இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பாஸ்கா காலம் 6ம் ஞாயிறு

கிடைத்த அன்பா? நிலைத்த அன்பா?

I. திருத்தூதர் பணி 10; 25-48
II. 1 யோவான் 4: 7- 10
III. யோவான் 15: 9-17


இறை இயேசுவில் மிகவும் அன்புக்குரிய உள்ளங்களே உயிர்ப்புக் காலத்தின் ஆறாம் ஞாயிற்றுக் கிழமையில் இருக்கும் நம்மை இன்றைய வாசகங்கள் வழி இறைவன் நிலைத்த அன்பு கொண்டவர்களாய் வாழ அழைக்கின்றார். அன்பு என்பது எல்லோரும் அறிந்த ஒன்று, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அன்பினால் ஆட்கொள்ளப்படுகின்றார்கள். சிலர் அன்பின்றி பாதிக்கப்படுகின்றார்கள். அன்பு எல்லா நிலையில் இருப்பவருக்கும் ஆறுதல் தரும் அற்புத மருந்து. அன்பு ஒரு மிகச்சிறந்த பரிசு. கொடுப்பவர் பெறுபவர் இருவருமே பலனடையக் கூடிய சக்தி வாய்ந்தது. நாமும் பலரால் அன்பு செய்யப்படுகின்றோம் . பலரையும் நாம் அன்பு செய்திருப்போம். ஆனால் நாம் காட்டும் அன்பு கிடைத்த அன்பா? நிலைத்த அன்பா என்று சிந்திக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன. அன்பு கிடைத்ததா? என்பதில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அது நிலைத்ததா? என்பதில் தான் பிரச்சனையே. நாம் காட்டும் அன்பும், நம்மிடம் காட்டப்படும் அன்பும் நிலைத்து இருந்தால் மட்டுமே அது உண்மையான அன்பாக இருக்க முடியும்.

கிடைத்த அன்பு:
கிடைத்த அன்பு என்பது நிலையற்றது. ஒரு இடத்தில் நாம் இருக்கும் போது கிடைக்கும் அதுவே வேறு இடம் மாறினால் அது மாயமாய் மறைந்து விடும். வானில் கடந்து செல்லும் மேகங்கள் போன்றது அவ்வன்பு. சுயநலமான அன்பு அது. தன்னையும் தன்னுடைய நலனையும் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும். அங்கு நிலவும் மகிழ்ச்சி என்பது நிலையற்றது. குறுகிய கால மகிழ்ச்சி அது. அது ஒரு போதும் நிறைவு பெறாது. தன்னுடன் இருப்பவர்களை பணியாளர்களினும் கீழாய் நடத்தக் கூடியது. முதல் வாசகத்தில் கடவுள் ஆள் பார்த்து செயல்படுவதில்லை என்பது பேதுருவிற்கு கொர்னேலியுவின் செயல்பாடு பார்த்து விளங்கியது. இதற்கு நேர்மாறாக ஆள் பார்த்து, ஆடை பார்த்து, இனம் மொழி பார்த்து செயல்படுவது கிடைத்த அன்பு.
எல்லோருக்கும் நிலைத்த அன்பு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. கிடைத்த அன்பை நிலைத்த அன்பாக மாற்றும் தன்மையைப் பெற முயல்வோம். சிலருக்கு அன்பு காட்டத் தெரிவதில்லை. சிலருக்கு அன்பு காட்டுவது புரியவில்லை. சிலர் அன்பு காட்ட முயல்வதே இல்லை.

நிலைத்த அன்பு:
நிலைத்த அன்பு என்றால் அது இறைவனின் அன்பு தான். அவருடைய அன்புக்கு நாம் எல்லாம் அடிமைகள் என்று சொல்லலாம். அவரிடமிருந்தே அன்பு என்றால் என்னவென்று கற்றுக் கொள்கிறோம். இரண்டாம் வாசகத்தில் கூறப்படுவது போல கடவுள் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நமக்காக அனுப்பினார் என்பதில் தான் அன்பின் தன்மை விளங்குகிறது. ஆக அவர் நம்மீது கொண்டுள்ள அன்பின் தன்மை அளவற்றது. அது ஒரு போதும் மாறுவதில்லை. நிலைத்த அன்பில் உண்மையான நிறைவான மகிழ்ச்சி இருக்கும். பணியாளர்களாக அல்ல நம்மை நண்பர்களாக பார்க்கும் தன்மை உடையது. ஆள் பார்த்து செயல்படாது. நாம் தேர்ந்ததால் அல்ல அவர் நம்மை தேர்ந்ததால் அவ்வன்பிற்கு நாம் உரியவர்களானோம். அவர் நம்மீது அன்பு கூர்ந்து அவ்வன்பை பிறரிடம் காட்டச்சொல்லி அதை விரிவுபடுத்துகிறார். அவரின் அன்பு நமக்குள்ளே முடங்கிப் போகின்ற அன்பாக இல்லாமல் பிறரிடம் பரவி நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அன்பாக மாற வேண்டும்.

ஆக நாம் கடவுள் மீது கொண்ட அன்பு, அவர் நம்மீது காட்டும் அன்பு இரண்டும் நீடித்து நிலைதிருக்கக் கூடிய அன்பாக இருக்க வேண்டும். அது நம்மைச்சுற்றி மட்டும் இல்லாது நம்மைத் தாண்டி பிறரையும் சென்றடைய வேண்டும். பிறரைச்சென்றடையும் போது அது சுயநலமில்லாத தூய அன்பாக இருக்க வேண்டும்.

சீடர் ஒருவர் தன்னுடைய குருவிடம் சுயநலமற்ற அன்பு சுயநலமுள்ள அன்பு இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டார். குரு அவருக்கு சிறந்த எடுத்துக்காட்டுடன் விளக்க முயன்றார். அப்போது ஏரிக்கரையோரம் ஒருவன் மீன் பிடித்துக் கொண்டிருந்தான். குரு அவனிடம் மீன்கள் என்றால் உனக்கு மிகவும் பிடிக்குமோ என்று கேட்டார். அவன் அதற்கு பதி மொழியாக , ஆமாம் மீன்கள் என்றால் எனக்கு உயிர். இவற்றைப் பிடித்துக் கொண்டு போய் என் மனைவியிடம் கொடுப்பேன். அவள் எனக்கு மிக ருசியாக இதை சமைத்து தருவாள் . அதை நான் ஒரு பிடி பிடித்து விடுவேன். என்றான். சற்று நேரம் கழித்து மறுபுறம் இன்னொரு மனிதர் அந்த ஏரிக்கரையை நோக்கி வந்தார். அவர் கையில் பை நிறைய பொரி இருந்தது. அவர் அப்பொரியினை மீன்களை நோக்கி வீச அவைகள் நூற்றுக்கும் மேலாக அவரை நோக்கி வந்து பொரியினை உண்ணத்தொடங்கின. குரு அம்மனிதரை நோக்கி மீன்கள் என்றால் உனக்கு அவ்வளவு பிடிக்குமா? என்றார். அவரோ மறுமொழியாக, மீன்கள் என்றால் எனக்கு உயிர். அவைகளுக்கு உணவளித்து மகிழ்வதில் எனக்கு பேரானந்தம் என்று சொல்லி பொரியினை போடத் தொடங்கினார்.
குரு சீடனைப் பார்த்து, இப்போது புரிந்ததா? சுயநலமற்ற அன்பிற்கும் சுயநலமுள்ள அன்பிற்கும் உள்ள வித்தியாசம்? இருவருக்குமே மீன் என்றால் உயிர் என்பது அவர்கள் சொன்ன பதிலிலேயே அறியலாம். ஒருவர் தன்னுடைய ஆசைக்காக மீனை பிடிக்கிறான். மற்றொரு மனிதன் தன்னுடைய ஆசைக்காக மீனை வளர்க்கிறான். இரண்டாவது மனிதனின் செயல் தன்னலமற்றது. அம்மீன்களினால் அவனுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்காவிட்டாலும் அவற்றின் மேல் அன்பு கொண்டு அவற்றைப் பராமரிக்கின்றான்.

கடவுள் நம்மிது காட்டும் அன்பும் இத்தகையதே. சுயநலமற்றது. நிறைவான மகிழ்ச்சி தரக்கூடியது. ஆள் பார்த்து செயல்படாதது. நம்மை நண்பர்களாகப் பார்க்கக் கூடியது. இத்தகைய இறைவனின் நிலைத்த அன்பை நாமும் பெற்று பிறரும் பெற வழிவகை செய்வோம். கிடைக்கின்ற அன்பில் எல்லாம் முழுமை காண எண்ணாது, நீடித்த நிலைத்த அன்பாம் இறை அன்பில் முழுமை பெறுவோம். உயிர்த்த இயேசுவின் அருள் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருந்து நம்மை வழிநடதுவதாக ஆமென்.