இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு

பற்றற்றான் பற்றினை பற்றுக....

I. பாரூக்கு 5:1-9
II. பிலிப்பியர் 1:4-6,8-11
III. லூக்கா 3:1-6

வருகைக்காலம் ஞாயிறு.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு... என்பது திருக்குறள் வரிகள்
பற்றில்லாத பரமனின் பற்றை நாம் பற்றிக் கொள்ள வேண்டும். எதற்காக??? பற்றில்லாமல் வாழவேண்டும் என்பதற்காக...... என்பதே அக்குறளின் பொருள் . நமது பற்றுக்கள் என்ன? நாம் எதை விடுத்து எதை பற்றிக் கொள்ள வேண்டும் என்பதை பற்றிய விழிப்புணர்வே திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறாகிய இன்று இறைவன் நமக்கு விடுக்கும் அழைப்பு. இன்றைய ஞாயிறு திருமுழுக்கு யோவான் ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது . காரணம் இயேசுவின் முன்னோடியாக இருந்து அவருக்கு முன் வழியை ஆயத்தம் செய்தவர்களில் முதன்மையானவர் திருமுழுக்கு யோவான். எனவே தான் இயேசு பிறப்புக்கு நம்மை நாமே தயாரித்துக் கொண்டிருக்கும் இந்நாட்களில் யோவானின் பற்றற்றை வாழ்வை நாமும் முன்மாதிரிகையாகக் கொண்டு வாழ அழைக்கின்றன இன்றைய வாசகங்கள்.
திருமுழுக்கு யோவான் ஒட்டக முடியை ஆடையாக அணிந்திருந்தார், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் உணவாக உண்டு வந்தார், பாலைவனத்தில் தங்கி வாழ்ந்துவந்தார் என்பது எல்லாம் நாமறிந்த ஒன்றே. இன்றைய நாளில் அவர் துறந்த பற்றுகளைப் பற்றி அறிந்து அவர் போல பற்றற்றவர்களாய் வாழ் முற்படுவோம். உறவுப்பற்று, ஊர்ப்பற்று, குலப்பற்று இவை மூன்றையும் துறந்தவர் திருமுழுக்கு யோவான் என்ற தலைப்புக்களின் கீழ் சிந்திக்க உங்களை அழைக்கின்றேன்.
உறவுப்பற்றைத் துறந்தவர்:
வயது முதிர்ந்த காலத்தில் செக்கரியா, எலிசபெத் என்னும் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர். எனவே ஒட்டுமொத்த பாசத்தையும் அவர் மேல் காண்பித்திருப்பர் அவர் தம் பெற்றோர். உற்றார் உறவினர்கள் என அனைவரின் கண்களுக்கும் விலைமதிக்கப்பட முடியாத ஒரு பெரும்பொருளாக இருந்திருப்பார். கடவுளின் அருளால் பிறந்தவர், இவர் வாழ்வு எப்படி இருக்குமோ என்ற எல்லோரின் எதிர்பார்ப்பினால் நிறைந்ததாய் இவரின் வாழ்வு இருந்திருக்கும் . இருப்பினும் அதை அனைத்தையும் துறந்து, வாழத்துணிகிறார். இவரைப் போல நம்மால் நம் உறவுகளை இறைவனுக்காய் இறைப்பணிக்காய் துறக்க முடியுமா? துறத்தல் என்பது முழுமையாக துறப்பது..... திருமுழுக்கு யோவான் போல. நாமும் துறக்கிறோம் நமது உறவுகளை. எப்போது??? நமக்கு பிடிக்காத செயல்களை அவர்கள் செய்யும் போது.. நமது கருத்துடன் ஒத்துப் போகாதபோது.... நாம் நினைத்தது போல் அவர்கள் நடக்காத போது.... இப்படி தான் நாம் நம் உறவுகளை துறக்கிறோம். செல்வம், பதவி, புகழ் இவற்றை முன்னிருத்தி தான் இப்போதைய நமது உறவுகள் எல்லாம் புதுப்பிக்கப்படுகின்றன. அவர்களுடனான உறவு வலுப்பட எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராயிருக்கிறோம். நம்மை விரும்புபவர்களின் மாண்பை உணராது, நாம் விரும்புபவர்களை நாடி தேடி ஓடுகிறோம். இந்தப்பற்றினை துறக்கச்சொல்கிறார் இறைவன். என் பெயரால் நீங்கள் எதைத் துறந்தீர்களோ அதை நூறு மடங்காகப் பெற்றுக் கொள்வீர்கள் என்கிறார் இறைவன். திருமுழுக்கு யோவான் போல நமது வாழ்வின் நோக்கம் என்ன என்பதை அறிந்து அதற்கு தடையாக இருப்பவற்றை தாண்டி செல்ல அருள் வேண்டுவோம்.
ஊர்ப்பற்றைத் துறந்தவர்:
சொந்த நாட்டை விட்டு அயல் நாட்டில் பிழைப்பிற்காக இருக்கும் நபர்களுக்கு தெரியும் தன் சொந்த ஊரின் அருமை. உற்றார் உறவினர், ஊரார் என மகிழ்வினை அள்ளித்தரும் அத்தனை சொந்தங்களையும் விட்டு தனியே வாழ்வது என்பது வெறுமை.. இத்தகைய தனிமையை தானே தேடிச்செல்கிறார் திருமுழுக்கு யோவான். தான் வளர்ந்து மகிழ்ந்த ஊர். தன்னுடன் விளையாடி திரிந்த நண்பர்கள் கூட்டம், பார்த்து பரவசம் அடைந்த ஊரின் எழில் மிகு இடங்கள் என அனைத்தையும் துறந்து பாலைவனத்திற்கு செல்கிறார். இருத்தலிலிருந்து இல்லாமைக்கு தன்னை அழைத்துச்செல்கிறார். செழுமையிலிருந்து வெறுமைக்கு செல்கிறார். இத்தகைய வெறுமையும் தனிமையும் தன்னை தன்னுடைய இலக்கை நோக்கி இட்டுச்செல்லும் என்று நம்புகிறார். சிறுவயதில் தன் ஊர் மக்களை தான் தேடிச்சென்று பார்த்து மகிழ்ந்த காலம் போய் . இப்போது தான் தனியே சென்று அவர்களை தன்னிடம் வரவழைக்கிறார். இது என் ஊர் என்று சொன்ன காலம் கடந்து , இவன் எங்கள் ஊர்க்காரன் என்று பெருமைப்படும் அளவுக்கு மாற்றம் பெருகின்றார். நம்மால் நம் ஊர் மகிழ்கின்றதா? இல்லை நம் ஊரால் ஊர் மக்களால் நாம் மகிழ்வடைகின்றோமா சிந்தித்து செயல்படுவோம்.
குலப்பற்றைத் துறந்தவர்:
தந்தை செக்கரியா எருசலேம் ஆலயத்தில் குருவாகப் பணியாற்றியவர். தந்தை பணியை மகன்கள் செய்வது வழக்கம். ஆனால் திருமுழுக்கு யோவான் குருவாக தன்னை , தனது பணியை ஆலயத்திற்குள் மட்டும் நிறுத்திவைக்க நினைக்கவில்லை. அவர் நினைத்து இருந்தால், செல்வ வளத்துடனும் புகழ் மரியாதையுடனும் எருசலேம் தேவாலயத்தில் பணியாற்றி இருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக ஊரை விட்டு வெளியே உள்ள மக்களும் தன்னை நாடி வர வேண்டும், தான் கூறும் அறிவுரையின்படி நடந்து மனமாற்றம் அடைய வேண்டும் என விரும்புகின்றார். அதன்படி தன்னுடைய குலத்தொழிலை விட்டு இறைப்பணியாற்ற செல்கிறார். நாம் எப்படி??? நல்ல வேலை, கை நிறைய பணம், கொஞ்சம் புகழ், வீடு நிலம் நகை .... இதோடு நமது வாழ்க்கை நிறைவடைந்துவிட்டது என்று எண்ணுகிறோமா??? இவை அனைத்தும் உண்மையில் நமக்கு நிறைவுதந்துவிடுமா??? இதுதான் எனது வாழ்க்கை என்று எண்ணி ஒரு குறுகிய வட்டத்திற்குள் நம் வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா ???சிந்திப்போம்
திருமுழுக்கு யோவானின் பற்றற்ற வாழ்வை பற்றி தியானித்துக் கொண்டிருக்கக்கூடிய இவ்வேளையில் அவரைப் போல நாமு பற்றற்றவர்களாய் வாழ முற்படுவோம். இன்றைய தினம் ஏற்றப்பட்ட திருவருகைக்காலத்தின் இரண்டாம் மெழுகுதிரி நம் வாழ்வில் இருக்கும் தேவையற்ற பற்றுக்களை பற்றி எரியச் செய்யட்டும். இதன் மூலம் பற்றில்லாத பரமன் மேல் தூய்மையான பற்று கொண்டவர்களாக வாழ முற்படுவோம். அப்போது நமது தீய எண்ணங்கள் என்னும் பள்ளத்தாக்குகள் நல்லெண்ணங்களால் நிரப்பப்படும். மலை குன்றென திகழும் நமது மேட்டிமை குணம், தாழ்ச்சி என்னும் பண்பால் தாழ்த்தப்படும். கோணலான நமது வாழ்வு முறை அவரின் வழிகாட்டுதலால் நேரானதாக மாறும். கரடுமுரடான நமது மனம் சமாதானமானதாக மாறும் எனவே ஆண்டவருக்காக நமது வழியை ஆயத்தம் செய்ய பாதையை செம்மைப்படுத்த, பற்றற்றான் பற்றின் மேல் பற்று கொண்டு வாழ்வோம் ... இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்.