உலகில் மனிதர்களுக்கு உறவுகள் தேவையில்லை மாறாக ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் என்ற மனநிலையில் வாழ்ந்து வருகிறோம். முந்தைய காலங்களில் வீடு குடிபோகும் போது நல்ல தண்ணீர் இருக்கா, பக்கத்தில் வீடுகள் இருக்கின்றனவா? மருத்துவமனை, பள்ளிக்கூடம் அருகில் உள்ளனவா என்று பார்த்த நாட்கள் போய் இன்று வீடு குடிபோகும் போது செல்போன் டவர் அருகில் இருக்கா, வைப்பை வசதிகள் இருக்கா என்று பார்த்து குடியேரும் மனிதர்கள் தான் அதிகம். ஆக மனித உறவுகள் இன்று ஊதாசினப் படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக பெற்ற தந்தையை பிச்சை எடுக்க அழையவிடும் மகன்கள் இருக்கின்றனர். குடித்துவிட்டு கட்டிய மனைவியை பட்டினி போடும் கணவன்கள் ஒருபுறம். பெற்ற தாயை தவிக்க விட்டுவிட்டு மனைவியின் பிடியில் இருக்கும் பிள்ளைகள் ஒருபுறம், கூடவே பிறந்த சகோதரர்கள் கோர்ட்டில் எதிராளியாக வாதிடும் சூழல் ஒருபுறம், பெற்ற பிள்ளைகளோடும், உற்றார் உறவினர்களோடும், சிரித்து மகிழ்ந்து உறவாடிய நாட்கள் போய் இன்று உறவுகள் களைந்து, குடும்பங்கள் சிதைந்து, பிள்ளைகளை மறந்து, கணிணியும், போனும் இருந்தால் போதும் என்று வாழ்ந்து வருகிறோம்.

இப்படிப்பட்ட தருணத்தில் இன்று இயேசு உயிர்ப்பிற்கு பிறகு தனது சீடர்களைச் சந்திக்கிறார். இவருடைய சந்திப்பு ஐந்து முக்கிய பணிகளை சீடர்களுக்கும், இயேசுவை பின்பற்றக்கூடிய ஒவ்வொருவருக்கும் நல்பாடமாக அமைகிறது. 01. இயேசு தன்னுடைய சீடர்களை சந்திக்கிறார். 02. சீடர்களை வாழ்த்துகிறார். 03. சீடர்களின் நம்பிக்கையின்மையை திடப்படுத்துகிறார். 04. நடமாடும் இயேசுக்களாக மாற்றுகிறார். 05. பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை கொடுக்கிறார்.

01. இயேசு தன்னுடைய சீடர்களை சந்திக்கிறார்.
இயேசுவின் சீடர்கள் எப்படிப்பட்ட சீடர்கள்? இயேசு உயிரோடு இருந்த போது இயேசுவின் பின்னாலே சென்றார்கள். அவரது புதுமைகளை கண்டு வியந்தார்கள். ஆனால் இயேசுவை கைது செய்த பிறகு ஓடி ஒளிந்து கொண்ட சீடர்கள், அவரை யாரென்றே தெரியாது என மறுதலித்த சீடர்கள், இயேசுவின் மரணத்திற்கு பிறகு மீண்டும் தங்களது தொழிலுக்கு திரும்பிய சீடர்கள், இயேசு அன்றாடம் அவர்களுக்கு கற்றுக் கொடுத்த போதனைகளை வாழ்வாக்க மறந்துபோன சீடர்கள் இப்படியாக கூடவே இருந்து தனக்கு பாதகம் நினைத்த சீடர்களை இயேசு சந்திக்கிறார். காரணம் நமது இரக்கத்தின் ஆண்டவர் நேர்மையாளர்களை அல்ல பாவிகளை தேடி மீட்க வந்த கடவுள் மாற் 2:17. தன்னுடைய சீடர்கள் செய்த அனைத்து நிகழ்வுகளையும் மறந்து மன்னித்து அவர்களை தேடி செல்கின்றார். ஏனென்றால் சீடர்களுக்கு மன்னிக்க கற்றுக்கொடுத்தவரே இயேசுதாம். பேதுரு இயேசுவை அனுகி ஆண்டவரே என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராக பாவம் செய்து வந்தால் நான் அவர்களை எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? இயேசு அவரிடம் ஏழு முறை மட்டுமல்ல எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்கு சொல்கிறேன் என்றார் மத் 18:21-22. இரக்கத்தின் ஆண்டவர் தனது சீடர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார். அதைப்போலவே நாமும் நமக்கு எதிராக செயல்படும் மனிதர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள நம்மால் முடியுமா? சிந்தித்து பார்ப்போம். அதாவது எண்ணிலடங்காத முறை மன்னிக்க வேண்டும் என இயேசு கூறுகிறார்.

1995ம் ஆண்டு பிப்ரவரி 25 அன்று மத்திய பிரதேசத்தில் அருட்சகோதரி இராணி மரியாவை பாஜாகவைச் சேர்ந்த முக்கிய மனிதர் ஒருவர் துணையோடு 50 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்தனர். அந்தக் கொலையில் சமந்தர் சிங் என்பவரை கைது செய்து ஆயுள் தண்டனை வழங்கி சிறையில் அடைத்தனர். 2003 –ம் ஆண்டு அருட்சகோதரி செல்மி பால் சிறைக்குச் சென்று தனது அக்கவை கொலை செய்த மனிதரை சந்தித்து தனது சகோதரராக ஏற்றுக்கொண்டார். அத்தோடு மட்டுமல்லாமல் மத்திய பிரதேச ஆளுனரை சந்தித்து அவரை விடுதலை செய்யும் படி கருணை மனு அளித்து 2006 – ம் ஆண்டு விடுதலையானார். அப்போது மத்திய பிரதேச ஆளுனர் கிறிஸ்தவர்களால் மட்டுமே எப்படிப்பட்ட மனிதர்களையும் மன்னிக்கும் ஆற்றல் படைத்தவர்கள் என பெருமிதம் கொண்டார். இன்று நம்மில் எத்தனை பேர் நமது பகைவர்களை மன்னித்து அவர்களை சந்தித்து உறவாட முடியும். இயேசு செய்தார்இ அவரது சீடர்கள் செய்தனர்இ நமது முன்னால் திருத்தந்தை ஜான் பவுல் செய்தார் நாம் தயாரா?...

02. இயேசு தனது சீடர்களை வாழ்த்துகிறார்.
தனது சீடர்களை சந்தித்த இயேசு “உங்களுக்கு சமாதானம் உண்டாகுக”! என அவர்களை வாழ்த்துகிறார். மத் 10:11-13-ல் தனது சீடர்களைப் பார்த்து நீங்கள் மக்களை சந்திக்க வீடுகளுக்கு செல்லும் போது அந்த வீட்டாருக்கு வாழ்த்து கூறுங்கள். வீட்டார் தகுதி உள்ளவராக இருந்தால் நீங்கள் வாழ்த்தி கூறிய அமைதி அவர்மேல் தங்கும். அவர்கள் தகுதியற்றவர்களாக இருந்தால் அது உங்களிடமே திரும்பி வந்துவிடும் என்கிறார். ஆக கிறிஸ்தவர்களாகிய நாம் எப்பொழுதெல்லாம் மக்களை சந்திக்கிறோமோ இயேசு வாழ்த்தியது போல நாமும் மற்றவர்களை வாழ்த்த கடமைப் பட்டிருக்கிறோம். இன்று நமது வாயிலிருந்து வரும் வார்த்தைகள் மற்றவர்களை வாழ்த்துகிறதா? அல்லது மற்றவர்களை சாபமிடுகிறதா? சிந்திப்போம்?

நான் தற்பொழுது மேற்கு ஆப்பிரிக்காவில் புர்கினஃபாசோ என்ற இடத்தில் வாழ்ந்து வருகிறேன். இங்கு வாழும் மக்களிடம் எனக்கு பிடித்த ஒரு நிகழ்வு என்னவென்றால் எப்பொழுதெல்லாம் மனிதர்களை பார்க்கிறார்களோ அப்பொழுதெல்லாம் ஒருவர் மற்றவரை வாழ்த்திக்கொண்டே இருப்பார்கள். அவர்களுடைய வாழ்த்துக்களில் 5வாக்கியங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். பெரியவர் முதல் சிறிய குழந்தைகள் வரை அனைவருமே அனைவரையும் வாழ்த்துவார்கள். எப்படியென்றால் காலை வணக்கம், நீங்கள் நன்றாக இருக்கின்றீர்களா? குடும்பத்தில் உள்ளவர்கள் நலமா? வீட்டில் பிள்ளைகள் எப்படி இருக்கின்றார்கள்? இந்த நாள் நல்ல நாட்களாக அமைய வாழ்த்துக்கள் என ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 50 முதல் 60 தடவை வாழ்த்திக்கொண்டே இருப்பார்கள். ஆக இவர்களிடத்தில் வஞ்சகம், போட்டி, பொறாமை என்று நான் பார்த்ததேயில்லை. அனைவருமே ஒருவர் மற்றவர்களை மன்னித்து ஏன் மற்றவர்கள் அடித்தால் கூட அடிகளை வாங்கிக்கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். இன்று நம்மால் முடியுமா?

03. சீடர்களின் நம்பிக்கையின்மையை திடப்படுத்துகிறார்.
இயேசுவின் இறப்பிற்கு பிறகு இயேசுவின் சீடர்கள் யுதர்களுக்கு பயந்து கதவுகளை மூடிக்கொண்டு, வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்து தனிமையிலே வாழ்ந்து வந்தனர். இயேசு அவர்களைச் சந்தித்து திடப்படுத்துகிறார். மேலும் புனித தோமையாருக்கு தனது காயங்களை காண்பித்து அவரையும் திடப்படுத்துகிறார். இன்று நாமும் நம்பிக்கையை இழந்து தவிப்போருக்கு நம்பிக்கையை திடப்படுத்தும் மனிதர்களாக வாழ அழைப்பு விடுக்கிறார்.

ஒருமுறை ஒரு சிறுவன் தனது தாயுடன் ஒரு ஆற்றை கடப்பதற்காக அங்கு நின்று கொண்டிருந்தனர். தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. அப்போது அவனது தாய் கூறினார் “என்னுடைய கையை இறுக்க பிடித்துக்கொள்” என்றார். அதற்கு அந்த பையன் வேண்டாம் “அம்மா நீங்கள் என்கையை பிடித்துக்கொள்ளுங்கள்” என்றான். அதற்கு அவனது தாய் நான் உன் கையை பிடிப்பதற்கும், நீ என் கையை பிடிப்பதற்கும் என்ன வித்தியாசம் என்றார். அதற்கு அந்த மகன் கூறினான் நான் உங்களது கையை பிடித்துக்கொண்டு நடக்கும் போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். உதாரணமாக தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தால் நான் உங்களது கையை விட்டு விடும் சூழல் ஏற்படலாம். ஆனால் நீங்கள் என் கையை பிடித்திருந்தால் எந்த சூழ்நிலையிலும் நீங்கள் என் கையை நழுவ விடமாட்டீர்கள் என்றான். அதைப் போலவே புனித தோமையாரும் ஆண்டவரை கண்டு கொண்ட மாத்திரத்தில் அவரை சிக்கென பற்றிக்கொண்டு நீரே ஏன் கடவுள் ! நீரே என் ஆண்டவர் என அறிக்கையிட்டு ஆண்டவரிடத்தில் நம்பிக்கை வைக்கிறார். நமக்கும் சோதனைகள், துன்பங்கள் வரும் போது நமது நம்பிக்கை எப்படிப்பட்டதாக இருக்கிறது?

04. நடமாடும் இயேசுக்களாக மாற்றுகிறார்.
தனது சீடர்களை சந்தித்த இயேசு தமது பணியை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்காக தனது சீடர்களை தயாரிக்கிறார். மூன்றான்டு தயாரிப்புக்குப்பின் என் தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று தனது சீடர்களுக்கு கடவுளின் வல்லமையை பொழிந்து அவர்களை நடமாடும் இயேசுக்களாக மாற்றுகிறார்.

இதைத்தான் இன்றைய முதல் வாசகம் நமகத்தகு தெளிவாக எடுத்துரைக்கிறது. நடமாடும் இயேசுக்களான இந்த திருத்தூதர்கள் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் மக்கள் உறுதியாய் இருந்தனர். ஆதிக்கிறிஸ்தவர்கள் இயேசுவிடம் நம்பக்கை கொண்டவர்களாக வாழ்ந்தனர். அவர்கள் ஒற்றுமையாய் ஒன்றாக இருந்து வாழ்ந்து வந்தனர். எல்லா உடைமைகளையும் பொதுவாக வைத்திருந்தனர். தங்களிடமிருந்த நிலபுலன்களையும், மற்ற உடைமைகளையும் விற்று அவரவர் தேவைகளுக்கு ஏற்ப பகிர்ந்தளித்தனர். ஒவ்வொருநாளும் ஒரே மனத்தவராய் கோவிலில் தவறாது கூடி ஜெபித்து வந்தனர். பேருவகையோடும், மகிழ்ச்சியோடும், எளிய உள்ளத்தோடும் அப்பத்தை பிட்டு உணவை பகிர்ந்து உண்டு வந்தனர். எல்லா மக்களின் நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தனர்.

இயேசுவில் பிரியமானவர்களே இப்படிப்பட்ட வாழ்கையை நம்மால் இன்று வாழ முடியுமா?
நான், எனது, என் குடும்பம், என்ற குறுகிய வட்டத்தில் வாழ்க்கை ஓட்டும் நாம் ஆதிக்கிறிஸ்தவர்களின் வாழ்வு நமக்கு கானல் நீராக தோன்றுகிறது. ஆனால் இப்படிப்பட் வாழ்க்கை வாழ்ந்தோமானால் நிச்சயம் கடவுள் படைத்த உலகத்தை நம்மால் கண்கூடாக காண முடியும். சீடர்கள் நடமாடும் இயேசுக்களாக வாழ்ந்தனர், ஆதிக்கிறிஸ்தவர்கள் நடமாடும் இயேசுக்களாக வாழ்ந்தனர். இன்று நாமும் நடமாடும் இயேசுக்களாக வாழ தயாராக இருக்கின்றோமா? சிந்திப்போம்?

05. பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை கொடுக்கிறார்.
இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த போது பலமனிதர்களின் பாவங்களை மன்னித்தார். அப்படியே இயேசுவுக்கு இருந்த அதே வல்லமையை தனது சீடர்களுக்கு கொடுக்கிறார். என்தந்தை என்னை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி அவர்கள் மேல் ஊதி பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ அவை மன்னிக்கப்படும் எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ அவை மன்னிக்கப்படா என்றார். இந்நிகழ்வின் மூலம் இயேசு தாமே ஒப்புரவு அருட்சாதனத்தை தொடங்கிவைக்கிறார். பாவசங்கீர்த்தனத்தை தொடங்கி வைக்கிறார் அதன் வழியாக இயேசு பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை சீடர்களுக்கு கொடுக்கிறார். அதன்பிறகு சீடர்களை பின்பற்றிய திருத்தந்தை, ஆயர்கள், குருக்களுக்கு இந்த பாவங்களை மன்னிக்கும் பணியானது ஒப்படைக்கப் படுகிறது. இந்த பாவ மன்னிப்பு அதிகாரமானது மற்றவர்களை அடக்கி ஆள்வதற்காக அல்ல மாறாக பாவிகளை மனம் திருப்பவும், ஆறுதல்படுத்தவும், கடவுளின் மன்னிப்பை மக்களுக்கு வழங்குவதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்று நம்மில் எத்தனை பேர் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து நற்கருணை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்? இப்படியாக இயேசு தனது சீடர்களோடு உறவுகளை புதுப்பித்து அவர்களை உற்சாகத்தோடு வாழ அவர்களை வழிநடத்துகிறார். ஆனால் கடவுளுக்கு பிடித்தமான இந்த உறவுகள் சிதைந்து சீரழிந்து வருகின்றன.

இன்றைய உறவுகளின் சீரழிவு
இறை இயேசுவில் பிரியமானவர்களே இரக்கத்தின் ஆண்டவரின் பெருவிழாவில் நம்மையே நாம் சற்று சிந்தித்து பார்ப்போம். நம்முடைய கடவுள் இரக்கம் மிகுந்தவராய் இருப்பது போல நாமும் நம்முடைய அயலாரிடத்தில் இரக்கமாக இருப்போம். நம்முடைய உறவுகளை புதுப்பித்துக்கொள்ள முயற்ச்சிகள் எடுப்போம்

நவீன விஞ்ஞானத்தினால் சிதைக்கப்படும் உறவுகள்
ஏனென்றால் நம்மிடையே இருக்கும் நவீன கருவிகளின் வசதிகளினால் (mail, messages) தூரங்கள் குறைந்து விட்டதோ என்னவோ? உறவுகளிடையே இடைவெளி அதிகமாகிவிட்டது என்பதுதான் நிதர்சன உண்மையாகும். அன்று நமது பெற்றோர்கள் வானில் நிலாவைக் காட்டி சோறு ஊட்டினார்கள். ஆனால் இன்றைய குழந்தைகள் TVயிலும் Computerரும் Rhymes பார்த்து சாப்பிடுகின்றனர். தாய் சொல்லி கதை கேட்ட குழந்தை இன்று தானே Laptopபிலும் mobileலிலும் கதை கேட்க, தாய்க்கும் பிள்ளைக்குமான முதல் இடைவெளி இங்கிருந்தே ஆரம்பித்து விடுகிறது.

இதுவே இயற்கையான நிலவிலிருந்து இயந்திரமான computerக்கும் நம்முடைய வளர்ச்சி மாறிவிட்டது. அன்று அக்கம் பக்கம் உறவுகளோடு தெருவில் ஓடி ஆடி விளையாடிய குழந்தைகள் இன்று வீட்டிற்குள் T.V.யும் Laptopபிலும் விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.

அடுத்ததாக அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் தந்தைக்கு அலுவலக வேலைகளையும் வீட்டிலேயே பார்க்க வசதியாக வந்துவிட்டது இன்று Smart Phoneகளின் ஆதிக்கம். மனைவியோடும், குழந்தைகளோடும் செலவிடவேண்டிய நேரத்திலும் I Phoneநிலும் Laptopபிலும் செலவிடுகின்றனர். உறவுகளோடு உறவாட முடியாத மனிதர்கள் முகம் தெரியாத நபர்களோடு Face Bookல் உரையாடுகிறார்கள். ஆனால் உறவினர்களிடமோ நேரமின்மையை காரணம் காட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆக உறவுகளோடு இணைந்து வாழாத மனிதர்கள் இன்று கருவிகளோடும் கணினிகளோடும் இணைந்து காலத்தையும் நம் உடல்நலனையும் வீணடித்துக் கொண்டிருக்கின்றோம்.

பொருளாதரத்தினால் சிதைபடும் உறவுகள்
இன்றைய சூழலில் மனிதனின் வாழ்வில் பொருளாதாரம் முக்கிய அங்கமாகிவிட்டது. தேவைகள் நிறைவேறாத போது மனிதன் பொருளாதாரத்தைத் தேடி அலைய நேரிடுகிறது. அதன் விளைவால் பலர் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைகளுக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் பராமரிக்கபட வேண்டிய வயதில் பெற்றோர், சகோதரரின் கவனிப்பற்ற உடன்பிறப்புகள், தனிமைத் துயரில் மனைவி, தந்தையின் கண்டிப்பில்லாமல் வளரும் குழந்தைகள் எனக் குடும்பமே சீர்குலைக்கப்படுகிறது.

இதனால் ஏற்படும் விளைவுகள் கொஞ்சமில்லை..! பெற்றோருக்கும், மனைவிக்கும் இடையேயான கருத்துவேறுபாடு. அவனோ பிரச்னைகளின் தீவிரத்தை அறியமுடியாத தொலைவில்! இதனால் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் பூதாகரமாகி பல இடங்களில் கணவன் – மனைவி இடையே மணமுறிவு வரை கொண்டு சென்று விடுகிறது. சில இடங்களில் தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே உறவுச் சிக்கல் ஏற்பட்டு அதனால் முதியோர் இல்லங்கள் இன்று பெருகி வருவதை காணமுடிகிறது.

மனிதனின் முதல் உறவு கருவிலிருந்து ஆரம்பிக்கிறது. ஆம்! தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்று கூறுவார்கள் ஆனால் அப்படிப்பட்ட தாயை இத்தகைய பிரச்னைகளால் தள்ளி வைக்க எண்ணுகிறார்கள். பொருளாதாரத் தேடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவு உறவுகளின் உணர்வுகளை நிறைவேற்ற முடியாததால் தவறான வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்து அதனால் சீரழிந்து கொண்டு இருக்கும் குடும்பங்களை இன்று நாம் கண் முன்னே காண்கிறோம்.

தந்தையின் கண்டிப்பில்லாமல் வளரும் குழந்தைகள் அதனையே தனக்கு சாதகமாக்கி இளம் வயதிலேயே சீர் கெட்டுப் போவதை காண முடிகிறது.

உறவுகளுக்குள்ளே உறவு முறிவுகள்
பொருளாதாரத்தைத் தேடி முன்னிலைக்கு வரும் மனிதன் தராதரம் (status) பார்க்க ஆரம்பித்து விடுகிறான். தன் நெருங்கிய உறவினரே தேவையுடையவராய் இருக்க எங்கேயோ இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கங்களுக்குஇ அமைப்புகளுக்கு தனது பொருளாதாரத்தை வழங்கி தனக்கு பெருமையையும் புகழையும் தேட விரும்புகிறான். தன்னுடைய நெருக்கமான உறவுகள் கூட தூரமாக்கபடுகின்றன.

வாழ்க்கையில் முன்னேறிய மனிதன் தன் நிலைக்கு ஒத்தவர்களுடன் மட்டுமே உறவு பாராட்டுவது, சம்பந்தம் செய்து கொள்வது போன்ற செயல்களினால் தம் தாய் தந்தையரின் உடன்பிறப்புகள் கூட அன்னியமாக்கப்படுகின்றனர்.

தன் குடும்பத்தில் தன்னை விட யார் உயர்ந்து விட்டாலோ அங்கு பொறாமை குடியேறி விடுகிறது. இதனால் உறவுகளில் ஏற்படும் விரிசலானது அடுத்த தலைமுறைகளையும் பாதிக்கிறது. இப்படியே போனால் உறவு என்ற வட்டமானது தாய்-தந்தை-குழந்தை என்ற நிலைக்கு சென்றுவிடும் என்ற அச்சநிலை ஏற்படுகிறது.

இன்று வீட்டிற்கு ஒரு குழந்தை, இரு குழந்தை என்ற நிலை ஏற்பட்டு வருவதனால் எதிர்காலத்தில் அடுத்த தலைமுறைக்கு “சித்தப்பா”, “பெரியப்பா” என்ற உறவுகளே தெரியாமல் போய் விடுமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. அன்று உறவினர் வீட்டில் திருமணம் என்றால் 4 நாட்களுக்கு முன்னரே சங்கமித்து வேலைகளையும் பங்கிட்டுக் கொண்டன உறவுகள், இன்றோ மண்டபத்தில் கல்யாணம் அத்தோடு விடை பெறுகின்றன உறவுகள்.

இப்படியே பலவிதமான ஊதரணங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். இன்று இரக்கத்தின் ஆண்டவர் கூறுகிறார் எங்கே இரண்டு மூன்று பேர் என் பெயரின் பொருட்டு ஒன்றாக கூடியிருக்கின்றனரோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் மத் 18:20 என்கிறார். ஆக நம்முடைய கடவுள் கூடி வழ்வதைத்தான் விரும்புகிறார். இன்று நாமும் நம்முடைய குடும்பங்கள் எப்படிப்பட்ட குடும்பங்கள் என்பதை இன்று சிந்தித்து பார்ப்போம்.

உறவுகளை உற்சாகப்படுத்தி வாழ்கிறோமா? அல்லது உறவுகளை தொலைத்து விட்டு தனிதீவுகளாக வாழ்கிறோமா? சிந்திப்போம். நம்முடைய கடவுள் இரக்கமாக இருப்பது போல நாமும் பிறரை மன்னித்து இரக்க குணம் உள்ளவர்களாக வாழ்வோம்.

இறைஇரக்கத்தின் ஆண்டவர் நம்மையும் நமது உறவுகளையும் ஆசீர்வதிப்பாராக!.