இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









விண்ணேற்பு பெருவிழா

எழுச்சி தரும் ஏற்றம் (விண்ணேற்றம்)

I. திருத்தூதர் பணி 1:1-11
எபேசியர் : 4: 1- 13
மாற்கு 16: 15-20


இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே நமதாண்டவரின் விண்ணேற்பு பெருவிழாவை கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கக் கூடிய வேளையில் விண்ணேற்பு நாயகனாம் இயேசுவின் விழுமியங்களை நமதாக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம். மாற்றங்களை ஏற்றுக் கொள்பவரின் வாழ்வில் ஏற்றம் நிச்சயம் உண்டு என்பர். அவ்வகையில் நமது வாழ்வில் அன்றாடம் பல்வேறு மாற்றங்களை நாம் சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறோம். விலை ஏற்றம் வரி ஏற்றம் என்று பல்வறு விதமான ஏற்றங்கள் நம்மை மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாக்கின. அது போக கொள்ளை நோயின் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை ஏற்றம் வேறு நம்மை நாளுக்கு நாள் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. இத்தகைய ஏற்றங்களுக்கு மத்தியில் இறை இயேசுவின் விண்ணேற்றம் நமது வாழ்விற்கு எழுச்சி தர இருக்கின்றது. பொதுவாக ஏற்றம் என்றாலே கீழிருந்து மேலே செல்வது . அதிலும் நமதாண்டவர் இயேசு கிறிஸ்து தன்னை அனுப்பிய தந்தையிடமே திரும்பி செல்கிறார். மண்ணுலகிலிருந்து விண்ணுலகிற்கு ஏறிச்செல்கின்றார்.

கீழிருந்து மேல் நோக்கி செல்லும் அனைத்தும் தன்னுடைய பதிவுகளை விட்டு செல்லும். அல்லது அதன் இணைப்பு கீழே எதனுடனாவது இணைக்கப்பட்டிருக்கும். விமானம், விண்வெளியில் செலுத்தப்படும் ஏவுகணைகள் நாம் விடும் பட்டம், பறவைகள், வண்ணத்துப்பூச்சி என அனைத்தும் கீழிருந்து மேலே செல்கின்றன. இவற்றின் புறப்பாடுகளைக் காண்பது நமக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அது கீழிருந்து மேலே ஏறிச்செல்வதை மிகவும் ரசித்து காண்பர். இவ்வாறு ஏற்றம் காணும் நிகழ்வுகள் நமக்கு அந்த ஒரு நேரம் மட்டும் மகிழ்வைத் தந்துவிட்டு செல்கின்றன. முதல் முறை இவற்றைக் கண்டவர் என்றால், அதை பலரிடமும் கூறி மகிழ்வதுண்டு. இதுவே நாமே பறந்த தருணம் என்றால் சொல்லவே வேண்டாம். பகிரப்படும் நபரின் பட்டியலும், நாளும் நீண்டு கொண்டே இருக்கும். ஆக சாதாரணமான ஒரு ஏற்றமே நம்மை மகிழ்விக்கும் பொழுது இயேசுவின் விண்ணேற்றம் நமக்கு மட்டில்லா மகிழ்ச்சியை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இயேசு விண்ணேற்றம் அடையும் முன் தம் சீடர்களிடம் நான்கு விசயங்களைக் கூறுகின்றார்.
1. காத்திருங்கள், 2. தூய ஆவியை பெறுங்கள், 3. சாட்சிகளாய் விளங்குங்கள், 4. கவலை கொள்ளாதீர்கள்.

1. காத்திருங்கள்:
நீங்கள் எருசலேமை விட்டு நீங்க வேண்டாம் தந்தையின் வாக்குறுதி நிறைவேறும் வரைக் காத்திருங்கள் என்கின்றார். காத்திருப்பு பல்வேறு அனுபவங்களை நமக்கு தருகிறது. கேட்டவுடன் கிடைக்கும் பொருளை விட, தாமதித்து காத்திருந்து கிடைக்கப்பெறும் பொருளுக்கு மதிப்பு அதிகம். எனவே தான் இயேசு தன்னுடைய சீடர்களிடம் காத்திருங்கள் என்கின்றார். காத்திருப்பவர்களின் ஆர்வம் அந்த நாட்களில் மிக அதிகமாக இருக்கும். அவர்களின் எண்ணம் ஏக்கம் அனைத்தும் அதுவாகவே இருக்கும். அதைப்பற்றிய கனவும் சிந்தனையும் அதிகமாக இருக்கும். இப்படிக் காத்திருக்கும் போதே தங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில் கிடைக்கப்படும் வேலையும் பொருளும் மிக அதிகமாக செய்யப்படும் பராமரிக்கப்படும். எவ்வாறு கூட்டுப்புழு காத்திருந்து தன்னைத் தாயரித்து பட்டாம் பூச்சியாக தன்னை வெளியே கொண்டு வருகிறதோ அது போல காத்திருந்து செய்யப்படும் நமது வாழ்வும் சிறப்பாக மிளிரும். இங்கு இயேசு தந்தையின் வாக்குறுதி நிறைவேறும் வரை சீடர்களைக் காத்திருக்க சொல்கின்றார்.

தந்தையின் திருவுளம் நமது வாழ்விலும் செயல்படுகிறது. அது என்ன என்று தெரியாமலும், விரும்பாமலும் பல நேரங்களில் நாம் காத்திருக்க விரும்புவதில்லை. உடனடி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நமக்கு அனைத்தும் உடனடியாக கிடைக்க வேண்டும் என்றே எண்ணுகின்றோம். உடனடியாக கிடைக்கப்படும் அனைத்தும் நிலைத்து இருப்பதில்லை. நமக்கு தேவையற்ற வேண்டாத விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. நல்லவை தாமதாகவே வரும் நீடித்து நிலைத்து நிற்கும். உடனடியாக கிடைப்பவை மாயமாய் மறைந்து போகும்.

2. தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.:
தூய ஆவி நம் உள்ளத்திற்கு திடமும் தேற்றுதலும் கொடுப்பார். அவரது செயல்பாடு எல்லையற்றது. பழைய ஏற்பாடு முதல் புதிய ஏற்பாடு வரை ஏன் இன்றளவும் தூய ஆவியின் செயல்பாடு நம் வாழ்வில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது. இயேசுவின் வாழ்விலும் தூய ஆவியின் செயல்பாடு இன்றியமையாத பங்காற்றியது. இன்பத்திலும் துன்பத்திலும் அவருக்கு மிக உறுதுணையாக இருந்தது அவரே. இயேசுவின் வாழ்வில் மட்டுமன்றி சீடர்களுடைய வாழ்விற்கும் வளம் சேர்க்க அத்தகைய தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்கின்றார். தூய ஆவியினால் திருமுழுக்கு பெற்று நிறை வல்லமையுடன் செயல்பட அறிவுறுத்துகிறார்.
ஆவியின் செயல்பாட்டை நமது வாழ்விலும் உணர்ந்து செயல்படுவோம். திடமுள்ளவர்களாய் பிறரையும் திடப்படுத்துபவர்களாய் வாழ்வோம். ஆறுதல் பெறுபவர்களாக மட்டும் இல்லாமல் ஆறுதல் கொடுப்பவர்களாகவும் வாழ்வோம்.

3. சாட்சிகளாக வாழுங்கள்:
நமது வாழ்வு பிறருக்கு சான்று பகரக் கூடிய வாழ்வாக இருக்க வேண்டும். சீடர்களின் வாழ்வு இயேசுவின் போதனைக்கும் வாழ்விற்கும் சான்றாக அமைந்தது. சீடர்களைப் பார்த்த மக்கள் இவர்கள் இயேசுவின் சீடர்கள் , அவருக்கு இருக்கும் வல்லமை இவர்களுக்கும் என்று நம்பினர். அதன்படியே நோயாளர்களை அவர்களிடம் அழைத்து வந்து சுகமடையச் செய்ய வேண்டினர். இயேசுவின் சீடர்கள் அவரைப் போலவே வாழ்ந்தனர். தங்களது சொல்லாலும் செயலாலும் தாங்கள் இயேசுவின் சீடர்கள் என்பதை வெளிப்படுத்தினர். இருப்பினும் இயேசு அவர்களை தன்னுடைய விண்ணேற்புக்கு பின்பும் சான்று பகர சாட்சியமுள்ள வாழ்வு வாழச்சொல்கின்றார்.
அவருடைய இன்றைய கால சீடர்களாகிய நம்மிடமும் அவர் கூறுவது இதுவே. சாட்சிகளாக வாழுங்கள். சான்று பகருங்கள் உங்களது சொல்லால் செயலால்.

4. கவலை கொள்ளாதீர்கள்:
இஸ்ரயேலுக்கு ஆட்சியுரிமை கொண்டு வரும் காலம் இது தானா? என்று சீடர்கள் கேட்க அதற்கு இயேசு அது என் தந்தையின் விருப்பம் அதை பற்றி அறிந்து கொள்ளவோ கவலையுறவோ வேண்டாம் என்கின்றார். அவர்களைப் பற்றி கவலைப்படாமல் தேவையற்ற சிந்தனை உடையவர்களாய் சீடர்கள் இருக்கின்றனர். எனவே அவர்களிடம் தந்தையின் அலுவல் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்கின்றார்.
நாமும் பல நேரங்களில் நமக்கு தேவை இல்லாத வேலைகள் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாளைய நாள் பற்றிய கவலை, நோய் நம்மை பாதித்து விடுமோ என்ற கவலை, இப்படியே என் வாழ்நாள் போய் விடுமோ என்ற கவலை. இப்படியாக பல கவலைகளில் நாம் மூழ்கிக் கிடக்கின்றோம். இந்தக் கவலைகளை விட்டுவிடுங்கள் என்கின்றார்.

விண்ணேற்றமடையும் இறை இயேசு நமக்கு சொன்ன இந்த நான்கு வகை கருத்துக்களையும் மனதில் கொண்டு வாழும் போது, நாமும் எழுச்சி மிகு ஏற்றங்கள் பல காணலாம். எதைப் பற்றியும் தேவையற்ற கவலை கொள்ளாது இறைத்திருவுளத்தின் மேல் நம்பிக்கை கொண்டு தொடர்ந்து வாழும் போது ஏற்றங்கள் காண முடியும். காத்திருப்போம் நல்ல பல நிகழ்வுகளுக்காக, சாட்சியுள்ள வாழ்வு வாழ்வோம். தூய ஆவியின் வல்லமை பெற்று பிறருக்கு திடமும் தேற்றரவும் கொடுப்போம். விண்ணேற்றமடைந்த இயேசுவின் அருள் ஆற்றலும் பிரசன்னமும் நம் ஒவ்வொருவரோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருந்து நம்மை ஆசீர்வதிப்பதாக ஆமென்.