இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தவக்காலம் மூன்றாம் ஞாயிறுb

முட்புதரின் வழி மீட்பு

I. விடுதலைப் பயணம் 3:1-8, 13-15
II. 1 கொரிந்தியர் 10:1-6,10-12
III. லூக்கா 13:1-9

முட்புதர் காடுகளிலும் மனிதர் நடமாட்டம் இல்லா இடங்களிலும் அதிகம் காணப்படும் ஒரு வகை களைச்செடிகளின் தொகுப்பு எனலாம். இது பெரும்பாலும் உயர்ந்த மலைகள், அடர்ந்த காடுகள், வனவிலங்குகளின் இருப்பிடங்கள் ஆகியவற்றில் காணப்படும். ஆனால் இத்தகைய பயன்படா காட்டுக்களைச்செடிகளின் மூலமாக நமக்கு மீட்பைக் கொண்டு வர நம் இறைவனால் முடியும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றில் நுழைந்திருக்கக்கூடிய நம்மை இன்றைய வாசகங்கள் முட்புதர் வழி மீட்பைப் பெற அழைக்கின்றன. மோயீசன் இஸ்ரயேல் மக்களின் விடுதலைப்பயண வாழ்வில் மிகவும் முக்கியமான ஒரு நபர். அடிமைப்பட்டுக் கொண்டிருந்த மக்களை மோயீசன் மூலமாக இறைவன் மீட்கின்றார். இந்த மோயீசன் மூலமாக அவரது அழைத்தல் மூலமாக இறைவன் நமக்கு இன்று விடுக்கும் செய்திக்கு செவிமடுப்போம்.

மோயீசனின் செயல்பாடுகள், உணர்வுகள், எண்ணங்கள் பல்வேறு நற்தூண்டுதல்களை வெளிப்படுத்துகின்றன. அந்தக் கருத்துக்களை நமது வாழ்க்கைக்கென்று பயன்படுத்தி தவக்காலத்தில் ஆண்டவரின் அழைப்பிற்கு செவிமடுக்க நாம் அழைக்கப்படுகின்றோம். 1. மோயீசனின் மலையேற்றம். 2. முட்புதர் பற்றிய ஆர்வம். 3. புதர் நிலத்தை புண்ணிய நிலமாய் கண்ட கீழ்ப்படிதல். 4. கடவுளின் குரலுக்கு காது கொடுத்த கவனம்.

1. மலையேற்றம்:
பழைய ஏற்பாட்டில் மலையேற்றம் என்றாலே அது இறைவனுடனான உறவைப் புதுப்பிக்க மனிதன் ஏற்படுத்திய மலை வாசஸ்தலம் எனலாம். ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என நமது குல முதுவர்கள் அனைவரும் மலையேறியே இறைவனுடனான தங்கள் உறவைப் புதுப்பித்தும் பலப்படுத்தியும் கொண்டனர். இன்று நாம் நற்செய்தியில் வாசிக்கக் கேட்கும் நம் பழைய ஏற்பாட்டு நாயகன் மோசேயும் மலையேறுகிறார். ஆனால் ஏறும் போது ஆடுமாடுகளை மேய்ப்பவராகச்செல்கின்றார். திரும்பும் போது ஒரு இஸ்ரயேல் இனத்தையே வழிநடத்திச் செல்பவராக மாறுகிறார். எகிப்தில் இருந்து தப்பித்து, மிதியான் நாட்டிற்கு ஓடிவந்து, தனது மாமனாரின் வீட்டில் அவருக்கு கீழே பணிபுரிந்து கொண்டிருப்பவர், எத்தனை இன்னல்களை அனுபவித்து இருக்கக்கூடும். இன்று நாம் நம் விருந்தினர்கள் வீட்டில் இரண்டு நாளுக்கு மேல் தங்க இயலாது. (விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு என்பது எல்லாம் பழசு. இன்று எல்லாமே உடனடி. மருந்தானாலும் சரி .விருந்தானாலும் சரி.) அப்படியிருக்க மோயீசன், மாமனார் வீட்டில் பல ஆண்டுகள் தங்கி இருக்கிறார். அவர் சொன்ன வேலைகளை செய்து அவர் தரும் உணவை உண்டு, உறவுள்ள அடிமை போலவே தனது வாழ்நாளைக் கழித்திருக்கக் கூடும். அப்படி இருக்கும் தருணத்தில் தன் மாமனாரின் ஆடுகளோடு மலையேறுகிறார். தன்னுடைய வருத்தம் துன்பம் கவலை ஏமாற்றம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு மேலே ஏறிச்செல்கிறார். விடுதலை அடைகிறார். விடுதலைப் பயணத்தின் தலைவராகிறார்.
நாமும் நம்முடைய வாழ்வில் பல நேரங்களில் வருத்தங்களினாலும் துன்பங்களினாலும் சோர்ந்து போகிறோம். நாம் நமது எல்லாக் கவலைகளையும் விட்டு இறைவனை நோக்கி நமது மனங்களை உயர்த்தும் போது இறைவனும் நம்மைக் கண்ணோக்குகின்றார். நாமும் நமது விடாமுயற்சியால் நமது துன்ப நிலைகளிலிருந்து விடுதலை பெற்று வீறுநடை போடும் காலம் விரைவில் வரும். விடாமுயற்சியுடன் இறைநம்பிக்கை என்னும் மலையேறுவோம்.

2. முட்புதர் பற்றிய ஆர்வம்:
ஆர்வம் என்பது எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் அடிப்படை உணர்வு. ஒவ்வொருவரின் இரசனைக்கேற்ப அந்த ஆர்வம் வேறுபடும். மோயீசன் ஆடுகளுக்கான புல்வெளியைத் தேடி பயணம் மேற்கொள்கிறார். ஆனால் கண்ணில் சிக்கியதோ, எரியும் முட்புதர். அவர் தேடிச் சென்றது ஒன்று, கண்டடைந்தது மற்றொன்று. ஆனாலும் ஆர்வத்தோடு, அருகில் செல்வேன் அது என்ன என்று பார்ப்பேன் என்று எண்ணி அருகில் செல்கின்றார். கடவுளின் மாட்சியைக் கண்டு கொள்கின்றார். அவர் அதைக்க்ண்டும் காணாமல் விட்டிருந்தால் விடுதலைப்பயணத்தை மேற்கொள்ளும் தகுதியை இழந்திருப்பார். அல்லது இன்னும் பல வருடங்கள் காத்திருந்திருக்கக் கூடும். அவரது ஆர்வமே அவரை மேலான செயல்கள் செய்யத் தூண்டியிருக்கின்றது.
நாமும் பல்வேறு விதமான ஆர்வங்களை உடையவர்களாக இருக்கிறோம். நமது ஆர்வங்கள் அனைத்தும் நம்மை நன்மையின் பாதைக்கு அழைத்துச்செல்கின்றனவா? அல்லது நமது ஆர்வத்துக்கும் எதிர்பார்ப்பிற்கும் மாறான செயல்களையும் நிகழ்வுகளையும் பார்த்து மனம் வாடி வருந்தி காலத்தைக் கழிக்கின்றோமா? நமது ஆர்வம், முறையானதாக நம்மை முன்னுக்கு கொண்டுவருவதாக இருக்கின்றதா? சிந்திப்போம். சுடர் விட்டு எரியும் முட்புதர் நெருப்பில் தான் இறைவன் மோயீசனுக்கு காட்சி அளித்தார். பசுமையான செடியில் அல்ல. என்பதை மனதிற் கொண்டு செயல்படுவோம்.

3. கீழ்ப்படிதல்:
கீழ்ப்படிதல் இறைவனின் அடியார்கள் அனைவருக்கும் இருக்கவேண்டிய இருந்த ஒரு முக்கியமான பண்பு குணநலன். இங்கு மோயீசன் முட்புதர் நிலத்தை புண்ணிய நிலம் என்று இறைகுரல் சொன்னதும் உடனே தனது மிதியடிகளை அவிழ்க்கின்றார். தரை குப்புற விழுந்து அவ்விடத்திற்கு உரிய மரியாதையை கொடுக்கின்றார். தனது பாவ செயல்களை எண்ணி மனம்வருந்தி மன்னிப்பு கேட்கும் விதமாய், தலை தாழ்த்துகிறார். தனது அங்கியால் முகத்தை மறைத்து இறைவனிடம் மன்னிப்பு வேண்டுகிறார். அந்த நிமிடமே அவ்விடத்தை புண்ணிய நிலமாகக் கருதி கீழ்ப்படிகிறார். நமது கீழ்ப்படிதல் எப்படி இருக்கின்றது? புதர் நிலத்தை புண்ணிய நிலமாகக் கருதாவிட்டாலும் , புண்ணிய தலத்திற்குரிய மரியாதையைக் கொடுக்கின்றோமா? இன்று எத்தனை கோவில்கள் வெறும் பார்வைக்கும் காட்சிக்கும் மட்டுமே உரியதாக இருக்கின்றன.? தவக்காலத்தில் கோவில்களை சந்தித்தால் புண்ணியம் என்று எண்ணி வெறும் பயணம் செய்வதிலேயே நமது தவக்காலக் கொண்டாட்டங்கள் முடிவடைந்து விடுகின்றனவா? இறைவன் வதியும் அனைத்து ஆலயமும் புண்ணிய தலமே என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

4. செவிமடுத்தல்:
இன்று நம்மில் பலரிடத்தில் குறைவுபடக் கூடிய ஒன்று செவிமடுத்தல். நாம் சொல்வதை மற்றவர் கேட்கவேண்டும் என்று விரும்பும் நாம், மற்றவர் சொல்வதைக் கேட்க விரும்புவதில்லை. இன்று நாம் ஆலயங்களுக்கு செல்கிறோம். ஆண்டவர் பேசுவதைக் கேட்பது கிடையாது. பெரும்பாலும் நாம் பேசுவதை ஆண்டவர் கேட்கவேண்டும் என்ற வரைமுறையோடுதான் செல்கிறோம். ஆனால் மோயீசன் அப்படி இல்லை இறைவனின் குரலுக்கு முழுமனதோடு செவிமடுக்கிறார். தான் பட்டதுன்பம் எகிப்திலிருந்து தப்பி வந்த தன் சோதனைக் கதை, பாரவோனின் வளர்ப்பு மகன் போல வாழ்ந்த தான் இன்று பாலை நிலத்தில் ஆடு மேய்க்கும் நிலை என எதைக் குறித்தும் புலம்பவில்லை மாறாக கவனமுடன் செவிமடுக்கின்றார். இத்தகைய செவிமடுத்தல் குணம் நம்மில் இருக்கின்றதா?

இப்படிப்பட்ட குணமுடைய மோயீசன் இறைவனின் குரலுக்கு செவிமடுத்து இறைத்திருவுளம் நிறைவேற்றுகின்றார். இவர் தான் இயேசு கூறும் , மனம்மாறிய வாழ்வு வாழ்பவர்களுக்கான முன்னுதாரணம். இவர்கள் நிறைந்த கனிதரும் அத்தி மரத்திற்கு ஒப்பாவர். இறைவனின் அழைப்பு எல்லாருக்கும் எல்லாவேளையிலும் எல்லா நிலையிலும் வரும். ஆனால் அவரவர் ஆர்வம் கவனம் கீழ்ப்படிதல் செவிமடுத்தல் இதற்கேற்றார்போல வாழ்வில் பலன் தருவர். சிலர் பலன் தர இயலாமல் கனி தராத அத்தி மரம் போல பார்வைக்கு மட்டும் காட்சிப் பொருளாய் விளங்குவர். சிலர் பலன் தராது வெட்டி வீழ்த்தப்படுவர். நாம் எவ்வாறு இருக்கிறோம்?. மோயீசன் போல இறைவனின் குரலுக்கு செவிமடுத்து வாழ்ந்து வெற்றி பெற, ஆன்மீகப்பாறையாம் இயேசுவில் பருகி நிறைவு அடைய அருள் வேண்டுவோம். ஒருவனை மனிதனாக ஆக்குபவை உதவிகளும் வசதிகளும் அல்ல, அவரவர்க்கு ஏற்படும் இடையூறுகளும் துன்பங்களுமே. மோயீசன் பவுலடியார் இயேசு என அனைவருமே தங்கள் வாழ்வில் ஏற்பட்ட இடையூறுகளையும் துன்பங்களையும் தங்கள் வாழ்க்கைக்கென எடுத்து நிறைபலன் தருபவர்களாய் வாழ்ந்தனர். நாமும் நிறை கனி கொடுப்பவர்களாக வாழ நமக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் துன்பங்களையும் சவாலாக மாற்றி வாழ முயல்வோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும் இருப்பதாக ஆமென்.