இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 4ம் ஞாயிறு

"அதிகாரம்"

இணைச்சட்டம் 18; 15- 20
1 கொரிந்தியர் 7; 32-35
மாற்கு 1; 21-28


"வள்ளுவனும் அதிகாரம் செய்தான் நானும் அதிகாரம் செய்தேன். அவன் நூலில் செய்தான். நான் நாவில் செய்தேன். அவன் அதிகாரம் வரலாறானது எனது அதிகாரம் தகராறானது." இது கவி ராகவனின் வரிகள். நாமும் பல நேரங்களில் அதிகாரத்தை செயலில் காட்டாமல் சொல்லில் மட்டும் தான் காட்டுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் அதிகாரம் மிகுந்த போதனை நமக்கு சிறு நிகழ்வு மூலமாக எடுத்துரைக்கப்படுகிறது. அவர் வழி வாழ்கின்ற நமது சொல்லும் செயலும் அவரைப் போல இருக்க இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகின்றோம்.

கொடுத்து பெறுவதே அதிகாரம்:
இன்றைய முதல் வாசகத்தில் இணைச்சட்டம் வாயிலாக இறைவன் உண்மையான இறைவாக்கினரின் போதனை மற்றும் பொய்யான இறைவாக்கினர்களின் போதனையால் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை பற்றிக் கூறுகின்றார். இறைவாக்கினர்கள் வானத்தினின்று இறங்கி வருபவர்கள் அல்ல. மாறாக அவர்கள் நம் சகோதரர்கள் நடுவினின்று நமக்காக தோன்றுபவர்கள். இறைவனின் வார்த்தையை எடுத்துரைப்பவர்கள். சாதாரணமாக அல்ல அதிகாரத்தோடு எடுத்து கூறுபவர்கள். அதனை இறைவார்த்தையாக ஏற்று செயல்படுபவர்கள் பேறுபெற்றவர்கள். செவிகொடுக்காதவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவார்கள். சில நேரங்களில் நல்ல சொற்களை பிறருக்கு சொல்லும் போது நாமும் இறைவாக்கினர்களாக மாறுகின்றோம். அதைப் போல பிறர் இறைவாக்கினர்களாக மாறி நன்மைகளை எடுத்துரைக்கும் போது நாமும் அதை இறைவனின் வார்த்தையாக ஏற்று வாழ வேண்டும். இல்லையேல் இறைவனின் தீர்ப்புக்கு ஆளாவோம். ஆக அதிகாரம் செலுத்துபவர்களாகவும் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்களாகவும் நாம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். பல நேரங்களில் அதிகாரம் செலுத்த தெரிபவர்க்கு, அதற்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க தெரிவதில்லை. அதனாலேயே பலர் அதிகாரத்தை இழக்க தயாராய் இருப்பதில்லை. சிலர் அதிகாரத்தை செலுத்த தயாராயிருப்பதில்லை. இறைவாக்கினர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ள ,நாம் ஒவ்வொருவரும் அதிகாரத்தை கொடுப்பதிலும் பெறுவதிலும் சிறந்தவர்களாக இருக்க இறைவன் அழைக்கின்றார்.

அக்கறையுள்ள அதிகாரம்:
இரண்டாம் வாசகத்தில் மணமானவர், மணமாகாதவர் கடவுளுக்குரியவற்றில் எவ்வாறு அக்கறை செலுத்துகின்றனர் என்பதை எடுத்துரைக்கின்றார். நாம் யாராக இருந்தாலும் கவலையற்றவர்களாய் இருக்க வேண்டும். கவலை மனிதனை கொஞ்சம் கொஞ்சமாய் கொன்றுவிடும். கவலையற்ற மனிதன் கடவுளுக்கு சமமானவன். நாம் நம் கவலைகளிலேயே பாதி வாழ்நாளை வாழ்ந்து விடுகின்றோம். கவலை கொண்ட மனிதனால் தன்னுடைய வேலையை முழு அக்கறையுடன் செய்ய முடிவதில்லை. அதிலும் இறைவாக்கினர்கள் துறவிகள் கடவுளுக்கு அர்ப்பணமானவர்கள் கவலை என்ற ஒன்றை கட்டாயம் மறந்து , அக்கறையுடன் செயல் பட வேண்டும். ஆனால் அதற்கு மாறாக கவலைப்பட்டு ஏனோதானோ என்று செயல்பட்டு கொண்டிருக்கின்றோம். நமது கவனம் முழுவதும் கடவுளுக்கு உரியவற்றில் இருக்க வேண்டும் என்கின்றார். இது அவர் நம்மீது காட்டும் அக்கறையுள்ள அதிகாரம் . இதனால் நாம் ஒழுங்காய் முழுமனதோடு ஆண்டவரில் பற்றுள்ளவர்களாய் வாழ்வோம்.

அதிகாரத்தோடு கூடிய போதனை:
நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் போதனையைக் கேட்ட மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவரது போதனை மற்ற மறைநூல் அறிஞர்களைப் போலல்லாமல் அதிகாரத்தோடு இருந்தது. இயேசு எந்த ஊருக்கு முதலில் சென்றாலும் முதலில் அவ்வூரில் உள்ள தொழுகைக் கூடங்களுக்கு தான் முதலில் செல்கின்றார். இதன் மூலம் அவ்வூரின் தேவைகள், செயல்பாடுகள் பற்றி அறிகின்றார். அதன் அடிப்படையிலேயே அவருடைய போதனையை தொடங்குகின்றார். மக்களிடம் போதிக்கும் பொழுது தீயவற்றை விட்டு விலகுங்கள் என்று அதிகாரத்தோடு போதிக்கின்றார். அதுவே தீய ஆவி பிடித்திருந்த நபரிடம் இவரை விட்டு விலகு என்கின்றார். அதிகாரத்தோடு அதனை விரட்டுகின்றார்.
ஆக அவரிடம் நல்லவர்களிடம் தீமையை விட்டு விடுங்கள் என்று சொல்லக்கூடிய அதிகாரம் தைரியமும், தீயவர்களிடம் நல்லவர்களை விட்டு விலகிப்போங்கள் என்று சொல்லக் கூடிய துணிச்சலும் இருந்தது. அவரது துணிச்சல், அதிகாரம், நடுவு நிலைமையோடு இருந்தது. அதனால் அது சாதாரண மக்களையும் தீய ஆவி பிடித்திருந்தவரையும் தொட்டு மாற்றியது. நம்மிடம் இத்தகைய அதிகாரம் உள்ளதா?
புனித தொன் போஸ்கோவின் திருவிழாவை கொண்டாடி மகிழும் வேளையில் அவரைப் போல இளைஞர்களிடம் அன்போடு கூடிய அதிகாரம் செலுத்தி இறைவாக்கினர்கள் போல வாழ அழைக்கப்படுகின்றோம். அதிகாரம் என்பது அவரவர் வேலையை சரியாக செய்வதற்காக அளிக்கப்பட்ட பணியே . ஆக நாம் நமக்கு ஒப்படைக்கப்பட்ட பணியை சரியாக செய்து நமது அதிகாரத்தை நியாயமான முறையில் நிலை நாட்டுவோம்.
கொடுத்து பெறுவோம் அதிகாரத்தை,
அக்கறை செலுத்தி பெறுவோம் அதிகாரத்தை,
போதிப்போம் வாழ்வோம் அதிகாரத்தை....
இறைவனின் ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தில் உள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.