இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








தவக்காலம் 1 ஆம் ஞாயிறு

பதிவுசெய்வோம்......இறைவனி;ன் நினைவுகளை...!!!

இணைச: 26: 4-10
உரோமை 10:8-13
லூக் 4: 1-13



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே அருள் வழங்கும் தவக்காலத்தின் முதல் வாரத்திற்கு உங்களை அன்போடு அழைக்கின்றேன். இச்சிறப்புக்காலத்தில் நம் பயணம் சிலுவையை நோக்கி அமைய வேண்டும். நாம் உற்றுநோக்க வேண்டிய சிலுவை மீட்பின் சிலுவை – மன்னிப்பின் சிலுவை – விடுதலையின் சிலுவை மேலும் புதுவாழ்வுதரும் சிலுவை. இவ்வருடத்தின் நமது தவ மற்றும் செபமுயற்சிகளை திருந்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களுக்காக அர்ப்பணிப்போம். மேலும் திருச்சபையின் வரலாற்றில் மற்றொரு சரித்திர சூழலில் இறைவனின் வழிநடத்துதலில் நம் எண்ணங்களை செபசிந்தனைகளை செலுத்தி தொடர்பயணம் செய்வோம்.

கணணிகருவிக்கும்(கம்யூட்டர்) மற்றும் மனித மூளைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்ன? என்ற கேள்விக்கு வந்த பதில்: கணணி அதில் அடங்கிய ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விவரங்களை மட்டும்தரும்- மேலும்பதிவுகள் ஒருகுறிப்பிட்ட அளவுகளுக்கு உட்பட்டவை. ஆனால் மனித மூளை அளவுகளை கடந்தவை – மேலும் எத்தனை பழைய விவரங்களையும் அழிக்கமுடியாமல் நினைவுகளில் உள்ளடக்கி வைத்திருக்கும். ஆம் கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே இத்தவக்கால முதல் வாரத்தில்; இறைவன் நம் கணணிகளை சிறிது தள்ளிவைத்துவிட்டு நம் மனித மூளையில் நினைவுகளில் நிழலாடும் இறைவனை கண்டுபிடித்து அந்த எண்ணங்களோடு தொடர்பயணம் செய்ய அழைக்கிறார். மனித மூளையில் பதுங்கியிருப்பதை தோண்டி கண்டெடுக்காமல் இருப்பதே நல்லது காரணம் அங்கு இருக்கும் நினைவுகள் கசப்பானவை – வலிதந்தவை – தோல்வியை சந்தித்தவை – ஏமாற்றத்தை மற்றும் வீழ்ச்சியை தந்தவை என்ற பதில்களே நம்மிடம் கிடைக்கின்றன ஆகவே பதிவுசெய்யப்பட்ட கணணியில் நாம் தஞ்சம்புகுந்திருக்கிறோம். இவ்வார இறைவார்த்தைகள் நம் நினைவுகளில் நிழலாடிய இறைவனை நாம் மறந்திருக்கிறோம் அவைகளை திரும்ப கண்டெடுத்து அந்நினைவுளில் தஞ்சம் புகுந்திட நம்மை அழைக்கின்றன.

முதல் வாசகத்தில் மோசே இறைவனின் நினைவுகளை இஸ்ராயேல் மக்களுக்கு ஞாபகப்படுத்துகிறார். உங்கள் மூதாதையரை மெசப்பட்டோமியாவிலிருந்து எகிப்து வந்தடைய செய்த இறைவன் - எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுதலையின் இறைவனாக வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு உடன் பயணம் செய்தது – பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டில் உடன்படிக்கையின் உரிமை மக்களாக்கியது. இத்தகைய இறைவனின் நினைவுகளை பதிவுசெய்யுங்கள் உங்கள் பாதை செம்மையாகும் செலுமையாகும் என எடுத்துரைத்து இது சக்தியே உருவான - இரக்கம் நிரம்பிய – நிபந்தனையில்லா அன்புநிறைந்த இறைவனின்நினைவுகளை இறைவனின் முகங்களை கண்முன் வைக்கிறது இத்தகைய இறைவனின் நினைவுகளையே தொடர்ந்து கண்டுபிடியுங்கள் தாங்கி வாழுங்கள் என அழைப்புவிடுக்கிறார். இந்த இறைவனின் நினைவுகள் எத்தகையது?

 தனித்துவிடப்பட்டு தனிமையில் துவண்டுநின்ற நினைவுகளை அல்ல மாறாக - நீங்கள் என் மக்கள் நான் உங்கள் இறைவன் என உங்களைதேர்ந்nடுத்த இறைவனின் நினைவுகளை பதிவு செய்யுங்கள்.
 அடிமைகளாக துன்பப்பட்டு எகிப்தில் புலம்பிய நினைவுகளை அல்ல மாறாக – உங்களோடு நெருப்புத்தூணாக மேகத்தூணாக உடன் பயணம்செய்து விடுவித்த இறைவனின் நினைவுகளை ஆழமாக பதிவுசெய்யுங்கள்.
 வலியோடு பசியோடு பயணம் செய்த பாலைவன நினைவுகளை அல்ல மாறாக – அங்கே மன்னா உணவையும் நீருற்றையும் நிறைவாய் தந்து நிரப்பிய இறைவனின் நினைவுகளை பதிவு செய்யுங்கள்.
 பல்வேறு போலி தெய்வங்களை நாடிசென்ற நினைவுகளை அல்ல மாறாக – பாலும் தேனும் பொழியும் வாக்களிப்பு நாட்டின் நினைவகளை என்றும் பதிவு செய்யுங்கள்.

மோசேஇத்தகைய நினைவுகளை பதிவுசெய்து நம்வாழ்வின் பயணம் தொடர கற்றுத்தருகிறார். வலியும் வேதனையும் பாலைவனமும் அடிமைத்தனமும் கடந்து போகும் நிலைகள்.. நினைவுகள். ஆனால் இறைவனின் மீட்புச்செயலின் விடுதலை செயலின் அன்பான அழைப்பின் நினைவுகள் தொடர்வது தொடர்ந்து நம்மில் தங்கவேண்டிய நினைவுகள். நாம் இத்தகைய இறைவனின்; நினைவுகளுக்கு நன்றிபலிசெலுத்தி தொடர்முயற்சியாக நாம் கண்டுபிடிக்கும் இறையவனின் நினைவுகளை மீண்டும் வாழ்வோம்.

நமக்கு நன்கு பரிச்சயமான ஒத்தமைவு நற்செய்திகளில் விவரிக்கப்படும் இயேசுவின் சோதனை தருணம் நமக்கு இன்றைய நற்செய்தி இறைவார்த்தைகளாக அமைகிறது. இறைமகன் இயேசு தன்னை அனுப்பிய இறைதந்தையின் அன்பையும் இலக்கையும் தெளிவாக உறுதியாக நினைவில் கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது. இச்சோதனைகளில் இயேசு தன்னைஅனுப்பிய இறைதந்தையின் நினைவுகளையும் - இறையரசின் குறிக்கோள் நினைவுகளையம் - கல்வாரியின் புதுவாழ்வு நினைவுகளையும் தன்னில் சுமந்து சந்திப்பது புரிகிறது. இது அலகையின் கேள்விகளுக்கு உறுதியோடு வாஞ்சையோடு பதிலளிக்க இயேசுவுக்கு துணையாகிறது. மனித பதவி ஆசைகள் - ஆணவமிகு அதிகார தோரணைகள் - சுயஆளுமை பாதிப்புகள் இவைகளை இயேசு கடந்துவருகிறார்.

மனிதன் அப்பத்தினால் மட்டும்வாழ்வதில்லை என்ற பதில் வார்த்தையால் உலகை படைத்து வார்த்தைகளை கட்டளை படிப்பினைகளாக தந்த இறைவனின் நினைவுகளை வெளிப்படுத்துகிறது. உன் கடவுளாகிய ஆண்டரை வணங்கி அவருக்கு பணி செய்வாயாக என்ற பதில் உருவம் கொடுத்து பராமரித்து விடுவித்து வழிநடத்தும் இறைவனின் நினைவுகளை வெளிப்படுத்துகிறது. உன் கடவுளாகிய ஆண்டவரை சோதிக்க வேண்டாம் என்ற பதில் இறைதந்தைக்குள்ள நெருக்கமிகு நினைவுகளை வெளிக்கொணர்கிறது. தவக்காலம் பாவத்தின் - குறைகளின் - கறைகளின் - துன்பத்தின் - தோல்வியின் நினைவுகளை தாங்கிவாழும் காலம் அல்ல மாறாக மன்னிக்கின்ற – ஏற்றுக்கொள்கின்ற – பராமரிக்கின்ற – உடன்வழிடக்கின்ற இறைவனின் நினைகளை நம் வாழ்வில் கண்டுபிடித்து இந்நினைகளில் தஞசம் புகுந்து தொடர்பயணம் செய்வதே தவக்கால வாய்ப்புகள் ஆகும்.

30வருடங்களாக திருச்சபையை உதறிதள்ளிவிட்டு பலசபைகளுக்கு சென்றேன் இன்று எனது முப்பதுவயது மகளின் நோய்க்கு நான்தான் காரணம் இதுஇறைவனின் தண்டனையே நான் பாவி என் குற்றத்தை இறைவன் மன்னிப்பாரா என மருத்துவமனையில் ஜிம் என்பவர் என்னை அணுகியபொழுது நான் சொன்னேன் உங்களுக்கு இறைவன் கொடுத்த அனுபவங்களை இந்த 30வருடங்களில் நீங்கள் கண்ட இறைவனின் நினைவுகளை கண்முன் கொண்டுவாருங்கள் என்றேன். கசப்பான நினைவுகளே என சிலநேரம்மறுத்தவர் பின் இருபது நிமிட அமைதிக்குப்பிறகு எதைச்சொல்ல என முப்பது நிமிடங்கள் தொடர்ந்துபேசினார். இராணுவத்தில் பல்வேறு அபாயகரமான சூழ்நிலையில் வாழ்ந்தபொழுது பாதுகாத்த இறைவனின் நினைவுகள் - தொடர்பலவீனத்தில் மன்னித்து வாய்ப்புகள் தந்த இறைவனின் நினைவுகள் - தனித்து தவித்து நின்றபொழுது உடன்இருந்த இறைவனின் தோழமை நினைவுகள் என பகிர பகிர அவரில் ஆனந்தம் வெளிப்படத்துவங்கியது. நீங்கள் கண்டுபிடித்த இறைவனின் நினைவுகளில் தஞ்சம் புகுந்து::ஆழமாக அவைகளை பதித்து தொடர் பயணம் செல்லுங்கள் 40 நாட்கள் மட்டுமல்ல நாள்தோறும் என்றேன்- நாமும் கண்டுபிடிப்போம் நம்மில் இருக்கும் இறைவனின் நினைவுகளை பதிப்பித்து பயணிப்போம் - ஆமென்.