இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 26ம் ஞாயிறு

எண்ணங்களின் மாற்றம்.

எசேக்கியேல் 18: 25-28,
பிலிப்பியர் 2: 1-11,
மத்தேயு 21: 28-32


நல்ல எண்ணங்கள் நன்மையைத் தரும்.
எண்ணம் போல் வாழ்க்கை , எண்ணம் போல் தான் வாழ்க்கை.
செருப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்று தனது கிளையை தீவு ஒன்றில் துவங்க எண்ணி தனது ஊழியர்கள் இருவரை 50 ஜோடி செருப்புக்களுடன் அந்த தீவிற்கு அனுப்புகிறது. முதலில் சென்றவர் திரும்பி வந்து, அந்த ஊரில் யாருக்கும் செருப்பு போடும் பழக்கம் இல்லை. அதனால் அங்கு நாம் செருப்பு விற்பனை செய்ய முடியாது . புதிய கிளையை துவங்குவது என்பது இயலாத ஒன்று என்கின்றார். இரண்டாவது சென்றவரோ, ஆமாம் அவர் சொல்வது முற்றிலும் உண்மை. அங்கு யாருக்குமே செருப்பு போடும் பழக்கம் இல்லை. ஆனால் நான் அவர்களை செருப்பு போட பழக்கப்படுத்துவேன். எனக்கு இன்னும் 200 ஜோடி செருப்புக்கள் கொடுங்கள். அடுத்த வாரமே அங்கு நமது புதிய கிளையை தொடங்கிவிடலாம் என்றார்.
இதுதான் எண்ணங்களின் மாற்றம். வேலை ஒன்று தான் ஆனால் அதை பார்க்கும் மனிதர்களின் எண்ணங்கள் வேறு வேறு. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையை எப்படி நினைக்கின்றோமோ அதன்படியே நம்முடைய வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறது. நமது எண்ணம் தான் விதை, உணர்வுகள் தளிர், செயல்களே விருட்சங்கள் இதை புரிந்து கொண்டாலே போதும் நமது வாழ்க்கை எளிமையாகும் இன்பமாகும்.
பொதுக்காலத்தின் 26ம் ஞாயிற்றில் இருக்கக்கூடிய நம்மை இறைவன் இன்றைய வாசகங்கள் வழி எண்ணங்களில் மாற்றம் காண அழைப்புவிடுக்கின்றார்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
துண்ணியர் ஆகப் பெறின் என்ற குறள் வழி நினைத்ததை செயல்படுத்த வேண்டும் என்ற உறுதி உடையவர்கள் நினைத்தபடியே வாழ்வில் வெற்றி பெறுவார்கள். நாம் எதை நினைக்கின்றோமோ அதுவாகவே நாம் மாறுகின்றோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இரு புதல்வர்களின் உவமையை நமக்குக் கூறுகின்றார். இந்த உவமையில் மூன்று மனிதர்கள் இடம் பெறுகின்றனர். இதில் தந்தையிடம் அன்பு , சமத்துவம், தனிமனித சுதந்திரத்தை மதித்தல், பேச்சில் தெளிவு ஆகிய பண்புகள் மேலோங்கி காணப்படுகின்றன.

தந்தையின் அன்பு: அவர் மகனே என்று வாஞ்சையோடு அழைக்கும் அந்த வார்த்தையே அவர் எத்துனை அன்பு நிறைந்தவர் என்பதனை எடுத்துரைக்கின்றது. மூத்தவனே இளையவனே என்று அழைக்கவில்லை. மாறாக மகனே என்று அழைக்கின்றார். இன்று நம்முடைய ஊர்களில் பிள்ளைகளை பெரும்பாலும் மூத்தவன், இளையவன், நடுப்பிள்ளை என்று சொல்வது உண்டு. அல்லது செல்லப்பெயர் சொல்லி அழைப்பர். யாரும் தங்களுடைய பிள்ளைகளை மகனே! மகளே! என்று அழைப்பதில்லை. (அப்படி அழைத்தால் இன்னைக்கு அப்பாவிற்கு அம்மாவிற்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைப்பர்.) ஆனால் இயேசுவின் காலகட்டத்தில் மகனே என்று அழைப்பது தான் அன்பின் உருவமாக கருதப்பட்டது. தந்தைக் கடவுள் தன் மகன் இயேசுவை பெயர் சொல்லி அழைத்ததை விட மகனே என்று சொல்வதை தான் மிக விரும்பினார். இதை இயேசுவின் ஞானஸ்ஞானம் மற்றும் உருமாற்ற நிகழ்வில் காணலாம்.

சமத்துவமானவர்: சமத்துவ குணம் நிறைந்தவராக காணப்படுகின்றார் தந்தை. தனது இருமகன்களையும் மகனே என்று அழைக்கின்றார். இருவரிடமும் வேலை செய்யச்சொல்லிக் கேட்கின்றார். ஒருவரிடம் வேலை கொடுத்து மற்றவரிடம் வேலை கொடுக்காமல் இல்லை. நாம் பல நேரங்களில் நமது பிள்ளைகளிடம் வேற்றுமை பார்க்கின்றோம். அவர்களது அறிவுத்திறன், நினைவுத்திறன், அழகு நிறம் பார்த்து வார்த்தைகளில் நமது வேற்றுமையை வெளிப்படுத்துகிறோம். இவன் கொஞ்சம் கம்மி தான் படிப்புல ஆனா என் இளைய மகன் நல்லா படிப்பான். விளையாட்டுலயும் அவன் தான் டாப்பு . என்றெல்லாம் சொல்கின்றோம். இளைய மகனை பாராட்டி ஊக்குவிக்கின்றோம் என்ற பெயரில் இன்னொரு மகனை தாழ்வாக நினைக்கின்றோம். ஆனால் இந்த உவமையில் வரும் தந்தையோ சமத்துவமான மனிதராக செயல்படுகின்றார்.

தனிமனித சுதந்திரத்தை மதிப்பவர்: ஒவ்வொருவரும் மதிக்கப்பட வேண்டும் அவரவர் தனிமனித சுதந்திரத்தோடு. இந்த தந்தை அதில் மிகவும் கவனமாக இருப்பவர் போல இருக்கின்றார். இதற்கு முன்னால் தன்னுடைய மகன்களை வேலைக்கு அனுப்புபவராக இருந்து இருந்தால் இன்றும் நீ திராட்சைத் தோட்டத்திற்கு வேலைக்குச் செல் என்று சொல்லி இருப்பார். மாறாக இன்று தான், தன்னுடைய மகன்களை வேலைக்கு செல்லும்படி கேட்கின்றார். அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு என்ற இயேசுவின் வார்த்தை இவர் வாழ்வில் இன்று நிஜமானதோ ? தெரியவில்லை. வேலையாட்கள் குறைவோ என்னவோ, அவர் நினைத்து இருந்தால் அந்த வேலையாட்களிடம் வழக்கத்திற்கு மாறாக அதிகப் படியான வேலையை வாங்கி இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை அவர்களின் மனிதத்தை மதிக்கின்றார். இதுவரை எஜமானனின் புதல்வர்களாக இருந்தவர்களை தேவையின் பொருட்டு வேலையாட்களாக மாற்றுகின்றார்.

பேச்சில் தெளிவு: அவர் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் மிகத் தெளிவாக இருக்கின்றன. யாரை, எங்கு, என்ன வேலை, எப்போது என்று மிகத் தெளிவாக சொல்கின்றார். " மகனே இன்று நீ திராட்சைத் தோட்டத்திற்கு வேலைக்கு செல் என்கின்றார்.
நம்முடைய பேச்சு பல நேரங்களில் தெளிவாக இருப்பதில்லை. அதனாலேயே பல குழப்பங்கள் நம்மில் ஏற்படுகின்றன. என்ன சொல்கிறோம் யாரிடம் சொல்கிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

மூத்த மகனின் பண்பு நலன்: மனதில் நினைத்ததை அப்படியே சொல்லுதல் , சிந்தித்தல், செயல்படுதல்.
தந்தை தன்னிடம் ஒரு வேலை செய்ய சொன்னதும் தனக்கு விருப்பமில்லை என்பதை உள்ளது உள்ளவாறு சொல்கின்றார். அதன்பின் தன்னுடைய செயல் குறித்து வருந்துகின்றார். தான் தன்னுடைய வார்த்தையினால் தந்தையின் மனதை வருத்தமடைய செய்துவிட்டோம் என்று எண்ணி வருந்துகிறார். தனது எண்ணங்களை மாற்றி தந்தையின் விருப்பப்படி வேலைக்கு செல்கின்றார். இதனால் அவரது வாழ்வில் ஒரு வளர்ச்சி.

இளையமகனின் பண்பு நலன்: இவர் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனிதராக இருக்கின்றார். இக்குணம் இருப்பதால் இவரால் தான் சொன்னது சரியா தவறா என்று கூட சிந்திக்கமுடியவில்லை. போகிறேன் என்று சொன்னவர் போகாமல் இருந்து விடுகின்றார். தந்தையின் நம்பிக்கையை வீணடிக்கின்றார். இவரது செயல்பாட்டில் சிந்தனையும் இல்லை செயல்பாடும் இல்லை. எண்ணங்களில் மாற்றமும் இல்லை எனவே இவரது வாழ்வில் தளர்ச்சி.
இந்த உவமையில் தந்தை வாக்குறுதி பெறுபவராகவும், மகன்கள் இருவரும் வாக்குறுதி தருபவர்களாகவும் இருக்கின்றனர். மூத்த மகனின் வாக்குறுதி தந்தைக்கு ஆச்சரியத்தையும் மகிழ்வையும் தருகின்றது. ஏனெனில் செல்ல விருப்பமில்லை என்று சொன்ன மகன், மனம் மாறி வேலைக்கு செல்கின்றார். இளைய மகனின் வாக்குறுதி தந்தைக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. செல்கிறேன் என்றவன் செல்லாமல் வீட்டிலேயே தங்கி விடுகிறான். தந்தையின் நம்பிக்கை சிதைகிறது. நாமும் பேசுகிறோம். பல நேரங்களில் வாக்குறுதிகளை வாரித்தெளிக்கின்றோம். நம்முடைய வாக்குறுதிகள் பிறரது வாழ்வை வளப்படுத்துகின்றனவா? இல்லை பாதிக்கின்றனவா என்று சிந்திப்போம். நம்முடைய வாக்குறுதிகள் தண்ணீரில் எழுதப்பட்ட எழுத்துக்களைப் போலல்லாமல் கல்லில் செதுக்கப்பட்ட எழுத்துக்களாக இருக்க கவனமாயிருப்போம்.
வாக்குறுதிகள் பிறர் மனதை, வாழ்வை பலப்படுத்த வேண்டும் .
ஒரு சிறிய கதை , குளிர் பிரதேசமான ஒரு நாட்டில் தெருவோரமாக ஒரு வயதான முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். நாட்கள் மாதங்களாக அவர் அங்கு தான் வசித்து வந்தார். அவரைக் கடந்து பலரும் செல்வதுண்டு. ஒருவரும் அவரை தன்னுடைய வீட்டிற்கு அழைக்கவோ குளிர் போக்கும் ஆடைகளைக் கொடுக்கவோ இல்லை. அவரும் அந்த குளிரினை ஒரு பொருட்டாக கருதாமல் தன்னுடைய வீடு போலவே அங்கு வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவ்வழியே ஒரு பணக்கார மனிதர் கடந்து போக நேர்ந்தது. அவர் அந்த வயதான மனிதர் மேல் பரிவிரக்கம் கொண்டார். எனவே அந்த வயதானவரிடம் மிகவும் அன்போடு , இங்கு தான் நீங்கள் தங்கி இருக்கின்றீர்களா? இந்த குளிரை உங்களால் எப்படி தாங்கிக் கொள்ள முடிகிறது? என்னிடம் குளிர் போக்கும் கம்பளி ஆடைகளும் போர்வைகளும் இருக்கின்றன. நான் வீட்டிற்கு சென்று அவைகளை எடுத்து வந்து உங்களுக்கு தருவேன்.இன்றைய இரவு உங்களுக்கு குளிர் நிறைந்த இரவாக இருக்காது என்றார். முதியவரும் மிகவும் மகிழ்ந்து அந்த பணக்கார மனிதருக்காகக் காத்திருந்தார். ஆனால் அம்மனிதரோ தன்னுடைய அலுவல்களில் அம்முதியவரை மறந்து விட்டார். இரவு படுக்கப் போகும் முன் அம்முதியவரின் ஞாபகம் வர, மறுநாள் காலை கம்பளி ஆடைகளுடன் அவரைப் பார்க்க செல்கின்றார். ஆனால் அந்த முதியவரோ அங்கு இறந்து கிடக்கின்றார். அவரைசுற்றிலும் மக்கள் கூட்டம். பணக்காரர் அருகில் சென்று அவர்களின் உரையாடலுக்கு காது கொடுக்கின்றார்.
நேற்று வரை இந்த வயதான மனிதர் இந்த குளிரைத் தங்கிக் கொண்டு இங்கு தான் தங்கி இருந்தார். ஆனால் நேற்று ஒரு யாரோ ஒரு மனிதர் இவருக்கு குளிர் நீக்கும் ஆடைகளையும் கம்பளியையும் தருவதாக சொல்லி இருக்கின்றார். பாவம் இவரும் அதை உறுதியாக நம்பி அவர் வருவார் என எதிர்பார்த்திருந்தார். போவோர் வருவோரிடம் எல்லாம் அந்த மனிதரைப் பார்த்தீர்களா? இந்த வழியாகத்தான் போனார். திரும்பி வருகிறாரா? என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். பாவம் நேற்று வரை மனவலிமையோடு இருந்த இவரை அம்மனிதரின் வாக்குறுதி பலவீனமாக்கிவிட்டது. பாவம் குளிர் தாக்கி இரவே இறந்து போய் விட்டார். என்று பேசிக் கொண்டனர். இதனைக் கேட்ட அந்த பணக்காரர் மனம் வருந்தி அங்கிருந்து சென்றுவிட்டார். அவருடைய அந்த வாக்குறுதி மனதளவில் பலமுடன் இருந்த அந்த முதியவரை பலவீனமாக்கி, உடலையும் வாட்டி இறப்பிற்கு இட்டுச்சென்றது. நமது வாக்குறுதிகள் எப்படி இருக்கின்றன. அவை எண்ணங்களோடு சேர்ந்து சென்று நமக்கும் பிறருக்கும் நன்மை விளைவிக்கின்றனவா? இல்லை பாதிப்பளிக்கின்றனவா என்று சிந்திப்போம். மையிட்ட விரல்களுக்கு எல்லாம் பொய்யிட்ட வாக்குறுதிகளை பரிசுகளாகத் தரும் அரசியல்வாதிகள் போலல்லாமல், இரத்தமிட்டு நம்மை மீட்ட இயேசு போல வாக்குறுதி காப்போம். வாழ்க்கையில் ஏற்படும் அனைத்தையும் அனுபவமாக்குவோம் ஆச்சரியங்கள் நிறைந்ததாய் இருக்கும் நமது வாழ்வு. வாக்குறுதி காப்பவர்களாவோம். வாக்குறுதி கொடுத்து நம்மை ஏமாற்றியவர்கள் இருப்பின் அவர்களுக்கு நன்றி சொல்வோம்.அவர்கள் ஏமாற்றத்தைத் தரவில்லை. இனி ஏமாறாமல் இருக்க அனுபவத்தைக் கற்றுத் தந்து இருக்கின்றார்கள் என எண்ணி மகிழ்வோம். நமது எண்ணங்களில் மாற்றம் கொண்டு நேரிய மனிதர்கள் பட்டியலில் நாமும் இடம் பெறுவோம் . நல்லதை எண்ணி நலமுடன் வாழ இறைவன் எல்லாவிதமான அருள் வரங்களை நம்மேலும் நம் குடும்பத்தார் மேலும் பொழிந்து நிறைவாக ஆசீர்வதிப்பாராக. ஆமென்.