இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 23ம் ஞாயிறு

திட்டமிடு --- திடன் கொள்

சாலமோனின் ஞானம் 9:13-18
பிலமோன் 9-10,12-17
லூக்கா 14:25-33

br />இறையேசுவில் மிகவும் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே (உங்கள் அனைவரையும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஆண்டவர் இயேசுவின் வார்த்தை வழி சந்திப்பதில் மகிழ்ச்சி.) பொதுக்காலத்தின் 23ம் ஞாயிற்றில் அடியெடுத்து வைத்திருக்கும் நம்மை இறைமகன் இயேசு அவர் தம் தாயாம் அன்னை மரியாளின் பிறப்பு விழா மகிழ்வில் திளைக்க அழைப்புவிடுக்கின்றார். திட்டமிடு திடன் கொள் என்ற வரிகளின் மூலம் நமது வாழ்வை மகிழ்வாக்க விரும்புகின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தனக்கு பின் வந்த பல ஆயிரம் மக்களில் தன்னைப் பின் தொடரும் உண்மையான சீடர்களை அடையாளம் காண விரும்புகின்றார். எனவே தன்னைப் பின் தொடர விரும்பும் சீடனுக்கு இருக்க வேண்டிய தனித்தன்மைகளை பட்டியலிடுகின்றார். இன்றைய கால கட்டத்தில் சாதாரணமாக வேலைக்கு ஆட்கள் எடுக்கும் போது கூட இந்த இந்த மாதிரியான தகுதிகள் இருக்க வேண்டும். படிப்பு, உடல் நிலை, ஊர், இனம் என்று பலவிதமான கோரிக்கைகள் வைப்பதுண்டு. நமதாண்டாவர் இறையரசுப் பணிக்கு ஆட்களை சேர்க்கின்றார். எனவே தொடக்கத்திலேயே தனது கோரிக்கைகளை/ எதிர்பார்ப்புக்களை அனைத்து மக்கள் முன்னும் வெளிப்படுத்துகிறார். இதன் மூலம் தான் தேர்ந்தெடுத்த சீடர்களும் இத்தகைய தகுதி படைத்தவர்கள் தான் என்பதை மறைமுகமாக மக்களுக்கு வெளிப்படுத்துகிறார்.
1. தாய் தந்தை உடன்பிறப்புக்களை விட்டு விட வேண்டும்.
2. உயிரை விட மேலாக என்னை (இறையரசுப்பணி) கருதவேண்டும்.
3. தனது சிலுவையை சுமக்கும் வலிமை உடையவராக இருக்க வேண்டும்.
4. உடைமை மேல் பற்றில்லாதவராக இருக்க வேண்டும்.
5. திட்டமிட்டு செயல்படுபவராக இருக்க வேண்டும்.


தாய் தந்தையர்கள், மகன் மனைவி கணவன் பிள்ளைகள் சகோதர சகோதரிகள் அனைவரும் நமக்கு ஆற்றலை தருபவர்கள். நாம் சோர்ந்து போகும் நேரமெல்லாம் நம்மை உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டுபவர்கள். இயேசு அப்படிப்பட்ட ஆற்றல் தருபவர்களை விட்டுவிட்டு தன்னைப் பின்பற்ற சொல்கின்றார். ஏனெனில் இறையரசுப்பணி செய்ய விரும்பும் ஒருவர் இறைவனால் மட்டுமே முழு ஆற்றலும் வல்லமையும் பெற்று செயலாற்ற வேண்டும் என்ற எண்ணத்தினால்..

இந்த உலகில் வாழும் நாம் அனைவரும் எதிர்பார்ப்பது நல்ல பாதுகாப்பான மகிழ்வான வாழ்வு. ஆனால் இயேசு அப்படிப்பட்ட பாதுகாப்பான வாழ்வை நாடாமல் உயிரை துச்சமாக எண்ணி வாழ்பவர்கள் தான் தனது பணிக்கு தேவை என அழைக்கின்றார். உயிரை விட மேலாக இறையரசுப்பணியை கருதுபவன் எதற்கும் அஞ்சமாட்டான். துணிவு அவனிடம் அதிகமாக இருக்கும் பயம் இருக்காது என்பதனால்.

துன்பம் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவரால் பிறரது துன்பத்திற்கு ஆறுதல் தர முடியாது. எனவே இறையரசுப் பணி புரிய விரும்பும் ஒருவன் ஏற்கனவே துன்பம் கவலை என்னும் சிலுவைகளின் பாரம் அறிந்தவனாக இருக்க வேண்டும் என்கின்றார். தனது சிலுவையை சுமக்கும் திறன் படைத்தவனே பிறரது சிலுவைச்சுமையின் பாரத்தை உணர்ந்து கொள்வான் என்பதனால்.

சாதாரணமாக விடுமுறைகளுக்கு செல்லும் போது குறைவான பை மிகுதியான மகிழ்வு என்பர். எல்லாமும் தேவை என்று மூட்டை கட்டிச்செல்பவர்களுக்கு நிறைவு இருப்பதில்லை. பொருள் எதுவும் தேவையில்லை என்பவர்களுக்கு குறைவு எதுவும் இருப்பதில்லை. உடைமைகளை சேர்ப்பவர் அல்ல அதை விட்டுவிட்டு எளிமையாக வாழும் ஒருவரே இப்பணிக்கு தேவை என்பதனால்.

திட்டமிட்டு செயல்படுபவனே உண்மையான இறையரசுப் பணியாளனாக இருக்க முடியும் என்கின்றார். ஏதோ வந்தோம் உண்டோம் உறங்கினோம் என்றில்லாமல், நான் இதற்காக தான் வந்தேன் இதை நிறைவேற்றுவதே என் இலட்சியம் என்று எண்ணி செயல்படுபவனே உண்மையான சீடன். நல்ல தொடக்கம் பாதி வெற்றி. முறையான திட்டமிடல் முழு வெற்றி.
இயேசுவின் சீடனாக விரும்புபவன் தனது பாதைக்கான திட்டமிடலை சரியாக செய்ய வேண்டும். தனது பாதையில் தான் சந்திக்கும் எதிர்ப்புக்கள் அதை சமாளிக்க தன்னால் செய்ய கூடிய செயல்கள் என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும். தனது எதிராளியின் பலம் தெரிந்தவனால் மட்டுமே தனது பலத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். நமது எதிராளி பலசாலியாக இருந்தால் மட்டுமே நாமும் பலசாலியாக மாற முடியும் என்பதனால்.

அன்னை மரியாளின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் இந்நாளில் அன்னை மரியாள் இயேசு கூறும் இந்த 5 தகுதிகளையும் பெற்ற முதல் சீடர். அன்னை மரியாள் இறைத்திருவுளத்திற்காக
* தன் குடும்பம் சுற்றம் அனைத்தையும் விட்டவர்.
* திருமணத்திற்கு முன்பே கருத்தரித்தால் யூத மக்கள் கல்லால் அடித்து கொல்வர் என்று தெரிந்திருந்தும் உயிரை துச்சமாக எண்ணி அதற்கு சம்மதித்தவர்.
* இயேசுவோடு கூட அவர் வியாகுலங்களாக பல சிலுவைகளை சுமந்தவர்.
* இயேசு பிறந்தது முதல் வளர்ந்து பன்னிரண்டு வயது ஆகும் வரை பெத்லகேம் எகிப்து நாசரேத் என்று உடைமைகளை விட்டு விட்டு ஊர் ஊராக சென்றவர்.
* திட்டமிட்டு செயல்பட்டவர் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் சிதறிய சீடர்களை ஒருங்கிணைத்தது.
இப்படியாக இயேசுவின் சீடராகும் தகுதியை நிரம்பப்பெற்று முதல் சீடராகி நம்மையும் அவர் வழி வாழ அழைக்கிறார் அன்னை மரியாள். இயேசு சொன்ன 5 தகுதிகளை சுருக்கி மூன்றாக வகுக்கலாம். ஆம் வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி மிக முக்கியம் அவை த-- தன்னம்பிக்கை கு-- குறிக்கோள். தி -- திட்டமிடல் . இவை மூன்றையும் பெற்ற ஒருவர் மிகச்சிறந்த வெற்றியாளராகின்றார். இவற்றை இறைவனின் துணையோடு செய்பவர் முழுமையான சீடராகின்றார். நாமும் இயேசுவின் சீடராக மாறுவோம் அன்னை மரியாளின் துணையாய் நாடுவோம். திட்டமிட்டு திடன் கொள்வோம். எப்போதும் நம்மை சுற்றியிருக்கும் நிலைமையை மாற்ற நினைக்காமல் நாம் மாற முயற்சிப்போம். பழைய எண்ணங்களை விட்டு விடுவோம். ஏனெனில் விட்டுவிடுதலும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான முதல் படி தான் . எனவே திட்டமிட்டு திடன் கொண்டு தரமான சீடர்களாக வாழ மாற முயற்சிப்போம். இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.