இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பாஸ்கா காலம் 4ம் ஞாயிறு.

>அறிவோம் தெரிவோம் புரிவோம்.

திருத்தூதர் பணி: 4: 8-12
1 யோவான் 3:1-2
யோவான் 10; 11-18


இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே, ஆண்டவர் இயேசுவை ஆயனாக ஏற்றுக்கொண்டு வாழ்பவர்களே இன்றைய நற்செய்தி வாசகங்களின் வழியாக நாம் அனைவரும் அவர் தம் மந்தையின் ஆடுகள் என்பதை நினைவுபடுத்துகிறார். ஆயனை அனுப்பிய தந்தை கடவுள் பற்றி அறியவும், ஆயனாம் இயேசுவைப் பற்றி தெரிந்து கொள்ளவும், ஆடுகளாக நமது செயல்பாடு என்ன என்பதை புரிந்து கொள்ளவும் இன்றைய நாள் நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

அறிவோம் ஆண்டவர் யாரென்று:
அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் வாழ்வில் பல உண்டு. நாம் நம்மைப் படைத்த இறைவன் யாரென்று அறிந்திருக்கிறோம். ஆனால் அவர் எத்துணை வல்லமை மிக்கவரென்பதை அறியாமல் இருக்கிறோம். அவரது அன்பு எல்லையில்லாதது. அவர் நம்மை மீட்கும் படியாக தன்னுடைய ஒரே மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார் என்று வார்த்தையால் சொல்கிறோம். ஆனால் வாழ்க்கையில் உணர்வதில்லை. விளையாடும் போது, நம்மிடம் இருக்கும் கடைசி வாய்ப்பில் நாம் காட்டும் நம்பிக்கை போன்றது இறைவன் தன் மகனை நமக்காக இவ்வுலகிற்கு அனுப்பியது. நம்முடைய ஒட்டு மொத்த நம்பிக்கையையும் அந்த கடைசி வாய்ப்பில் நாம் வைத்து மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம். தோற்றுப்போவது போல தோன்றி, வெற்றி பெற்ற தருணம் தான் இயேசுவின் சிலுவை மரணமும் உயிர்ப்பும். இறைவன் தன் ஒட்டு மொத்த நம்பிக்கையையும் தன் மகன் மேல் வைத்து அவரை அனுப்பினார். அவரால் நாம் மீட்கப்படுவோம் என்று எண்ணினார். அதைப் போலவே அவருடைய இரத்தத்தால் நாம் மீட்கப்பட்டோம். இறைவன் நம்மையும் அவர் தம் பிள்ளைகளாக நினைக்கின்றார். ஆனால் நாம் தாம் அவருடைய பிள்ளைகள் என்பதை மறந்து செயல்படுகிறோம். இயேசுவிற்கு கொடுக்கப்பட்டது போல நமக்கும் சில கடமைகள் இறைவனால் கொடுக்கப்படுகின்றன. அதை அறிந்து செயல்படுவோம். நமது தந்தை இரக்கமும் அன்பும் நிறைந்தவர் என்பதை அறிந்து நாமும் அவர் போல இரக்கமும் அன்பும் உடையவர்களாய் வாழ முற்படுவோம்.

தெரி(ந்து கொள்)வோம் இயேசு நம் ஆயனென்று:
இயேசு நம் ஆயன் . ஆடுகளாகிய நம்மை எல்லா தீங்குகளினின்றும் காப்பவர். நம்மை தாக்க வரும் கொடிய விலங்குகளினின்றும் நம்மைப் பாதுகாப்பவர். நல்ல உணவு, நீர், தங்க இடம் என்று நம்மை மிகவும் அன்பாக பார்த்துக் கொள்பவர். மற்ற மந்தையைச்சேர்ந்த ஆடுகளிடத்திலும் அன்பாய் இருப்பவர். அனைவரும் சமம் என்பதை தனது செயலால் எடுத்துரைப்பவர். பல நேரங்களில் நாம் யாருடைய மந்தையைச்சேர்ந்த ஆடுகள் என்பதில் குழப்படி ஏற்பட்டு நமக்குள்ளேயே பிரிவினைகளை ஏற்படுத்துகிறோம். நாம் யாராக இருந்தாலும் நம்முடைய ஆயன் இயேசு. அவர் தந்தையை எவ்வளவு ஆழமாக அறிந்து இருக்கிறாரோ அது போல நாமும் தந்தையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் நம்மை பாதுகாத்து பராமரிக்கின்றார். முதல் வாசகத்தில் கூறப்படுவது போல அவர் விலக்கப்பட்ட கல்லாய் இருந்தாலும் இறுதியில் முதன்மையான மூலைக்கல்லாக தந்தையால் தெரிவு செய்யப்பட்டார். நம்முடைய வாழ்வில் நாம் பல சூழல்களில் பிறரால் விலக்கப்பட்டாலும், இறுதியில் முதன்மையான மூலைக்கல்லாக நாமும் மாற்றப்படுவோம்.
அதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஆயனாக இயேசு என்றும் நம்மோடு உடன் பயனிக்கிறாரென்று தெரிந்து வாழ வேண்டியது தான். ஆக நமது ஆயன் இயேசு நம்மோடு பயனிக்கிறார். பாதுகாக்கின்றார். பராமரிக்கின்றார் என்று தெரிந்து வாழ்வோம்.

புரி(ந்து கொள்)வோம் நாம் யாரென்று:
நாம் யாரென்றே பல சமயங்களில் நமக்கு புரிந்து கொள்ள கடினமாக இருக்கின்றது. வாழ்வில் இன்பம் நடந்தால் எதைப்பற்றியும் யோசிப்பதில்லை. மாறாக துன்பம் நடந்தால் நமக்கு ஏன் இப்படி நடக்கிறது? நாம் யாருக்கு என்ன தீங்குசெய்தோம்? என்று புரியாமல் புலம்பி தவிப்பதுண்டு. இயேசுவும் தான் யாருக்கு என்ன தீங்கு செய்தார்?. அவர் துன்பப்படவில்லையா? ஆயனாக இயேசு நம் உடன் இருந்தாலும் ஆடுகளாகிய நாம் சில சமயம் பாதை மாறிப் போவதுண்டு. ஆயனின் குரலைக் கேட்காமல் இருப்பதால் பல அபயக்குரல்களை கேட்க நேரிடுகின்றது. ஆயன் நல்லவர் தான் ஆடுகளாகிய நாம் தான் ஒரே பாதையில் ஒருவர் பின்னே செல்ல வருத்தப்படுகிறோம். வாழ்க்கைன்னா சில மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும் என்று வார்த்தையில் வாரி இரைக்கின்றோம். வாழ்வில் செய்ய வருந்துகிறோம். ஆயன் அவர் தான் என்று தெரிந்து இருந்தாலும் அவரைப் பின் தொடர்வதில் சிறிது தயக்கம் காட்டுகிறோம். அவருக்கு பிற மந்தைச் சேர்ந்த ஆடுகளும் இருக்கின்றன. அவர் அவற்றையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கின்றார். இதனால் நாம் அனைவரும் ஒரே மந்தைச்சேர்ந்த ஆடுகளாக மாறுகின்றோம். நம்முடைய குழு, இனம் பெரிதாகின்றது. நாம் பலுகிப் பெருக அவர் வழிவகுக்கின்றார். தான் வளராவிட்டாலும் பரவாயில்லை, பிறர் வளரக் கூடாது என்று நினைப்பவர்கள் எவ்வகையிலும் முன்னேற முடியாது. பிறரின் வளர்ச்சியில் தன்னுடைய வளர்ச்சியைக் காண்பவர் மென்மேலும் வளர்கின்றார். ஆக ஆடுகளாகிய நாம் அவரது மந்தையைச் சேர்ந்தவர்கள் என்பதை புரிந்து வாழ முயற்சிப்போம்.

கடவுள் பக்தி நிறைந்தவர் மனிதர் தினமும் ஒருவருக்கு உணவு தானமாக வழங்குவது வழக்கம். ஒரு நாள் வழக்கம் போல் ஒருவருக்கு உணவு வழங்கினார். உணவு உண்ணத்தொடங்கும் முன் அவரிடம் உனக்கு இன்றைய நாள் உணவைத்தரும் இறைவனுக்கு நன்றி கூறி உணவினை உண் என்றார். அவரோ மறுமொழியாக, கடவுள் என்பது பொய். எனக்கு உணவு அளிக்கும் உங்களுக்கு நன்றி கூறுகிறேன் என்றார். பக்தரோ கோபமுற்று அவருக்கு உணவளிக்க மறுத்துவிட்டார். இரவு கனவில், கடவுள் பக்தருக்கு தோன்றி , இத்தனை நாளும் அவன் என்னை வழிபட்டதில்லை ஆனால் ஒரு நாள் கூட அவனை நான் பசியோடு விட்டதில்லை. ஆனால் இன்று ஒரு நாள் உன் முன் எனக்கு நன்றி கூற மறுத்ததற்காக அவனுக்கு உணவளிக்காதது எனக்கு வருத்தமளிக்கிறது என்றார்.

ஆம் அன்பு உள்ளங்களே இறைவன் இரக்கமே உருவானவர். அவரிடத்தில் பாரபட்சம் என்பதே இல்லை. அவர் முன் நாம் அனைவரும் சமம். அவர் தம் பிள்ளைகள். எனவே அவரிடத்தில் உள்ள அந்த அளவில்லா இரக்க உள்ளத்தை நாமும்பெற முயற்சிப்போம்.
நமது இறைவன் நமது வானகத்தந்தை என்பதை அறிந்து அவரது அன்பை இரக்கத்தை நமதாக்கிக் கொள்வோம்.
ஆயன் இயேசுவின் பாதுகாப்பையும் பராமரிப்பையும், தெரிந்து அவர் போல நாமும் வாழ முயற்சிப்போம்.
இறுதியாக நாம் அனைவரும் கடவுளின் அன்புப்பிள்ளைகள் அனைவரும் சமம் என்பதை புரிந்து வாழ்வோம்.
அறிந்து தெரிந்து புரிந்து வாழ உயிர்த்த இறைவன் அவர் தம் அருளாற்றலை நம்மீது நிரம்ப பொழிவாராக ஆமென்