இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டவரின் விண்ணேற்றப்பெருவிழா

முடிவல்ல தொடக்கம்

I. திருத்தூதர் பணிகள் 1:1-11
II. எபிரேயர் 9:24-28, 10:19-23
III. லூக்கா 24:46-53


/>.
இன்று தாயாம் திருச்சபை நமதாண்டவராம் இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்றப் பெருவிழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றது. இதுவரை தன் சீடர்களோடு உடனிருந்தவர் ... தன் அலுவல் முடித்து தந்தையிடம் திரும்புகின்றார். தன் சீடர்களுக்கு பிரியாவிடை கொடுக்கின்றார். தனது பணி வாழ்வை முடித்து சீடர்களின் பணி வாழ்வை துவக்கி வைக்கின்றார். இயேசுவின் பிரிவு முடிவாக அல்ல தொடக்கமாக மாறுகின்றது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்க இருக்கும் காலம்... வீட்டில் பெற்றோர்களோடும் உறவினர்களோடும் (இணையத்தோடும் ) இணைந்திருந்த காலம் முடிந்து மாணவர்கள், இவர்கள் அனைவரையும் அனைத்தையும் விட்டு பிரிந்து பள்ளி செல்லும் காலம்.. விடுமுறைக்கு முடிவு புதிய கல்வி ஆண்டிற்கு தொடக்கம். இதில் ஒரு நிலையினருக்கு மகிழ்ச்சி மறு நிலையினருக்கு வருத்தம். பிரிவு தான் என்றாலும் இந்த விடுமுறை நாட்கள் தந்த அனுபவங்களையும் உணர்வுகளையும் மனதில் தாங்கி அதை அனைவரோடும் பகிர தயாராகும் நிலை மிகவும் இனிமையானது... இப்படிப்பட்ட மன நிலையில் தான் அப்போஸ்தலர்கள் இன்று இருக்கின்றார்கள். இயேசு இறந்து உயிர்த்தெழுந்து 40 நாள் விண்ணேற்றம் அடையும் வரை தன் சீடர்களோடு அருகிருந்து அவர்களது வாழ்க்கை நிலை மேம்படைய வழிவகை கூறி பிரியும் நாள். ஒரு தாய் தன் குழந்தையை எப்படி புத்திமதி கூறி வளர்ப்பாரோ அது போல தன் சீடர்களை அன்போடு அரவணைத்தவர். இன்று அவர்களது பணி வாழ்வை துவக்கி வைத்து விடைபெறுகின்றார் .அவரோடு இருந்து கற்ற அனைத்தையும் பிறருக்கு எடுத்துரைக்க தங்களையே ஆயத்தப்படுத்துகின்றனர் சீடர்கள்.

விண்ணகத்தந்தையின் மகனாக இருந்தவர் மனுக்குல மீட்பிற்காக மண்ணக மரியின் மகனாக பிறக்கின்றார். தந்தையின் பணியினை உவந்து செய்ய தன் இன்னுயிரையும் பலியாக கொடுக்கின்றார். அதன் பயனாக தந்தையின் வலப்புறம் அமரும் பேறுபெறுகின்றார். இன்றைய பெருவிழாமூலம் இயேசு நமக்கு விடுக்கும் செய்தி என்ன ??? பிரிவென்பது முடிவல்ல தொடக்கம். நமது வாழ்விலும் நாமும் பல நேரங்களில் தோல்வியிலும் வருத்தத்திலும் சோர்ந்து போய் விடுகின்றோம். காரணம் அது முடிவு என்று ஆழமாக எண்ணிவிடுவதால் தான். அதிலும் ஒரு தொடக்கம் உள்ளது என்று எண்ணி எழுபவர்களால் மட்டுமே உயரிய நிலையை அடைய முடியும்.
சீடர்கள் இயேசு தங்களை விட்டு விண்ணுலகம் சென்றதும் மகிழ்ந்து கடவுளைப் போற்றிப் பாடுகின்றனர். அவர்களது நம்பிக்கை இதுவரை உடலால் நம்மோடு இருந்தவர் இனி உடனிருப்பால் உறவால் அருகிருப்பார் என்ற நம்பிக்கையால். பெரும்பாலும் நாம், உடனிருக்கும் ஒருவர் நம்மை விட்டு பிரிந்தால் அத்துடன் அந்த உறவும் உணர்வும் முடிந்து விட்டதாக எண்ணுவோம். அந்த பிரிவு முடிவல்ல தொடக்கம் என்று உண்மையாக எண்ணுபவர்கள் மட்டுமே அந்த பிரிவு சொல்லும் பாடத்தை உணர்ந்து கொள்வர். அப்போஸ்தலர்கள் இயேசுவின் பிரிவு உணர்த்திய பாடத்தை புரிந்து கொண்டனர். உலகம் முடிவு வரை எந்நாளும் உங்களோடு இருப்பேன் என்று கூறியவரின் வார்த்தையை நம்பி தங்கள் வாழ்வை அர்ப்பணித்தனர். அதனால் தான் அவர்களால் இயேசு விண்ணேற்றம் அடைந்த பின்னும் மகிழ்வோடு வாழ முடிந்தது.
சீடர்கள் இயேசுவை கண்டார்கள் அவரோடு உணவு உண்டார்கள் அவரை தொட்டுப் பார்த்தார்கள். அவரோடு பேசி மகிழ்ந்தார்கள். இயேசுவும் உண்டார் காட்சி அளித்தார். கற்பித்தார். கட்டளை தந்தார். ஆக சராசரி மனிதன் போல இயேசுவும் தன் சீடர்களுக்கு இறந்து உயிர்த்தெழுந்த பின் காட்சி அளித்து மகிழ்வித்திருக்கின்றார். அதனால் அவர்கள் துணிவுடன், நாங்கள் தொட்டு மகிழ்ந்து உறவாடிய உயிர்த்த இயேசு உங்களுக்குக் கூறுவதாவது..... என்று தைரியமுடன் போதித்தனர். நம்மோடும் இயேசு வாழ்ந்தார் வாழ்கின்றார். நாமும் அவரை அனுதின திருப்பலியில் நற்கருணை வடிவில் பார்க்கின்றோம் தொடுகின்றோம் உண்கின்றோம் உறவாடுகின்றோம் ஆனால் ஏனோ நமக்கு மட்டும் சீடர்களுக்கு இருந்த அந்த துணிச்சல் இருப்பதில்லை . ஏனெனில் நாம் முடிவு நிலையிலேயே இருக்கின்றோம் அங்கிருந்து எதையும் தொடங்க முயற்சிப்பதில்லை. சீடர்கள் போல முடிவில் நிறாய்வு காணாது புதிய துவக்கத்தில் நிறைவு காண முயல்வோம்.
இன்றைய பெருவிழா உணர்த்தும் செய்தி
மகிழ்ச்சி எல்லா நிலையிலும் நம்மோடு இருக்க வேண்டும் அதற்கு நாம் இறைவனோடும் இறைவன் நம்மோடும் இருக்கும் நிலையை உணர வேண்டும்.
உலகம் முடிவு வரை எந்நாளும் உங்களோடு இருப்பேன் என்று கூறியவரின் வார்த்தைகள் நமது வாழ்வாக வேண்டும்.
பிரிவு என்பது முடிவல்ல அது தொடக்கம் என்ற மனப்பான்மையில் வளர வேண்டும்.
இறுதியாக விண்ணேற்றம் அடைந்த நமதாண்டவர் இயேசு அவர் தம் சீடர்களாகிய நமக்கும் மகிழ்வு என்னும் கொடையை நிரம்பத் தர அருள் வேண்டுவோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம்குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.