இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 33 ம் ஞாயிறு

உண்மையான மதிப்பு

நீதி மொழிகள் 31; 10-13,19-20,30-31
1 தெசலோனிக்கர் 5; 1-6
மத்தேயு;25; 14-30

/>ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது.. அது வைரம் என்றறியாமல், விலை போகுமா என்ற
சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்..அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன், இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்..
ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான்..ஐந்து ரூபாய் அதிகம் கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20 ரூபாய்க்கு பேரம் பேசினான்.. இதைக் கவனித்த மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக்கொண்டு சென்றான்.. ஆத்திரமடைந்த வியாபாரி, அந்த வழிப்போக்கனை பார்த்து, “அட முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும்... அறிவில்லாமல் விற்றுவிட்டாயே!” என்று திட்டினான்.. அதற்கு அவன், “அந்தக் கல்லுக்கு என்னுடைய மதிப்பு அவ்வளவுதான்.. ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய முட்டாள்” என்றான்..

சிலர் இப்படித்தான் உண்மையான மதிப்பு தெரிந்தும், கிடைத்ததை விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள். இன்று நம்முடைய தாலந்து உவமையில் நாம் காணும் மூன்றாம் பணியாளர் போல நாமும் பல நேரங்களில் நமக்கு கிடைக்கும் ஆள், பொருள், வேலையின் மதிப்பு தெரியாமல் அதனை தவற விடுகிறோம். பொதுக்காலத்தின் 33ம் ஞாயிற்றில் இருக்கும் நம்மை விண்ணரசின் வியத்தகு உரிமைக்கு அழைக்கின்றார் இறைவன். தாலந்து உவமை மூலமாக நமது மதிப்பையும் பொறுப்பையும் உணர்ந்து கொள்ள அழைக்கின்றார். இன்றைய தலைவரின் குணநலன்கள் மற்றும் பணியாளரின் செயல்பாடுகள் நம்முடைய செயல்பாடுகளை சரிசெய்ய நமக்கு உதவுகின்றன.

தலைவரின் குணநலன்:
பகிரும் குணம்;
தன்னுடைய சொத்துக்களை தானே வைத்திருக்காமல் தனக்கு கீழே இருக்கும் பணியாளர்களிடம் ஒப்படைக்கின்றார்.

பணியாளர்களின் திறமையை அறிபவர்:
அவரிடம் ஏராளமான பணியாளர்கள் இருந்த போதிலும் அதில் மூவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கொடுக்கின்றார். அதையும் மூவருக்கும் சமமாகப் பிரிக்கவில்லை. மாறாக அவர்களின் திறம் அறிந்து பார்த்து கொடுக்கின்றார்.

தனது இயல்பை வெளிப்படுத்துபவர்:
இவர் எவ்வளவு அன்பானவர் அக்கறையானவர் என்பதை முதல் இரு பணியாளர்களின் வார்த்தையிலும், எவ்வளவு கண்டிப்பானவர் என்பதை மூன்றாவது பணியாளரின் வார்த்தையிலும் அறிந்து கொள்ளலாம்.

பிறர் வளர்ச்சியில் அக்கறை கொள்பவர்;
தன்னுடைய பணியாளர்களில் இருவர் தான் கொடுத்த தாலந்தை வைத்து இரு மடங்கு தாலந்து சம்பாதித்துள்ளனர் என்பதை அறிந்து மகிழ்கின்றார். அவர்களின் மகிழ்வை தனது மகிழ்வாகப் பார்க்கின்றார். உங்கள் மகிழ்வில் நான் பங்கு கொள்கின்றேன் என்று சொல்லவில்லை. மாறாக உன் தலைவனாகிய என் மகிழ்வில் வந்து பங்குகொள் என்கின்றார்.
இவன் என் பணியாளன் நாளுக்கு நாள் வளர்ந்து என்னைவிட பெரிய ஆளாக மாறிவிடுவானோ என்று அஞ்சவில்லை. அவன் இன்னும் அதிகமாக முன்னேற அழைக்கின்றார்.

கண்டிப்பானவர்:
ஒருவர் எவ்வளவு அதிகமாக நகைச்சுவை உணர்வு உள்ளவராக இருக்கின்றாரோ அதே அளவுக்கு கோப உணர்வு உள்ளவராகவும் இருப்பார் என்கிறது உளவியல் ஆய்வு. நம் தலைவர் உண்மையான பணியாளரை பாராட்டும் குணம் கொண்டவர். அதே வேளையில் தவறு செய்த பணியாளரை தண்டிக்கும் குணமும் உடையவர். ஒரே குண நலனோடு எல்லா இடத்திலும் எல்லா சூழலிலும் ஒருவரால் எல்லா நேரமும் இருக்க முடியாது.

பாராட்டி பரிசளிக்கும் குணமுடையவர்:
முதல் இரண்டு பணியாளர்களின் பணியையும் செயலையும் பார்த்து அவர்களை மனமாரப் பாராட்டுகின்றார். அவர்களின் செயலால் மகிழ்ந்து சிறியவற்றில் மிக நம்பிக்கையோடு செயல்பட்டீர்கள் மிகப் பெரியவற்றில் உங்களை பொறுப்பாளராக்குவேன் என்று அவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கின்றார்.

தாலந்து உவமையில் வரும் தலைவர் நம் ஆண்டவர் இயேசு. அவர் கொடுக்கும் தாலந்து விண்ணரசிற்கு செல்ல தரும் கொடை,அனுமதி சீட்டு. அனைவருக்கும் அது சமமாக கிடைப்பதில்லை. அவரவர் நம்பிக்கை, குணநலன் பொறுத்து கொடுக்கப்படுகிறது. நம் தலைவர் அன்பானவர் அதே சமயத்தில் கண்டிப்பானவரும் கூட. அவர் நம்மிடம் கொடுத்திருக்கக்கூடிய கொடை என்னும் குடும்பம் உறவுகள் தகுதி திறமை அனைத்தையும் மிகச்சிறப்பாக நாம் கையாள வேண்டும். அவர் கொடுத்ததை இரட்டிப்பாக்கி விண்ணரசு என்னும் மிகப் பெரிய பரிசினை நாம் பெற வேண்டும். நமக்கு கொடுக்கப்பட்ட கொடைகளின் உண்மையான மதிப்பினை அவைகள் நம்முடன் இருக்கும் போதே உணர வேண்டும்.

சிறு குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களுக்காக அதிக அடம்பிடித்து அழுது அதை வாங்குவார்கள். ஆனால் கொஞ்ச நாளிலேயே அதை மறந்து விடுவார்கள். அதைப்பற்றிய நினைப்பே அவர்களுக்கு வருவதில்லை. வீட்டில் எங்காவது ஒரு மூலையில் அது கிடக்கும். ஆனால் அதுவே பிறர் அதனை எடுத்து விளையாட நினைத்தாலோ அல்லது வேறு ஒருவர் கைக்கு சென்றாலோ அது தன்னுடையது என்று அழுது திரும்பப் பெறும். ஒருவேளை அது அவர்களுக்கு அது திரும்ப கிடைக்கப்பெறலாம். ஆனால் நம்மிடம் கொடுக்கப்பட்ட கொடைகள் என்னும் தாலந்திற்கு நாம் உரிய நேரத்தில் கணக்கு கொடுக்க வேண்டியிருக்கும். நம் கையை விட்டு சென்றாலோ பிறர் கைக்கு சென்றாலோ நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

மூன்றாம் பணியாளர் போல அதன் மதிப்பு தெரியாமல் மறைத்து வைத்தாலோ, பயன்படுத்தாமல் இருந்தாலோ பாதிப்பு என்னவோ நமக்கு தான். பயத்தினால் அவர் அந்த தாலந்தை மண்ணுக்குள் மறைத்து வைத்ததாக கூறுகின்றார். பல நேரங்களில் நம் பயங்கள் தான் நம்மை மண்ணுக்குள் அழுத்துகின்றன.
விண்ணகத்தந்தை பயந்து தன் மகனை இவ்வுலகிற்கு அனுப்பாமல் இருந்த்திருந்தால் நமக்கு இயேசு என்னும் மீட்பர் கிடைத்திருக்க மாட்டார்.
மரியாள் பயந்து மறுத்திருந்தால் மனுமகனாய் பிறந்திருக்க மாட்டார்.
சூசையப்பர் பயந்து ஓடி இருந்தால் தச்சன் மகன் நமக்கு கிடைத்திருக்க மாட்டார்.
சீடர்கள் பயந்து மறைந்தே இருந்திருந்தால் கிறிஸ்தவம் இன்று உலகம் முழுதும் பரவி இருக்காது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
அனைவரிடம் பயம் இருந்தது. ஆனால் அந்த பயம் அவர்களை நல்வழிக்கு இட்டு சென்றது. ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கொடைகளின் மதிப்பை நன்கு அறிந்து இருந்தனர். அதனால் அவர்கள் பயத்தை மண்ணுக்குள் புதைத்து துணிவை புதுத்தளிராகப் பெற்றனர்.
இன்றைய நாளில் இறைவன் நம்மையும், பயத்தை புதைத்து துணிச்சலோடு நம் கொடைகளை கையாள அழைக்கின்றார். நம்மோடு இருக்கும் ஒவ்வொரு பொருளும் உறவும் தகுதியும் திறமையும் இறைவன் நமக்கு கொடுத்த கொடை . இக்கொடைகளை நாம் நன்முறையில் பேணிக்காத்து, விண்ணரசிற்குள் நுழைய நம்மை நாம் தயார்ப்படுத்துவோம்.
நமது தாலந்துகளின் உண்மையான மதிப்பை நாம் நன்கு அறிந்து செயல்படுவோம். இறைவன் நம்மோடு இருந்து அவர் தம் அருளாலும் ஆசீராலும் நம்மை நிரப்பி வழிநடத்துவாராக ஆமென்.