இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா

காத்திருப்போமா? மீட்புக்காக....

I. மலாக்கி 3:1-4
II. எபிரேயர் 2:14-18
III. லூக்கா 2:22-40


இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே, பொதுக்காலத்தின் நான்காம் வாரத்தில் நுழைந்து இருக்கக்கூடிய நாம் இன்றைய நாளில் இயேசு கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட நாளினை கொண்டாடி மகிழ்கின்றோம். இன்றைய நாளானது துறவிகளின் நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்றைய நாளில் தங்களது வாழ்வை இறைப்பணிக்காக அர்ப்பணித்த ஒவ்வொரு உள்ளங்களுக்காகவும் சிறப்பாக ஜெபிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.துறவறத்திற்காக, பொது பணிக்காக தங்களை அர்ப்பணித்த ஒவ்வொரு உள்ளங்களையும் இன்றைய நாளில் நினைவு கூறுவோம். இன்றைய நாளில் மீட்புக்காக நாம் காத்திருக்கின்றோமா என்று கருத்தில் வாசகங்கள் அனைத்தும் நமக்கு கேள்விகளைத்தொடுக்கின்றன? எனவே காத்திருக்கின்றோமா மீட்புக்காக என்ற தலைப்பில் நாம் என்று சிந்திக்க இருக்கின்றோம்.
இன்றைய வாசகங்கள் அனைத்தும் மீட்புக்காக காத்திருப்போர் யார்? எப்படி? யார் வழியாக வருகின்றது எப்படி வருகின்றது எவர் வழியாக வருகின்றது என்பது குறித்து தெளிவாக விளக்குகின்றன. நம்மை ஆயத்தம் செய்கின்றது. அது சுட்டெரிக்கும் நெருப்பாகவும், தூய்மைப்படுத்தும் சவர்காரம் போலவும் நம்மை அணுகி வருகின்றது. அது நம்மைப் புடமிடுகின்றது தூய்மைப்படுத்துகிறது. இதன்மூலமாக நம்மையே நமது வாழ்வை நாம் காணிக்கை பொருளாக மாற்ற அழைப்பு விடுக்கின்றது.சாவு அச்சத்தினின்றும், அடிமைத்தனத்தினின்றும் நம்மை விடுவிக்கின்றது. சோதனைக்கு உட்படுத்தாமலௌம், சோதனைக்கு உட்பட்டவரை அதிலிருந்து மீட்கவும் செய்கின்றது. சோதிக்கப்படுகின்ற ஒவ்வொருவருக்கும் உதவி செய்கின்றது. சோதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வல்லமை தருகின்றது

இவ்வாறாக முதலிரண்டு நற்செய்தி வாசகங்களும் நமக்கு மீட்பை பற்றிய புரிதலை தெளிவாக எடுத்துரைக்கின்றன. நற்செய்தி வாசகம் ஐந்து விதமான பண்புகள் உள்ளவர்கள் மீட்பினை கண்டு கொள்வர் என்று நமக்கு வெளிப்படுத்துகின்றது. அர்ப்பணிப்பு, கீழ்ப்படிதல், எதிர்பார்த்தல் கண்டு கொள்ளுதல், அறிவித்தல்.
முதலாவதாக அர்ப்பணிப்பு:
குழந்தை இயேசு கோவிலில் அர்ப்பணிக்கப்படுகின்றார் ஆண் பேறு அனைத்தும் ஆண்டவருக்கு சொந்தம் என்ற பழைய ஏற்பாட்டு வரிகளுக்கு ஏற்ப குழந்தை இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தனர். அது ஒரு சாதாரண சடங்காக இருந்தபோதிலும் அதை மரபு மாறாமல் கடைபிடித்து வருகின்றனர். முதல் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு சொந்தம் என்பது இன்றும் நாம் கடைபிடித்து வரும் ஒரு செயல். பல இடங்களில் தங்களது நிலத்தில் விளைந்த முதல் விளைச்சலை கடவுளுக்கு அர்ப்பணிக்க கூடிய பழக்கம் நம் ஊர்களில் இருந்து வருகின்றது. அது விளையும் பயிர் ஆனாலும், உற்பத்தி செய்யும் பொருட்கள் ஆனாலும், வளர்க்கும் கால்நடைகள் ஆனாலும் எதுவானாலும் சரி முதல் விளைச்சல் கடவுளுக்கு சொந்தம் . இது எல்லாவற்றிற்கும் அது பொருந்தும். இந்த அர்ப்பணிப்பு மனநிலை நம்மிலும் தொடர்ந்து வருகின்றது. அது நீடித்து நிலைக்க அருள் வேண்டுவோம்.
இரண்டாவதாக கீழ்படிதல்:
யோசேப்பும் மரியாவும் சட்ட திட்டங்களுக்கு கீழ்ப்படிகின்றனர். இயேசுவின் பிறப்பில் பல்வேறு வித்தியாசமான நிகழ்வுகள் நடந்த போதிலும் அவரது பிறப்பு வித்தியாசமானதாக இருந்தபோதிலும் அவை அனைத்தையும் மனதில் கொண்டு யூத சட்டத்திட்டத்திற்கு கீழ்ப்படிகின்றனர். முழுமனதுடன் தங்களது முதல் குழந்தையை கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றனர். தங்களால் இயன்ற காணிக்கையை பொருட்களை ஆலயத்தில் செலுத்தி தங்களது கடமைகளை நிறைவேற்றுகின்றனர். அவர்கள் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிந்ததால் தான், கடவுளின் திருவுளத்திற்கு கீழ்ப்படிந்து மீட்பரை மகனாக பெரும் பேற்றினைப் பெற்றனர்.நாமும் கடவுளின் திருவுளம் எது என தெரிந்து நிறைவேற்ற முயல்வோம்.

மூன்றாவதாக எதிர்பார்த்தல்:
சிமியோன் மற்றும் அன்னா இருவரும் தங்களது வாழ்நாளை மீட்பரின் வருகைக்காக காத்திருப்பதிலேயே செலவு செய்தனர். என்றாவது ஒரு நாள் மீட்பரைக் காண்போம் என்று நம்பினர். அது போலவே கண்டு கொண்டனர். நம்மிலும் இந்த எதிர்பார்க்கும் மனநிலையை வளர்த்துக் கொள்வோம். மீட்பரின் வருமகையை நம் வாழ்வில் எதிர்பார்ப்போம்.

நான்காவதாக கண்டு கொள்ளுதல்:
எருசலேம் தேவாலயத்தில் பல்வேறுவிதமான மக்கள் இருந்தபோதிலும் சிமியோன் அன்னா என்னும் இருவரும் குழந்தை இயேசுவை மீட்பராக கண்டு கொள்கின்றனர். ஏராளமான குழந்தைகள் அவ்வாலயத்தில் வந்து சென்ற போதிலும் இயேசுவை இனம்கண்டு கொள்கின்றனர். மீட்பரின் வருகையை எதிர்பார்த்து இருந்தவர்கள் அந்த மீட்பை கண்டு கொள்கின்றனர். நன்மை செய்பவர்களை நாமும் இனம் கண்டு கொள்ள வேண்டும். அவர்களை இனம் கண்டு அவர்களை போல் நாமும் மாற முயற்சிக்க வேண்டும்.

ஐந்தாவது அறிவித்தல் :
கண்டுகொண்டதோடு தங்களது பணி முடிந்தது என்று நினைக்கவில்லை மாறாக தாங்கள் கண்டு கொண்ட மீட்பை மகிழ்வை பிறருக்கு வெளிப்படுத்துகின்றனர். இதற்காகவே தங்கள் வாழ்நாள் முழுவதும் காத்திருந்ததாக அறிவிக்கின்றனர். தங்கள் பெற்ற மகிழ்வை பிறரும் அனுபவிக்க எண்ணி அதனை உரத்த குரலில் வெளிப்படுத்துகின்றனர். நாமும் பல நேரங்களில் நம் வாழ்வில் இறைவனால், நன்மையை மகிழ்வைக் கண்டு கொள்கின்றோம். அதனை பிறருக்கும் அறிவிக்கும் போது அந்த மகிழ்வு, நன்மை இரட்டிப்பாகும் என்பதை மறந்து விடுகின்றோம் பெற்ற நன்மையை பிறாருக்கும் எடுத்துரைப்பவர்களாவோம்.

இறுதியாக நாமும் முழு மன அர்ப்பணிப்பு மனநிலையுடன் வாழ முயற்சிப்போம். கடவுளின் திருவுளம் இதுதான் என அறிந்து அதற்கு கீழ்ப்படிய முற்படுவோம். அவரின் வருகைக்காக எதிர்பார்த்து காத்திருப்போம். அவரை இனம் கண்டு கொள்வோம். இவர்தான் மீட்பர் என நம் வாழ்வில் நாம் உணர்ந்து அதை பிறருக்கும் அறிவிப்போம். இதன் மூலமாக நாம் மீட்பரை கண்டடைய முடியும். நாம் புடமிட பட்டவர்களாக தூய்மைப்படுத்த பட்டவர்களாக மாறுவோம் இத்தகைய மீட்பினை நாமும் அடைய காத்திருப்போம் சிமியோன் அன்னா போல. இறையாசிர் என்றும் நம்மோடு நம் குடும்பத்தில் உள்ள அனைவரும் இருப்பதாக ஆமென்