இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பாஸ்காகாலம் 5 ம் ஞாயிறு

இணைந்(த்)திரு......

I. திருத்தூதர் பணி9:26- 31
1 யோவான் 3: 18- 24
யோவான் 15: 1-8


உயிர்த்த இயேசுவில் மிகவும் அன்பான இறைமக்களே, உண்மையான திராட்சைக்கொடியாம் இயேசுவை நம்பி அவரோடு இணைந்திருக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன. உலகமெங்கும் இருக்கக் கூடிய மக்கள் அனைவரும் தொற்று கிருமியின் தாக்குதலுக்கு அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நேரத்தில், கனி தரும் திராட்சைக் கொடியாம் இயேசு, அவரோடு நாம் இணைந்திருக்க நம்மை அழைக்கிறார். அவரோடு நாம் இணைந்திருந்தால் நாம் அடையக் கூடிய பலன்களை எடுத்துரைக்கின்றார். இணைப்பு வலிமை சேர்க்கக்கூடியது. அது இரு பகுதிகளை இணைக்கும் பாலமாக இருந்தாலும் சரி, இரு கைககளை இணைக்கும் பலமாக இருந்தாலும் சரி. இணைப்பு என்பது மிக வலிமையானது. சாதாரண இரண்டு பொருட்களை, நபர்களை இணைக்கும் போதே மிக வலிமை பெறும்போது, வலிமையின் உச்சமாம் இயேசுவோடு நாம் இணைந்திருக்கும் போது அதிகப்படியான வலிமையையும் ஆசீர்வாதத்தையும் பெறுகிறோம்.
நம்முடைய இணைப்பு அவருடன் செயலளவில், சொல்லளவில், வாழ்க்கையில் இருக்க வேண்டும். இணைந்திருந்தால் மட்டும் போதாது. பிறரையும் அவரோடு இணைத்திருக்க வழிவகை செய்ய வேண்டும்.

செயலால் இணைத்திருப்போம்:

நம்முடைய செயல் நாம் யார் என்பதை இவ்வுலகிற்கு எடுத்துரைக்கும் கருவி. நம்முடைய செயல் ஒன்றும், சொல் மற்றொன்றுமாக இருக்குமானால் இவ்வுலகமும் அதிலுள்ள மக்களும் நம்மை பலனற்றவர்கள் என்று நினைக்கக்கூடும். ஆக நம்முடைய சொல்லும் செயலும் ஒன்று போல இருக்க வேண்டும். சிலர் நல்லது செய்ய வேண்டும் என்று சொல்வார்கள், ஆனால் செய்ய மாட்டார்கள். சிலர் செயலில் அதை முதலில் செய்து விடுவார்கள். அவர்களின் செயலை பிறர் பேசுவார்கள். இயேசுவோடு நாம் இணைந்திருக்கும் போது, நம்முடைய செயல்கள் வித்தியாசமானதாக மாறும். நம்முடைய சொல்லும் செயலும் ஒன்றோடொன்று இணைந்து செல்லும். முதல் வாசகத்தில் நாம் வாசிக்கக் கேட்ட பர்னபா, சவுலின் வாழ்க்கை போல நம்முடைய வாழ்க்கையும் காணப்படும். பர்னபா துன்ப வேளையில் சவுலுக்கு துணை நிற்கிறார். சவுலைப் பற்றி தெரியாத சீடர்களுக்கு அவருடைய மனமாற்றத்தைப் பற்றி எடுத்துரைக்கிறார். தன்னுடைய செயலால் சவுலோடு இணைந்து அவர் பணியை நன்கு செய்ய மிக முக்கியமான காரணராகின்றார். இயேசுவோடு அவர் கொண்டிருந்த இணைப்பு செயலில் வெளிப்படுகிறது. ஆர்ப்பரிப்புடன் அவர் தன்னுடைய இந்த செயலை செய்யவில்லை. மாறாக மிக அமைதியுடன் செய்கின்றார். இயேசு என்னும் உண்மையான திராட்சை செடியுடன் அவர் கொண்ட இணைப்பு பர்னபவையும் சவுலையும் எந்த விதமான எதிர்பார்ப்புமின்றி பணி செய்ய மாற்றியது. நாமும் இயேசுவோடு உண்மையாக இணையும் பொழுது நமது செயலும் வாழ்வாக மாறும்.
இன்று உலகத்தில் உள்ள மக்கள் பல்வேறு தேவைகளினால் துன்புறுகின்றனர். அவர்களுக்கும் நம்முடைய செயலால் இணைப்பைக் காட்டுவோம். உடலாலும் உள்ளத்தாலும் வருத்தமுற்றுக் கொண்டிருக்கும் அவர்கள் நம்முடைய சிறு செயலால் இளைப்பாறுதல் அடையட்டும். நற்செயல் நல்லவர்களின் அடையாளம்.

சொல்லால் இணைந்திருப்போம்:
சொல்லால் இணைந்திருப்போம். நாம் ஒரு நாளைக்கு பல நூறு வார்த்தைகள் பேசுகிறோம். அதில் பாதி வீணான வார்த்தைகள். அவைகளை நாம் சொல்லாமலும் பயன்படுத்தாமலும் கூட இருந்திருக்கலாம். பல நேரங்களில் அர்த்தமற்ற சொற்களால் நம்மை நம்முடைய குணத்தை நாம் கறைப்படுத்துகிறோம். என்ன சொல்ல வருகிறோம் என்று தெரியாமலேயே பல நேரங்களில் பல வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். நமது சொற்கள் பிறருக்கு பலம் தரக்கூடியதாக இருக்கவேண்டும். மாறாக பிறரின் பலத்தை அழிக்ககூடியதாக இருக்கக் கூடாது. சிலரிடம் பேசத்துடிக்கிறோம். சிலர் பேசினாலே துடிக்கிறோம். இரண்டாவது வகை மனிதர்களாக நாம் மாறிவிடக் கூடாது. தேளுக்கு கொடுக்கில் விசம். ஒரு முறை கொட்டினால் மறுமுறை விஷம் இருக்காது. ஆனால் மனிதரின் நாக்கோ தேளின் விஷத்தை விட கொடியது. ஆனால் நமது நல்ல சொல் கொண்டு அந்த கொடிய விஷத்தையும் மாற்றிவிட முடியும். நாம் இயேசு என்னும் உண்மையான திராட்சைக் கொடியுடன் இணைந்திருக்கும் போது நம்முடைய சொல்லில் பல மாற்றங்களை நாம் காணலாம். நம்முடைய வார்த்தைகளுக்கும் பேச்சுக்கும் அதிக முக்கியத்துவம் இருப்பதைக் காணலாம். நமது பேச்சைக் கேட்க விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாகலாம். நமது சொல் உண்மையின் மறு வடிவமாக மாறலாம். உண்மையைச் சார்ந்தவர்களாக நாம் மாறுவோம். உண்மை அன்பை விளங்கச்செய்யும் இயேசுவின் கனி தரும் சீடர்களாவோம்.

வாழ்வால் இணைந்திருப்போம்:
சொல் செயல் மட்டுமன்று வாழ்வாலும் நாம் அவருடன் இணைந்திருக்க வேண்டும். எவ்வாறு ஒரு செடியோ கொடியோ அதன் கிளை, இலை கனியால் இது இந்த செடியை சார்ந்தது என்று அறியப்படுகிறதோ அது போல, நாமும் நமது வாழ்வால் இயேசுவோடு இணைந்திருக்கிறோம் என்று வெளிப்படுத்த வேண்டும். நமது வாழ்வு பிறருக்கு முன்மாதிரிகை தரும் வாழ்வாக அமைய வேண்டும். இயேசுவோடு இணைந்திருக்கும் போது நம்மிடமுள்ள பல கிளைகள் தறித்து எறியப்படலாம். அவை நமக்கு தேவையற்ற கிளைகள் என்று எண்ணி அவற்றை விலக்கிவிட நாம் தயாராக இருக்க வேண்டும். கிளைகளை தறித்து எறிதல் நம்மை நமது வாழ்வை செம்மைப்படுத்த இயேசு எடுக்கும் முயற்சி என்று எண்ண வேண்டும். பல நேரங்களில் தறித்து எறியப்படும் கிளைகளை எண்ணி வருந்தி நமது வாழ்வை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். தறித்து எறியப்படுவது நம்முடைய பலவீனங்கள் என்று எண்ணி வாழ்வோம். கழிக்கப்படும் கிளைகள் நாம் மேலும் பலன் தர செய்யப்படும் ஒரு முயற்சி என்று நினைப்போம். நாம் செழுமையாக வளர, நல்ல கனிதர நம்முடைய வாழ்க்கை செயல்பாடுகள் சரி செய்யப்படுகின்றன. சில நேரங்களில் கிளைகள் ஒடித்து நெருப்பிலிடப்படுகின்றன. சில சமயங்களில் வெட்டி கீழே வீசப்படுகின்றன. எப்படி இருந்தாலும் நம்முடைய வாழ்வு இயேசுவோடு இணைந்ததாக இருக்கவே இப்படி செய்யப்படுகின்றன என்று உணர்ந்து வாழ்வோம்.
நம்முடைய வாழ்வு முறையைப் பொறுத்து நாம் எப்படிப்பட்ட செடியுடன் இணைந்திருக்கிறோம் எப்படிப்பட்ட சுவையான கனியை உலகுக்கு தர இருக்கிறோம் என்று பிறருக்கு வெளிப்படுத்துவோம். வாழ்வால் சுவை மிகுந்த கனியால் நமது இணைப்பு யாருடன் என்று உலகுக்கு வெளிப்படுத்துவோம். நமது கனி சுவை மிகுந்ததாக இருக்க வேண்டும். அதற்கு நம்முடைய இணைப்பு மிக உறுதியாக இருக்க வேண்டும்.

ஆக உண்மையான திராட்சை செடியாம் இயேசுவோடு இணைந்து சொல்லால் செயலால் வாழ்வால் பலன் கொடுப்போம். அவரை விட்டுப் பிரிந்து நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. அவரின்றி நாம் இல்லை என்பதை உணர்ந்து நலமுடன் வாழ்வோம். நமது வார்த்தையால் பிறருக்கு வலிமை தருவோம். நம்பிக்கை தருவோம். செயலால் பிறருக்கு நல்ல முன்மாதிரிகை தருவோம் . நமது இணைந்த வாழ்வால் பிறருக்கும் வாழ்க்கை தருவோம். இயேசுவோடு நாம் இணைந்து மிகுந்த கனி தர அந்தக் கனியின் சுவையால் பிறரும் கவரப்பட்டு, இயேசுவோடு இணைய வழிவகுப்போம். மிகுந்த கனி தந்து இயேசுவின் சீடராய் இருந்து தந்தையாம் கடவுளுக்கு மாட்சிமையில் மகிழ்வோம். உயிர்த்த இறைவனின் அருளும் ஆற்றலும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவரோடும் இருந்து மகிழ்வையும் மன நிம்மதியையும் நல்ல உடல் நலத்தையும் உற்சாகத்தையும் தருவதாக ஆமென்.