இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









2019 பாஸ்கா காலம் 5ஆம் ஞாயிறு

அன்பின் இனிமையை சுவைப்போம்.

I. திருத்தூதர் பணிகள் 14:21-27
II. திருவெளிப்பாடு 21:1-5
III. யோவான் 13:31-35

இந்த உலகில் விலை மதிப்பில்லாமல் கிடைப்பது அன்பு ஒன்று தான். ஆனால் எளிதில் கிடைப்பதனாலோ என்னவோ அதன் மதிப்பு யாருக்கும் தெரிவதில்லை. இன்றைய நற்செய்தி வாசகம் நாம் அனைவரும் இயேசுவை போல அன்பு செய்து வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறது. "போல" செய்தல் இன்றைய கால கட்டங்களில் நாம் விரும்பி செய்யும் ஒன்று. டிக்டாக் என்ற செயலி மூலமாக நடிகர்களைப் போலச் செய்கின்றோம். உடை உடுத்துவது நகை மாட்டுவது வரை தலை முடி முதல் கால் நகம் வரை அனைத்துமே போலச் செய்தல் தான். ஏன் இப்போது எல்லாம் உணவு சமைப்பது கூட வலையொலிப்பதிவைப் பார்த்து தான். எல்லாவற்றையும் பிறரைப் போலச்செய்ய நினைக்கும் நாம் நல்லவிசயங்களை பிறரைப் போலச் செய்ய நினைப்பதில்லை. அப்படி இருக்க இயேசு என்னைப் போலச்செய்யுங்கள் என்று உறுதியாக சொல்கின்றார். என்னைப் போல அன்பு செய்யுங்கள். நான் அன்புசெய்தது போல நீங்களும் அன்பு செய்யுங்கள் என்கின்றார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்வார்கள். என்கின்றார்.

அன்பு மிக இனிமையானது. எனவே தான் அதனை மிகச்சிறப்பான கட்டளையாக இயேசு தம் சீடர்களாகிய நமக்கு கொடுக்கின்றார். அன்பு கொடு மரியாதை கொடு என அடுத்தவரிடம் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரனாய் இருக்காதே என பணிக்கின்றார். மாறாக கேட்காமலேயே அள்ளிக்கொடுக்கும் செல்வந்தனாய் இருக்க வலியுறுத்துகிறார். அன்பும் மரியாதையும் கேட்டுப் பெற வேண்டியவை அல்ல கொடுத்துப்பெற வேண்டியவை. கேட்டால் கிடைக்காது இவை இரண்டும். கொடுத்தால் மட்டுமே இரட்டிப்பாக கிடைக்கும். நம்மை அன்பு செய்பவர்களை மட்டுமல்லாது வெறுப்பவர்களையும் நாம் அன்பு செய்ய வேண்டும். உதாரணம் நம் இயேசு. அவர் தன்னை காட்டிக் கொடுத்தவன், விட்டு ஓடியவர்கள், மறுதலித்தவர்கள் பழித்துரைத்தவர்கள் என அனைவரையும் அன்பு செய்கின்றார். நாமும் அவர் " போல " அன்புசெய்ய வேண்டும். கொடுத்துப் பெறுவோம் அன்பை . எங்கே அன்பு குறைகிறதோ அங்கு குறைகள் பெரிதாய் தெரியும். அன்பு நிறைவாய் இருந்தால் அங்கு குறைகளுக்கு இடமே இல்லை.

அன்பு என்பது ஆழ்கடல் போன்றது. கரையில் தேடினால் சிப்பிக்களும் கிளிஞ்சல்களும் தான் கிடைக்கும் . ஆழமாய்த் தேடினால் தான் முத்துக்கள் கிடைக்கும். (சில சமயம் மூச்சும் திணறும்). நாம் பெரும்பாலும் மேலோட்டமான அன்பை சிலர் மேல் செலுத்திவிட்டு அதை விட குறைவான அன்பை அவர்களிடமிருந்து பெற்று, அதனையே முழுமையான அன்பு என எண்ணி நிறைவு அடைகிறோம். விளைவு அவர்கள் நம்மை விட்டு பிரிந்தாலோ சிறு வார்த்தைகள் சொன்னாலோ உடனே அந்த அன்பு மறைந்துவிடுகிறது. ஆழ்கடல் அன்பை உணர நாம் முயற்சிப்பதில்லை. ஆழ்கடல் அன்பை உணர முதலில் மூச்சடக்க பயிற்சிக்க வேண்டும். முத்துக்கள் இருக்கும் இடம் அறிய வேண்டும். இல்லாத இடத்தில் மூச்சடக்கி ஒரு பயனுமில்லை. பெரும்பாலனோர் கரையில் முத்துக்களைத் தேடி கிளிஞ்சல்களையும் சிப்பிக்களையும் முத்துக்கள் என்றெண்ணி வாழ்க்கையை வாழ்கின்றனர். முத்துக்கள் போலத் தெரியும் கற்களை நம்பியும் ஏமாறுகின்றனர். உண்மையான அன்பு எதுவென உணர்ந்து அதன்படி வாழ முயற்சிப்போம்.
அன்பு இனிமையானது அது தன்னையும் தன்னைச்சுற்றி உள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்கும். எல்லையின்றி தன் அன்பை பிறருக்கு அள்ளிக் கொடுக்கும். நறுமணம் போல எங்கும் பரவி மனங்களை மகிழச்செய்யும். நமது அன்பு அப்படிப்பட்ட அன்பாக இருக்க அருள் வேண்டுவோம். எல்லையின்றி பரவும் அன்பாக, நமது அன்பு பிறருக்கு மகிழ்வை நன்மையைத்தரக் கூடியதாக இருக்க முயல்வோம். ஒரு சிறு கதை....
முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு மாமரம் இருந்தது. அது பருவகாலம் முடிந்தும் கனி தந்தது. அந்த ஊர் மக்கள் அதன் கனியை மிகவும் ரசித்து உண்டு அதனைப் பாராட்டிச் செல்வர். இதனால் மகிழ்வடைந்த மரம் இன்னும் அதிகமாக கனிகளைக் கொடுக்க ஆரம்பித்தது. இதன் பெருமையைக் கேட்டு பக்கத்து ஊர் மக்களும் வந்து கனிகளை உண்டு ரசிக்க ஆரம்பித்தனர். இதன் பெருமை இப்படியாக வளர்ந்து அந்த ஊர் மன்னனின் காதுகளையும் எட்டியது. அவனும் அந்த மாங்கனிகளை சுவைக்க ஆரம்பித்தான். அதன் சுவையில் திளைத்துப் போன மன்னன் அதன் கனிகளை தினமும் சுவைக்க எண்ணினான். பின் அதன் கனியை தான் மட்டுமே சுவைக்க எண்ணி மரத்திற்கு காவல் போட்டான். ஏழை எளிய மக்கள் அதன் கனியை சுவைக்க முடியாமல் போயிற்று. அதன் வருகே வந்து தங்களின் ஏக்க பெரு மூச்சை மக்கள் வெளிப்படுத்திச்சென்றனர். நாளடைவில் மரத்தின் அருகே போகவும் தடை. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு மட்டுமே அனுமதி. மக்கள் மரத்தின் சுவையை மறந்தே போயினர். சிறிது காலத்தில் மரம் தன் இலைகளை உதிர்த்து பட்டு போக ஆரம்பித்தது. கனிகளும் வெகுவாக குறைந்து போனது . இதனால் கலக்கமுற்ற மன்னன் காவலர்களை மாற்றினான். உரம் மண் மாற்ற சொன்னான். எந்த மாற்றமும் இல்லை ... அந்த ஊர் வழியாக பயணம் செய்து கொண்டிருந்த முனிவர் ஒருவர் மன்னனின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்து, அவரிடம் பேசத் தொடங்கினார். மன்னன் தன் கதையையும் மரத்தின் கதையையும் முனிவருக்கு கூறினார்.
இறுதியாக முனிவர் , மாமரம் தன் செயலால் மட்டும் இவ்வளவு இனிமையான கனிகளை தரவில்லை . அதன் கனிகளை உண்டு அதனை அன்பு செய்து பாராட்டிய மக்களாலும் தான் செழித்து வளர்ந்தது. நீ மட்டும் அதன் கனிகளை பலனை அனுபவிக்க எண்ணினாய் . அது பிறர் அன்பு இல்லாமல் தன் செழிப்பை மறந்தது. மீண்டும் அது செழித்து வளர கனி தர வேண்டும் என நீ நினைத்தால், அதற்கான காவலையும் வேலியையும் எடுத்து விடு. ஊரின் பொது மரமாக அதனை விட்டு விடு.அதன் பின் பார் அதன் கனிகள் செழிக்கும் கிளைகள் தழைக்குமென்றார். மன்னனும் முனிவரின் சொற்களுக்கு கட்டுப்பட்டு அப்படியே செய்தான். சிறிது நாட்களில் மரம் தன் பழைய நிலையை அடைந்தது. ஏராளமான மக்கள் அதன் கனிகளை சுவைக்க வந்தனர், அதன் பெருமையையும் சிறப்பையும் பாராட்டி சென்றனர். அதிகமாக அன்பு செய்தனர். முன்னைய நிலையைக் காட்டிலும் பின்னர் மரத்தின் கனியும் சுவை மிக்கதாய் இருந்தது. மக்களும் அதன் பயனை அதிகமாக உணர்ந்தனர். அன்பு மட்டுமே அந்த மரத்திற்கும் அந்த ஊர் மக்களுக்கும் இனிமையை சேர்க்கக் கூடியதாய் இருந்தது.
நாமும் அந்த மாமரம் போல அன்பைக் கொடுத்து அன்பை பெறுவோம் நமது அன்பின் கனி பிறர் வாழ்விற்கு இனிமையைத் தரட்டும். பிற செயலிகள் போல அல்லாது நம் உயிர்த்த ஆண்டவர் இயேசு போல செயல்படுவோம் அன்பை கொடுப்போம் அன்பைப் பெறுவோம். இறைவனின் இனிய அன்பில் நிலைத்திருப்போம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரோடும் இருப்பதாக ஆமென்.