இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 28 ம் ஞாயிறு

தகுதி உடையவனாயிரு.

எசாயா; 25;6-10
பிலிப்பியர்; 4;12-14,19,20
மத்தேயு; 22;1-14


ஒரு மூட்டைப் பூச்சி தன் குடும்பத்தோட ராஜாவோட கட்டில் அடியில வாழ்ந்து வந்தது. ராஜா தூங்கினதுக்கு அப்புறமா அவருக்கு வலிக்காம அவர் இரத்ததைக் குடிச்சு, பசி நீங்கி தன்னோட குடும்பத்தோட ரொம்ப சந்தோசமா வாழ்ந்துட்டு வந்தது. ஒரு நாள் எங்கிருந்தோ வந்த கொசு அவங்களோட தங்கி ராஜாவோட இரத்தத்த சுவைக்க ஆசைப்பட்டது. "சரி நீ இன்னைக்கு ராஜாவோட இரத்தத்த ருசிச்சு பார்க்கலாம் ஆனா அவர் தூங்குனதுக்கு அப்புறமா தான் நீ அவர கடிக்க ஆரம்பிக்கணும்" னு சொல்லி அந்த கொசுவிற்கு அனுமதி அளித்தது மூட்டைப்பூச்சி. ராஜா கட்டில் அருகில் வந்து அமர்ந்தவுடன் கொசுவிற்கு ஆசை விடவில்லை அவர் மேல் ஏறி முதுகு முகம் கை கால் என எல்லா பக்கமும் கடிக்க ஆரம்பித்தது. வலி தாங்க முடியாத ராஜா, பணியாளர்களிடம் சொல்லி கொசுவையும் அதனோடு சேர்ந்து முட்டைப்பூச்சி எல்லாவற்றையும் கொன்று அழித்துவிட்டார். கொசுவோட சேர்ந்து மூட்டைப்பூச்சியும் தன்னோட குடும்பத்தோட அழிந்து போனது.
இருக்கும் இடத்திற்கு ஏற்ப தன்னைத்தகுதிப் படுத்திக் கொள்ளாததால் வந்த விளைவு இது. தான் அழிந்ததோடு மட்டுமல்லாமல் தன்னோடு சேர்த்து தனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது கொசு.
இவ்வுலகில் பிறக்கும் அனைவரும் தகுதியோடு பிறப்பதில்லை. சிலர் தங்களை தகுதிபடுத்திக் கொள்கிறார்கள். மேலும் சிலர் தங்களை தகுதி உடையவர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ள முயற்சிக்கின்றார்கள்.
பொதுக்காலத்தின் 28 ம் ஞாயிற்றில் இருக்கும் நம் அனைவரையும் இறைவன் நம்மை நாமே தகுதிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் அழைக்கின்றார். இன்றைய நாளின் வாசகங்கள் அனைத்தும் இறைவன் நாம் அவரின் பிள்ளைகள் என்ற தகுதியை நமக்கு தருவதாக அமைந்துள்ளன. முதல் வாசகத்தில் படைகளின் ஆண்டவர் தம் மக்களாகிய இஸ்ரயேல் மக்களுக்கு மிகச்சிறப்பான விருந்து ஒன்றை தயார் செய்கின்றார். நமக்கு அவரின் பிள்ளைகள் என்ற உரிமையைத் தருகின்றார். திருப்பாடலிலோ தாவீது அரசர் ஆண்டவரை ஆயனாக நினைத்து நாம் அனைவரும் அவர் மந்தையின் ஆடுகள் என்னும் தகுதியை நமக்கு தருகின்றார். இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் இயேசுகிறிஸ்துவை தனது ஒப்பற்ற செல்வமாகக் கொண்ட பெருமனிதனாக தன்னை தகுதிப்படுத்திக் கொள்கின்றார்.
நற்செய்தி வாசகத்தில் இயேசு உவமை வாயிலாக நாம் யார்?, நம் தகுதி என்ன?, என்பதை எடுத்துரைக்கின்றார்.
இந்நற்செய்தியில் இடம் பெறும் அரசர் தன்னுடைய மகனின் திருமண விருந்தில் பங்கு கொள்ள தனக்கு மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைக்கின்றார். சிலர் அதை விரும்பாது புறக்கணிக்கின்றனர். சிலர் பணியாளர்களை இழிவுபடுத்துகின்றனர். கொலை செய்கின்றனர். இதனால் அரசரின் சினத்திற்கு ஆளாகி இறக்கின்றனர். இதனால் நெருங்கிய சொந்தங்கள் நீங்கி, முன்பின் அறிமுகமில்லாத நபர்கள் மனிதர்கள் அரசரின் திருமணவிருந்தில் பங்கேற்கின்றனர்.
நாம் அனைவரும் இந்த உலகம் என்னும் ஒரு வட்டத்தில் சுற்றி ஓடிக்கொண்டு இருக்கின்றோம். மையப்புள்ளி இறைவன், அவரை சென்றடைய நாம் அனைவரும் அனுதினமும் ஓடிக்கொண்டு இருக்கின்றோம். மையப்புள்ளியைச்சுற்றி மிகச்சிறிய உள் வட்டம் தொடங்கி பெரிய வட்டம் வரை பல வட்டங்கள் உள்ளன. இறைவனுடனான நம்முடைய ஆர்வத்தைப் பொறுத்து நமது வட்டங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இவ்வுவமையில் இறைவன் அரசராகவும், அவர் மகன் இயேசுவாகவும், அவரது திருமண விருந்தை இறையரசாகவும் கருதலாம். அரசரின் உறவினர்கள், உற்றார், நண்பர்கள்,சிலர் அவரது அழைப்புக்கு பதில்மொழி கொடுக்காதவர்களாகவும், இருக்கின்றனர். இவர்கள் உள்வட்டத்தில் இருந்தபோதும் மையப்புள்ளி அடையாதவாறு இவர்கள் கண்களும் இதயங்களும் மறைக்கப்பட்டு இருக்கின்றன.
பணியாளர்கள் அரசரோடு எப்போதும் உடன் இருப்பவர்கள் இவர்களில் சிலர் அரசருக்காக உயிர் இழக்கவும் இழிவுபடுத்தப்படவும் நேரிடலாம். (அதனால் பணியாளர்களுக்கு துன்பம் இழைப்பவர்கள் அரசரின் சினத்திற்கு ஆளாவார்கள்.) எந்நிலையிலும் அரசரின் ஆணைக்காகத் தயாராக இருப்பவர்கள். இவர்கள் உள்வட்டத்தில் இருந்தபோதும் பவுலடியார் சொல்வதைப்போல வறுமையிலும் வளமையிலும் வாழத் தகுதி படைத்த பணியாளர்கள்.
தெருவோரம் இருக்கும் மனிதர்கள் வெளிவட்டத்தில் இருக்கக் கூடிய மக்கள் . அரசரைப் பற்றியும் அவர் தம் மகனின் திருமண விருந்தைப் பற்றியும் தெரியாதவர்களாய் இருக்கின்றனர். பணியாளர்கள் மூலமாக அரசரின் திருமண விருந்தைப் பற்றி அறிந்து கொண்டு அவரது மகிழ்வில் பங்கேற்க செல்கின்றனர். தங்களுக்கு கிடைக்கப்பெற்ற அழைப்பை முழுமனதுடன் ஏற்று, அரசருக்கு மிக நெருங்கியவர்களாக தங்களைத் தகுதிபடுத்திக் கொள்கின்றனர். வெளிவட்டத்தில் இருந்த அவர்கள் பணியாளர்களினால் உள்வட்டத்திற்குள் செல்கின்றனர்.
உள்வட்டத்திற்கு சென்ற அவர்கள் அரசராம் இறைவனுடன் மிக நெருங்கிய ஒரு உறவை ஏற்படுத்துகின்றனர். தங்களின் மகிழ்வினால் அரசரையும் அவர் தம் திருமண நிகழ்வையும் மகிழ்ச்சிப்படுத்துகின்றனர். அதற்கு ஏற்றவாறு தங்களைத் தயார்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் அரசரை தங்களின் கடவுளாக, குறைகளைப் போக்குபவராகப் பார்க்கின்றனர். படைகளின் ஆண்டவர் அன்று மலையில் இஸ்ரயேல் மக்களுக்கு படைத்த சுவை மிகுந்த உணவினை உண்ணும் பேறு பெற்றவர்களாயினர். ஆயனின் மேய்ச்சலில் பசும்புல்வெளியையும் நீரோடையையும் கண்ட மந்தைகளாயினர். இயேசுவை ஒப்பற்ற செல்வமாகக் கொண்டவர்கள் போலானார்கள்.

திருமண விருந்திற்கு திருமண ஆடையின்றி வந்தவர் தன்னை அந்த நிகழ்விற்கு தகுதிப்படுத்த தவறிவிட்டார். தான் எங்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் ? அது எப்படிப்பட்ட இடம்? என்பதை உணராமல் வந்துவிட்டார். உடலளவில் ஏழையாக இருக்கும் அவர் மனதளவிலும் ஏழையாக இருந்துவிட்டார். உடலில் மட்டுமல்லாது மனதிலும் அழுக்கு படிந்தவராக இருந்துவிட்டார். பிறக்கும் எல்லோரும் பணக்காரர்களாக பிறப்பதில்லை. பிறக்கும் நாம் ஏழையாக பிறந்தால் அதற்கு நாம் காரணமல்ல. ஆனால் ஏழைகளாகவே இறந்தால் அதற்கு முழுக்க முழுக்க நாம் தாம் காரணம். நமது நிலை தாழ்வாக, பொருளாதார அளவில், படிப்பளவில், உடலளவில் இருந்தால் அதை சரி பண்ண வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. சிலர் முன்னேற வேண்டும் என்ற எண்ணமே இல்லாது அப்படியே தொய்வடைந்துவிடுகின்றனர். இவ்விருந்தில் பங்கேற்றவர் கூட அதே நிலைமையில் தன்னை வைத்தவராகத்தான் இருப்பார். அதனால்தான் தான் அழைக்கப்பட்டது எங்கு எதற்கு என்று அறியாமல் உடல் உள்ள அழுக்குகளோடு விருந்து உண்ண வந்துவிட்டார்.
இவர் செய்த இன்னொரு தவறு. தேவையான இடத்தில் பேசாமல் இருந்து மௌனம் காத்தது. அரசர் நண்பா எப்படி திருமண உடையின்றி இங்கு வந்தாய் என்று கேட்கும் போதே அவர் மன்னிப்பு கேட்டு ஏதாவது சொல்லி இருந்து இருக்கலாம். ஆனால் அவர் எதுவும் பேசவில்லை. அதுவே அரசரை அவமரியாதை செய்ததற்கு சமமாயிற்று. நாமும் பல நேரங்களில் இந்த தவற்றை செய்கின்றோம். பேச வேண்டிய இடத்தில் பேசாமலும் பேசக் கூடாத இடத்தில் பேசியும் நாம் வருந்துகிறோம். பிறரை வருத்தமடைச்செய்கின்றோம். அரசர் கோபமுற்று அவரை சிறையில் அடைக்கச்சொன்னது வருத்தமளிப்பதாக இருந்தாலும்,அவர் செய்தது சரியே. உணவு சமைக்கும் முன்பும் உண்ணும் முன்பும் சுத்தமாக கைகால்களை கழுவி ஆரோக்கியம் பேணச்சொல்லும் மக்கள் மத்தியில் அழுக்கு ஆடையுடன் அமர்ந்து உணவு உண்டு உணவையும் அவருடன் சேர்ந்து உண்பவர்களின் மனநிலையையும் மாற்றுகின்றார். வெளிவட்டத்தில் இருந்து உள்வட்டத்திற்கு செல்ல அழைப்பு கிடைத்த போதும் அதை சரியாக பயன்படுத்தத் தெரியாதவர் ஆகிவிட்டார்.
அழைப்புபெற்றவர்கள் பலர் ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் சிலர் என்று இயேசு கூறுகின்ற வரிகளில் நாம் அழைக்கப்பட்டவர்களா? தெரிந்தெடுக்கப்பட்டவர்களா? என்று சிந்திப்போம். நாம் அழைக்கப்பட்டிருந்தால் அந்த அழைப்புக்கேற்ற தகுதியை வளர்த்துக்கொள்வோம். தெரிந்தெடுக்கப்பட்டவர்களானால் நமக்கான தகுதியை தக்கவைத்துக்கொள்ள முயல்வோம். தகுதி என்பது பட்டங்கள் பயின்று வரும் அறிவினால் வருவதில்லை. நம் குணத்தினால் வெளிப்படும் செயல்களில் வருகிறது என்பதை உணர்ந்து தநம்மை நாமே தகுதிப்படுத்திக் கொள்வோம். "தகுதியைத் தேடி நீ செல்லாதே உன்னைத் தேடி அது வரும்படி செய் " மையப்புள்ளியில் அமைந்திருக்கும் இறைவனின் அன்பை அருகில் சென்று உணர்வோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தில் உள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.