இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தவக்காலம் நான்காம் ஞாயிறு

என்னுடையதெல்லாம் உன்னுடையதே....

I. யோசுவா 5:9,10-12
II. 2 கொரிந்தியர் 5:17-21
III. லூக்கா 15:1-3,11-32

br /> பொறுமை இல்லாதவன் கூட ஒருகுழந்தைக்கு தகப்பனாக முடியும் ஆனால் ஒரு பொருப்பானவனால் மட்டுமே நல்ல தந்தையாக முடியும். தாய் அன்பு ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு தந்தையின் அன்பும் அரவணைப்பும் ஒரு குழந்தை மனிதனாக உருவாகக் கட்டாயம் தேவை. சாதாரண தந்தையின் அன்பிற்கே இவ்வளவு என்றால் இறைத்தந்தையின் அன்பிலும் அரவணைப்பிலும் வளரும் ஒரு குழந்தை எப்படிப்பட்ட மனிதனாக வளரும் என்பதற்கு சிறிதளவும் சந்தேகம் வேண்டாம். நாமெல்லாம் வானகத் தந்தையின் அன்பு பிள்ளைகள். அவர் நம் அனைவரின் அன்புத் தந்தை . அவர் அருளும் அளவற்ற இரக்கமும் உடையவர். இத்தகைய இரக்கம் உடைய இறைத்தந்தையின் பிள்ளைகளாகிய நாம் அவரைப் போல இரக்கமுடையவர்களாக மாற இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன.
இன்றைய நற்செய்தியில் இயேசு ஊதாரி மைந்தனின் கதையை பரிசேயர்களுக்கும் மறை நூல் அறிஞர்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதத்தில் கூறுகிறார். பாவிகளோடு உணவு அருந்துவது தவறு என்று எண்ணிய அவர்களுக்கு பாவிகள் மனம்மாறி மன்னிப்பு பெற வழியுண்டு .அதன்மூலம் அவர்கள் புது வாழ்வு வாழ இடமுண்டு என்பதை எண்பிக்கின்றார். இந்த நற்செய்தியில் இடம்பெறும் இரண்டு மகன்களும் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களில் இருவரைக் குறிக்கும். மூத்த மகன் மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களைக் குறிக்கும். இளையமகன் பாவிகள் எனக் கருதப்பட்ட ஏழை எளிய மக்களைக் குறிக்கும். இங்கு தந்தையாக பாவிக்கப்படுபவர் இறைத்தந்தை, அவர் வழி வரும் இயேசு. இங்கு தந்தை கூறும் என்னுடையதெல்லாம் உன்னுடையதே என்னும் வாக்கியம் நமது வாழ்வாக செயல்பட இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகின்றோம். என்னுடையதெல்லாம் உன்னுடையதே என்று எல்லோரிடமும் நாம் சொல்லி விட முடியாது. நமக்கு மிகவும் பிடித்த ,நெருக்கமான உரிமை உடையவர்களிடம் மட்டுமே நாம் அதை சொல்வோம். அதைப்போல் மற்ற எல்லோரும் நம்மிடமும் அப்படிச்சொல்வதில்லை. ஆக என்னுடையதெல்லாம் உன்னுடையதே என்று நம்மிடம் பிறர் சொல்லவும் , நாம் பிறரிடம் சொல்லுமளவுக்கு நாம் தாராளமனம் உடையவர்களாக வாழ முயற்சிப்போம். மூன்று கதைமாந்தர்களின் செயல்பாடுகளை வைத்து நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறோம் இனி எப்படி வாழவேண்டும் என்று சிந்திக்க நாம் அழைக்கப்படுகின்றோம்.
1. மகிழ்வை தொலைவில் தேடியவர்.
இளையவர் ... நம் வீடுகளில் எப்போதும் கடைசி குழந்தை மேல் அதிக பாசம் வைப்பர். அது பெற்றோர்களானாலும் சரி , உடன் பிறப்புக்களானாலும் சரி. அப்படி இருக்க இந்த இளைய மகனும் தன் தந்தையால் அளவுக்கு அதிகமாக அன்பு செய்யப்பட்டிருப்பார். அதனால் தான் உரிமையுடனும் தைரியத்துடனும் தந்தையிடம் நேராக சென்று தனக்குரிய பங்கைக் கேட்கிறார். அளவுக்கு அதிகமாக அன்பு செலுத்தும் தந்தை, தேவைக்கு அதிகமான செல்வம், வேலையாட்கள் என அனைத்தும் இருந்தும் மகிழ்வு அவரிடத்தில் இல்லை. ஏனெனில் அவர் தந்தையின் அன்பை உணரவில்லை. நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்... தந்தையின் அன்பை அவர் இல்லாதபோது உணர்கிறார். சொத்தும் பணமும் மட்டுமே மகிழ்வைத் தரும் என்று எண்ணியவர், அது தனக்கு பிரித்து கொடுக்கப்பட்டதும் அனைத்தையும் திரட்டிக் கொண்டு தொலை தூரம் செல்கிறார் . நாமும் பல நேரங்களின் இருக்கும் இடத்தில் இருக்கும் மகிழ்வை உணராது இல்லாத ஒன்றிற்காக வருந்துகிறோம். மகிழ்வு நம்மிடத்தில் தான் உள்ளது அது நமக்குள் உள்ளது என்று உணர்வோம். செய்த பாவத்திற்காக மனம்வருந்தி தந்தையிடம் திரும்பி வந்த இளைய மகன் போல நாமும் நமது பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுவோம். அவர் தன் தந்தையின் அன்பை உணர்ந்ததும் உடனடியாக புறப்பட்டு தந்தையின் இல்லம் வருகின்றார் எந்த வித தாமதமும் இன்றி. நாமும் மனம் வருந்துகிறோம் ஆனால் இறைத்தந்தையிடம் திரும்பி வர கால தாமதம் செய்கின்றோம். மகிழ்வைத் தேடி வெளியே நெடும்பயணம் செல்வதை விடுத்து நம் உள்ளத்துக்குள் நீண்ட ஆழமான பயணம் செல்வோம். இறை அன்பை உணர்ந்து கொள்வோம்.
என்னுடைய மகிழ்வு உன்னுடையதே , உன்னுடைய மகிழ்வும் என்னுடையதே என்று வாழ முயற்சிப்போம்.
2. அனுதினமும் அடிமை வாழ்வு வாழ்ந்தவர்.:
மூத்த மகன். இவர் தான் தந்தையின் சொத்துக்களுக்கு முதன்மையான வாரிசு. ஆனால் அதை உணராது வீட்டில் பணிபுரியும் வேலையாட்கள் போல தன்னை நினைத்துக் கொள்கிறார். தனது தந்தையின் சொத்துக்களை அவருக்கு பின் தான் தான் பராமரித்து வாழ வேண்டும் என்று எண்ணியவருக்கு தம்பியின் வடிவில் வருகிறது பிரச்சனை. இருப்பினும் அவன் பங்கைஅவன் எடுத்துக் கொண்டான் மிச்சம் இருக்கும் அனைத்தும் தனக்கே சொந்தம் என்று நினைத்தவன் மகிழ்வை கெடுத்தார் போல வீடு திரும்புகிறான் இளையவன். அதுவரை மனதில் அடக்கி வைத்திருந்த அனைத்தும் வெளியே கொட்டப்படுகிறது. சொந்த வீட்டிற்குள்ளே செல்லத் தயங்குகிறார். தன் தந்தையிடம் கேட்பதற்கு பதிலாக வேலையாட்களிடம் என்ன நடக்கிறது என்று கேட்கிறார். அவர்களும் இவரின் கோபத்தீயில் எண்ணெய் விட்டு நன்றாக எரியச்செய்வது போல உம் தம்பி வந்திருக்கிறார். உம் தந்தை கொழுத்த ஆட்டினை அடித்து விருந்து சமைத்திருக்கிறார் என்று கூறுகின்றனர். முதலாளிஎன்றோ , சின்ன முதலாளி என்றோ சொல்லாது இந்த விருந்தில் எங்களுக்கு பங்கில்லை என்பது போல செயல்படுகின்றனர். தனது முதலாளியையும் அவர் மகனையும் பிரித்து அதில் இன்பம் காணும் எண்ணத்தில் கூறுகிறார். நாமும் பல நேரங்களில் இப்படித்தான் . யாரிடம் கேட்டு தெளிவு பெறவேண்டுமோ அவர்களை விட்டு விட்டு பிரச்சனை பெரிதாக காரணமாக இருப்பவர்களிடமே அறிவுரைக் கேட்கிறோம். பிறருக்கு துன்பம் ஏற்படுத்தி அதில் மகிழ்வு காணும் குணம் களைந்து அமைதியை ஏற்படுத்துபவர்களாவோம். இறைத்தந்தையின் அன்புக்கும் அருளுக்கும் சொந்தக்காரர்கள் நாம் என்ற நோக்கத்தில் செயல்படுவோம்.
3... இரக்கமே உருவான இனிய இறைவன்.
இங்கு தந்தை போல சித்தரிக்கப்படுபவர் வானகத்தந்தை . இவரது செயல்பாடுகள் அவர்தம் பிள்ளைகளாகிய நம்மிடமும் துலங்க முயற்சிப்போம்.
சொத்தைக் கேட்டதும் பங்கிட்டுக் கொடுக்கிறார். ஏன் எதற்கு என்று கேட்கவில்லை ஒவ்வொருவரின் உரிமையையும் மதிக்கிறார்.
தன்னிடம் பணிபுரியும் பணியாட்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுப்பவராக இருக்கின்றார்.
தன்மகன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் எதிர்பார்க்கின்றார்.
தொலைவிலேயே மகனைக் கண்டு கொள்கிறார்.
கட்டித் தழுவுகிறார். அவன் செய்த அனைத்து செயல்களையும் மன்னித்து மறக்கிறார்.
முதல்தரமான ஆடை மோதிரம் காலணி என அணிவித்து மகிழ்கிறார். புதிய மகனாக மாற்றுகிறார்.
எல்லோர்க்கும் எல்லாமாக இருக்கின்றார் தன் மூத்த மகனையும் இளைய மகனையும் பணிபுரியும் பணியாட்களையும் அன்பு செய்து அவரவர்க்கு கொடுக்க வேண்டிய தகுதியையும் உரிமையையும் கொடுக்கின்றார்.
என்னுடையதெல்லாம் உன்னுடையது ... சொத்தும் செல்வமும் மட்டுமல்ல என்னுடைய குணமும் பண்பும் பரிவும் எனக்குப் பின் உன்னுடையதாக வேண்டும் என்கிறார். நான் மனம்மாறி வந்த உன் தம்பியை ஏற்று மகிழ்வது போல நீயும் பிறரை மன்னித்து ஏற்று வாழ் என்கிறார். நாமும் இத்தகைய பேற்றுக்கு உரிமை உடையவர்களே .. நம் வானகத்தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பது போல நாமும் இரக்கமுடையவர்களாக வாழ முயற்சிப்போம்.
உன்னுடையதெல்லாம் என்னுடையது என்று சொல்லும் மனப்பாங்கு உடையவர்களாவோம்.வெறும் பணம் பதவி சொத்து சுகம் விடுத்து நல்ல எண்ணம் சிந்தனை சொல் செயல்களுக்கு சொந்தக்காரர்களாவோம். நம் வானகத்தந்தை இரக்கமுடையவராய் இருப்பது போல நாமும் இரக்கமுடையவர்களாவோம். இளையவனானாலும் சரி மூத்தவனானாலும் சரி தந்தைக்கு நல்ல மகன்களாவோம். தந்தையின் நம்பிக்கை இருக்கும் வரை தனயன் (மகன்) வழிதவறான். என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்படுவோம் இறைத்தந்தையின் பராமரிப்பு என்றும் நம்மையும் நம் குடும்பத்தையும் வழிநடத்தி வாழவைப்பதாக ஆமென்.