இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தவக்காலம் நான்காம் வாரம்

கடவுளின் கைவினைப் பொருளே!!!!!

முதல் வாசகம்: 2 குறிப்பேடு 36,14-23
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 137
இரண்டாம் வாசகம்: எபேசியர் 2,4-10
நற்செய்தி: யோவான் 3,14-21

இறையேசுவில் பிரியமுள்ள அன்பர்களே, தவக்காலத்தின் நான்காம் வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். இத்தவக்காலத்தில் நமது தவத்தின் காரணத்தையும் அதன் பலனையும் பற்றி இன்றைய வாசகங்கள் நமக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. நாம் கடவுளின் கைவேலைப்பாடு, கைவினைப்பொருட்கள் . கடவுளால் உருவாக்கப்பட்ட நாம் அதற்கான நோக்கத்தையும் காரணத்தையும் ஒளியாம் இயேசுவின் பாதையில் கண்டறிய இன்றைய விவிலிய வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன. கைவினைப்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன, மெருகுபடுத்தப்படுகின்றன, பயன்பெற, பயன்பட தேவையான இடத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. நாமும் அதுபோல் தான். கடவுளால் படைக்கப்பட்டோம்., மெருகேற்றப்பட்டோம், நமக்குரிய இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டோம். இந்த அடிப்படையில் சிந்திக்க உங்களை அழைக்கிறேன்.

படைத்து பாதுகாக்கும் இறைவன்
மெருகேற்றி மேன்மைப்படுத்தும் இறைவன்
நற்பயன் தர அழைப்புவிடுக்கும் இறைவன்.

படைத்து பாதுகாப்பவர்.;
இன்றைய முதல் வாசகம் கடவுளுக்கு எதிராக இஸ்ரயேல் மக்கள் செய்த செயல்களையும் அதற்கு பதிலாக கடவுள் அவர்கள் மேல் சினமுற்றதைப் பற்றியும் கூறுகிறது. தன்னால் படைக்கப்பட்ட ஒரு மக்களினம் தன் மேல் நம்பிக்கை கொள்ளாது, தனக்கு எதிராக செயல்படுவதைக் கண்டு சினமுறுகிறார் இறைவன். பாபிலோனிய அடிமைத்தனம் மூலமாக அவர்களைக் கண்டிக்கிறார். தன்னை வழிபட என்று ஏற்படுத்தப்பட்ட எருசலேம் ஆலயம் அதன் பயனில்லாது அசுத்தமாயிருப்பது கண்டு கொதித்தெழுகிறார். எனவே அதனை இல்லாமல் செய்கிறார். எகிப்திலிருந்து, அடிமைத்தன நாட்டிலிருந்து பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வந்த மக்களை மீண்டும் பாபிலோனியர்களுக்கு அடிமையாகும்படிச்செய்கிறார். அவர்களின் வழிபாட்டுப் பொருட்கள் இடங்களை தீக்கிரையாக்குகின்றார். ஒரு பொருளின் அருமை அதன் இருப்பை விட இழப்பில் தான் பன்மடங்கு அதிகமாக தெரியும் . அது உருவமாக இருந்தாலும் சரி உறவாக இருந்தாலும் சரி . இதை இஸ்ரயேல் மக்களுக்கு வெளிப்படுத்த எண்ணுகிறார். அதை அவர்கள் உணர்ந்து நைல் நதிக்கரையோரம் தங்கள் புலம்பல்களைப் பாடலாகப் பாடுவதைக் காண்கிறார். அவர்கள் மேல் இரக்கம் கொண்டு மீண்டும் ஆலயம் கட்ட , பழைய வாழ்வை வாழ சைரசு மன்னன் மூலம் வழிகாட்டி பராமரிக்கிறார். இன்றும் பல்வேறு இடங்களில் நமது தேவாலயங்கள் தகர்க்கப்படுகின்றன. நமது மறையை மண்ணோடு மண்ணாக ஆக்கும் நோக்கத்தில் அவை நடத்தப்படுகின்றன. ஆனால் அந்த இழப்பிலும் வேதனையிலும் தான் நமது மறையும் விசுவாசமும் இன்னும் அதிகமாக ஆழப்படுகின்றன என்பதை உணராது அவர்கள் செயல்படுகின்றனர். இஸ்ரயேல் மக்கள் தங்கள் எருசலேம் ஆலயம் தகர்க்கப் பட்டதை எண்ணி மிகவும் மனம் வருந்துகின்றனர். தங்களின் பாவ நிலையை விடுத்து இறைவனிடம் மீண்டும் திரும்பி வர முயற்சிக்கின்றனர். தங்களைப் படைத்த இறைவனின் பராமரிப்பையும் பாதுகாப்பையும் வழிநடத்துதலையும் எண்ணி மனமுறுகுகின்றனர். இவ்வாறாக தன் மக்களை தன்னை நோக்கி திரும்பி வர வைக்கின்றார் இறைவன். பெற்றோர் தன் பிள்ளைகளை கண்டித்து திருத்துவது போல திருத்துகின்றார். எவ்வளவுதான் பிள்ளைகள் குறும்பு செய்தாலும் , எவ்வளவு தான் பெற்றோர்கள் கண்டித்து திருத்தினாலும் பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையே இருக்கும் பந்தம் பாசம், உறவு என்பது அழிக்க முடியாதது, அளவிட முடியாதது. அப்படி ஒரு உறவை மீண்டும் இஸ்ரயேல் மக்களுடன் ஏற்படுத்திக் கொள்கிறார் இறைவன் . சைரசு மன்னன் முலமாக தன் மக்களை மீட்டுக் கொள்கிறார். புதிய இஸ்ரயேல் மக்களாம் நம்முடனும் இந்த உறவைப் புதுப்பிக்க, நமது பழைய பாவ இயல்பைக் களைந்து ,நம்மை நாமே தயாரித்து புது வாழ்வு பெற தவக்காலத்தை நமக்கு அளித்திருக்கின்றார்.

மெருகேற்றி மேன்மைப்படுத்துபவர்.;
எந்த ஒரு பொருளும் இயல்பிலேயே அழகு தான் ஆனால் அதை மெருகேற்றும்போது அதன் அழகு இன்னும் அதிகமாக வெளிப்படுகிறது. சாதாரண உலோகம் ஆபரணமாய் மாறுவது போல, காகிதங்கள் கலை வண்ணப் பொருட்களாய் மாறுவது போல. நம்மைப் படைத்து காத்த இறைவன் அன்பினால் நம்மை மெருகேற்றி மேன்மைப்படுத்துகிறார். இரக்கத்தினால் அழகுபடுத்துகிறார். இதுவரை பாவங்களினால் இறந்து போயிருந்த நம்மைஅன்பின் மூலம் உயிர்பெறச்செய்கின்றார். இன்று உலகில் ஏராளமான பொருட்கள், மனிதர் கைகளால் உருவாக்கப்படுகின்றன. கண்ணைக்கவரும் வண்ணங்கள் , மனதை உருக வைக்கும் இசைகளோடு நாள்தோறூம் பல்வேறு விதமான பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அவைகளுக்கெல்லாம் ஒரு குறுகிய கால, காலவரையறை உண்டு. அதன்பின் அதன் செயல்பாடு முடிந்துவிடும். நாமும் கைவினைப் பொருட்கள் தான் ஆனால் கடவுளின் கைவினைப் பொருட்கள். அவர் கைகளால் உண்டாக்கப்பட்டவர்கள் . காலவரையறை அவர் தம் வேலைப்பாடுக்குக் கிடையாது. நாம் இறந்தாலும் மீண்டும் கடவுளின் மக்களாக உயிர்ப்போம். ஏனெனில் நாம் அனைவரும் நற்செயல் புரிவதற்காக அன்பினால் உயிர் பெற்றவர்கள். அருளினால் மீட்கப்பட்டவர்கள். கடவுளின் கரத்தினால் மெருகேற்றி மேன்மைப்படுத்தப்பட்டவர்கள்.

நற்பயன் தர அழைப்புவிடுக்கும் இறைவன்;
நாம் படைக்கப்பட்டது மெருகேற்றப்பட்டது அனைத்தும் பலன் தரவே,அதுவும் நற்பயன் தரவே . ஒளியின் பாதையில் நடப்பவர்களால் மட்டுமே அந்த நற்பயனைத் தர முடியும். இயேசுவே ஒளி அவரே நமக்கு முன்மாதிரி. ஒரு பொருளை உருவாக்கி, அழகுபடுத்தி, அது , அதற்கு உண்டான பலனைத் தரவில்லையெனில் அது வீண். அது எப்படி பயன் தர வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாய் கடவுள் தன் மகனையே நமக்கு தந்திருக்கிறார். மூலப்பொருளாம் இயேசுவை மையமாகக் கொண்டு அவரைப்போல வாழவே இறைவன் நம்மை அழைக்கிறார். ஒளியாம் இறைவன் உலகில் நற்செயல் புரிபவர் உருவத்தில் இருந்தும், நாம் அதை கண்டு கொள்ளாது இருளாம், பகட்டு ஆடம்பர வாழ்விலும் கேளிக்கைகளிலும் பாதிப்பளிக்கும் தொலைதொடர்பு சாதனங்களிலும் நம்மை நாமே தொலைத்து விடுகிறோம்.

ஒளியாக இருப்போம் இருளை விரட்ட, ஒளியிடம் செல்வோம் உண்மைகேற்ப வாழ, ஒளியை நேசிப்போம் ஒளியாம் இயேசு போல் வாழ முயற்சிப்போம். நாம் கடவுளின் கைவினைப் பொருட்கள் என்பதை மனதில் நிறுத்தி அவரில் நம்பிக்கை கொண்டு நற்செயல் புரியும் நல்லவர்களாக வாழ்வோம். இத்தவக்காலத்தில் இறைவனின் அருகிருப்பு நமக்கு தரும் ஆறுதலையும் அன்பையும் எண்ணி ஒளியின் வழியில் நடக்க முயல்வோம். படைத்த இறைவன், மெருகேற்றிய இறைவன், நற்செயல் புரிய அழைக்கும் இறைவன் நம்மோடு உடனிருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.