இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டவரின் திருமுழுக்கு விழா

எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்குங்கள்.

.I எசாயா 40:1-5,9-11
II. தீத்து 2:11-14, 3:4-7
III. லூக்கா 3:15-16,21-22

r />மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா
/>எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றம் தரும் ,எதிர்பார்ப்புக்களைக் குறைத்துக் கொண்டால் எதிர்வருவது தானாக நிறையும் என்று பலவற்றை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதிகமாக எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் வரும் என்றெண்ணி அதில் கவனமாக இருந்த நாட்கள் கூட இருக்கலாம் இப்படியிருக்க நமது எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்க அழைப்புவிடுக்கின்றன இன்றைய வாசகங்கள். கிறிஸ்து பிறப்பு, ஞானியர் வருகை, திருமுழுக்கு என்று மூன்று முப்பெரும் விழாக்களுடன் கிறிஸ்து பிறப்புக்காலத்தை நிறைவு செய்து பொதுக்காலத்தில் அடியெடுத்து வைக்க இருக்கும் நாம் நல்லவற்றை எதிர்பார்க்க அழைக்கப்படுகின்றோம்.
கிறிஸ்து பிறப்பு, மெசியா எங்கு பிறப்பார்? எப்படி பிறப்பார்? என்ற எதிர்பார்ப்போடு தொடங்கி ஏழ்மையின் மன்னனாக பிறந்து மண்ணகத்தில் மகிழ்ச்சி தந்ததோடு நிறைவடைந்தது.
ஞானியர் வருகை, யூதரின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே என்ற எதிர்பார்ப்போடு தொடங்கி, மாடடைக் குடிலில் மரியின் மடியில் அரியணை கொண்ட மகவின் நிறைவோடு முடிவடைந்தது.
திருமுழுக்கு விழா, யோவான் தான் மெசியாவாக இருப்பாரோ என்ற ஏக்கத்தோடு தொடங்கி இவரே என் அன்பார்ந்த மகன் இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்ற வாழ்த்தோடு வழிநடக்கிறது.
ஆக நாம் கொண்டாடிய அனைத்து விழாக்களும் ஏதோ ஒரு எதிர்பார்ப்போடு தொடங்கி நல்ல நிறைவுடன் முடிவடைகிறது. அவ்வகையில் இன்று நாம் கொண்டாடும் நமதாண்டவரின் திருமுழுக்கு பெருவிழாவும் நல்லதொரு எதிர்பார்ப்பினை நம் மனதில் உருவாக்குகிறது. இன்றைய நற்செய்தி பகுதி மூன்று நிலை மனிதர்களின் எதிர்பார்ப்பும் அவர்களது நிறைவும் பற்றி நமக்கு எடுத்துரைக்கின்றன. முதல் நிலை, இடை நிலை, கடை நிலை.
கடை நிலை;
கலிலேயா கடற்கரைப் பகுதியைச்சார்ந்த மக்கள் இந்நிலை வகையைச்சார்ந்தவர்கள். இவர்களின் எதிர்பார்ப்பு, மெசியா யாராக இருக்கும் என்பதில் இருந்தது. யோவானாக இருக்குமோ ? இவர் தான் மக்களை மனம்மாற்றுகின்றார். ஆனால் ஆடை உணவு உறைவிடம் அனைத்தும் மிக மிக எளிமையாக இருக்கின்றதே என்ற எண்ணம் இருந்திருக்கலாம். இவர்களது எதிர்பார்ப்பு வெளிப்புறத்தோற்றத்தையும் செயல்பாட்டையும் பொறுத்ததாக இருந்தது. ஆனாலும் நன்மையை நோக்கிய ஒரு எதிர்பார்ப்பாக இருந்ததால் அதுவும் நிறைவேற்றப்படுகிறது. மெசியா யார் என்று கண்டு கொள்ளும் ஒரு வாய்ப்பினைப் பெறுகின்றனர். யோவான் தான் இல்லையேன்று சொல்லி இயேசுவைப் பார்த்து இவரே கடவுளின் ஆட்டுக்குட்டி என்று சுட்டிக்காட்டுகின்றார். இவர்களது எதிர்பார்ப்பின் நிலைக்கேற்ப நிறைவு செய்யப்படுகின்றார்கள்.
இடை நிலை :
இவ்வகை நிலையில் திருமுழுக்கு யோவான் இருக்கிறார். ஆண்டவராகிய மெசியாவிடம் நான் திருமுழுக்கு வாங்க வேண்டும் என்று எண்ணி எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இயேசுவே இவரிடம் திருமுழுக்கு வாங்க வருகின்றார். தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்னும் மறைநூல் வரிகள் இவர் தம் வாழ்வாலும் வாக்காலும் நிறைவேற்றப்படுகின்றது. இவரது எதிர்பார்ப்பு உள்ளம் சார்ந்ததாய் இருக்கின்றது. நான் தண்ணீரால் திருமுழுக்கு கொடுக்கின்றேன் இவர் தூய ஆவியினால் கொடுப்பார் என்று எதிர்பார்த்து அவருக்கு முன்னோடியாக இருந்து முன்னுரை அளிக்கின்றார். விளைவு அந்த தூய ஆவியின் வல்லமையையும் குரலையும் நேரில் கண்டு அனுபவிக்கும் நிலை பெற்றார். அதில் நிறைவும் பெற்றார்.
முதல் நிலை ;
இவ்வகை முதல் நிலையில் இயேசு இருக்கின்றார். கடவுளின் மகனான அவர் தன்னை தாழ்த்தி ஒரு சாதாரண மனிதர் போல் திருமுழுக்கு பெற எண்ணினார். பாவிகளோடு பாவிகளாக தன்னையும் இணைத்து தாழ்த்த எதிர்பார்த்தார். கடவுளோ இவரின் எண்ணத்தையும், செயலையும் உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் அதை உடன் இருப்போரும் உணரும்படிச் செய்தார். பாவியைப் போல இருக்க நினைத்தவர் மேல் பரிசுத்த ஆவி பொழிந்து இவரே என் அன்பார்ந்த மகன் என்று அறிக்கையிடுகின்றார். இவர் தனி ஆள் அல்ல நாங்கள் மூவர் என்பதை எண்பிக்கும் வகையில் தூய ஆவியை புறா வடிவில் அவர் மேல் தங்கச்செய்தார். அனைவர் முன்னிலையிலும் கடவுளின் மகன் என்று அழைக்கப்படும் பேற்றினைப் பெறச்செய்கின்றார்.
ஆக இந்த திருமுழுக்கு பெருவிழா நமக்கு விடுக்கும் அழைப்பு இதுதான். எதிர்பாருங்கள் கடை நிலை மனிதர் போல் அல்லாமல் முதல் நிலை மனிதர் போல. ஏனெனில் நமது எண்ணங்களும் சரி எதிர்பார்ப்புக்களும் சரி எப்போதும் உயர்ந்தவகையாக இருக்க வேண்டும். நமது எதிர்பார்ப்புக்களை இரட்டிப்பாக்குவோம். இதனால் வரும் பலன்கள் நமக்கு இரட்டிப்பான மகிழ்வைத்தரும். யோவான் போல எதிர்பார்ப்போம் இயேசுவை சுட்டிக்காட்டும் மனிதர்களாக மாறலாம் . இயேசு போல எதிர்பார்ப்போம் இவரே என் அன்பார்ந்த மகன் என்று அழைக்கப்படும் பேறுபெறலாம். எனவே நமது நல்ல எதிர்பார்ப்புக்களை இரட்டிப்பாக்குவோம். நிறைவான பலன்களை அடைவோம். இறைவன் நம்மையும் நம் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக ஆமென்.