இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு

எல்லோர்க்கும் எல்லாமாய்........

I. எசாயா 6:1-2அ, 3-8
II. 1 கொரிந்தியர் 15:1-11
III லூக்கா 5:1-11
எல்லோர்க்கும் எல்லாமாய் எல்லோராலும் இருக்க முடியாது. இறைவன் ஒருவரைத் தவிர. இன்றைய நற்செய்தியில் இறைவன் நம்மை அவர் போல எல்லோர்க்கும் எல்லாமாய் இருக்க முயற்சி செய்ய அழைக்கின்றார். சீமோன் பேதுருவை அழைக்கும் பகுதி இன்று நமக்கு நற்செய்தி வாசகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. படிப்பறிவே இல்லாத சீமோன் பேதுரு இறைமகன் இயேசுவால் அழைக்கப்பட்டு, அவர் பணி செய்து பின் திருச்சபையை ஆண்டு வழிநடத்தும் அளவுக்கு பொறுப்பேற்கிறார். இயேசு சொன்னது போல மீன்களைப் பிடித்துக் கொண்டு இருந்தவர் மனிதர்களைப் பிடிப்பவரைப் போலாகிறார். உள்ளதை உள்ளபடி பேசும் குணமும், குடும்பப்பற்றும் பொறுப்பும் கொண்டிருந்த அவரை அப்படியே தன்பால் திருப்பி இறைப்பணி செய்ய அழைக்கிறார். தனது குடும்ப உறுப்பினர்களுக்கு தந்தையாக தமையனாக மகனாக என்று எல்லாமாய் இருந்தவர் , அந்த குறுகிய வட்டத்தை விடுத்து மூத்த அப்போஸ்தலர், திருச்சபையின் முதல் தலைவர் என்ற பெரிய வட்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இயேசுவால் அழைக்கப்பட்ட சீமோன் பேதுரு எல்லோர்க்கும் எல்லாமாய் மாறிவிடுகிறார். அவரது அழைப்பின் மேன்மையை வாசிக்க கேட்டு மகிழ்ந்த நாமும் அவர் போல வாழ முயற்சி எடுப்போம்.
இயேசு இன்றைய நற்செய்தியில் தன்னைப் பின்பற்றி வந்த மக்களுக்கும்,சீமோன் பேதுருவிற்கும், உடனிருந்த அவரின் உடன்பிறப்புக்களுக்கும் எவ்விதமாக செயல்பட்டார் , எப்படி, "எல்லாமாய்" இருந்தார் என்பதை அறிந்து அவர் போல் வாழ விழைவோம்.
1. திரளான மக்களுக்கு வார்த்தையாய்.....
2. சீமோனின் உடன் பிறப்புக்களுக்கு வளமையாய்.....
3. சீமோன் பேதுருவிற்கு வாழ்வாய்.....
வார்த்தையாய்.......
வார்த்தை வடிவமாய் மனு உருவானவர் மீண்டும் அதே வார்த்தையின் வடிவில் தன்னையும் தன் பணியையும் மக்களுக்கு வெளிப்படுத்துகிறார். ஒரு வார்த்தை கொல்லும் ஒரு வார்த்தை வெல்லும் ... ஆனால் இயேசுவின் வார்த்தைகள் நம் பலவீனத்தைக் கொன்று, நம் பலத்தை வெல்லும். ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தவர், திரளான மக்கள் தனது வார்த்தையைக் கேட்க விரைந்து வருவதை கண்டு கொள்கிறார். எந்நிலையிலும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இறைவார்த்தையைக் கேட்க அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதைக் கண்டறிகிறார். நீர் நிலைகளின் அருகில் எப்போதும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் . நீரலைகளின் சத்தம், அங்கு மீன் பிடிக்கும்- விற்கும் மீனவர்களின் சத்தம், அதனை பேரம் பேசி வாங்க காத்திருக்கும் மக்களின் சத்தம் என பல சத்தங்களின் கலவையாக அந்த இடம் இருந்திருக்கும். இருப்பினும் அந்த சத்தத்தை எல்லாம் விடுத்து, இறைவார்த்தையைக் கேட்க ஆவலாயிருப்பவர்களுக்கு இறைவார்த்தை மட்டுமே காதில் விழ வேண்டும் என்று எண்ணியவராய், படகில் அமர்ந்து அவர்களின் கவனத்தை ஒன்றிணைக்கிறார். அவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப அவர்களை இறைவார்த்தையால் நிறைவு செய்கின்றார். நமது எதிர்பார்ப்பு என்ன நமது இறைவனிடத்தில் என்று யோசிப்போம். இறைவார்த்தைக்கு செவி கொடுக்க நாம் எடுக்கும் முயற்சிகள் எவை என்பதை கண்டுணர்ந்து வாழ்வோம். வார்த்தையான இறைவன் நம்மையும் ஆட்கொள்ள அனுமதிப்போம்.
வளமையாய்.....
மனிதன் வாழ அவசியமானது நலமான உடலும் வளமான வாழ்வும் தான் . இது இரண்டில் ஒன்று குறைவுபட்டாலும் பிரச்சனை தான். இரவு முழுவதும் பாடுபட்டு உழைத்து கரை திரும்பி, மீன்களுக்கு பதிலாக வலையில் மாட்டிய கழிவுகளை கழுவிக் கொண்டிருந்தனர் சீமோன் பேதுருவின் பங்காளிகள் உடன்பிறப்புகள். மீனுக்கு பதில் கழிவுகளா? இன்று நம் பிள்ளைகள் உணவிற்கு என்ன செய்வார்கள் என்ற கவலைகளோடு வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு வளமையாய் வருகின்றார் இயேசு. யாராருக்கு என்னென்ன தேவையோ அதைக் கொடுப்பவர் இயேசு. எனவே அன்றாட பசிதீர்க்கும் கவலை கொண்ட அவர்களுக்கு ஏராளமான மீன்கள் என்னும் வளமையைக் கொடுத்து மகிழ்வடையச்செய்கின்றார். தங்களது குடும்பத்தின் சுமையை தீர்த்த இறைவனுக்கு தங்களையேக் கையளித்து இயேசுவைப் பின்தொடர்கின்றனர். நமக்கு இன்று அப்பிரச்சனை இல்லை நாம் நலமோடும் வளமோடும் வாழ்கிறோம். நம்மை மகிழ்வோடும் நிறைவோடும் காக்கும் இறைவனுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் என்ன என்று சிந்திப்போம்.
வாழ்க்கையாய்......
சீமோன் பேதுரு எளிய மனம் கொண்டவர், நினைத்ததைப் பேசும் குணம் கொண்டவர். மனதில் பட்டதை அப்படியே வெளிப்படுத்தும் உள்ளம் கொண்டவர். இப்படிப்பட்டவரை இயேசு அழைக்கின்றார். இவரது எதிர்பார்ப்பு எல்லாமே நல்லதொரு அமைதியான நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது மட்டுமே. அது கிடைக்காமல் போகவே மிகுந்த வேதனையோடு கரையில் அமர்ந்திருக்கிறார். அவரது எண்ண ஓட்டத்தை உணர்ந்தவராய் இயேசு அவரது படகினைத்தெரிவு செய்கின்றார். அவரது வெளிப்புற தோற்றத்தையும் சூழலையும் வைத்து அவரது எண்ணத்தை தெரிந்து கொண்ட இயேசு அருகில் சென்று அவரிடம் பேச்சு கொடுக்கின்றார். ஆழத்திற்கு சென்று வலைகளைப் போடுங்கள் என்கிறார். உமது வார்த்தைக்கேற்ப செய்கிறேன் என்று பேதுரு கூறிய மறுமொழியால் கவரப்பட்டவர், அவரது எதிர்பார்ப்பிற்கும் மேலாக அதனைப் பூர்த்தி செய்கிறார். ஏனெனில் அவரது வாழ்க்கை மீன்பாட்டைப் பொருத்தே அமைந்திருந்தது. எனவே அந்த மீன் வழியாக அவரது ஏக்கத்தை நிறைவு செய்கின்றார். இறைமகனின் வல்லமை செயலைக் கண்டு மனதுருகி தனது குற்றத்தை உணர்ந்து மன்னிப்பு கேட்கின்றார். தனது வாழ்வாதாரமாய் இருந்த படகையும் வலையையும் விட்டு விட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றார். நாம் நமது வாழ்வின் ஆதாரமாய் எவற்றைக் கருதுகிறோம். அவற்றை இயேசுவிற்காய் விட்டு விட தயாராய் இருக்கின்றோமா? சிந்திப்போம்.
ஆக யார் யார் என்ன என்ன எதிர்பார்ப்போடு இயேசுவை அணுகினார்களோ அதனைப் பெற்றுக்கொண்டனர். நாமும் திருப்பலியிலும் மற்ற பிற அருட்சாதனங்களிலும் அன்றாடம் இயேசுவை எதிர்கொள்கின்றோம். நாம் என்ன எதிர்பார்ப்போடு அவரை எதிர்கொள்கிறோம் என சிந்திப்போம். நமக்கு வார்த்தையாக வளமையாக வாழ்வாக என எல்லாமாக இருக்க இறைவன் விரும்புகிறார். அவரைப் பின்பற்றும் நாமும் எல்லோர்க்கும் எல்லாமாக இருக்க முயல்வோம் இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும் இருப்பதாக ஆமென்.