இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தவக்காலம் குருத்து ஞாயிறு

முயன்றிடு முன்னேறிச்சென்றிடு

எரேமியா 31,31-34
திருப்பாடல் 51
எபிரேயர் 5,7-9
யோவான் 12,20-33

சென்று கொண்டிருப்பவன் காலத்தை வென்று கொண்டிருக்கிறான்.
நின்று கொண்டிருப்பவன் காலத்தை தின்று கொண்டிருக்கிறான்.

என்றோ எங்கோ படித்த புத்தக வரிகள். தவக்காலத்தின் மிக முக்கியமான காலகட்டத்தில் அடியெடுத்து வைக்கும் இந்நேரத்தில் இவ்வரிகளுடன் எனது சிந்தனைகளை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.புனித வாரத்தின் முதல் நாள். தூய மனதுடன் நம்மை புதுப்பிக்க நாம் எடுத்து வைத்திருக்கும் முதல் அடி இந்த குருத்தோலைப் பவனி. நமது ஊர்களில் பலவிதமான பவனிகள் நடைபெறுகின்றன. குடும்பம் சம்பந்தப்பட்டது முதல் அரசியல் ஆன்மீகம் என பலவிதமான பவனிகள். நேர்மறை எதிர்மறை என ஏகப்பட்ட பவனிகள். சில வெற்றிகரமாக நடைபெறுகின்றன. பல வெற்றி பெறாமலேயே மறைந்து விடுகின்றன. சில தொடங்கிய இடத்திலேயே நிறைவு பெறுவதுமுண்டு. பல நிறைவு பெற்ற இடத்திலிருந்து மீண்டும் தொடங்குவதுண்டு. பவனிகள் எதற்காக?

தனது, அல்லது தங்களது ஆதரவாளர்களின் எண்ணிக்கையை திறமையைப் பிறர் அறியச்செய்ய, தங்களது நோக்கத்தை பிறருக்கு அறிவிக்க, தங்களது மகிழ்வை ,வெறுப்பை வெளிப்படுத்த பவனிகள் நடைபெறுகின்றன. ஆனால் இயேசுவின் எருசலேம் பயணம் முற்றிலும் மாறுபட்டது.

தனது அன்பர்கள் ஆதரவாளர்களின் திறமையை பிறர் அறியச்செய்ய அல்ல, தனது தாழ்ச்சியை பிறருக்கு அறிவிக்க. வெற்றிவாகை சூட அல்ல, வேதனைகளை நாடிச்செல்ல. பதவியையும் பணத்தையும் பெருக்கச்செல்லவில்லை. மாறாக பாசத்தையும் இரக்கத்தையும்வெளிப்படுத்த செல்கிறார்.

இன்று பலர் பதவியும் பணமும் பார்த்தவுடன் ஒரே இடத்தில் காலத்திற்கும் அசையாமல் அமரத்துடிக்கின்றனர். வேறு இடத்திற்கு நகர்ந்தால் இதே போல் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயத்தில்.... நகர மறுக்கின்றனர். இயேசுவுக்கு அத்தனையும் கிடைத்தது. மக்களின் மனதில் நீங்கா இடம், பசிக்கு பகிர்ந்துண்ண உணவு, பாசம் காட்ட சீடர்கள், செல்லும் இடமே தங்கும் இடம். ஆரவாரமும் ஆர்ப்பரிப்பும் செய்ய ஆயிரமாயிரம் மக்கள் என எல்லாமே நிறைவாக இருந்தது. இருப்பினும் இது போதும் என்று இயேசு இருந்து விடவில்லை. அந்த இடத்திலேயே நிலைத்து நிற்க விரும்பவில்லை. இது நிரந்தரமல்ல , நிலையானதுஒன்று உண்டு என உணர்ந்து முன்னேறிச்செல்கிறார். தனது பயணம் தொடங்கும் இடம் மகிழ்வானது தான் ஆனால் பயணிக்கும் பாதை துன்பமயமானது என்பதை உணர்ந்தவர் இயேசு. ஆனால் அதன் வழியாக மட்டுமே உலகை மீட்க முடியும் என்பதையும் நன்கு அறிந்தவர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பவனி இது. இன்றும் நாம் அவர் வழியை பின்பற்றுகிறோம் என்பதற்கான வெளிப்படையான அடையாளம் இது. இன்று நாம் கைகளில் குருத்தோலை ஏந்தி இறைப்புகழ் பாடி பவனி வந்தோம். அரச பரம்பரையில் மன்னர் நகர்வலம் வரும்போது மக்கள் இப்படி செய்வது வழக்கம். தங்களை ஆளும் மன்னர்கள், மக்கள் மத்தியில் வந்து தங்கி அவர்களது குறைகளைத் தீர்த்து தன் அரண்மனை திரும்புவர். அந்நேரத்தில் இதுமாதிரியான வரவேற்புகள் இருக்கும். நம் மன்னர் இயேசுவோ, நம் குறை தீர்த்து நம்மை விட்டு அகல்பவர் அல்லர். நமது நிறைவிலும் குறைவிலும் நம்மோடு எந்நாளும் இருப்பவர். நீங்கள் முன்னால் சென்று பாஸ்கா கொண்டாட இடத்தை ஏற்பாடு செய்யுங்களென்று சொல்வதோடு மட்டுமல்லாமல் நம் உடன் வருபவர்.

நமது கிறிஸ்தவ மக்களிடையே திருவழிபாடு சேர்ந்த பல விதமான பவனிகள் நடைபெறுகின்றன. மாதா பவனி, சூசையப்பர் பவனி, அந்தோணியார் பவனி, அருளானந்தர் பவனி என ஏகப்பட்ட புனிதர்களின் பவனிகள் நடைபெறுகின்றன. ஆனால் அவை எல்லாம் ஒன்று போல் ஒரே நேரத்தில் நடப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் பவனியினை வழிநடத்துவர். ஆனால் குருத்து ஞாயிறு பவனி , தவக்காலத்தின் ஆறாம் ஞாயிறு காலையில் அனைத்து கிறிஸ்தவ மக்களாலும் பல்வேறு இடங்களில் பல்வேறு நாடுகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. காரணம், வழிபாட்டால் நாம் வேறுபட்டாலும் , வழிபடும் கிறிஸ்து ஒருவர் என்ற கருத்தில் ஒன்றுபடுவதால் தான். நாம் கொண்டாடும் இயேசு இன்பத்தையும் நிறைவையும் மகிழ்வையும் மட்டும் அனுபவித்த இயேசு அல்ல. மாறாக துன்பத்தையும் கலக்கத்தையும் அனுபவித்த இயேசு. இன்பம் மட்டும் வாழ்க்கையல்ல, இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்தது தான் வாழ்க்கை என்பதை வாழ்ந்து காட்டியவர். துன்பத்தின் வழிதான் உலகை மீட்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்த வந்த இயேசு .

குருத்து ஞாயிறு இன்று நமக்குவிடுக்கும் செய்தி என்ன?

குருத்தோலை, போர்வை , கழுதை என பல பொருட்கள் இப்பவனியில் இடம் பெறுகின்றன. இவை மூன்றும் இந்நாளில் நமக்கு சொல்லும் செய்தி என்பதை அறிய முயல்வோம்.

குருத்தோலை.: இளம் குருத்து ஓலைகள், எளிதில் வளைத்து ஓலைப்பாய், ஓலைப்பெட்டி, என உபயோகமான பொருட்கள் செய்ய, ஓலைச்சுவடிகளாக பாதுகாக்க பயன்படுகிறது. இயேசுவை மெசியாவாக, நம்மை மீட்க வந்த ஆண்டவராக பார்க்கும் நாமும் குருத்தோலைகளே. தகுந்தவனோடு , தகுந்தவனின் கையில் இருக்கும் போது நாம் தகுதியான பொருட்களாவோம். இல்லையேல் கீழே விழுந்து மிதிபடும் குப்பையோடு குப்பையாக மாறுவோம்.

போர்வை மேலாடை : இளைப்பாற, குளிர் வெயிலில் இருந்து கூடாரமாக நம்மை பாதுகாக்க, பயன்படுகிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுவின் வார்த்தையில் இளைப்பாறி, அவரது நிழலில் பாதுகாக்கப்படுகிறோம். பெற்றதைப் பிறருக்கு கொடுத்து வாழும்போது அதாவது, பிறர் நம் சொல்லால் இளைப்பாறுதல் பெறும்போது, செயலால் பாதுகாப்பை நம்பிக்கையை உணரும்போது நாமும் இயேசுவின் பாதம் பட்ட போர்வை மேலாடைகளாகிறோம்.

கழுதை: பொதி சுமக்க, பயணம் செய்ய , சில வீடுகளில் என்னைப் பார் யோகம் வரும் என்று படத்தோடு ஒட்டப்பட என பல வகைகளில் பயன்படுகிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுவின் துணையுடன் பிறர் சுமைகளையும் பகிர்ந்து , அவர்மீது ,அவரோடு பயணம் செய்ய அழைக்கப்படுகிறோம். ,சில நேரங்களில் கிறிஸ்தவனைப்பார் அவன் வாழ்வைப் பார் உன் வாழ்க்கை மாறுபடும் செழிப்பாகும் என்று சொல்லுமளவிற்கு வாழ தூண்டப்படுகிறோம். எனவே குருத்தோலையாக உருமாற, போர்வை மேலாடையாக நம்பிக்கை பாதுகாப்பு தர, கழுதை போல இயேசுவை சுமந்து வாழ முயற்சிப்போம்.

இரண்டு கழுதைகள் குருத்து ஞாயிறு முடிந்து தங்களுக்குள் பேசிக்கொண்டன. முதல் கழுதை சொன்னது . என்ன இந்த மக்களை புரிஞ்சுக்கவே முடியல. நேற்று என்னடான்னா , என் மேல போர்வை மேலாடை எல்லாம் போட்டு, வழியில இலை தளைகள் நிரப்பி, பாட்டு பாடி அழைத்துச்சென்றனர். இன்றைக்கு என்னை கண்டுகொள்ளவே மாட்டேன்றாங்க. என்னாச்சு இவங்களுக்கு???அதற்கு இரண்டாம் கழுதை சொன்னபதில், "நேற்று உனக்காக அவர்கள் அதை செய்யவில்லை. உன் மீது அமர்ந்து பவனி வந்த இயேசுவுக்கு செலுத்தப்பட்ட மரியாதை அது . கடவுளோடு இருந்தால் மட்டுமே நீ ஹீரோ. இல்லையேல் நீ வெறும் ஸீரோ என்றதாம்.

. நாமும் அப்படித்தான். இயேசுவோடு மகிழ்வாக பவனி வந்து ஓசான்னா பாடல் பாடிய நாம், பவனியோடு என் பணி முடிந்துவிட்டது என்று நினைத்து நின்றுவிட்டால் எதுவும் மாறாது. மாறாக இயேசுவோடு தொடர்ந்து பயணிப்போம். அவர் துன்பத்தில் துணையாவோம். அவரோடு உயிர்த்து காலத்தை வெல்வோம்.முயன்றிடுவோம் முன்னேறிச்சென்றிடுவோம். புனித வாரத்தில் புதுத் தெம்புடன் அடியெடுத்துவைப்போம். புனிதர்களாக மாற இயலாவிட்டாலும் புது மனிதர்களாகவாவது உருமாறுவோம். பாடுகளின் வாரத்தில் அவரோடு உடனிருப்போம். நின்று கொண்டிருப்பவர்களாக அல்ல, அவரோடு உடன் சென்று கொண்டிருப்பவர்களாக மாறுவோம் . இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும் இருந்து நம்மை வழிநடத்துவதாக ஆமென்..