இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









திருவருகைக் காலம் முதல் ஞாயிறு

நம்பிக்கை என்னும் திரி

I. எசாயா 2:1-5
II. உரோமையர் 13:11-14
III. மத்தேயு 24:37-44


    ஒரு இருட்டு அறை அந்த அறையில் நான்கு மெழுகுவர்த்திகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன. அவை ஒன்றோடு ஒன்று பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக இருந்தன. அப்போது அந்த அறையின் ஜன்னல் வழியே காற்று பலமாக வீசத்தொடங்கியது. அப்போது முதல் மெழுகுவர்த்தி பயத்துடன் அய்யோ நான் அணையப்போகிறேன் என்று கூறிக்கொண்டே அணைந்து போனது. இரண்டாவது மெழுகுதிரியும் பயத்துடன் எனது வாழ்வும் இத்துடன் முடியப்போகிறது என்று கூறி புலம்பியபடியே அணைந்து போனது. மூன்றாவது திரி, நமது வாழ்வைக் காக்க யார் வருவார்? ஒருவரும் வர மாட்டார் என்று கூறி அணைந்து போனது. நான்காவது திரி மற்ற திரிகளுக்கு நேர் மாறாக காற்றோடு போராடியது . தனது ஜுவாலையை சிறிதாக்கி தனது ஒளியைக் காத்துக்கொள்ள முயற்சித்தது . அது மனதில் இருந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான் . எனது வாழ்வைக் காக்க எனக்கு ஒளி ஏற்றியவர் வருவார். அவர் வரும்வரை என்னால் முடிந்தளவு நான் என்னைக் காத்துக் கொள்வேன். என்று தனக்குள் கூறிக்கொண்டது. அது நம்பியபடியே ஒளி ஏற்றி வைத்தவர் வந்தார். விரைவாக வந்து ஜன்னல் கதவுகளை அடைத்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நான்காவது திரியின் மூலம் அணைந்த மற்ற மூன்று திரிகளையும் ஏற்றிவிட்டு சென்றார். மீண்டும் நான்கு திரிகளும் மகிழ்வுடன் சுடர் விட்டு ஒளிர்ந்தன. நம்பிக்கையோடு இருந்த நான்காவது மெழுகுதிரி போல நாம் வாழ வேண்டும், பிறரையும் வாழவைக்க வேண்டும் என்பதையே இன்றைய திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு நமக்கு அறிவுறுத்துகின்றது. நம்பிக்கை இருந்தால் எதிலும் போராடி வெற்றி பெறலாம் என்பதை இந்த மெழுகுதிரி அழகாக நமக்கு கூறியுள்ளது
இன்று நாம் ஏற்றிய திருவருகைக்காலத்தின் முதல் திரி நம்பிக்கையின் திரி. நமது வாழ்வு நம்பிக்கை நிறைந்த வாழ்வாக இருக்க பிறருக்கும் நம்பிக்கை தரக் கூடிய வாழ்வாக இருக்க இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன.
1. நம்பிக்கை ஒளியில் நடப்போம்.
2. நம்பிக்கையை அணிந்து கொள்வோம்.
3. ஆயத்தமாய் இருப்போம்.

நம்பிக்கை ஒளியில் நடப்போம்.:
முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர், இதுவரை இருளின் ஆட்சியில் இருந்த மக்கள் இனி ஒளியின் ஆட்சியைச் சேர்ந்த மக்களாக மாறுவார்கள் என்று நம்பிக்கை வாக்குறுதி தருகின்றார். மற்றவர்களின் வாழ்வை வீழ்த்த பயன்பட்ட வாள்கள் கலப்பைக் கொழுக்களாக மாறி நிலத்தை பண்படுத்த, பயன்படுத்தப்படப் போகிறது என்கின்றார். எதிரியின் உடலை தாக்க பயன்பட்ட ஈட்டிகள் கருக்கரிவாள்களாக மாறி நல் விளைச்சலை அறுவடை செய்ய போகிறது என்கின்றார். இன்று நம்மிடம் வாளோ ஈட்டியோ இல்லை அதனை கலப்பையாக, கருக்கரிவாளாக மாற்ற. மாறாக பிறரது நற்பெயரை வீழ்த்த நாம் பயன்படுத்தும் அவதூறு என்னும் வாளை, நல்லெண்ணம் என்னும் கலப்பையாக மாற்றுவோம். பிறரது மனதை புண்படுத்தும் கடுஞ்சொற்கள் என்னும் ஈட்டியை, பண்பான சொற்கள் என்னும் கருக்கரிவாள்களாக மாற்றி நன்மையை அறுவடை செய்வோம். இதன் மூலம் நம்பிக்கை என்னும் ஆண்டவரின் ஒளியில் நடக்க முற்படுவோம்.

நம்பிக்கையை அணிந்து கொள்வோம்.:
படைக்கலன்கள் போர்வீரனுக்கு அழகு. மனித உடலுக்கு அணிகலன்கள் அழகு. அது போல மனதிற்கு அழகு செய்வது நம்பிக்கை. நாம் நம்மேலும் பிறர் மேலும் கொள்ளும் நம்பிக்கை இறை நம்பிக்கையில் மென்மேலும் வளர உதவுகின்றது. இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், ஆண்டவரின் வருகைக்காக காத்திருக்கும் நம்மை இருளின் ஆட்சிக்குரிய அனைத்து செயல்களையும் விட்டு விட்டு ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலன் களை அணிந்து காத்திருக்கச் சொல்கின்றார். பகலில் நடப்பது போல மதிப்போடு இருக்கச்சொல்கின்றார். களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஊனியல்பு இவற்றை விடுத்து வாழச் சொல்கின்றார். மேற்சொன்னவைகள் அனைத்தும் தனிமனித இன்பத்திற்காக செய்யப்படுபவை. எனவே அதற்கு பதிலாக தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விக்கும் வண்ணம், குடும்ப செபம், குடும்ப நிகழ்வுகளில் குடும்பமாக பங்கேற்றல், மனம் திறந்து உரையாடல், பாராட்டுதல், கைவினைப்பொருட்கள் செய்தல், செய்ய பயிற்றுவித்தல், நோயாளிகளை சந்தித்தல் , அன்பியம் சபைக்கூட்டங்களில் பங்கேற்றல் போன்றவைகளில் ஈடுபாடு காட்டுதல் இந்நாட்களில் மிக முக்கியம். அவ்வாறு நாம் இருந்தால் நம்பிக்கை என்னும் கிறிஸ்துவை நாம் அணிந்து கொள்ளலாம்.

ஆயத்தமாய் இருப்போம்.:
நற்செய்தி வாசகத்தில் இயேசு நம்பிக்கையோடு விழிப்போடு அவரது வருகைக்காகக் காத்திருக்கச்சொல்கின்றார். எப்படிப்பட்ட விழிப்பு நிலை என்பதை மூன்று நிகழ்வுகள் வழி சுட்டிக்காட்டுகின்றார். வழக்கமாக வயலில் வேலை செய்பவர்கள் பகலில் முழு விழிப்பு நிலையுடன் மிக மும்முரமாக வேலை செய்வார்கள். அப்படிப்பட்ட நேரத்திலும் ஒருவர் மட்டுமே மானிடமகனின் வருகையை அறிந்து எடுத்துக் கொள்ளப்படுவர் மற்றவர் விட்டுவிடப்படுவர் என்கின்றார். மும்முரமான நிலையிலும் விழிப்புநிலை அவசியம் என்கின்றார். திரிகையில் மாவரைக்கும் போது இருவரும் கவனமாக மாவரைப்பர். ஒருவர் கையினால் திரிகையை சுற்றியும் மற்றவர் மாவினை உள்ளே தள்ளியும் வேலை செய்வர் அப்படிப்பட்ட கவனமான நிலையிலும் கூட ஒருவர் மட்டுமே மானிடமகன் வருகையை கண்டுணர்வர் என்கின்றார். மூன்றாவது இரவு நேரக் காவலர் வேலை {அதிக விழிப்புடன் இருக்க வேண்டிய இந்நேரத்தில் தான் பலர் தூங்குகின்றனர்}. ஆக நமது விழிப்பு நிலை இதை எல்லாம் தாண்டிய நிலையில் இருக்க வேண்டும் என்கின்றார். எனவே நாம் எப்போது முழு விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் ஆண்டவரின் வரவை எதிர்பார்த்து.

கிறிஸ்து பிறப்பின் நாளுக்காக நம்மை தயாரிக்க நமக்கு கொடுக்கப்பட்ட இந்த நான்கு வாரங்களும் மிக மிக முக்கியமான வாரங்கள். நமது வீட்டை, குடிலை, தெருவை அலங்கரிக்க எடுக்கும் முயற்சிகளில் ஒரு சிறு முயற்சியையாவது நம்மை மாற்ற நாம் எடுப்போம். நமது மனதில் படிந்திருக்கும் தீய எண்ணங்கள் என்னும் சிலந்தி வலைகளை அகற்றுவோம். புத்துணர்ச்சி என்னும் வர்ணம் பூசுவோம். நற்செயல்கள் என்னும் வண்ண வண்ண தோரணங்கள் கட்டுவோம். பிறரன்பு என்னும் இனிப்பு வகைகளை செய்து பிறரோடு பகிர்வோம். நம்பிக்கை என்னும் நாம் ஏற்றிய திரி நமது ஆலயத்தில் மட்டுமல்லாது நமது உள்ளத்திலும் தொடர்ந்து சுடர்விட்டு எரிய முயற்சிப்போம். இறையருள் என்றும் நம் உள்ளத்திலும் இல்லத்திலும் நீடித்து நிலைத்திருப்பதாக ஆமென்.