இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு

இரசமிருக்கிறதா நமது வாழ்க்கையில்?

I. எசாயா 62:1-5
II. 1 கொரிந்தியர் 12:4-11
III. யோவான் 2:1-11



/>இறை இயேசுவில் பிரியமுள்ள இறைமக்களே உங்கள் அனைவரையும், " ஆண்டவர் விரும்புகின்றார் உங்களில் கடவுள் மகிழ்கின்றார்" என்னும் இறைவார்த்தையை வாழ்த்தாகக் கூறி இன்றைய சிந்தனைக்கு உங்களை அன்போடு அழைக்கின்றேன். இன்றைய நற்செய்தியில் கானாவூர்த் திருமணத்தில் இயேசு நிகழ்த்திய அற்புதத்தைப் பற்றி வாசிக்கக் கேட்டோம். நமது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயல்களும் ஒரு விழாவின் மூலமாகவே தொடங்கி வைக்கப்படுகின்றன. நமது பிறப்பு, ஞானஸ்நானம், திருவிருந்து, திருமணம் என அனைத்துமே விழாக்களுடன் தான் தொடங்கப்படுகின்றன. காரணம் நல்லதொரு தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம் என்பதாலேயே. இங்கும் ஒரு குடும்ப உறவு திருமணவிழாவின் மூலம் தொடங்குகிறது. இயேசுவும் தனது பணிவாழ்வை இந்த விழாவின் வழியே மகிழ்வோடு தொடங்குகின்றார். பொதுக்காலத்தின் முதல் வாரத்தில் இவரே என் அன்பார்ந்த மகன் இவரில் நான் பூரிப்படைகின்றேன் என்ற இறைவனின் அழைப்பிதழுக்கு, இன்று இவ்விரண்டாம் வாரத்தில் விழா நிகழ்த்தப்படுகிறது. இந்த விழாவில் கலந்து மகிழ நாமும் அழைக்கப்பட்டுள்ளோம். எனவே இன்றைய நாளில் நாம் கொண்டாடும் இவ்விழா நம் வாழ்க்கைக்கு உரமூட்டும் இரசம் இருக்கிறதா என்று சிந்திக்க அழைப்பு விடுக்கின்றது.
இயேசு தண்ணீர் நிரப்பச்சொன்ன ஆறு கல்தொட்டிகளை நாம் நமது சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். ஆறு கல்தொட்டிகள் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன? அவை அனைத்தும் தயார் நிலையில் இருந்தன. தூய்மைச்சடங்குக்கு உபயோகத்தில் இருந்தவை என்றாலும் இயேசுவின் அற்புத செயலுக்கு மிக உதவியாக இருந்தன. மேலும் அவை வெறுமையாக இருந்தன. இயேசுவின் எண்ணத்திற்கு ஏற்ப தங்களை நிரப்ப ஆவலாய் இருந்தன. நாமும் எந்நிலையிலும் பிறருக்கு உதவ தயாரான நிலையில் இருக்க முயல்வோம். நம்மை வெறுமையாக்கி இறைவனின் திருவுளம் நம்மில் நிறைவேற நாம் காத்திருப்போம். இந்த ஆறு கல்தொட்டிகள் போன்று நமது மனமும் ஆறு குணநலன்களால் நிரப்பப்பட இறைவன் இந்நாளில் நமக்கு அழைப்புவிடுக்கின்றார். 1. நற்செயல்களால் 2. பரிவால் 3. விசுவாசத்தால் 4. மகிழ்ச்சியால் 5. மன்னிப்பால் 6. பொறுமையால்.
1. நற்செயல்களும் சைகைகளும்:
நற்செயல்கள் என்னும் குணநலத்தால் நமது முதல் கற்சாடியை நிரப்ப இறைவன் அழைக்கின்றார். நற்செயல்கள் செய்ய நாம் முன்வர வேண்டும். திருமண விழாவிற்கு அழைக்கப்பட்ட அன்னை மரியாள் இவ்விழா நல்ல முறையில் நடந்தேற, தன்னால் ஆன செயல்களைச் செய்கின்றார். இயேசு அன்னை மரியாளின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நல்லன செய்ய விரைகின்றார். பணியாளர்களோ நம்மால் இவ்விழா சிறப்புடன் நடைபெற என்னவெல்லாம் செய்ய முடியுமோ அது அனைத்தையும் செய்வோம் என்று முனைப்புடன் செயல்படுகின்றனர். ஆக அழைக்கப்பட்ட அனைவரும் விழா சிறப்புற உழைக்கின்றனர். நாமும் இயேசுவின் வாழ்க்கையை அவரோடு வாழ அழைக்கப்பட்டிருக்கின்றோம். எனவே நாமும், அன்னை மரியாள் போல குறிப்பறிந்து உதவி செய்பவராக, இயேசு போல அன்னை சொல்லுக்கு கீழ்ப்படிபவராக, பணியாளர்கள் போல சொன்னதை செய்ய எந்நிலையிலும் தயாராய் இருப்பவர்களாக, வாழவேண்டும். நமது செயல்கள் எப்போதும் பிறருக்கு நன்மை விளைவிக்கக்கூடியதாக நல்ல எடுத்துக்காட்டான வாழ்வாக செயல்பாடாக இருக்க நமது முதல் கற்சாடியை நற்செயல்களால் நிரப்புவோம்.
2. பரிவும் பச்சாதாபமும்:
இருப்பவர் இல்லாதவர் மேல் காட்டக்கூடிய பரிவும் பச்சாதாபமும் உடையவர்களாக நாம் வாழ வேண்டும். அன்னை மரியாளுக்கு திருமண வீட்டார் மேல் இருந்தது பரிவு. இவ்விழா திருமண இரசம் இல்லாமல் நிறைவுற்றால் என்ன ஆகுமோ என்ற பச்சாதாபம். இவ்விரண்டும் சேர்ந்து அன்னை மரியின் ஆதங்கத்தை தூண்ட, செய்தி மனுமகனாம் இயேசுவின் காதுகளை எட்டியது. தனது பணிவாழ்வை துவங்க, தக்க சமயத்திற்காய் காத்துக் கொண்டிருந்த இயேசு, அன்னை மரியாளிடம் எனது நேரம் இன்னும் வரவில்லை என்று பதிலிறுத்த அடுத்த நொடி உணர்ந்து கொள்கின்றார் இதுதான் தனது நேரம் என்று. அன்று யோர்தான் நதிக்கரையில் கேட்ட குரல் இவரே என் அன்பார்ந்த மகன் இவரில் நான் பூரிப்படைகிறேன் என்று . இன்று அதே குரல் அன்னை மரியாளின் உள்ளத்தில் எதிரொலிக்கிறது. இவரே என் அன்பார்ந்த மகன் இவர் பொருட்டு இன்று நானும் என் உறவினர்களும் பெருமகிழ்வடைவோம் என்று. இக்குரலுக்கு செவிமடுத்தவராய் பரிவும் பச்சாதாபமும் கொண்டு செயலில் இறங்குகின்றார். நற்செயல்கள் அனைத்திற்கும் முதல் முல காரணம் உள்ளத்தில் சுரக்கும் பரிவும் பச்சாதாபமுமே . எனவே நமது இரண்டாம் கற்சாடியை பரிவென்னும் பண்பால் நிரப்பமுயல்வோம்.
3. விசுவாசமும் விவேகமும்:
செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம் என்பார் புனித பவுலடியார். அதற்கேற்ப தங்களது விசுவாசத்தை செயல்பாடுள்ள விசுவாசமாக மாற்றி மகிழ்வடைந்தவர்கள் இத்திருமண நிகழ்வில் பங்குபெறும் சீடர்களும் பணியாளர்களுமே. என்னைப் பின்பற்றி வா உன்னை மனிதரைப்பிடிப்பவராக்குவேன் என்று இயேசு அழைத்ததை எண்ணி அவரைப் பின்பற்றியவர்கள் சீடர்கள். அவர் உங்களுக்கு சொல்வதெல்லாம் செய்யுங்கள் என்ற அன்னை மரியாளின் வார்த்தையைக் கேட்டு பின்பற்றியவர்கள் பணியாளர்கள். எனவே அவர்களது எண்ணங்களும் ஏக்கங்களும் இயேசு இவ்வுலகிற்கு இச்சமூகத்திற்கு ஏதேனும் நல்லது கட்டாயம் செய்வார் என்ற அடிப்படையிலேயே இருந்தன. அந்த விசுவாசமே அவர்களுக்கு முதல் அற்புதத்தைக் காணும் பேற்றைப் பெற்றுத்தந்தது. நாமும் நமது மூன்றாவது கற்சாடியை விசுவாசம் என்னும் பேற்றால் நிரப்ப முயல்வோம்.
4. மகிழ்ச்சியும் மனநிறைவும்:
மகிழ்ச்சியாய் இருப்பது மனிதனின் சொத்து. இது அனைவருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. மனநிறைவுடன் இருப்பவர்களே மகிழ்வுடன் இருக்கிறார்கள். இன்றைய கானாவூர்த்திருமண விழாவில் பங்கேற்கும் அனைத்து விருந்தினர்களும் மகிழ்வென்னும் ஆடையால் தங்களை உடுத்திக் கொள்கின்றனர். காரணம் இயேசு அவர்களோடு இருக்கின்றார். இயேசுவையும் அவர் தாய் மரியாளையும் அவர்தம் சீடர்களையும் அவர்கள் தங்கள் விழாவிற்கு அழைத்திருக்கின்றார்கள். தங்கள் மகிழ்விற்கும் மனநிறைவிற்கும் அடிப்படையாக இயேசுவையும் மரியாளையும் அவர்கள் எண்ணினார்கள். அதனால் மகிழ்ச்சியை இரட்டிப்பான விதத்தில் பெற்றனர். நமது துன்ப காலத்தில் கூக்குரலிட்டு அவர்கள் உதவியை நாடும் நாம் மகிழ்ச்சி காலத்தில் இறைவனையும் மரியாளையும் அழைக்கின்றோமா? அவர்களின் அருகிருப்பை அடிக்கடி உணர்ந்தோமானால் மகிழ்ச்சிக்கும் மனநிறைவிற்கும் நமக்கு எந்த குறைவும் இராது. எனவே நமது நான்காவது கற்சாடியை மகிழ்வென்னும் குணம் கொண்டு நிரப்ப விழைவோம்.
5. மன்னிப்பும் மரியாதையும்:
மன்னிப்பு கேட்டலும் கொடுத்தலும் மனித வாழ்க்கைக்கு மிக மிக இன்றியமையாதன. இவை, மனதில் மரியாதை இருக்குமிடத்து, இயல்பாக கேட்கவும் கொடுக்கவும் தோன்றும். இந்நிகழ்வில் மன்னிப்பு என்பதைவிட, மரியாதை என்ற பண்பு மேலோங்கிக் காணப்படுகிறது. இயேசு தண்ணீரை இரசமாக மாற்றியவுடன் உடனடியாக பரிமாறச்சொல்லவில்லை மாறாக, பந்தி மேற்பார்வையாளாரிடம் காட்டச்சொல்கின்றார். அவர் சுவைத்துப் பார்த்த பின்னரே விருந்தினர்களுக்கு அந்த இரசம் பரிமாறப்படுகிறது. இறைவனின் மைந்தனே ஆனாலும் அவரவருக்குரிய பணியின் மதிப்பை மரியாதையை கொடுக்க வேண்டும் என்று உணர்ந்து செயல்படுகின்றார். நம்மிடம் இத்தகைய மரியாதைப் பண்பும் மன்னிப்பு கேட்கும் கொடுக்கும் நிலையும் குறைந்து வருவதாலேயே வாழ்வில் சுவை இழந்து போகின்றோம். எனவே நமது ஐந்தாவது கற்சாடியை மன்னிப்பு மரியாதை என்னும் நலன்களால் நிரப்புவோம்.
6. பொறுமையும் பணிவும்:
பொறுமை கடலினும் பெரிது அத்தகைய பொறுமையை அடையப்பெற்றோர் சான்றோர்களில் ஒருவராகக் கருதப்படுவர். இந்நிகழ்வில் இயேசு கற்சாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள் என்று சொன்னவுடன் ஏன் நிரப்ப வேண்டும்? எதற்காக? என்று ஒருவரும் கேட்டதாக தெரியவில்லை. மாறாக பொறுமை காக்கின்றனர். அவர் குரலுக்கு பணிந்து செயல்படுகின்றனர். வாழ்க்கையில் ஒரு சில விஷயங்களை ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும்போது சில நேரங்களில் அதற்கான நற்பலங்களைப் பெறுகின்றோம். அப்படியே பணியாளர்களும் பெற்றனர். ஆறு கற்சாடிகளும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும் என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க எத்தனை பணியாளர்கள் இருந்தார்கள்? எத்தனை முறை தண்ணீர் எடுக்க அங்கும் இங்கும் அலைந்தார்கள்? என்று தெரியவில்லை. ஆனாலும் பொறுமையுடன் நல்லது நடக்கும் என்று நம்பினார்கள் நன்மையைப் பெற்றார்கள். எனவே நாமும் நமது வாழ்வில் நன்மைகளைப் பெற,ஆறாவது கற்சாடியை பொறுமையால் நிரப்புவோம்.
இயேசு ஆறு கற்சாடிகளையும் விளிம்பு வரை நீரால் நிரப்பச்சொல்கின்றார். நாமும் நமது மனம் என்னும் கற்சாடிகளை இத்தகைய பண்புகள் கொண்டு நிரப்புவோம். அரை குறையாக அல்ல விளிம்பு வரை நிரம்ப நிரம்ப நிரப்புவோம். வண்ணமற்ற வடிவமற்ற நீர் போல் இருக்கும் நாம் இறைவனின் பார்வையும் வார்த்தையும் பட்டதும் சுவை மிகுந்த இரசமாக மாறுவோம். எனவே நமது வாழ்வும் சுவை மிகுந்த இரசமாக மாற பிறருக்கும் அந்த சுவையின் மணத்தை வெளிப்படுத்த இறையருள் வேண்டுவோம். இந்த ஆறு கற்சாடிகளில் நிரப்பப்பட்ட நீர் சுவை மிகுந்த திராட்சை இரசமாக மாறியதைப் போல நமது வாழ்வும் இந்த ஆறு பண்புகளால் நிரப்பப்பட்டு செழிப்புற விரும்புவோம். நவரசம் பொருந்திய வாழ்வாக நமது வாழ்வு இருக்க, இறைவன் தாமே நம்மை இயக்க அருள் வேண்டுவோம். சுவை மிகுந்த வாழ்வாக நமது வாழ்வும் செயலும் அமைய இறையருள் வேண்டுவோம். இறைவன் நம்மையும் நம் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக ஆமென்.