இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 7ம் ஞாயிறு

வாய்ப்புள்ள போதே வாழ்ந்துவிடு.

I. 1 சாமுவேல் 26:2,7-9,12-13,22-23
II. 1 கொரிந்தியர் 15:45-49
III. லூக்கா 6:27-38

br />

இறையேசுவில் மிகவும் பிரியமுள்ள அன்பர்களே, பொதுக்காலத்தின் 7ம் ஞாயிறை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் நம்மை, வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்தி வாழ இறைவன் அழைக்கின்றார். வாய்ப்புக்கள் நமது வாழ்வில் பல நேரங்களில் பல வகைகளில் வருகின்றன. அதை சரியாகப் பயன்படுத்தி முறையாக வாழ்பவர் முன்னேற்றப்படிக்கட்டுகளில் ஏறி வெற்றி அடைகின்றனர். பயன்படுத்தாதவர்கள் வீழ்ச்சி அடைகின்றனர். இன்றைய வாசகங்கள் அனைத்திலும் இரண்டு விதமான நபர்கள் நமக்கு எடுத்துக்காட்டப்படுகின்றனர். ஒருவர் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி முன்னேறியவர். மற்றொருவர் வாய்ப்புக்களை பயன்படுத்தாமல் பின்தங்கியவர். முதல் வாசகத்தில் தாவீது சவூல் என்னும் இரண்டு மனிதர்கள் நமக்கு எடுத்துக்காட்டப்படுகின்றனர். ஒருவர் ஆண்டவரின் அருள் என்னும் வாய்ப்பினைப் பயன்படுத்தி முன்னேறியவர். மற்றவர் அந்த அருளை பயன்படுத்தாதவர்.
இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், இயேசு- ஆதாம் இருவரையும் வேறுபடுத்தி ஒப்பிட்டு கூறுகிறார். ஒருவர் முன்னால் தோன்றி பின்னுக்கு மறைந்தவர். மற்றொருவர் பின்னால் தோன்றி முன்னால் நிலைத்து நிற்பவர். நற்செய்தி வாசகத்தில் இயேசு, நீங்கள் யாரைப் போல ??? பாவிகளைப் போலா பரம தந்தையைப் போலா என்று கேட்கிறார். ஆக அனைத்து வாசகங்களிலும் இரண்டு நபர்களின் வாழ்வும் வாழ்க்கை முறையும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு வாய்ப்புக்கள். இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகின்றோம்.
தாவீதா? சவுலா?
தாவீது சவூல் இருவருமே ஆண்டவரால் அருள் பொழிவு செய்யப்பட்டவர்கள். ஆனால் தாவீது மட்டுமே அந்த அருள் தன்னில் தொடர்ந்து நிலைத்து நிற்கிறது என்பதை உணர்ந்து செயல்பட்டவர். அதனால் தான் அவருக்கு தொடர் வெற்றி, சவூலுக்கு தொடர் தோல்வி. சவூலைக் கொல்ல தாவீதுக்கும் , தாவீதைக் கொல்ல சவூலுக்கும் வாய்ப்புக்கள் கொடுக்கப்படுகின்றன. தங்களது எதிரியைக் கொன்று வாழ்வின் வழியை சுலபமாக்கிக் கொள்ள வாய்ப்பு கொடுக்கப்படுகின்றது. சவூல் தன் எதிரியான தாவீதைக் கொன்றால் தன் வாழ்வு சுகமாகும் என்று எண்ணி கொல்லத்துணிகின்றார். தாவீதோ, எதிரியின் எதிர்ப்பை தாக்கி தாக்கி வலுவை இழப்பதை விட, அவனின் எதிர்ப்பை தாங்கி தாங்கி வலுவைப் பெற நினைக்கின்றார். அவரைக் கொல்லாமல் கடவுளின் கரத்தில் ஒப்படைக்கின்றார். கடவுள் கொடுத்த வாய்ப்பே ஆனாலும் அதிலும் தனது நிலைப்பாட்டில் உறுதியாய் இருக்கின்றார்.

நாமும் ஒரு சிலரை நமது வாழ்வில் எதிரிகளாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். குடும்பத்தில் குழுவில் உறவில், பணியில் பாதையில் என நமது கருத்துக்களுக்கு முரண்பட்டவர்களை எதிரிகளாக எண்ணுகிறோம். அவர்களை அழித்து நமது வாழ்வுப்பாதையை செம்மையாக்க எண்ணுகிறோம். எதிரிகள் நம் வாழ்வின் பாதைக்கு பலம் சேர்க்கும் பாலங்கள். அவர்களுக்கு தான் நமது பலம் பலவீனம் அனைத்தும் தெரியும். நமது சிந்திக்கும் திறனை தூண்டிவிட்டு அதிவேகமாக செயல்பட வைப்பவர்கள் அவர்கள் தான். எனவே தான் இயேசு கூட உங்கள் எதிரிகளை அன்பு செய்யுங்கள் என்கிறார். தாவீது இயேசுவின் வார்த்தைக்கு வாழ்க்கை சாட்சியாய் இருக்கிறார். தனது உயிரைக் கொல்லும் பகைவனையும் மன்னித்து வாழ்ந்ததினால் தான் இன்று நம் அனைவராலும் போற்றப்படுகின்றார். இப்படி நமது இன்றைய வாழ்க்கையிலும் பலர் பகைவரை மன்னித்து வரலாற்றின் பக்கங்களில் இடம் பிடித்திருக்கின்றனர். புனித அன்னை தெரசா, புனித இரண்டாம் அருள் சின்னப்பர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் தங்களுக்கு கிடைத்த மன்னிப்பு என்னும் வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்தி முன்னேறியவர்கள் தாவீதைப் போல. நாமும் நம் பகைவர்களை மன்னித்து அன்பு செய்து வாழ, கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்வோம்.
இயேசுவா? ஆதாமா?
நாம் மண்ணைச் சார்ந்தவரா? இல்லை விண்ணைச்சார்ந்தவரா? என்ற கேள்விகளுக்கு பதில் தரும் விதமாக அமைந்துள்ளது இன்றைய இரண்டாம் வாசகம். ஆதாம் மண்ணிலிருந்து வந்தவர், களிமண்ணால் உருவாக்கப்பட்டவர், இயேசு விண்ணிலிருந்து வந்தவர். அன்னை மரியின் கருவில் பாவ மாசின்றி உருவானவர். ஆதாமிற்கு முதன்முதலில் கடவுளால் உருவாக்கப்பட்ட முதல் மனிதன் முதல் பெற்றோர் என்ற ஒரு சிறப்பு இருந்தது. இயேசுவிற்கோ கன்னி கருத்தரித்தார் என்ற பேச்சு இருந்தது. ஆதாமிற்கு ஏதேன் வனம் முழுதும் கொடுக்கப்பட்டு அனைத்தையும் ஆண்டு அனுபவிக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் தீர்ப்பளித்து தீர்ப்புக்கு உள்ளாகிறார். பெண் தான் என்னை சாப்பிடத் தூண்டினால் எனவும், பாம்பு தான் தன்னை ஏமாற்றியது என்றும் பிறர் மேல் கண்டனம் கூறி கண்டனம் பெறுகின்றார். எனவே தான் முதலில் தோன்றியவர் பின்னுக்கு தள்ளப்படுகிறார். மண்ணால் உருவாக்கப்பட்டவர் மண்ணுக்கே திரும்புகிறார் எந்த பலனும் கொடுக்காமல்.
இயேசுவிற்கும் இந்த வாய்ப்புக்கள் ஆதாமைப் போல கொடுக்கப்பட்டன. ஆனால் அவர் சாத்தானின் சோதனைகள் அனைத்தையும் முறியடித்து, வாய்ப்புக்களை வாழ்வாக மாற்றினார். தனக்கு தண்டனைத் தீர்ப்பளித்தவர்க்கும் கண்டனம் செய்தவர்க்கும் நன்மையையே செய்தார். மன்னித்தார், உதவிகள் செய்தார், திரும்பப்பெறும் எண்ணமின்றி கொடுத்தார். பாவிகளையும் அன்பு செய்து வானகதந்தை போல இரக்கம் உள்ளவரானார். கடைசியில் தோன்றி முதல்வரானார். விண்ணிலிருந்து வந்தவர் விண்ணுலக மனிதர் போலானார். இந்த இரண்டு வாய்ப்புக்கள் நம்மிடமும் கொடுக்கப்படுகின்றன. எங்கிருந்து எப்படி வந்தோம் என்பது முக்கியமல்ல எங்கு எப்படி செல்லப்போகிறோம் என்பதே முக்கியம். நாம் மண்ணிலிருந்து வந்தவர்களானாலும் விண்ணிற்கு திரும்பும் போதாவது விண்ணுலக மனிதர்கள் போலாவோம். உடையளவில் அல்லாது உள்ளத்தளவில்....
பாவிகளா? பரமதந்தையா?
இன்றைய நற்செய்தியில் இயேசு பாவிகளின் வாழ்க்கை முறை பரம தந்தையின் வாழ்க்கை முறை பற்றி எடுத்துரைக்கின்றார். நாம் யார் ? எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதைப் பற்றி சிந்திக்கும் விதமாய் அமைந்துள்ளது. பாவிகள் தன்னை அன்பு செய்கிறவர்களை அன்பு செய்கிறார்கள். நன்மை செய்பவர்களுக்கே நன்மை செய்கிறார்கள். கடன் தருபவர்களுக்கே கடன் கொடுக்கிறார்கள். நாமும் இவ்வாறே செய்து வந்தால் நாமும் பாவிகளே. நாம் பெரும்பாலும் நம்மை வெறுப்பவர்களை அன்பு செய்வது கிடையாது. நமக்கு தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்வது கிடையாது. நமக்கு கடன் தர மறுப்பவர்களுக்கு நாம் கடன் கொடுப்பது கிடையாது. இப்படி இருக்க எப்படி நாம் பரம தந்தையைப் போலாவது? நாம் இவர்கள் அனைவரையும் நமது எதிரியாக உடனே நினைத்துக் கொள்வதால் தான் நம்மால் அவர்களுக்கு மீண்டும் உதவி செய்ய இயலாமல் போகிறது. ஒன்று மட்டும் புரிந்து கொள்வோம் நம்மை எதிர்ப்பவர்கள் எல்லாம் எதிரிகளும் அல்லர். நம்மை ஆதரிப்பவர்கள் எல்லோரும் நம் நண்பர்களும் அல்லர். இந்த உண்மை புரிந்து விட்டால் போதும் எல்லோரையும் அரவணைத்து அன்பு செய்யும் மன்னிக்கும் குணம் நம்மில் பெருகிவிடும். நம்மை ஏமாற்றியவர்களை நாம் உடனே ஏமாற்ற நினைக்க வேண்டாம், அவர்கள் இன்னொருவரிடம் ஏமாறும்வரை பொறுமையாகக் காத்திருப்போம் . கைகொட்டி சிரித்து ஏளனப்படுத்த அல்ல. அவர்களுக்கு கை கொடுத்து தூக்கி நம்மோடு சேர்த்துக் கொள்ள. அப்போது தான் நமது நிலை அவருக்கும் புரியும். அவரைப் பற்றி நமக்கும் தெரியும். இப்படிப்பட்ட வாழ்வை நாம் வாழ்ந்து வந்தால் பாவிகளாய் இருக்கும் நாம் நமது பரம தந்தையைப் போல மாறலாம். அன்று ஏதேன் தோட்டத்தில் முதல் பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்ட சோதனையும் இதுதான். இப்பழத்தை உண்டால் நீங்கள் கடவுளைப் போலாவீர்கள்.. இன்று நாமும் அழைக்கப்படுகின்றோம் பகைவரை மன்னித்து அன்பு செய்து வாழ்ந்தால் கடவுளைப் போலாவீர்கள்.... அந்த சோதனைக்கு உள்ளானவர்கள் ஜென்ம பாவத்திற்கு ஆளானார்கள் . இந்த சோதனையை மேற்கொள்பவர்கள் பாவத்தை துறந்து புண்ணிய வாழ்வைப் பெறுவார்கள். பாவ வாழ்வா புண்ணிய வாழ்வா? இரண்டு வாய்ப்புக்களில் ஒன்றை தெரிவு செய்வது நமது உரிமை. எதை தெரிவு செய்து எப்படி வாழப் போகிறோம் என்பதை நாமே முடிவு செய்து கொள்வோம்.

ஆக தாவீதைப் போல இயேசு போல, பரமதந்தையைப் போல வாழ இன்றைய வாசகங்கள் அனைத்தும் நமக்கு வாய்ப்பு கொடுக்கின்றன. சவூலைப் போல, ஆதாமைப் போல பாவிகளைப் போல வாழ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கின்றன. நாம் எதை தெரிவு செய்யப் போகின்றோம். வாய்ப்புக்கள் நமது வாழ்வில் பல முறை வருவதில்லை . நல்ல வாய்ப்புக்கள் ஒரு முறை மட்டுமே நம்மை வந்தடையும் . அதை பயன்படுத்துவதும் பாழாக்குவதும் நம்மைப் பொறுத்தது. வாய்ப்புக்கள் இறக்கைகளைக் கொண்ட பறவை போல. அது எப்போது எங்கு பறந்து வரும் என்று யாருக்கும் தெரியாது. எப்போது பறந்து போகும் என்றும் தெரியாது. பறவையை நமக்கு பழக்கமாக்கிகொண்டால் அது நம்மிடமே தங்கவும் வாய்ப்புள்ளது. எனவே வாய்ப்புக்களை நமதாக்கி வாழ முயல்வோம். யாரைப் போல வாழ்ந்தால் என்ன பயன் நாம் அடையலாம் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைத்துள்ளன. நல்லதை தெரிவு செய்து நலமுடன் வாழ முயல்வோம். வாய்ப்புள்ள போதே வாழ்ந்துவிடுவோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.