இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









கிறிஸ்து அரசர் பெருவிழா

காப்பாளன்

எசேக்கியல்: 34: 11-17
1 கொரிந்தியர்: 15: 20-28
மத்தேயு: 25: 31-46

/>அந்த நாட்டின் அரசர் மிகச் சிறந்த வீரர். எதிரிகளுக்கு சிங்கம் போன்றவர். அதனால், அண்டை நாட்டு மன்னர்கள் அவரிடம் எப்போதும் வால் ஆட்டுவது இல்லை. நாட்டு மக்களுக்கு எல்லா நல்ல விஷயங்களையும் செய்து, மிகச் சிறந்த அரசர் என்ற பெயரையும் பெற்றவர். அவருக்கு ஒரே மகன். அவன் அழகான முகம் உடையவன். ஆனால், அவனது முதுகோ கூன். எப்போதும் குனிந்தே நடந்து திரிந்தான். அவனை நினைத்து அரசருக்கு மிகுந்த கவலை. 'வருங்காலத்தில் நாட்டை ஆளப்போகும் தன் ஒரே மகன் இப்படி இருக்கிறானே’ என்று வருந்தினார். புகழ்பெற்ற பல மருத்துவர்களை வரவழைத்து, இளவரசனுக்கு சிகிச்சை செய்தார். ஆனால், எந்தப் பயனும் இல்லை. இறுதியாக, வயதான ஒரு மருத்துவர் பற்றி கேள்விப்பட்ட அரசர், அவரை வரவைத்து ஆலோசனை கேட்டார். ''உங்கள் மகனுக்கு மருந்து அவரிடமே இருக்கிறது. இளவரசன் கம்பீரமாக நிமிர்ந்து நடந்து செல்வதுபோல ஓவியம் ஒன்றை வரைவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அந்த ஓவியத்தை இளவரசனின் அறையில் வையுங்கள். அந்த ஓவியம், அடிக்கடி அவர் கண்களில் தென்படட்டும்'' என்றார் மருத்துவர். அதன்படி இளவரசனின் ஆளுயர ஓவியம் வரையப்பட்டது. அதைப் பார்த்தபடியே வளர்ந்தான் இளவரசன். சில ஆண்டுகளில் அவனது கூன் முதுகு கொஞ்சம் கொஞ்சமாகச் சரியானது. மிக நன்றாக நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

மன்னருக்கு மகிழ்ச்சி. அந்த மருத்துவரை அழைத்து, பொற்காசுகளை அள்ளிக்கொடுத்தார். 'மன்னா, முன்பே சொன்னதுபோல உங்கள் மகனுக்கான மருந்து அவரிடமே இருந்தது. நான் எதுவும் செய்யவில்லை. ஓவியத்தை தினமும் பார்த்த இளவரசன், அதில் உள்ளபடியே தானும் மாறி விட முடியும் என்ற எண்ணத்தை ஆழ் மனதில் வளர்த்துக்கொண்டார். அந்த நம்பிக்கைதான் அவரை நிமிர்த்தியது'' என்றார் மருத்துவர். இந்தக் கதையில் வரும் இளவரசர் போன்று நாமும் நம்முடைய தீமையான செயல்பாடுகளால் வளைந்து காணப்படுகின்றோம். நம் காப்பாளராம் கிறிஸ்து அரசர் நம்முடைய வளைவுகளை சரி செய்ய வெற்றி அரசராக நம்மை நோக்கி வருகின்றார் என்பதனை இன்றைய வாசகங்கள் வெளிப்படுத்துகின்றன.
அவர் ஆயனாக நம்மைக் காப்பவர். உயிர்த்த ஆண்டவராக நம்மை இறுதி நாளில் எதிர்கொள்பவர். நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப நமக்கு தீர்ப்பு அளிக்கக் கூடிய வல்லமையுள்ளவர்.
அவர்........
ஆயன் என்னும் காப்பாளர்:
தன்னுடைய மந்தையைக் காக்கும் ஆயன் செய்யும் முக்கிய பணிகள் மூன்று.
உணவு, பாதுகாப்பு, பராமரிப்பு.
உணவு என்பது ஆடுகளுக்கான நல்ல மேய்ச்சல் நிலத்தைக் கண்டு பிடித்து அவ்விடத்திற்கு அழைத்துச்செல்வது. ஆடுகளின் சுவை அறிந்து அவைகளுக்கேற்ற நல்ல புல்வெளியைக் காண்பிப்பது. ஆயனின் தேடல் எப்பொழுதும் ஆடுகளைப்பற்றிய தேவையைப் பற்றியதாக மட்டுமே இருக்கும்.
நாமும் அவர் மந்தையின் ஆடுகள் தாம் . ஆனால் ஆறறிவுள்ள மனிதர்கள். நமக்கு வெறும் உடலை வளர்க்கும் உணவு மட்டும் போதாது. நம் அறிவு, மனம் திறமைக்கேற்ற நல்ல உணவினைக் கொடுப்பதும் நம் ஆயனின் கடமை. ஆயன் காட்டும் எல்லா வகை புற்களையும் எல்லா ஆடுகளும் உண்பதில்லை . சில ஆடுகள் ஆயனின் சொல்லைக் கேட்காது செயல்படும், நடக்கும் . நாமும் சில நேரங்களில் ஆயன் நமக்கு தரும் அனைத்தையும் ஏற்காது செயல்படுகின்றோம்.
பாதுகாப்பு:
ஆயன் தன் ஆடுகளை தீய விலங்குகளிடமிருந்து பாதுகாக்கின்றார். செம்மையான பாதையில் நடத்தி செல்கின்றார். ஆடுகளின் முன்னும் பின்னும் அதனுடனே நடந்து அவைகளுக்கு பாதுகாப்பளிக்கின்றார்.
நம்மையும் எல்லா விதமான இக்கட்டிலிருந்தும் காப்பவர் நம் ஆயன். நமக்கு முன்னும் பின்னும் நம்முடனே நடந்து நமக்கு பாதுகாப்பளிப்பவர்.
பராமரிப்பு:
ஆடுகளுக்கு தேவையான பராமரிப்பு வசதிகளை செய்து தருபவர். நீர் நிலைகளுக்கு அழைத்து சென்று தூய்மைப்படுத்துவது தொடங்கி, அதன் காயங்களுக்கு மருந்திடுவது நலிந்த ஆடுகளை தேற்றுவது என அவரின் பராமரிப்பு நீண்டு கொண்டே போகும்.
நம்மைப் பராமரிப்பதும், நம்முடைய காயங்களுக்கும் மருந்திட்டு கட்டுப் போடுவதும் ஆயனாம் இயேசுவின் கடமை இதை அவர் கருத்தாய் செய்துகொண்டு வருகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு நீதித்தீர்ப்பளிக்கும் அரசராக நம் முன் வருகின்றர். சின்னஞ்சிறிய சகோதர சகோதரிகளுக்கு செய்ததைப் பொறுத்து நம்மை ஆசீர்பெற்றவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என பிரிக்கின்றார். நாமும் நமது குடும்பமும் ஆசீர் பெற்றவர்களாக இருப்பது நம்முடைய செயல்பாடுகளைப் பொறுத்தே என்பதை எடுத்துரைக்கின்றார். நாம் வாழும் காலத்திலேயே நம்முடைய குறைகளை, கூன்களாக இருக்கும் வளைவுகளை நேராக மாற்ற ஏராளமான வாய்ப்புக்களைக் கொடுக்கின்றார். நம் உடன் வாழும் சகோதர சகோதரிகளிடம் நாம் காட்டும் அன்பு கருணை இரக்கத்தைப் பொறுத்து, நம்மை ஆசீர்வாதமுள்ளவர்களாக வாழ அழைக்கின்றார்.
கண்ணாடி போல நாம் பிறருக்கு செய்யும் நன்மையும் தீமையும் இயேசுவில் பிரதிபலிக்கின்றன என்கின்றார். பசியோடும் தாகத்தோடும் இருக்கும் ஏராளமான மக்களை அனுதினமும் நாம் பார்க்கின்றோம். அவர்களின் மேல் நாம் காட்டும் இரக்கம் இயேசுவின் மேல் காட்டும் இரக்கமாக இருக்கும் என்கின்றார். ஆக ஆன்மீக பசியாளர்கள் , விடுதலை தாகமுடையோர், உடல் மன நோயாளிகள், அமைதி மகிழ்ச்சி என்னும் ஆடையின்றி இருப்பவர்கள், தனிமை, தாழ்வு மனப்பான்மை என்னும் சிறையில் இருப்பவர்கள் அனைவரிலும் இயேசு இருக்கின்றார். அவர்களை நாம் கண்டுணர்ந்து அவர்களின் துயர் நீக்க நாம் முயலும் போது, நாமும் காப்பாளராம் கடவுளின் கடைக்குட்டி செம்மறி ஆடுகளாகின்றோம். ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகிறோம். எனவே நம்முடன் வாழ்பவர்களின் தேவை அறிந்து சேவை செய்து வாழ்வோம். நம்முடைய வளைவுகளை நாமே நிமிர்த்தி நேர் கொண்ட பார்வையுடன் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் வலம் வருவோம். காக்கும் கடவுள் கிறிஸ்து அரசர் நம்மையும் நம் குடும்பத்தார் அனைவரையும் எல்லா விதமான ஆசீர்வாதங்களால் நிரப்பி காப்பாராக ஆமென்.