இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு

தூய்மைச் சாட்டை

விடுதலைப்பயணம் 20:1-17
1 கொரிந்தியர் 1:22-25
யோவான் 2:13-25

புறத் தூய்மை நீரால் அமையும் அகத் தூய்மையோ வாய்மையினால் அமையும் என்பதனை இயேசு இன்றைய நற்செய்தியில் தன் செயல் மூலம் காட்டுகிறார். எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்துகிறார். அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவரது வாழ்நாளில் பலமுறை எருசலேம் தேவாலயத்துக்குச் சென்றிருந்தாலும் இன்று அதனைத் தட்டிக் கேட்கின்றார். ஒருவர் செய்யும் செயலைத் தவறு என சுட்டிக்காட்டுவதற்கு துணிவும் தைரியமும் அதிகம் தேவை . அதிலும் சுட்டிக்காட்டுபவருக்கு என்று ஒரு நிலை வேண்டும். அப்போது தான் அவர் கூறும் கருத்து, தவறு செய்பவன் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இல்லை என்றால் அதனை யாரும் ஒரு பொருட்டாக கூட ஏற்கமாட்டார்கள்.

உதாரணத்திற்கு நமது நடைமுறை வாழ்வையே எடுத்துக் கொள்வோம். நாம் ஓர் ஆலயம் அல்லது பொது இடத்தில் வணிகம் செய்யும் வியாபாரிகளை /வணிகர்களை இடைக்கச்சை கொண்டு அடித்தோம் என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்வார்கள் நம்மை? நாம் ஒருவரை அடித்தால் அவர்கள் பலர் சேர்ந்து நம்மை அடிப்பார்கள் அல்லது காவல் நிலையத்திற்கு நம்மைக் கையோடு அழைத்துச் செல்வார்கள். அல்லது புத்தி பேதலித்துவிட்டது என்று முத்திரை குத்தி அனுப்பிவிடுவர். இதில் மூன்றில் ஒன்று கட்டாயம் நடக்கும்.

இயேசுவின் வாழ்வில் அவர் பிறந்த சில நாட்களில் விருத்தசேதனம் செய்ய எருசலேம் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது" பிற இனத்தார்க்கு இருளகற்றும் ஒளி" என சிமியோன் இறைவாக்கினரால் புகழப்பட்டார். 12 வயதில் பெற்றோருடன் திருவிழா கொண்டாடச் சென்றபோது அறிவார்ந்த கேள்விகள் கேட்டும், விளக்கங்கள் அளித்தும் அறிஞர்களால் பாராட்டப்பெற்றார்.
இறுதியாக இப்போது சீடர்களுடன் பாஸ்கா விழா கொண்டாடச் சென்ற நேரத்தில் கோவிலின் தூய்மைக்காக சாட்டை எடுக்கிறார். இப்போது என்ன பேசினார்கள் மக்கள்.?
இதுவரை நன்றாகத் தானே இருந்தார்.என்ன ஆயிற்று இவருக்கு? இவர் பெற்றொர் கூட நம்மிடம் தானே மாடப்புறாக் குஞ்சுகளை வாங்கிக் காணிக்கையாகக் கொடுத்தனர்.? இப்போது மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? என்று சிலர் பேசினர். ஆனால் அதையும் தாண்டி "இவர் மெசியா, அற்புதங்கள் பல செய்பவர். நோயாளிகளைக் குணப்படுத்துபவர். பேய்களை அடித்து விரட்டுபவர் என்றெல்லாம் கேள்விப்பட்டு அவரைப் பின்தொடர்ந்த மக்கள் பலர், இவர் நல்லவர் இவர் இப்படி செய்தால் இதில் ஏதோ ஒரு நன்மை இருக்கிறது" என்று நம்பினர். இல்லாவிட்டால் அனைவரும் மீண்டும் அவரைத்தேடி சென்றிருக்க மாட்டார்கள். ஆம் அந்த ஒரு நம்பிக்கையை மக்களிடத்தில் விதைக்கத் தான் இயேசு இத்தனை நாள் காத்திருந்திருப்பார் என்று எண்ணுகிறேன். தவறைச் செய்பவன் யாராக இருந்தாலும் அதைச் சுட்டிகாட்டுபவன் சரியானவனாக இருக்க வேண்டும் . இல்லையெனில் எதிர்ப்புக் குரல் எடுபடாதக் குரலாகப் போயிருக்கும். இன்று நாமும் நமது வாழ்வில் பலவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் நாம் தெரிவிக்கும் எதிர்ப்பு நியாயமானது தான் ஆனால் நாம் நின்று சொல்லும் இடம் தான் சரியானதா என்று பார்க்க வேண்டும் . கூரைக்கு அடியில் நின்று கோழி கொக்கரித்தால் ஊர் எழும்பாது மாறாக கூரைக்கு மேல், வேண்டுமானால் அதைவிட உயரமான இடத்தில் நின்று கொக்கரித்தால் மட்டுமே தூங்குபவர்களை துயில் எழும்பச்செய்ய முடியும். இயேசு காலம் வரும் வரைக் காத்திருந்தார். தன்னை யார் என்று காட்டினார். பின் தன் செயல்கள் மூலம் தான் யார் என வெளிப்படுத்தினார். சாதாரணத் தொழுகைக் கூடத்தில் தொடங்கவில்லை . எருசலேம் தேவாலயத்தில் தொடங்குகிறார். இப்படிச்செய்வதனால் தனக்கு ஆபத்து என்பதை நன்கு உணர்ந்திருந்தும் அவ்வாறு செயல்படுகிறார். ஏனெனில் சலித்துக் கொள்பவன் தான் ஒவ்வொரு வாய்ப்பிலும் ஆபத்தை மட்டுமே காண்பான். இயேசுவோ சாதிப்பவர் எனவே ஒவ்வொரு ஆபத்திலும் வாய்ப்பினைக் கண்டு கொள்கிறார்.

என் தந்தையின் இல்லத்தை சந்தை ஆக்காதீர்கள் என உரக்கச் சொல்லி தன் உரிமையை உலகறியச் செய்கின்றார். பழைய ஏற்பாட்டில் அகத்தூய்மை வாழ்க்கை வாழ யாவே கடவுள் பத்து கட்டளைகளை இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கிறார். அகத்தூய்மையோடு வாழ வேண்டும் என அறிவுறுத்தும் தந்தை கடவுளின் இல்லமே புறத்துய்மையின்றி இருப்பது கண்டு பொங்கி எழுகிறார் புதிய ஏற்பாட்டு இயேசு. தனது தூய்மைச் செயலை உடனடியாக செய்யத் துவங்குகிறார்.

கயிற்றுச்சாட்டை: சிறு பிள்ளையில் தோசை சுடும் கரண்டியால் அடிவாங்கிய அனுபவம் எனக்கு பல உண்டு. ஏதாவது தவறு செய்தால் எடு அந்த கரண்டிய என்று சொன்னாலோ அல்லது கையில் எடுத்து வைத்திருந்தாலோ போதும் எங்கும் நகர மாட்டோம் . நான் மட்டுமல்ல என் உடன் பிறப்புக்களும் அப்படியே .அது ஒரு வகையான தூய்மையான பயம் என்றே கூறலாம். இயேசு கயிற்றினால் ஒரு சாட்டை பின்னி அவர்களை விரட்டுகிறார் . இத்தகைய தூய்மையான ஒரு பயத்தையே அவர்களிடத்தில் வர வைக்கிறார் . சாட்டை கொண்டு அடித்தாரா என்று தெரியவில்லை. ஆனால் விரட்டுகிறார். பிறர் பணத்தில் பாதி லாபம் பார்த்து அமர்ந்து பணம் சம்பாதிக்கும் நாணயம் மாற்றுவோரின் மேசைகளைக் கவிழ்த்துப் போடுகிறார். தாங்கள் வளர்த்த ஆடு மாடு கோழி புறா போன்றவற்றை விற்போரிடம் அதை எடுத்துப்போகச்சொல்கிறார். கோபமே கொண்டாலும் இடம் அறிந்து செயல்படுகிறார். இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு விடுக்கும் அழைப்பு செய்தி இதுதான், தவறைச்சுட்டிக்காட்டத் தயங்காதே. எதிர்ப்பே ஆனாலும் சரியான இடத்திலிருந்து தெரிவி. தூய்மையான பயம் கொள்.

அபாயம் வரும் என்று பயந்து கொண்டிருப்பதை விட அதை எதிர்நோக்கி சந்திப்பதே நல்லது என உணர்ந்து வாழ்வோம். அகத்தூய்மையை விரும்பும் இறைவன் புறத்தூய்மையையும் விரும்புகிறார் என்பதை நன்கு உணர்ந்து செயல்படுவோம். நமது உள்ளங்களில் இருக்கும் தேவையற்ற குப்பைகளை இயேசுவின் துணிவு கருணை என்னும் சாட்டை கொண்டு விரட்டுவோம் .இறைத்துணை என்றும் நம்மோடும் நம் குடும்பத்தினர் அனைவரோடும் இருப்பதாக ஆமென்.