இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு

அன்பு ஆயனா? ஆடம்பர ஆயனா?

I. திருத்தூதர் பணிகள் 13:14, 43-52
II. திருவெளிப்பாடு 7:9, 14-17
III. யோவான் 10:27-30


br />
பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிற்றை நல்லாயன் ஞாயிறாக சிறப்பிக்க வந்திருக்கும் உங்கள் அனைவரையும் ஆயனாம் ஆண்டவர் இயேசுவின் பெயரில் அன்போடு அழைக்கின்றேன். "ஆண்டவரே என் ஆயர்" இது குழந்தைகள் வரை பெரியவர் வரை அனைவரும் முணுமுணுக்கும் ஒரு நாம செபம். ஆண்டவர் இயேசுவை ஆயன் தோற்றத்தில் பார்த்து அவர் ஆடுமேய்த்தாரா என்று பிற மதத்தவர்கள் சிலர் என்னிடம் கேட்டது கூட உண்டு அப்போதெல்லாம், அவர் ஆடுகளை மேய்க்கவில்லை, மந்தைகளாகிய எங்களை மேய்க்க ஆயனாக மாறி இருக்கின்றார் என்று கூறுவதுண்டு. ஆடுகள் நம்மோடு மிக நெருங்கிய தொடர்புடையவை. வீடுகளில் கோவிலுக்கு நேர்ச்சை என்று ஆசைஆசையாக ஆடுகளை வீட்டில் ஒருவர் போல வளர்ப்பது நம் பழக்கம். அப்போது அந்த ஆடுகள் நம்மோடு ஏற்படுத்தும் உறவு, ஒரு விதமான உணர்வு. அதை வார்த்தையால் விவரிக்க முடியாது. எங்கு சென்றாலும் உடன் வருவது, அழைத்தவுடன் ஓடி வருவது,என நம்முடனான உறவை தன் செயல்கள் மூலம் காட்டும் ஒரு சிறப்பான விலங்கினம்.

ஆயன் - தன் மந்தையை எல்லா விதமான இக்காட்டிலிருந்தும் காக்கும் வலிமை உடையவர். தன்னுடன் வைத்திருக்கும் கோல் கொண்டும் கழி என்னும் ஆயுதம் கொண்டும் தாக்க வரும் விலங்குகளை எதிர்க்கும் துணிவு படைத்தவர். ஆடுகளின் பசி தாக உணர்வினைப் புரிந்து அதற்கேற்ற புல்தரைக்கு அழைத்து செல்பவர். ஆடுகளின் உடல் நலனில் அக்கறை கொண்டவர். இப்படியாக...... பழைய ஏற்பாட்டிலும் சரி புதிய ஏற்பாட்டிலும் சரி ஆடுகளும் ஆயன்களும் மிகச்சிறப்பான ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றனர். ஆபேல், மோயீசன், சவூல் தாவீது என பலர் ஆயன்களாக இருந்து ஆயர்களாக, மக்களை வழிநடத்துபவர்களாக மாறி இருக்கின்றனர். நம் இயேசு ஆயன்களுக்கெல்லாம் மேலான ஆயன். அவர் தமது மந்தையை எப்படி வழி நடத்துகிறார் என்பதை தனது போதனையாலும் செயலாலும் தன்னோடு வாழ்ந்த சீடர்களுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்தி இருக்கிறார். நாம் அவர் மந்தையைச்சேர்ந்த ஆடுகள் . அவர் வழி நடக்க நாம் செய்ய வேண்டியதெல்லாம் இரண்டு தான். ஒன்று அவர் குரலைக் கேட்டு நடப்பது. இரண்டு அவர் நம்மை அறிந்து வைத்திருப்பது போல நாமும் அவரை அறிந்து வைத்திருப்பது. இவை இரண்டிலும் வளர்ந்து ஆயனை மகிழ்விக்கும் ஆடுகளாக நாம் மாற இன்றைய வாசகங்கள் வழி இறைவன் நமக்கு அழைப்புவிடுக்கின்றார்.

அவர் குரலைக் கேட்கவும் அவரை அறிந்து கொள்ளவும் நாம் பல முயற்சிகளை எடுக்க வேண்டும். ஆயனின் குரலைத் தெளிவாக கண்டு கொள்ள பிற சப்தங்களுக்கு நம் மனதில் இடம் கொடுக்காதிருப்போம். அவரை அறிந்து கொள்ள அவரோடு அதிக நேரம் செலுத்துவோம். நாம் பல நேரங்களில் போலியான ஆயன்களின் குரலுக்கு செவிமடுத்து ஏமாந்து போகிறோம். போலி ஆயன்களின் பொய்யான பரப்புரைகளை நம்பி இது தான் என் ஆயன் என்று எண்ணி தவறாக அறிந்துவிடுகிறோம். வீண் பகட்டு ஆடம்பரம் அமளி ஆர்ப்பாட்டம் இவற்றால் உண்மையான ஆயனின் உருவத்தை மறந்துவிடுகிறோம். பார்வையில் தெளிவும் கேட்டலில் கூர்மை உணர்வும் கொண்டு வாழும் போது மட்டுமே உண்மையான ஆயனை கண்டு கொள்ளமுடியும்.
ஒரு முறை பரந்த புல்வெளியில் ஆயன் ஒருவன் தன் ஆடுகளை மேய்த்து வந்தான். அவனது கையில் தடிமனான பெரிய கோல் ஒன்றும் அதனோடு முனையில் இணைக்கப்பட்ட கழி ஒன்றும் எப்போதும் இருக்கும். பல நாட்களாக தன் மந்தையை மேய்ச்சல் நிலத்துக்கு அழைத்துச்செல்வதும் மீண்டும் தன் பட்டிக்கு கூட்டி வருவதுமாக தன் காலத்தைக் கழித்தான். ஒரு நாள் மேய்ச்சல் நிலத்துக்கு தன்னால் போக முடியாமல் போகவே தன் மகனை ஆடுகளை பட்டிக்கு திரும்ப அழைத்துவர அனுப்பினான். ஆயனின் தோற்றம் போல் இல்லாது மகன் இருக்கவே ஆடுகள் தயக்கமுற்றன. ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு முன்னேறின. மகனின் கையில் ஆயனின் கோல். உறுதியான தடிமனான மரத்தாலான் கோலைக் கண்டு, இது நிச்சயம் நம் ஆயனின் கோல் தான், அவர் விருப்பத்தின் படியே நாம் அவர் மகனுடன் செல்கிறோம் என்பதை உறுதி செய்து கொண்டன. சற்று நேரத்திற்கு அப்பால் இன்னொரு இளைஞன். தோற்றம் இளவரசனைப் போல் இருந்தது. கையில் தங்கத்தாலான ஒரு பெரிய செங்கோல். அதனூடே வைரங்களும் பவளங்களும் இணைக்கப்பட்டிருந்தன. அவன் ஆடுகளைப் பார்த்து , எத்தனை நாள் தான் இப்படி அங்கும் இங்கும் ஓடி களைப்பீர்கள் என்னோடு வாருங்கள் புல்வெலியை உங்களைத்தேடி வரச்செய்கின்றேன். நீர் நிலைகளை நீங்கள் இருக்கும் இடத்திலேயே அமைக்கின்றேன். வெயிலிலும் குளிரிலும் நீங்கள் உணவுக்காக அலைய வேண்டாம் எல்லாம் உங்களைத் தேடி வரும். நீங்கள் இருக்கும் இடத்தை பஞ்சு மெத்தைகளால் நிரப்புவேன். என்று பலவாறு அடுக்கிக்கொண்டே போனான். சஞ்சலமுற்ற ஆடுகள் சில, அந்த இளவரசன் சொன்ன பேச்சைக் கேட்டு அவர் பின்னே செல்ல முயன்றன. தங்களோடு பிற ஆடுகளையும் வருமாறு அழைத்தன. இறுதியில் பாதிக்கு பாதியாக பிரிந்து, சில இளவரசனைப் பின்பற்றின. சில ஆயனின் மகனைப் பின்பற்றின.

ஆயனின் இல்லம் திரும்பிய ஆடுகள் ஆயனால் கட்டி அணைக்கப்பட்டு அன்பு செலுத்தப்பட்டன. வீடு திரும்பாத ஆடுகளுக்காக ஆயன் கண்ணீர் விட்டான், அவற்றை நினைத்து வருந்தினான். எஞ்சிய ஆடுகளை பத்திரமாக அதற்கான கொட்டிலில் அடைத்து இரவு பகலாக காவல் செய்தான். இளவரசனோடு சென்ற ஆடுகளோ, கொடிய இருட்டறையில் அடைக்கப்பட்டன. காய்ந்த புற்களும் சிறிதளவு தண்ணீரும் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டண. இறுதியில் அவை அந்த இளவரசனுக்கு பொழுதுபோக்கு காண்பிக்கும் விலங்கினங்களாக மாற்றப்பட்டன. மரத்தாலான ஆயனின் கோலினை அவைகள் அப்போது நினைத்துப் பார்த்தன. தங்கத்தாலான இளவரசனின் செங்கோலினை விட, கரடுமுரடான ஆயனின் கோல் எவ்வளவோ மேல் என்று. தங்கள் ஆயன் மீண்டும் வருவார் தங்களை மீட்க என்று எண்ணி காத்திருக்க தொடங்கின.

நாமும் பல நேரங்களில் இப்படி தான் இழந்தவுடன் தான் அதன் அருமை புரிந்துகொள்கின்றோம். பணமும் பகட்டும் ஆடம்பரமும் கொண்ட ஆயன்களையே பெரும்பாலும் நாம் தேடுகிறோம். விளைவு பகட்டு பகலிலேயே முடிவடைந்து விடுகிறது. நமது ஆயன் நம் அருகிலேயே இருக்கின்றார். ஆடம்பரத்தை விட்டு விட்டு அன்பை தேடுவோம் ... அன்பான ஆயனின் குரலில் தெளிவு இருக்கும் குழப்பம் இருக்காது. கோல் கரடுமுரடானதாக வடிவமில்லாததாக இருக்கும். தங்கமும் வைரமும் நிறைந்ததாய் இருக்காது. எனவே அன்பு உள்ளங்களே நம் அன்பு நிறைந்த நம் ஆயனைத் தேடுவோம் ஆடம்பரமான ஆயனை அல்ல. அவர் நம்மோடு இருக்கும் போது நமக்கு எக்குறையுமிராது. நாம் இருக்கும் இடம் பசும்புல்வெளியாக மாறும். நீரோடை ஊற்றாக பொங்கி எழும். நாம் நம் ஆயனை அறிந்தவர்களாவோம். அவர் நம்மை அறிந்தவராவார். இப்படிப்பட்ட நிலையை நாம் அடைய ஆண்டவராம் ஆயனின் ஆசீரை வேண்டுவோம்.இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.