இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 3 ம் ஞாயிறு

நான் யாரைப் பின்பற்றுகிறேன்? சாதனங்களா? சாதனைகளா?

I. எசாயா 9:1-4 1
II. கொரிந்தியர் 1:10-13,17
III. மத்தேயு 4:12-23



இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே பொதுக்காலத்தின் மூன்றாம் வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். இன்றைய நாளில் இயேசுவின் பணி வாழ்வினை குறித்து நாம் சிந்திக்க இருக்கின்றோம். இயேசு தனது பொது வாழ்வினை துவங்கிய வாசகமானது இன்றைய நற்செய்தியில் நமக்கு கூறப்பட்டுள்ளது. முதல் வாசகம் மறைப்பணி செய்ய அழைக்கப்பட்டவர்கள் அடையும் பயன்கள் பற்றியும், இரண்டாவது வாசகம் மறைப்பணியாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைக்கின்றது. நற்செய்தி வாசகம் ஒரு பணியாளர் எப்படி அழைக்கப்படுகிறார் எந்த சூழ்நிலையில் அழைக்கப்படுகிறார் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கூறுகின்றது. நாம் ஒவ்வொருவரும் இறைப்பணி செய்ய அழைக்கப்பட்டவர்கள். நாம் எவ்வாறு அழைக்கப்படுகிறோம்? எப்படி இருக்க பணிக்கப் படுகிறோம்? நாம் அடைய இருக்கக்கூடிய பயன்கள் என்னென்ன என்பதைப்பற்றி இன்றைய வாசகங்கள் அனைத்தும் எடுத்துரைக்கின்றன.

இன்றைய நற்செய்தியில் இயேசு முதல் சீடர்களை அழைத்த நிகழ்வை நாம் வாசிக்க கேட்டோம். இருவகையான சகோதரர்களை சீடர்களாக இயேசு அழைக்கிறார் முதலில் சீமோன் பேதுருவும் அவரது சகோதரர் அந்திரேயாவும். இவர்கள் இருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர். இரண்டாவதாக செபதேயுவின் மக்கள் இவர்கள் கரையோரமாக அமர்ந்து தங்களது தந்தையுடன் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இயேசு இரண்டு சகோதரர்களையும் அழைக்கின்றார். வேலை செய்துகொண்டு இருப்பவர்களையும், ஓய்வாக இருப்பவர்களையும் அழைக்கிறார். இயேசுவின் அழைப்பு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வரலாம். அவரது பணி செய்ய நம்மை அவர் வேலையிலும் ஓய்விலும் அழைக்கலாம். சீடர்கள் செய்த வேலைகள் 2. ஒன்று அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டு கொண்டனர். வேலை செய்து கொண்டிருந்தாலும் இயேசு அவர்கள் அருகில் வரும்பொழுது இவர்தான் மெசியா நம்மை மீட்க கூடிய வல்லமை உள்ளவர் என்பதை அறிந்து அவரை இனம் கண்டு கொள்கின்றனர். இரண்டாவதாக அவரது குரலினால் கவரப்படுகின்றனர். அவரது குரலுக்கு செவி மடுக்கின்றனர். இயேசு நம்மை சுற்றிலும் நாம் வேலை செய்யும் பொழுதும் சோர்வாக அமர்ந்து இருக்கும் பொழுதும் நம்மை சூழ்ந்து அவர் இருக்கின்றார். அவரது பணி செய்ய எல்லாச் சூழலிலும் மெல்லிய குரல் மூலம் நம்மை அழைக்கின்றார். நாம் செய்ய வேண்டியது இதுதான் இயேசுவை அவர் குரலை இனம் கண்டு கொள்வது அவரது குரலுக்கு செவிமடுப்பது.

இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் அழைக்கப்பட்டவர்கள் (கிறிஸ்தவ வாழ்வு வாழ) எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்கக் கூடாது என்பதை தெளிவுபடுத்துகிறார். ஒத்த கருத்துடையவர்களாக இருக்க வேண்டும். அவர்களிடையே பிளவு மனப்பான்மை இருக்கக்கூடாது. ஒரே நோக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும். சண்டை சச்சரவுகள் அவர்களிடத்தில் இருக்கக் கூடாது. பணியாளர்களாக அழைக்கப்பட்ட நாம் ஒத்த கருத்துடையவர்களாக, ஒரே மனம், நோக்கம் உடையவர்களாக இருக்கிறோமா? அல்லது பிளவுபட்ட மனம் சண்டை சச்சரவுகளும் குழப்பங்களும் உடையவர்களாக இருக்கிறோமா? என்று சிந்திப்போம்.

இன்றைய முதல் வாசகத்தில் பணியாளர்கள் அடைந்த பயன்கள் பலன்கள் பற்றி கூறப்படுகிறது. காரிருளில் நடந்துவந்த மக்கள், சாவின் நிழல் சூழ்ந்துள்ள இடத்தில் வசித்த மக்கள், பேரொளியை, சுடர் ஒளியை காண்கிறார்கள். அவர்களது இனம் அவர்களோடு முடிவடையாமல் பலுகிப் பெருகுகின்றது. அவர்களது மகிழ்வு இரு வகையாக பிரிக்கப்படுகிறது ஒன்று அறுவடை நாளில் நிறைவடையும் ஒரு உழவனைப் போல, கொள்ளை பொருளை பங்கிடும் ஒருவனின் மனநிலையைப் போல என் இரு வகை மகிழ்வாக பிரிக்கின்றார். அறுவடைநாள் மகிழ்வு என்பது ஒரு விவசாயி கடினமாக உழைத்து வேலை செய்து தனது வியர்வை சிந்தி தனது உழைப்பு எல்லாம் கொடுத்து ஒரு விதையை உருவாக்கி அதிலிருந்து அதற்குரிய பலனை எடுக்கக்கூடிய அந்த நாள் அறுவடை நாள். தனது துன்பம் எல்லாம் நீங்கி மகிழ்வை காணக்கூடிய அந்த நாள் அவனது அறுவடை நாள். அந்நாளில் அவன் அடையும் மகிழ்வுக்கு வறையரை கிடையாது அவனது உழைப்புக்கேற்ற ஊதியம் அவர் பெறுகிறார். அவனது நேரத்தை உழைப்பை துன்பத்தை அனைத்தையும் கொடுத்து அந்த நிலத்தை பயிரிட்டு அதன் மூலமாக கிடைக்கக்கூடிய விளைச்சலின் மூலம் அவன் பெருமகிழ்வடைகின்றேன் இரண்டாவது வகை மகிழ்வு கொள்ளை பொருளை பங்கிடுவது எந்தவிதமான ஆதாரமும் இன்றி பிறரிடம் இருந்து பெறும் மகிழ்வு. மேலும் அவர்களது சுமை உடைத்தெறியப்படுகிறது. அவர்கள் உடம்பைப் புண்ணாக்கிய தடி தகர்த்தெறியப்படுகின்றது. அவர்களது கொடுங்கோல் ஒடிக்கப்படுகிறது. ஆக இதுவரை துன்பத்தை அனுபவித்து வந்த அவர்கள் மகிழ்வினை அடைகிறார்கள். சாதாரண ஒரு பணியாள் துன்பங்கள் பல அனுபவித்தாலும் இறுதியில் அவனுக்கு பெருமகிழ்வு கிட்டும் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது நற்செய்தி அறிவிப்பவர்கள் பல்வேறு விதமான இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக நேரிடும் இருப்பினும் இறுதியில் அவர்கள் பெரும் மகிழ்வை அடைவார்கள்.

இன்றைய வாசகங்கள் மூலம் நாம் நமது வாழ்க்கைக்கு என்று எடுத்துக் கொள்வது என்ன?
நான் யாரை பின்பற்றுகிறேன்? என்ற கேள்விக்கான ப்திலைத் தேடுவதே இன்றைய வாசகங்கள் நமக்கு விடுக்கும் அழைப்பு. வளர்ந்து வரும் தொலைதொடர்பு சாதனை உலகில் நாம் பல சாதனங்களை பின்பற்றுகிறோம் முகப்புத்தகத்தில் புலனத்தில் வலைதளத்தில் என முகம் தெரியாத அறிமுகமில்லாத பலரை பின்பற்றுகிறோம். அவர்கள் பதிவிடும் கருத்துக்களைப் பின்பற்றுகிறோம். ஆனால் நமக்கு நன்கு அறிமுகமானவர் இயேசு. அவரது போதனைகள் மூலமாக நமது வாழ்க்கைக்கு பல்வேறு விதமான கருத்துக்களை எடுத்துரைத்தவர். அவரை பின்பற்றுகிறோமா? அவரது வார்த்தைகளை வாழ்வாக்குகின்றோமா? இன்றைய காலகட்டத்தில் நாம் சிலுவையை விட சாதனங்களையே அதிகமாக பின்பற்றுகிறோம்? இந்நிலை மாறி சிலுவையை பின்பற்றுவோம் சிலுவை நமது வாழ்வின் வெற்றியின் சின்னம். மகிமையின் சின்னம். அந்த சிலுவையின் நாயகன் இயேசு. அவர் நமக்காக, நமது நல்வாழ்வுக்காக தன் உயிரை ஈந்தார் அவரது பணி செய்ய அவரைப்போல பல்வேறு உள்ளங்களை இறைவன்பால் திருப்ப,ஆவல் கொள்வோம்.மறைப்பணி செய்ய ஆர்வம் கொள்வோம். சாதனங்களை விடுத்து சிலுவையை, சிலுவை நாதர் இயேசுவைப் பின்பற்றுவோம்.

ஒரு சிறிய கதை மூலம் இதை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
நண்பர்கள் இருவர், தூரமான ஒரு இடத்தில் ஒரு மலையின் அடிவாரத்தில் மாணிக்கக் கற்களும் தங்க ஆபரணங்களும் பொக்கிஷமாக இருப்பதை கண்டுபிடிக்கின்றனர். எப்படியாவது அந்த பொக்கிஷத்தை தங்களோடு எடுத்து வந்து அதை விற்று காசாக்கி தங்களது வாழ்க்கையை வளமாக்க விரும்புகின்றனர். நீண்ட பயணத்திற்குப் பிறகு அடையவேண்டிய அந்த மலைப் பாதையை அடைகின்றனர். அதுவரை நேராக வந்து கொண்டிருந்த பாதை இரண்டாகப் பிரிகிறது. எந்தவிதமான பலகையோ அறிவிப்பு பலகையோ
வழிகாட்டி பலகையோ எதுவுமில்லை. எந்த பாதையை தேர்ந்தெடுப்பது என்று தங்களுக்குள் ஆலோசித்தனர் திடீரென்று அவ்வழியாக வழிப்போக்கர் ஒருவர் பயணம் செய்கின்றார். பார்ப்பதற்கு மிகவும் முதியவராக வறுமையில் வாடியவர் போல எலும்பும் தோலுமாக இருக்கின்றார் அந்த முதியவர். இவர்களை பார்த்து தம்பிகளே இதே இடத்தில் நின்று என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இது மிகவும் ஆபத்தான பகுதி விரைவில் உங்கள் இல்லம் திரும்புங்கள். பலவிதமான கொடிய காட்டு மிருகங்கள் நடமாடும் இடம் இது. மாலை நேரம் அவைகள் அனைத்தும் வெளியே உலாவ தொடங்கும். அது உங்கள் உயிருக்கே கூட ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கிறார். இருவரும் அந்த வழிப்போக்கரிடம் அதோ தூரமாக தெரியக்கூடிய அந்த மலையின் அடிவாரத்திற்கு இவ்விரண்டு பாதையில் எந்த பாதை வழியாகச் சென்றால் செல்ல முடியும் என்று கேட்கின்றனர். அந்த வழிப்போக்கர் அவர்கள் இருவரையும் மேலும் கீழுமாக பார்த்துவிட்டு சொல்கின்றார். 2 பாதையும் அந்த மலை அடிவாரத்தை சென்றடைய கூடியதுதான் ஒன்று நீண்ட அகலமான பாதை மலை அடிவாரத்தை அடைய சில ஆண்டுகள் ஆகும். இன்னொன்று குறுகலான பாதை கடினமான பாதையும் கூட விரைவில் மலை அடிவாரத்தை அடையலாம் என்றார். இருவரும் குறுகலான பாதை வழியாக செல்ல முடிவெடுக்கின்றனர் மீண்டும் வழிப்போக்கன் அவர்களை தடுத்து நிறுத்தி குறுகலான பாதையில் நிறைய பிரச்சினைகள் சிக்கல்கள் இருக்கும் பலவிதமான ஆபத்தான விலங்குகளும் இருக்கும் பாதை கரடுமுரடானது அது செல்வது மிகவும் கடினம் உயிருக்கும் கூட ஆபத்து என்று கூறுகின்றார். நீண்ட அகலமான பாதை பாதை மிகவும் சுலபமானது ஆனால் கடந்து போக வேண்டிய தூரம் அதிகம் என்று கூறுகின்றார். இருவருக்குள் மறுபடியும் வாக்குவாதம் இந்த பாதை வழியாக சென்று அடைவது என்று ஒருவன் நீண்ட பாதை வழியே செல்ல முடிவெடுக்கிறான். மற்றவன் குறுகலான பாதை வழியே செல்ல முடிவெடுக்கிறான். நீண்ட பாதை வழியாக செல்பவன் மலையின் அடிவாரத்தை சென்று அடைவதற்குள், குறுகலான பாதை வழியே சென்றவன் பல்வேறுவிதமான ஆபத்துக்கள் விளைவுகள் அனைத்தையும் கடந்து அதனை முறியடித்து விட்டு அத்தனை துன்பங்களுக்கு பிறகும் அந்த மலையின் அடிவாரத்தை சென்றடைகிறான் பொக்கிஷத்தை தனதாக்கிக் கொள்கிறான். எந்தவிதமான துன்பமும் சோதனையும் அனுபவிக்காமல் சுலபமாக நீண்ட தூரம் பயணம் செய்து அந்த பொக்கிஷத்தை அடையலாம் என்று முயற்சித்து இன்னொருவன் நடந்து நடந்து உடல் சோர்வுற்று மயங்கி விழுகிறான். நமது வாழ்க்கையும் இப்படித்தான் நம் முன்னே இரண்டு பாதைகள் இருக்கின்றன ஒன்று நீண்ட சுலபமான பாதை அது நாம் பயன்படுத்தக்கூடிய தொலை தொடர்பு சாதனங்கள். குறுகலான பாதை சிலுவைப்பாதை, இயேசுவின் பாதை, மறைப்பணி செய்யக்கூடிய பாதை அப்பாதையில் பல்வேறுவிதமான இடைஞ்சல்கள் சிக்கல்கள் இருக்கும் ஆனால் சென்றடைய வேண்டிய இலக்கை விரைவில் சென்றடையலாம் நீண்ட அகலமான பாதை கானல்நீர் போல பொக்கிஷத்தை நம் அருகில் காட்டும் நாம் விரைவாக செல்ல செல்ல அது இன்னும் நம்மை விட்டு அகன்று கொண்டே போகும். ஆக கிறிஸ்தவர்களாகிய நாம் நமது வாழ்வினை அர்த்தமுள்ள வாழ்வாக மாற்றுவோம். நமக்காக பாடுபட்டு இறந்து உயிர்த்த நம் ஆண்டவர் இயேசுவின் பணியைச் செய்ய முன்வருவோம். சிலுவையை மீட்பின் சின்னமாக ஏற்று அதனை பின்பற்றுவோம். சாதனங்களை அல்ல சாதனை புரியும் இயேசுவைப் பின்பற்றுவோம். ஆண்டவர் இயேசுவின் அருளும் அமைதியும் சமாதானமும் நம்மோடு நம் குடும்பத்தில் உள்ள அனைவரும் என்றென்றும் இருப்பதாக ஆமென்