இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 25ம் ஞாயிறு

அழியாத செல்வம் இயேசு.

I. ஆமோஸ் 8:4-7
II. 1 திமொ 2:1-8
III. லூக்கா 16:1-13


இறையேசுவில் மிகவும் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே பொதுக்காலத்தின் 25ம் ஞாயிற்றில் அடியெடுத்து வைத்திருக்கும் நம்மை இறைவன் அழியாத செல்வமாகிய அவரைப் பின்பற்ற அழைப்பு விடுக்கின்றார். இன்றைய மூன்று வாசகங்களும் எப்படி வாழ கூடாது .நாம் எப்படி வாழ வேண்டும். அதன் படி வாழ நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை எடுத்துரைக்கின்
றன.
முதல் வாசகத்தில் ஆமோஸ் இறைவாக்கினர், பதவியில் இருப்பவர்கள் பணம் சம்பாதிப்பவர்கள் தனக்கு கீழ் உள்ள மக்களை எவ்வாறு அடக்கி ஆள நினைக்கின்றார்கள் என்பதனைச்சாடுகின்றார். அவ்வாறு இருப்பது தவறு என அடுத்துரைக்கின்றார். எவனொருவன் தன்னைப் போல பிறரையும் எண்ணுகின்றானோ அவனே வாழ்வில் முன்னேறிச்செல்வான் . தனக்கு கீழ் தான் அனைவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பின்தங்கிய நிலையில் தான் இருப்பர். தானும் வாழ வேண்டும் அடுத்தவனும் வாழ வேண்டும் என்று நினைத்து வாழும் பரந்த மனம் உடையவர்களாக நாம் வாழ வேண்டும். பேராசை பிடித்தவர்களுக்கு இந்த பரந்த உலகையே கொடுத்தாலும் அவர்களுக்கு அதில் திருப்தி உண்டாவதில்லை. பரந்த மனம் கொண்டு வாழ்ந்து அழியாத பரமனை நிலையாக அடைவோம்

இரண்டாவது வாசகத்தில் புனித பவுலடியார் திமோத்தேயுவிற்கு எழுதும் கடிதத்தில் ஆள்பவர்களுக்காகவும் உயர் பதவியில் இருப்பவர்களுக்காகவும் வேண்டுதல் செய்யச்சொல்கின்றார். எதற்காக? நாடும் நாட்டு மக்களும் அமைதியோடு வாழ்வதற்காக. இதுவே நம் கடவுளுக்கு முன் ஏற்புடையதாக இருக்கும் என்கின்றார். நமது வேண்டுதல்கள் பெரும்பாலும் நம்மைச்சார்ந்தே இருக்கும் . ஆனால் பவுலடியார் நாம் நலமாக வாழ நம்மை ஆட்சிபுரிபவர்களுக்காகவும் நாம் செபிக்க வேண்டும் என்கின்றார். நமது பரந்த மனப்பான்மையை நாம் அவர்களுக்காக செபிப்பதில் காட்ட வேண்டும் என்கின்றார். நாம் பிறருக்காக செபிக்கும் போது நமது வேண்டுதல்களும் கடவுள் முன் கேட்கப்படும். இதன் மூலம் அழியாத செல்வமாகிய ஆண்டவரை நாம் கண்டடைவோம்.

நற்செய்தி வாசகத்திலோ இயேசு பரந்த மனம் உடையவர்களாக வாழ பிறருக்காக செபிக்க நாம் தயாராக இருக்க வேண்டும் அதையும் தாண்டி இதைசெய்ய நாம் முன்மதி உடையவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார். இவ்வுலக செல்வங்கள் அனைத்தும் நிலையானவை அல்ல அழிந்து போகக்கூடியவை என்றாலும் அவற்றிலும் அவற்றை கையாளுவதிலும் நாம் முன்மதி உடையவர்களாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். அழிந்து போகும் இவ்வுலக செல்வங்களை கொண்டு நண்பர்களை பெருக்கிக்கொள்ளுங்கள் என்கின்றார். கடவுள் தான் படைத்த எல்லோரையும் செல்வந்தர்களாக படைக்கவில்லை ஒரு சிலர் பரம்பரை பணக்காரர்களாகின்றனர். மற்றும் சிலர் கடின உழைப்பால் பணக்காரர் ஆகின்றனர். மற்றும் சிலர் தங்களது தாராள குணத்தினால் செயல்பாட்டினால் ஏழையானாலும் பணக்காரர்கள் போல் பிறரால் மதிக்கப்படுகின்றனர். சேமிப்பது கடினம் செலவு செய்வது எளிது பணத்தை மட்டுமல்ல மற்றவர் மனதில் நாம் ஏற்படுத்தும் நல்லெண்ணம் கூட அப்படிதான் என்று நாம் கேள்விப்பட்டதுண்டு. அப்படிப்பட்ட நிலையில் தான் இருக்கின்றார் இன்று நாம் வாசிக்கக் கேட்ட நற்செய்தியின் கதாநாயகன். அவர் தனது பணிக்காலத்தில் தான் தனது குடும்பம் என்று மட்டுமே வாழ்ந்து தனக்கு கீழ் பணிபுரியும் பிற மக்களோடு தொடர்பில்லாமல் இருந்திருப்பார். எனவே தான் தனது வேலை தன்னை விட்டு போய் விடப் போகிறதே என்ற பயத்தில் தனக்கு கீழ் வேலை பார்க்கும் மனிதர்களின் கடன் சுமையை குறைக்க எண்ணுகின்றார். தனது வேலை பறிபோகும் நிலையிலும் கூட தனக்காக சொத்து சேர்க்காமல் தனக்கு கீழ் இருக்கும் மனிதர்களின் கடன் சுமையை குறைக்கும் இவன் நல்லவனே என்று எண்ணி மீண்டும் பணியில் அமர்த்துகின்றார். இப்படிப்பட்ட முன்மதியை இயேசுவும் பாராட்டுகின்றார்.
முன்மதியோடு செயல்பட வேண்டும் என்று இயேசுவும் தனது சீடர்களுக்கு பலமுறை பல போதனைகள் வழி சொல்கின்றார் அதில் இதுவும் ஒன்று. நாமும் நமது வாழ்வில் முன்மதியோடு செயல்பட வேண்டும் அது பிறருக்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர உபத்திரமாக இருக்கக் கூடாது. பணியாளர் அதிகமான செல்வம் உடைய தலைவனின் செல்வத்திலிருந்து சிறு தொகையை தேவைப்படுவோருக்கு கொடுத்தார். தனது செல்வத்தை குறைக்கவில்லை இருப்பவனிடமிருந்து இல்லாதவனுக்கு எடுத்து கொடுக்கின்றார். இது தான் முன்மதி இதில் இருவரையும் அவர் காயப்படுத்தவில்லை இருவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். நமது முன்மதியோடு கூடிய செயல்பாடுகளும் அவ்வாறு இருக்க வேண்டும்.
ஒரு சிறு கதை முன்மதியோடு செயல்பட்டு முன்னேறிய புலவர்
ஒரு நாட்டில் மிகவும் வறுமையில் வாடிய புலவர் ஒருவர் இருந்தார். அவர் அவரது மனைவி பிள்ளைகள் அனைவரும் பசியால் வாடினர். மிகவும் திறமை படைத்த அந்த புலவர் வெறும்திறமை மட்டும் இருந்தால் இப்படி தான் பசியோடு நமது வாழ்நாளைக் கழிக்க வேண்டியதிருக்கும் . முன்மதியோடு சில செயல்களை செய்து நமது குடும்பத்தின் வறுமையைப் போக்க வேண்டும் என்று எண்ணினார். அதன்படி சில புதிய கவிதைகளையும் பாடல்களையும் இயற்றிக் கொண்டு செல்வபலம் மிகக்கொண்ட ஒரு அரசனை அணுகி சென்றார். அவர் முன் பாடல்களைப் பாடி அவரை மகிழ்வித்தார். அரசர் மிகவே மகிழ்ந்து அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். புலவர் சற்று யோசித்து விட்டு ஒரு சதுரங்க பலகை கேட்டு அதில் முதல் கட்டத்தில் ஒரு நெல் மணிவைத்து அடுத்த அடுத்த கட்டத்தில் அந்த நெல்மணியின் அளவை இரட்டிப்பாக்கி தர வேண்டும் என்று கேட்டார் மன்னர் சிரித்து கொண்டு இது போதுமா தங்கம் வேண்டாமா? வெறும் நெல்மணி போதுமா? என்றார். புலவரோ இது போதும் இதை மட்டும் எனக்கு தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார். முதல் கட்டத்தில் 1, இரண்டாம் கட்டத்தில் 2 4, 8, 16, 32,64 128, 256, 512 என்று நெல்மனியின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போனது 20 கட்டத்தில் 5,25,288 ஆக உயர்ந்தது. 32வது கட்டத்தில் அதாவது சதுரங்கத்தின் பாதி கட்டத்தில் நெல்மணியின் அளவு 214,75,83,646 ஆக உயர்ந்தது. மன்னரும் அமைச்சர்களும் திகைத்து நின்றனர். மன்னர் மீதி இருக்கும் கட்டத்தை நெல்மணியால் நிரப்ப தனது அரண்மனையின் ஒரு பங்கு சொத்து முழுவதையும் இழக்க நேர்ந்தது. புலவர் கேட்டதை பெற்ற மகிழ்வில் தன் இல்லம் திரும்பி தனது குடும்பத்தார் அனைவரோடு மகிழ்வோடு வாழ்ந்தார். இது அனைத்திற்கும் மூல காரணம் அந்த முதல் கட்டத்தின் ஒரு நெல் மணி . மற்றும் அந்த புலவரின் முன்மதி .
நாம் எந்த ராஜாவின் அரண்மனையையும் காலி செய்ய வேண்டாம் . முன்மதியோடு செயல்பட்டு நம்மையும் நம் அருகில் இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தாலே போதும். அழிந்து போகும் செல்வம் கொண்டு நண்பர்களையும் உறவுகளையும் பெருக்கி அதன் மூலம் அழியாத இறைவனை அடைய முயல்வோம்.
இறுதியாக
பணம் மனிதனைப் பார்த்து சொன்னது அனைத்தையும் மற என்னை சம்பாதி
நேரம் சொன்னது அனைத்தையும் மற என்னை பின்பற்று
எதிர்காலம் சொன்னது அனைத்தையும் மற என்னோடு போராடு
இறுதியாக கடவுள் சொன்னார் என்னைக் கொஞ்சம் நினை இது அனைத்தையும் நான் உனக்கு தருகிறேன் என்று. ஆம் அன்புக்குரியவர்களே கடவுளை நினைப்போம் அவர் அனைத்தையும் தருவார். சும்மா தர மாட்டார் நமது உழைப்பையும் நாம் அதில் போட்டால் மட்டுமே நாம் நினைத்த நிலையை நாம் அடைய முடியும். வாழ்வதற்கான செலவு எப்போதும் குறைவு தான் ஆனால் அடுத்தவர் போல வாழ்வதற்கான செலவு தான் அதிகம் . எனவே அன்பர்களே நாம் நாமாக வாழ்வோம். இருப்பதில் நிறைவு அடைவோம். அழியாத செல்வமாகிய ஆண்டவரை அடைந்து நிலைத்த மகிழ்வினை நாம் பெறுவோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.