இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 30 ம் ஞாயிறு

நாம் நாமாக...

சீராக்கின் ஞானம் 35:12-14,16-18
2 திமொத்தேயு 4:6-8,16-18
லூக்கா 18:9-14



ஒளியாம் ஆண்டவரின் ஒளிரும் சுடர்களாக மாற ஆவல் கொண்டு ஆலயம் வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம். இன்றைய நற்செய்தியின் கதைமாந்தர்கள் மூலமாக ஆண்டவர் இயேசு மிக அருமையான ஒரு வாழ்வியல் தத்துவத்தை நமக்கு எடுத்துரைக்கின்றார். ஒரு சிறு கதை மூலமாக நாம் இந்த நற்செய்தியை நம் வாழ்வாக்க முயல்வோம்.
ஒரு அழகான வயல். அறுவடைக்குத் தயாராக தன்னை தயாரித்துக் கொண்டிருக்கும் வேளை. நெற்கதிர்கள் சில கம்பீரமாக நிமிர்ந்து நின்று தங்களது அழகை ரசித்துக் கொண்டிருந்தன. பல தங்களின் பாரம் தாளாமல் தலை கவிழ்ந்து நின்றன. நிமிர்ந்து நின்றவைகள் தலை கவிழ்ந்து இருந்த கதிர்களைப் பார்த்து ஏளனமாக சிரிக்கத் தொடங்கின. தங்களின் அழகையும் வனப்பையும் பார்த்து பார்த்து பூரிப்படைந்தன. இவைகளின் ஏளனச்சிரிப்பைக் கண்டு வருத்தமுற்ற பிற கதிர்கள் தலை கவிழ்ந்த வண்ணம் ஒன்றும் சொல்வதறியாது நின்றன. இதனைக் கண்டு பெரிதும் எரிச்சலுற்ற காற்று தன்னுடைய வலிமையை ஒன்றாக சேர்த்து வீசியது. அவ்வளவு தான் தலை கவிழ்ந்து நின்ற கதிர்கள் தங்களது பணிவால் தாழ்ச்சியால் தங்களை காத்துக் கொண்டன. ஆனால் தலை நிமிர்ந்து நின்ற கதிர்களோ தங்களுக்குள் நெற்கதிர் இல்லாமையால் காற்றோடு காற்றாக அடித்து செல்லப்பட்டன. தலை தாழ்த்திய கதிர் வாழ்க்கையானது. தலை நிமிர்ந்து தற்பெருமை பேசிய கதிர் வாழ்வை இழந்தது.
ஆம் அன்பு உள்ளங்களே இன்றைய நற்செய்தியில் நாம் காணும் பரிசேயர் வரிதண்டுபவர் இவர்களின் செயல்களும் நாம் கடவுள் முன் எப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்களாக வாழவேண்டும், எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கின்றது.. இருவரும் ஆலயம் நோக்கி செல்கின்றனர். செபிக்கின்றனர். ஆனால் திரும்பி வரும்பொழுது யாருடைய செபம் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது என்பதைப் பொறுத்தே செபத்தின் தன்மை அமைகின்றது. இருவரும் பார்வை ஒப்பீடு செயல்பாடு என்னும் மூன்று குணங்களின் அடிப்படையில் அவர்கள் வேறுபடுகின்றனர்.
பார்வை : நாமும் பல நேரங்களில் கோவிலுக்கு செல்கின்றோம் ஆனால் அவை நமக்காகவா? இல்லை நம்மை பிறர் பார்க்கவேண்டும் என்பதற்காகவா? இன்று பெரும்பாலும் கோவிலுக்கு வருவது என்பது ஆண்டவரை சந்திக்க என்ற நிலைமை போய் உறவினர்களை சந்திக்க, ஆடை அணிகலங்களை அழகு பார்க்க என்ற காலம் வந்துவிட்டது. பார்வையாலேயே பலரது மனங்களை பாடாய்ப்படுத்தி விடுகின்றோம். என்ன புடவை இது? இதைப் போய் கோவிலுக்கு கட்டிட்டு வந்துருக்கீங்களே? வேற நல்ல உடை எதுவுமே இல்லையா? என்பதில் சிந்திக்க ஆரம்பித்து நீ எல்லாம் கோவிலுக்கு வரலைன்னு யார் கேட்டா பேசாம வீட்ல இருக்க வேண்டியதுதான. என்று நினைக்கும் அளவிற்கு வந்துவிடும். இத்தகைய நமது எண்ணம் பார்வை மாற வேண்டும்.
ஒப்பீடு மனிதனின் மிக மோசமான வியாதி. தன்னை உலகில் உள்ள எல்லாவற்றுடனும் ஒப்பிட்டு மகிழ்ச்சியடையும் குணம். பிறரை தாழ்த்தி தன்னை உயர்த்தி உயர்வானவனாக காட்டும் குணம். முள் தராசில் உயரத்துக்கு போகும் பொருளுக்கு மதிப்பில்லை . மாறாக கணம் உள்ள தராசு எப்போதும் தாழ்ந்தே இருக்கும் . தாழ்ச்சியில் அதன் மதிப்பு உயரும். அதுவும் கடவுள் முன் நம்மை தாழ்த்தும் போது அவர் நம்மை எதிர்பாராத விதத்தில் மிக உயரத்திற்கு அழைத்துச்செல்வார். எனவே ஒப்பிடு செய்து பார்ப்பதை நிறுத்திக் கொள்வோம்.

செயல்பாடுகள் : பரிசேயர் தனக்கு கீழ் நிலையில் இருப்பவர்கள் போல் தன்னை வைக்காமல் இருப்பதற்காக இறைவனுக்கு நன்றி சொல்கின்றார். வரி தண்டுபவர் தனது பாவ நிலையை எண்ணி மனம் வருந்தி மன்னிப்பு கேட்கின்றார். அதனால் கடவுளின் இரக்கத்தில் பங்கு பெறுகின்றார். நாம் நமது செயல்களில் கவனத்தை செலுத்துவோம். பிறரைப் போல் துன்பம் இல்லாமல் என்னை மகிழ்வோடு வைத்திருப்பதற்கு நன்றி என்று சொல்லிப் பழகுவோம். மாறாக பிறரது இயலாமை, நிலைமை ஆகியவற்றை ஒப்பிட்டோ பழி சுமத்தியோ நம் செயல்பாட்டை நாம் குறைத்துக் கொள்ள வேண்டாம்.
ஆக நாம் நாமாக இருப்போம். நமது பார்வை ஒப்பீடு செயல்பாடுகள் முலமாக நாம் நாமாக இருக்க முயல்வோம். நமக்கு இறைவன் செய்த செயல்களை எண்ணி நன்றி கூறுவோம். கடவுள் முன் நம்மை தாழ்த்தி உயர்வு பெறுவோம் இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.