இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

உயிர்ப்பு பெருவிழா

புதிய வாழ்வு வேண்டுமா? ஐ சி யு – வுக்கு செல்லுவோம்

தொ.நூல் 1:1 2:2, வி.ப 14:15 15:1, ஏசா 55:1-11,பாரு3:9-15,32 4:4, உரோ6:3-11
கொலோசையர் 3:1-4 திருத்தூதர் பணி 10:34, 37-43
மத் 28:1-10, யோவான் 20:1-9

இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே! கடவுள் மனிதர்களுக்கு கொடுத்த மிகப் பெரிய பொக்கிஷம் எது?
கடவுள் நமக்கு தந்துள்ள “வாழ்க்கை” தான் மிகப்பெரிய பொக்கிஷம் ஆகும். ஆக வாழ்க்கையை ஒவ்வொருவரும் நிறைவாக வாழவேண்டும். அந்த நிறைவான வாழ்க்கையை தருபவர்தான் நம்முடைய கடவுள். காரணம்; நம்முடைய கடவுள் இறந்தேரின் கடவுள் கிடையாது மாறாக வாழ்வோரின் கடவுள் லூக் 20:38. அதனால் தான் இன்று நாம் நமதான்டவரின் உயிர்ப்பு பெருவிழாவைச் மகிழ்ச்சியோடு சிறப்பிக்கிறோம். உலகத்தில் எத்தனையே மனிதர்கள் பிறந்தர்கள், வாழ்ந்தார்கள், இறந்தார்கள் ஆனால் நம்முடைய கடவுள் மட்டும் தான் இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இயேசு இவ்வுலகிற்கு வந்ததன் நோக்கம் என்ன?
மத்தேயு 20:28ல் “மானிட மகன் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரை கொடுப்பதற்கு வந்தார்”. மேலும் யோவான் 11:50, 18:14-ல் தலைமை குரு கயாபா ஓர் இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்றார். ஆகா நாம் வாழ்வுபெரும் பொருட்டு அதும் நிலைவாழ்வு பெரும் பொருட்டு கடவுள் நமக்காக இறந்து இன்று உயிர்த்து நம்மோடு பயணிக்க வருகிறார். எனவே ஆண்டவரின் உயிர்ப்பின் மகிழ்ச்சியை ஒருவர் மற்றவரோடு அல்லேலூயா எனச் சொல்லி கரங்களை குலுக்கி வாழ்த்துவோமா! அல்லேலூயா…

அது ஒரு அழகான கிராமம். எங்கு பார்த்தாலும் வண்ண வண்ண மலர்கள், வாணோக்கி வளர்ந்த தென்னை மரங்கள், பச்சை பசேல் என காட்சியளிக்கும் பூந்தோட்டங்கள் குழந்தைகளின் விளையாட்டுகள், ஆரவாரச் சிரிப்புகள் என அந்த ஊர் முழுவதும் சந்தோசமும், மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தது. இதற்கெல்லாம் அந்த ஊரில் வசித்து வந்த செல்வம் தான் காரணம். தான் படித்த படிப்பை வைத்து அந்த கிராம மக்களுக்கும், குழந்தைகளுக்கும் வேண்டிய அனைத்து வசதிகளையும் அன்றாடம் செய்து வந்தான். உண்மையிலேயே அந்த ஊர் மக்கள்; அனைவரும் திரு. செல்வத்தை அந்த ஊரின் செல்வமாக கருதி வந்தனர். ஒருநாள் இந்த செல்வம் கடைக்குச் சென்று திரும்பும் வழியில் எதிர்பாராத விதமாக ஓர் விபத்து. தலையில் பலத்த காயத்தோடு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். அங்கு இருந்த மக்கள் இவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். இரத்தம் அதிகமாக வெளியேறிய காரணத்தால் இவரை ஐ சி யூ வுக்குள் எடுத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர். இந்த செய்தி ஊர்மக்களுக்கு தெரிந்து அனைவரும் மருத்துவமனையையில் ஐ சி யூ வுக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தனர். அங்கேயே மண்டியிட்டு ஜெபிக்க ஆரம்பித்தனர்.

அப்போது ஒரு 5 வயது உள்ள குழந்தை அங்கு இருந்தவர்களைப் பார்த்து ‘எங்க செல்வம் அங்கிளுக்கு என்ன ஆச்சு? அவர் இப்ப எங்க இருக்காரு?’ என்று கேட்டது. அங்கிருந்த ஒருவர் செல்வம் அங்கில் இந்த ஐ சி யூ வில் இருக்கார் என்றார். அந்த குழந்தை ஐ சி யூ என்றால் என்ன? அங்கு யார் இருக்குரா? என்று கேட்டது. அதற்கு அவர் ஐ சி யூ என்றால் ‘நான் உன்னை பார்க்கிறேன் என்று அர்த்தம்’. ஐ சி யூ வில் கடவுள் இருக்கிறார். அவரைப் பார்க்க செல்வம் அங்கிள் சென்றிருக்கிறார் என்றார். அங்கிருந்தவர்களின் எண்ணங்கள் அனைத்தும் ஆண்டவரை செல்வத்தை எப்படியாவது காப்பாற்றி விடு என்று கடவுளை நோக்கியதாக இருந்தது. ஐ சி யூ வுக்கு உள்ளே மருந்து கொடுப்பது மட்டும் தான் மருத்துவர்கள் வேலை ஆனால் உடல் நலம் கொடுப்பவர் கடவுள் என்று அறிந்தவர்களாக அந்த மருத்துவர்கள்களும் கடவுளை நோக்கி ஜெபித்தவர்களாக இருக்கின்றனர். மேலும் அங்கு அடிபட்டு ஐ சி யூ வில் இருக்கும் செல்வமும் இறைவா எப்படியாவது என்னை காப்பாற்று என்று கடவுளை நோக்கி ஜெபித்துக் கொண்டிருக்கிறான். இரண்டு மணிநேரம் களித்து மருத்துவர்கள் வெளியே வந்து செல்வம் பிழைத்துக் கொண்டார், புது வாழ்வுக்கு வந்து விட்டார் என்றனர். அப்போது அந்த குழந்தை சொன்னது நாமும் புது வாழ்வு பெறவேண்டுமென்றால் ஐ சி யூ வுக்கு செல்ல வேண்டும் என்றதாம்.

ஆம் அன்புக்குரியவர்களே மரங்களும், செடி கொடிகளும் புது வாழ்வை பெறவேண்டுமென்றால் வானத்தையும், மழையையும் உற்று நோக்கி இருக்கின்றன். தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு புதிய உலகத்தை காண்பிப்பதற்காக ஒவ்வொரு தாயும் அவர்களின் பிரசவ நேரத்தை எதிர்பார்த்திருக்கின்றனர். அதைப் போலத்தான் இஸ்ராயேல் மக்களும் பாம்பு கடித்து இறந்து கொண்டிருந்த போது மோயீசன் செய்த அந்த வெண்கலப் பாம்பை யாரெல்லாம் உற்று நோக்கினார்களோ அனைவருமே புது வாழ்வை பெற்றுக் கொண்டனர். புதிய ஏற்பாட்டிலே யாரெல்லாம் சிலுவையை உற்று நோக்கினார்களோ அவர்கள் அனைவருக்கும் கடவுள் புது வாழ்வை கொடுக்கிறார். இப்படியாக புது வாழ்வை பெறவேண்டுமென்றால் நாமும் புது மனிதர்களாக மாறவேண்டும். இறப்பில் இருந்து உயிர்ப்புக்கு பயணிக்க வேண்டும், பாவத்தில் இருந்து புண்ணியத்திற்றகு செல்ல வேண்டும், இருளில் இருந்து வெளிச்சத்திற்கு செல்ல வேண்டும். இவ்வாறக நமதாண்டவர் இறப்பில் இருந்து புது வாழ்வுக்கு சென்று விட்டார். எனவே அவரை நம்பியிருக்கும் நம் அனைவருக்கும் தனது உயிர்பின் மூலம் நமக்கு புதிய வாழ்வை கொடுக்கிறார். அதைத்தான் இன்றை வழிபாடும் நமக்கு உணர்த்துகிறது.

முதலாவதாக ஒளிவழிபாடு
இன்றைய வழிபாட்டிலே முதலாவதாக நாம் ஒளி வழிபாட்டை கொண்டாடினோம். இதிலே நாம் புது தீயை மந்தரித்தோம், புது தீயில் இருந்து புது பாஸ்கா திரியை ஒளி ஏற்றினோம். பாஸ்கா திரி தரும் புதிய ஒளியில் இருந்து நம்முடைய புதுத்திரிகளை பற்றவைத்தோம். ஓளியை கரங்களில் ஏந்திக்கொண்டு பாஸ்கா புகளுரை வழியாக பழைய வாழ்க்கையில் இருந்து புதிய வாழ்வுக்கு அடியெடுத்து வைக்கின்றோம். நம் அனைவருக்குமே தெரியும் ஒளி இருளை அகற்றுகிறது. பாஸ்கா ஒளி நம்மிடத்தில் உள்ள இருளை அழித்து புது வாழ்வைத் தருகிறது.

இரண்டாவதாக வார்த்தை வழிபாடு
விண்ணும் மண்ணும் ஒழிந்து போகும். ஆனால் எம் வார்த்தைகள் ஒழியவே ஒழியாது என கூறிய இறைவன் இன்றைய வார்த்தை வழிபாடு வழியாக நமக்கு புதிய நம்பிக்கையையும், புதிய உத்வேகத்தையும் கொடுக்கிறார். பழைய ஏற்ப்பட்டு வாசகங்களில் கடவுள் மக்களுக்கு புதிய வாழ்வைக் கொடுக்கிறார். படைப்பை புதியதாக கடவுள் படைக்கிறார், செங்கடலில் நடந்து வந்த மக்களுக்கு புதிய வாழ்வைக் கொடுக்கிறார். இறைவாக்கினர்கள் வழியாக கடவுள் இஸ்ராயேல் மக்களுக்கு தங்களது பாவ வாழ்வில் இருந்து புதிய வாழ்வை அளித்து அவர்களுக்கு நம்பிக்கையை விதைக்கிறார். நற்செய்தி வாசகத்திலே இயேசுவின் இறப்போடு எல்லம் முடிந்து விட்டது என்று கவலையிலும் சோகத்திலும் இருந்த சீடர்களுக்கு அவரது உயிர்ப்பு புதிய நம்பிக்கையை கொடுக்கிறது.

மூன்றாவதாக திழுமுழுக்கு வழிபாடு
திருமுழுக்கு அருட்சாதனம் தான் கிறிஸ்தவர்களுக்கு ஓர் அடையாளத்தை கொடுக்கிறது. ஜென்ம பாவத்தில் இருந்து விடுதலை அளித்து புதிய வாழ்வைக் கொடுக்கிறது. எனவே திருமுழுக்கு வாக்குறுதிகளை புதுப்பித்து சாத்தானையும் அவனது தீய செயல்களையும் விட்டொழித்து புதிய மனிதர்களாக வாழ நமக்கு அழைப்புவிடுக்கிறது.

நான்காவதாக நற்கருணை வழிபாடு
யோவான் 6:51 –ல் “விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த வாழ்வுதரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வர். எனது சதையை உணவாக கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்” என்றார். மேலும் யோவன் 6:57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல என்னை உண்ணேபோரும் வாழ்வர். இந்த உயிர்ப்பி பெருவிழாவில் நாம் உட்கொள்ளும் நற்கருணை நமக்கு புதிய வாழ்வைக் கொடுக்கிறது. காரணம் இந்த உயிர்ப்பு பெருவிழா இரவுத் திருப்பலியிலே கலந்து கொண்டவர்கள் அனைவருமே பேறுபெற்றவர்கள் இந்த உயிர்ப்பு பெருவிழா நிகழ்வுகளில் பங்கு பெறவில்லையென்றால் பிறந்ததால் எப்பயனும் இல்லை என்கிறது நமது திருச்சபை. ஆண்டவரின் உயிர்ப்பு நமக்கு நம்பிக்கையை தந்து புதுவாழ்வை வாழ தூண்டி அழைக்கிறது.

இந்த உயிர்ப்பு பெருவிழா வழியாக கடவுள் நமக்கு நம் ஒவ்வொருவரையும் பார்த்து கூறுகிறார். உங்களுக்கு கிடைத்த பொக்கிஷத்தை நிறைவாக வாழுங்கள் என்று. வாழ்க்கை என்ற வார்த்தையை நாம் பிரித்து பார்த்தோமானால் அதிலே பல உண்மைகள் நமக்கு வெளிப்படும். “வாழ்க்கை” இதன் முதல் எழுத்து

வா :
கடவுள் இவ்வுலகில் உள்ள அனைவரையும் ‘வா’ என அழைக்கிறார். காரணம் இன்று நம்மில் பலபேர் வாழ்க்கையை உற்சாகமாகத்தான் தொடங்குகிறோம். நன்கு படித்து முன்னேற வேண்டும், நல்ல வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும், சமுதாயத்தில் பிறர் போற்ற வாழ வேண்டும் என நன்றாக தொடங்குகிறோம். ஆனால் வாழ்க்கை தரும் பிரட்சனைகளை, சோதனைகளை சமாளிக்க முடியாமல் துன்பத்தையும், துயரத்தையும் அனுபவித்து வருகிறோம். இப்படிப்பட்ட நேரங்களில் வாழ்க்கை வாழ்வதற்கு பதிலாக அது வெறுத்து விடுகிறது. இப்படிப்பட்ட சோதனை நேரங்களில் வாழும் கடவுள் நம் அனைவரையும் ‘வா’ எனச் சொல்லி அன்போடு அழைக்கிறார். உதாரணமாக இயேசு தனது சீடர்களை “வா” என்று அழைக்கிறார். காட்டு அத்திமரத்தில் இருந்த சக்கேயுவை “வா” என்று அழைக்கிறார். இறந்த லாசரை “வா” என்று அழைக்கிறார். எனவே, “வா” என்று அழைக்கப்பட்ட சீடர்கள், சக்கேயு, லாசர் இவர்கள் அனைவருக்கும் கடவுள் புதிய வாழ்வை கொடுக்கிறார். எனவே நம்மையும் இன்று ஆண்டவர் “வா” என்று அழைக்கிறார். நாம் தயாரா?

முதல் இரண்டு எழுத்து வாழ் :
கடவுள் நம்மை எதற்காக வா என்று அழைக்கிறார், காரணம் நாம் அனைவரும் வாழ்வதற்காக கடவுள் அழைக்கிறார். ஏனென்றால் நாம் பின்பற்றும் கடவுள் வாழ்கின்ற கடவுள். உதாரணமாக மத்தேயு 11:28-ல் “இயேசு பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்” என்கிறார். எனவே துன்பங்களை கண்டு துவண்டு விடாமல் ஆண்டவரிடத்தில் வருவோம் புதிய வாழ்வை பெற்றுக்கொள்வோம்.

முதல் மூன்று எழுத்து : வாழ்க்(க)
கடவுள் நம்மை வா என அழைத்து, அவரிடம் வந்தவர்களையெல்லாம் வாழ் என கூறி வாழ்வதற்கான வழிகளை கொடுத்து, அவர்கள் அனைவரையும் வாழ்க எனச் சொல்லி வாழ்த்துகிறார். லூக் 1:28-ல் “வானதூதர் மரியாவுக்கு தோன்றி அருள்மிகப் பெற்றவரே வாழ்க ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார்” என்றார். யாரெல்லாம் கடவுளின் குரலுக்கு செவிமடுத்து அவர் கொடுத்த வாழ்க்கையை நன்கு வாழ்கின்றனரோ அவர்கள் அனைவரையும் கடவுள் வாழ்க என வாழ்த்துகிறார்.

நான்கு எழுத்துகளும் சேர்ந்து வாழ்க்கை,
மனிதர்களின் இந்த வாழ்க்கை பாதையை தீர்மானிப்பது யார்? நீதிமொழி 20:24-ல் மனிதர்களின் வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கிறார். எனவே தான் கடவுள் நம் அனைவரையும் வா என அழைத்து வாழ்வதற்கான பாதையை காட்டி நம் அனைவரையும் வாழ்க என நமது வாழ்க்கையை நலமுடன் வாழ வாழ்த்துகிறார். வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க தாயரா?

கடவுள் நமக்கு கொடுத்த வாழ்க்கையை முழுமையாக வாழவேண்டுமென்றால் ஒவ்வொருநாளும் நாம் ஐ சி யூ வுக்கு செல்ல வேண்டும். அதாவது பிறரையும் நம்மைப் போல நேசிக்கும் போது வாழ்க்கையானது நமக்கும், நம்மை சுற்றியிருப்போருக்கும், ஏன் இந்த சமுதாயத்திற்குமே புதிய அத்தியாத்தை தருகிறது. உதாரணமாக என்னை நான் நன்கு பார்த்துக் கொள்வது போல
என் பிள்ளைகளையும் பார்த்தேன் என்றால் இன்று அநாதை குழந்தைகளே கிடையாது.
என்னை நான் நன்கு பார்த்துக் கொள்வது போல
என் பெற்றோரை பார்த்தேன் என்றால் இன்று முதியோர் இல்லமே தேவைப்படாது.
என்னையும் என் குடும்பத்தையும் நான் நன்கு பார்த்துக் கொள்வது போல
என் அண்டை வீட்டரையும் பார்த்தால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற தீச சக்திகளுக்கு வேலையே கிடையது.
எப்போது நம்மைப்போல பிறரையும் பார்க்கிறோமோ அப்போதே நமக்கும் நமது சமுதாயத்திற்கும் புதிய வாழ்வு பிறக்கிறது.

கல்லறைக்குச் சென்ற சீடர்கள் புது வாழ்வையும், புதிய நம்பிக்கையையும் பெற்றுக்கொண்டது போல ஆலயம் வந்துள்ள நாம் அனைவரும் புதிய மனிதர்களாக புது வாழ்வை தொடங்குவோம்.

உயிர்த்த இயேசு நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆண்டவர் உயிர்த்து விட்டார். புது வாழ்வு பிறந்து விட்டது அல்லேலூயா… அல்லேலூயா…