இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டவர் உயிர்ப்புப் பெருவிழா

நில் கவனி செல் - அன்பில்

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 10,34அ.37-43
பதிலுரைப் பாடல்: 118
இரண்டாம் வாசகம்: கொலோசேயர் 3,1-4
நற்செய்தி: யோவான் 20,1-9

ஏப்ரல் 1 ஏமாளிகள் தினம். இன்று நமதாண்டவரின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கின்றோம். காதலர் தினத்தன்று தொடங்கிய நமது தவக்காலப் பயணம், ஏமாளிகள் தினத்தன்று அதன் நிறைவை அடைந்து இருக்கின்றது. யார் ஏமாளிகள் ? அறிவு இல்லாதவர்களா? அனுபவம் இல்லாதவர்களா? இல்லவே இல்லை. முட்டாள், ஏமாளி என்ற பட்டம் கிடைப்பதற்கு அறிவு அனுபவம் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதிக அன்போடு இருந்தாலே போதும் அப்பட்டங்கள் கிடைத்துவிடும். கிறிஸ்துவின் அன்பை அதிகமதிகமாக சுவைத்து மகிழ்ந்து , அதை பிறருக்கும் கொடுக்கும் நாமும் ஏமாளிகளாக முட்டாள்களாக பிறர் கண்களுக்குத் தென்படலாம். ஆனால் உண்மையில் நாம் கிறிஸ்துவின் அன்பர்கள். உயிர்த்த இயேசுவின் உன்னத சீடர்கள். உலக மக்களுக்கு வேண்டுமானால் இத்தினம் உலக முட்டாள்கள் தினமாக இருக்கலாம். ஆனால் கிறிஸ்துவை அவர் உயிர்ப்பை நம்பும் நமக்கு உவகையின் நாள். உண்மை வெற்றியின் உன்னத நாள். நமக்கு யாராவது இன்று ஏமாளிகள் தின வாழ்த்து சொன்னால் அதை ஏற்றுக் கொள்வோம். ஏனெனில் உயிர்ப்பைக் கொண்டாடுவார்கள் என எண்ணி இருந்தோம் . ஆனால் நம்மை ஏமாற்றி உலகப் போக்காக ஏமாளிகள் தினம் .கொண்டாடுகிறார்களே . உயிர்ப்பு அனுபவம் பெற்றவன் உயிர்ப்பு விழா கொண்டாடுகிறான். நாம் யார் ஏமாளிகளா? உயிர்ப்பு பெருவிழாக்காரர்களா?

இன்றைய நற்செய்தியின் வாசகங்களுக்கு வருவோம். மகதலா மரியாள் கல்லறை நோக்கி அதிகாலையில் பயணமாகிறார். கல்லறைக் கல் புரட்டப் பட்டிருக்கிறது. சீடர்களுக்கு அறிவிக்கிறார். அவர்களும் வந்தனர், பார்த்தனர், நம்பினர். கிறிஸ்துவின் மரணம் கல்லறையோடு நின்றிருந்தால் இன்று நம் திருச்சபை இல்லை. கிறிஸ்தவமும் இல்லை. அவருடைய உயிர்ப்பில் தான் நம்முடைய கிறிஸ்தவ வாழ்வு ஆரம்பமாகிறது. விசுவாசத்தில் ந்ங்கூரமிடப்பட்டு திருச்சபை உருவாகி கிறிஸ்தவம் தழைத்திருக்கிறது. உயிர்ப்பு தான் உண்மைக் கிறிஸ்தவர்களின் மையம் . அதை மையமாக வைத்து தான் நமது திருவழிபாட்டு காலங்கள் அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன.

நமது கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு பயணம் . சாலையில் பேருந்து அல்லது வாகனங்களில் பயணம் செய்யும்போது போக்குவரத்து சமிக்கை ஒளியைக் கவனித்திருப்போம். சாலை விதிகளில் ஒன்றான அவற்றைப் பின்பற்றி பயணிக்கும்போது,நம்முடைய பயணம் சிறப்பானதாக, மகிழ்வானதாக அமைகிறது. அதில் உள்ள சிவப்பு , பச்சை , மஞ்சள் வண்ணா நிறங்கள் குறிக்கும் நில், கவனி ,செல் என்பவை தான் இன்றைய உயிர்த்த இயேசு நமக்கு தரும் சமிக்கைகள் . நமது வாழ்க்கைப் பயணம் சிறப்பானதாக மகிழ்வானதாக அமைய இயேசு தரும் உன்னத சமிக்கைகள் இவைகள். இன்றைய நற்செய்தியில் நாம் காணும் அனைத்து நபர்களும் இந்த சமிக்கைகளுக்கு கட்டுப்பட்டு தங்கள் பயணத்தை இனிதாக மாற்றியிருக்கிறார்கள். பயணம் இனிதாக பாதை சரியாக இருந்தால் மட்டும் போதாது பயணிக்கும் நாம் பயண விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைபிடிக்கவும் வேண்டும்.

மகதலா மரியாள்.
அதிகாலையில் கல்லறை நோக்கி ஆயத்தமாகிறார். கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டு நிற்கிறார். ஆண்டவரின் தூதரது செயலையும் குரலையும் கவனிக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட பணியைச்செய்யவிரைந்து செல்கிறார். உயிர்த்த இயேசுவை முதலில் கண்டவர் என்ற பெரும் பேற்றை பெற்று இன்று திருத்தூதர்களின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகிறார். பிறப்பு தரித்திரமானாலும் இறப்பு சரித்திரமாகட்டும் என்ற கூற்றை மெய்ப்பித்தவர்.

பேதுரு:
கல்லறைக்குள் விரைந்து சென்று நிற்கிறார். இயேசுவின் உடலைச்சுற்றி இருந்த துணிகளைக் கவனிக்கிறார். பின் உயிர்த்த இயேசுவைக் காண விரைந்து கலிலேயா செல்கிறார்.

அன்புச்சீடரும் பிறசீடர்களும்;
பேதுருவுக்கு முன்பாக வந்தாலும் தலைமைக்கும் வயதிற்கும் மரியாதைக் கொடுத்து உள்ளே செல்லாமல் வெளியே நிற்கின்றனர். சூழ்நிலையைக் கவனிக்கின்றனர்.

நம்பிக்கையோடு இயேசுவின் உயிர்ப்பைக் கொண்டாட , அவரைக் காண விரைகின்றனர். நமது வாழ்க்கையிலும் இந்த சமிக்கைகளைக் கடைபிடித்தால் பல நல்ல பயன்களை நமக்குத் தரும் . எவ்வாறு இந்த மூன்று போக்குவரத்து சமிக்கைகளும் இல்லாத பயணம் சிறப்பான பயணமாக பாதுகாப்பான பயணமாக அமையாதோ அது போல இவை ( நில், கவனி, செல்) மூன்றும் கடைபிடிக்கப்படாத வாழ்க்கை மகிழ்வான பாதுகாப்பான வாழ்க்கையாக அமையாது. அன்பில் நிலைத்து நில், அன்பைக் கவனி, அன்போடு செல். அன்பு தான் வாழ்வின் அங்கம். அன்பினால்தான் இயேசு இவ்வுலகிற்கு மனிதனாக வந்தார். அன்பினால் தான் காயப்பட்டார். சிலுவை மரணம் வரை கொண்டு செல்லப்பட்டார். அதே அன்பினால் தான் உயிர்த்து எழுந்திருக்கிறார். அன்பு இல்லை என்றால் உயிர்ப்பு இல்லை. உயிர்ப்பு இல்லை என்றால் கிறிஸ்தவமே இல்லை.

அன்பு தான் உயிர்த்த ஆண்டவரைக் கண்டு கொள்கிறது.
அவரை அதிகமாக அன்பு செய்த மகதலாமரியாள்.
அவரால் அன்பு செய்யப்பட்ட அன்புச்சீடர்.
அன்பு செய்கிறாயா? என்று கேட்கப்பட்ட பேதுரு.
ஆக ஆண்டவர் இயேசுவை அன்பு செய்கிறவர்கள் உயிர்ப்பு அனுபவம் பெறுவது உறுதி. நாம் ஆண்டவர் இயேசுவை அன்பு செய்பவர்களா? இல்லை அவரால் அன்பு செய்யப்பட்டவர்களா? இல்லை என்னை அன்பு செய்கிறாயா என கேட்கப்படுபவர்களா? சிந்திப்போம். அன்பைப் பெற்றவர்களுக்கும் கொடுப்பவர்களுக்குமே உயிர்ப்பு விழா பொருத்தமானதாக இருக்கும். மகதலா மரியாள் போல ஆண்டவரைத் தேடும் நல்ல உள்ளம் வேண்டுவோம். ஆண்டவரைக் காணவில்லை என்றதும் பதறித் துடித்து கண்டடைய ஓடிய , பேதுரு போல ஆண்டவரோடு வாழ்பவர்களாக மாறுவோம். ஆண்டவரின் உடல் சுற்றப் பட்டிருந்த துணியைக் கொண்டே அவர் உயிர்த்ததை நம்பிய அன்புச்சீடர் போல நம்பிக்கை உடையவர்களாவோம். அன்பில் நிலைத்து நிற்போம் அன்பு எதில் உள்ளது எனக் கூர்ந்து கவனிப்போம். அன்போடு உடன் பயணிப்போம் . உயிர்த்த ஆண்டவரின் அருளும் சமாதானமும் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும் என்றும் இருப்பதாக ஆமென்.