இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு

நம்முடைய கடவுள் கவலைப்படும் கடவுள்

ஏசாயா 49:14-15
1கொரிந்தியர் 4:1-5
மத்தேயு 6:24-34

கிறிஸ்து இயேசுவில் பிரியமானவர்களே! எல்லோரும் நன்றாக இருக்கின்றீர்களா?
(இந்த கேள்விக்கு பல நேரங்களில் ஒரு சிலர் தான் நன்றாக இருக்கிறோம் என்று பதில் அளிப்பார்கள்; மறையுரை முடிவிலே ஏன் அந்த மவுனம் என்பதை விளக்கவும்).

இயேசுவில் பிரியமானவர்களே! மனிதனாய் பிறந்த அனைவரும் அனுபவிக்ககூடிய நோய் எது தெரியுமா?

மனிதர்கள் அனைவரையும் ஆட்கொண்டுள்ள நோய் “கவலை.

இங்கு இருக்ககூடிய மனிதர்களில்; கவலை இல்லாத மனிதர்கள் யாரேனும் உண்டா?

ஆம் அன்புக்குரியவர்களே, எல்லா மனிதர்களுமே ஏதோ ஒரு வகையில் கவலைப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். தாயின் கருவறையில் இருந்து கல்லறைக்கு சென்ற பின்பும் கூட மனிதனின் கவலைகள் ஓய்ந்தபாடில்லை. உதாரணமாக:
கருவில் இருக்கும் குழந்தைக்கு நல்ல முறையில் பிறப்போமா அல்லது கருவிலே நம்மை அழித்துவிடுவார்களா? என்ற கவலை.
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலும்; தாயின் அரவனைப்பும் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கவலை.
பள்ளி செல்லும் குழந்தைக்கு ஆசிரியரின் அரவணைப்பும், பெற்றோர்களின் பாசமும் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கவலை.
வாலிப பிள்ளைகளுக்கு உடலலவிலும், மனதலவிலும், ஆயிரக்கணக்கான கவலைகள். நல்ல நண்பர்கள், நன்கு படித்து நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும்… இப்படி பல.
நன்கு படித்து தேர்விலே நல்ல மதிப்பெண் பெற்றவருக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கவலை.
தேர்விலே தோல்வி அடைந்தவருக்கு ஏன் இந்த உலகத்தில் வேண்டும், தன்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கபோகும் என்ற கவலை
கல்லூரியில் படித்து நல்ல மதிப்பெண் பெற்றவருக்கு நல்ல வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கவலை.
வேலை கிடைத்தவர்களுக்கு நல்ல ஊதியம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கவலை.
நல்ல ஊதியம் கிடைத்தவர்களுக்கு தன்னுடைய பணத்தை எப்படி பத்திரமாக சேமித்து வைப்பது என்ற கவலை
திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கவலை.
வயது முதிர்ந்தவர்களுக்கு தன்னுடைய பிள்ளைகள் தங்களை இந்த முதிர்ந்த வயதில் கவனித்துக் கொள்வார்களா? மாட்டார்களா? என்ற கவலை.
இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு இறந்த பின் நரகமா? மோட்சமா? என்ற கவலை.
இப்படியாக கருவரை முதல் கல்லறைக்கு பின்னும் மனிதனின் கவலை நீண்டு கொண்டே செல்கிறது. ஆக ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரும் கவலைப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறோம்.
உதாரணமாக, இன்றை வழிப்பாட்டின் தொடக்கத்தில் நான் உங்களிம் நன்றாக இருக்கின்;றீர்களா? என்று கேட்டேன் ஒரு சிலர் மட்டும்தான் பதில் அளித்தீர்கள். காரணம் என்னவென்றால் நாமும் கவலை நிறைந்த உள்ளத்தோடு ஆலயம் வந்துள்ளோம் அதனால் தான் பதிலும் வரவில்லை.

எனவே அன்புக்குரியவர்களே! இந்த உலகத்தில் கவலை இல்லாத மனிதர்கள் யராவது உண்டா?
கவலைகள் இல்லாமல் வாழ்;வது கடினம். மனிதனாய் பிறந்த அனைவருக்குமே கவலைகள் உண்டு. ஏன் நம்முடைய கடவுளுக்கும் கூட கவலைகள் உண்டு. உதாரணமாக, படைப்பின் தொடக்கத்தில் விண்ணையும், மண்ணையும் அதில் உள்ள உயிரினங்களை படைத்த போது அனைத்தும் நல்லது எனக் கண்டார். ஆனால் கவலை கொள்ளவில்லை. ஆனால் எப்போது மனிதனை படைத்தாரோ அப்போதே அவருக்கும் கவலை ஆரம்பமாகிறது. கடவுள் ஆதாமை படைக்கிறார் படைத்த பிறகு யோசிக்கிறார் இந்த ‘மனிதன் தனியாக இருப்பது நல்லது அல்ல’ என்று, இந்த தனிமை என்ற கவலையானது அவரை ஆட்கொள்கிறது. எனவே அவனுக்கு ஏற்ற துணையை உருவாக்குகிறார். மீண்டும் ஆதாமும், ஏவாலும் சேர்ந்து கடவுளுக்கு எதிராக பாவம் செய்த போது கடவுள் மீண்டும் கவலையடைகிறார். கடவுளின் கட்டளைப்படி அவர்கள் சாகவேண்டும் ஆனால் அவர்களை அழிப்பதற்கு பதிலாக மன்னித்து வாழ்வளிக்கிறார். அதே இஸ்ராயேல் மக்கள் மீண்டும் கடவுளுக்கு எதிராக சென்று வேற்று தெய்வங்களை வணங்குகின்ற போது மீண்டும் கவலையடைகிறார். எனவே அவர்களைத் தேடிச்சென்று பாதுகாக்கிறார். இப்படியாக நம் கடவுள் நம்மீது கவலை கொள்ளும் கடவுளாக இருக்கிறார்.

நம்மீது கொண்டுள்ள கவலையினால் தன் ஒரே மகனையும் நம்மை மீட்பதற்க்காக அனுப்புகிறார். இந்த இயேசுவும் நம்மீது கவலை கொண்டுள்ளதை நன்கு பார்க்க முடியும். மத்:9:36 ‘இந்த மக்கள் ஆயன் இல்லா ஆடுகள் போல அலைக்ககழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்’. அதைப்போலவே மனிதனாக பிறந்த காரணத்தினால் இயேசு கிறிஸ்துவும் கவலை கொள்வதை பார்க்க முடியும். உதாரணமாக: கெத்சமனியிலே மத்தேயு 26:37 “இயேசு துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்”. 38.“எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது”. 39:“தந்தையே முடிந்தால் இத்துண்பக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும்”. 40.“ஒருமணி நேரம் கூட உங்களால் வழித்திருக்க முடியவில்லையா?” இந்த வார்த்தைகள் அனைத்துமே கவலையின் வெளிப்பாடகவும், துன்பத்தின் உச்சகட்ட நிகழ்வாகவும் நமக்கு தரப்பட்டுள்ளது. ஆக இயேசுவாகிய நம்முடைய கடவுளும் கவலைகொள்ளும் கடவுளாக இருக்கிறார்.

அதைப்போலவே பாவமில்லாத நம்முடைய அன்னை மரியாவும் கவலை கொள்வதை பார்க்க முடியும். லூக்கா 2:48 “மகனே ஏன் இப்படி செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” என்றார். ஆக மனிதராய் பிறந்த அனைவருமே கவலை உள்ளவர்கள் என்பதை அறிய முடிகிறது.

ஆம் அன்புக்குரிவர்களே, கவலையிலே காலம் நகர்த்தும் நமக்கு நம்முடைய கடவுள் இன்றைய வழிபாடு வழியாக நாம் அனைவருமே கவலையை மறந்து சந்தோசமாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். இன்றைய வாசகத்தின் தலைப்பே கவலை வேண்டாம் என்று தான் தொடங்குகிறது. மத்தேயு 6:25-33 ‘உயிர்வாழ எதை உண்பது, எதைக்குடிப்பது, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர்கள்’ 27-‘கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்டமுடியும்?’ 28-‘உடைக்காக ஏன் கவலைப்படுகிறீர்கள்?’ 31-‘ஆகவே எதை உண்போம்? எதைக்குடிப்போம்? எதை அணிவோம்? எனக்கவலை கொள்ளாதீர்கள்.’ 34-‘நாளைக்காகவும் கவலைப்படாதீர்கள்’. ஆம் அன்புக்குரியவர்களே நம்முடைய கடவுள் நம்மை கவலைப்பட வேண்டாம் என்று அழைக்கிறார். காரணம் என்னவென்றால் 1 பேதுரு 5:7-ல் நம் கடவுள் கூறுகிறார் “உங்கள் கவலைகளையெல்லாம் என்னிடம் விட்டு விடுங்கள் ஏனென்றால் நான் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளேன்”. மேலும் 1கொரிந்தியர் 7:32ல் “நீங்கள் கவலையற்றவர்களாய் இருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்”. எனவே அன்புக்குரியவர்களே நம் கடவுள் நம்மீது கவலைப் படுபவராக இருக்கிறார். ஆக, கவலைப்பட வேண்டியது நம்முடைய கடவுள். எனவே நம்முடைய கவலைகளை ஆண்டவர் பாதம் இறக்கி வைத்துவிட்டு சந்தோசமாக வாழ முற்ப்படுவோம்.

கவலைகளை எப்படி எதிர்கொள்வது?
அடுத்தபடியாக கவலையில்லாமல் யாரும் வாழ முடியாது. ஆனால் கவலைகளை எப்படி நாம் எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் கடவுள் நமக்கு கற்றுத்தருகிறார். உதாரணமாக, இன்றைய உலகில் அனைத்து குடும்பங்களிலும் வாகனம் வைத்து இருக்கிறோம். ஒரு பைக்கை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். நீங்கள் பணம் சம்பாதித்து, அதை சேர்த்து வைத்து உங்களடைய பெயரில் ஒரு பைக் வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இப்போது இந்த பைக்குக்கு உரிமையாளர் நீங்கள் தான். அப்படித்தான? சில நாட்கள் கழித்து உங்களது பைக்கில் எதோ ஒரு பிரட்சனையின் காரணமாக வண்டியானது பழுதடைந்து விடுகிறது. நீங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் வண்டியை சரிசெய்ய முடியவில்லை. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?. நீங்கள் மெக்கானிக் கடைக்கு எடுத்துச் செல்வீர்கள். அப்படித்தான? ஏன் அங்கு எடுத்துச்செல்ல வேண்டும். நீங்கள் உரிமையாளர். நீங்கள் சரிசெய்ய வேண்டியது தானே! காரணம் வாகனத்தை பயன்படுத்துவதற்கு மட்டும் தான் நாம் உரிமையாளார். ஆனால் அந்த பழுதடைந்த பகத்தை கண்டுபிடிப்பதும், அதை சரிசெய்யும் கடமை அதை தயாரித்தவருக்கும், அதை நன்கு அறிந்தவருக்கும் தான் உண்டு.

அதைப்போலவே, மனிதர்கள் நாம் அனைவருமே கடவுளின் படைப்புகள். கடவுளுடைய தயாரிப்புகள். கடவுளுக்கு மட்டும் தான் தெரியும் நம்மை எப்படி சரிசெய்ய வேண்டும் என்று. அதனால் தான் வெவ்வேறு இடங்களில் பிறந்து, வெவ்வேறு குடும்பங்களில் நாம் வசித்தாலும் கடவுள் நம் அனைவரையும் இந்த ஆலயத்திற்கு அழைத்து வந்திருக்கிறார். ஆக கோவில் என்பது மனிதனை பக்குவப்படுத்தி சரிசெய்யும் இடம். அதனால்; தான் என்னவோ நம்முடைய முன்னோர்கள் ‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று சொல்லி வைத்தனர். எனவே அன்புக்குரிவர்களே! ஆலயம் வந்துள்ள நாம் அனவரும் கவலைகைள மறந்து மகிழ்ச்சியோடு வாழ நம் ஆண்டவர் நம் பின்னாலே வந்துகொண்டு இருக்கிறார்.

இந்த கடவுளின் பிரசனத்தை இன்றைய முதல் வாசகத்தில் நாம் தெளிவாக காணமுடிகிறது. கவலைகளினாலும், ஆயிரக்கணக்கான பிரட்சனைகளுக்கு மத்தியில் வாழும் நாம் அனைவருக்கும் நம்பிக்கையின் வாக்குறுதியை தருகிறார். ஏசாயா 49: 14-15-ல் “பால்குடிக்கும் தன் மகவை தாய் மறப்பாலோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளை மீது இரக்கம் காட்டாதிருப்பாலோ? இவர்கள் மறந்திடினும் நான் உன்னை மறக்கவே மாட்டேன்”. ஆக நம்மை படைத்த கடவுள் நம் பக்கமாக இருந்து நாம் நம்முடைய கவலைகளை மறந்து மகிழ்ச்சியோடு வாழ அழைக்கிறார்.

எப்படி கவலைகளை மறந்து மகிழ்ச்சியோடு வாழ்வது
01. சுயநலத்தை மறந்து பிறர்நலத்தை நாடும்போது
நாம் நம்முடைய சுயநலத்தை மறந்து பிறர்நலத்தை நாடும் போது கவலைகளை மறந்து மகிழ்ச்சியோடு வாழ முடியும். நம்முடைய கடவுள் நம்மீது கவலைப்படும் கடவுள். இந்த கடவுளிடத்திலே சுயநலம் கிடையாது. ஆனால் நம்முடைய கவலைகள் அனைத்துமே சுயநலத்தை மையப்படுத்தியதாக இருக்கிறது. (எனக்கு மட்டும் ஏன்…கவலை, என் குடும்பத்துக்கு மட்டும் ஏன்…) இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் சிறையில் இருந்த சிறைக்கைதிகள் அனைவருமே வாழ்க்கையே இருண்டுவிட்டது என்ற கவலையிலே நாhட்களை எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால், தான், எனது என்ற சுயநல கோட்டையை உடைத்தெரிந்து பிறர்நலத்தை நாடுகிறார் மாக்சிமில்லியன் கோல்பே என்ற மனிதர். அதனால் இன்று அவர் புனிதராக இருக்கிறார். ஆனால் கவலையோடு காலத்தை நகர்த்தியவர்கள் அனைவரும் இடம்தெரியாமல் இருக்கின்றனர்.

03. கடவுளிடத்திலே நம்மை முழுமையாக ஒப்படைக்கின்ற போது
அன்னை மரியாள் பல வேளைகளில் கவலை கொள்கிறார். ஆனால் அந்த கவலைகள் அனைத்தையும் கடவுளிடம் ஒப்படைக்கும் போது இன்று ஆசீர்வாதத்தின் கருவியாக செயல்படுகிறாள். லூக்கா 1:28 வானதூதரின் வாழ்த்தை கேட்டபோது ‘அவர் கலங்கி இந்த வாழ்த்து எத்தகையதோ என எண்ணிக் கொண்டிருந்தார்’. மீண்டும் வானதூதரிடம் ‘இது எப்படி நிகழும்’ இந்த கவலைகள் அனைத்தையுமே; ‘நான் ஆண்டவரின் அடிமை: உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்று மரியாள் ஆண்டவரிடத்தில் சமர்பிக்கிறார். ஆசீர்வாதத்தின் கருவியாக மாறுகிறார். மேலும், கானாவ+ர் திருமணத்திலே திருமண வீட்டாரைப் பற்றி கவலை கொள்கிறார். யோவான் 2:3-ல் ‘திராட்சை இரசம் தீர்ந்து விட்டது’ என்ற தன் கவலையை ஆண்டவரித்திலே சமர்ப்பிக்கிறார். ஆண்டவர் கவலையோடு இருந்த குடும்பத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கிறார்.

ஆம் அன்புக்குரியவர்களே நம்முடைய கவலைகள், கஸ்டங்கள் அனைத்தையும் கடவுளிடம் கடவுளிடம் ஒப்படைக்கும்போது நம்மை தேடிவருகின்ற கடவுள், நம்மீது அக்கறையும், கவலையும் கொண்ட கடவுள் நமக்கு நிறைவாழ்வையும் மகிழ்ச்சியையும் அளிப்பார்.

நம்முடைய கடவுள் நம்மீது கவலைகொள்ளும் கடவுள். அந்த கடவுளிடத்திலே நமது கவலைகளை விட்டுவிட்டு மகிழ்ச்சியோடு வாழ வரம் வேண்டி ஒருவர் மற்றவருக்காக இத்திருப்பிலியில் ஜெபிப்போம்! நாம் அனைவருமே கவலைகளை ஆண்டவரித்தில் ஒப்படைத்து விட்டோம் என்ன நம்பிக்கையிலே உங்களுக்கு அருகில் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்து நன்றாக இருக்கின்றீர்களா என்று நலம் விசாரிப்போம்! பக்தியோடு கல்வாரிப்பலியில் பங்கெடுப்போமா? நன்றாக இருக்கின்றீர்களா? ஆமென்.