இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

காத்திருக்கின்றோமா? யாருக்காக?

எரேமியா 33:14-16
1 தெசலோனிக்கர் 3:12-4:2
லூக்கா 21:25-28,34-36

"கொன்னூர்த் துஞ்சினும் யாந்துஞ்சலமே" என்பது குறுந்தொகை பாடல் வரிகளில் ஒன்று. தலைவனுக்காக காத்திருக்கும் தலைவியோடு சேர்ந்து வருந்தும் தோழியின் கூற்று இது. ஊரே தூங்கியிருந்தாலும் நாம் மட்டும் தூங்காது தலைவனுக்காக காத்திருக்கிறோம் என்பதே இப்பாடலின் பொருள் . நாமும் நமது தலைவன் இயேசுவுக்காக காத்திருக்கும் தருணம் தான் இத்திருவருகைக்காலம். இக்காலம் முழுதும் அனைவர் மனதிலும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி . காரணம் கிறிஸ்து பிறப்பு பெருவிழா. நான்கு வாரத்தயாரிப்பில் ஒவ்வொரும் வாரமும் ஒரு வேலை என்று பிரித்து விழாவினை சிறப்பிப்போம். உதாரணத்திற்கு குடில் தயார் செய்தல், வீட்டை வெள்ளை அடித்து புதுப்பித்தல், பலகாரம் செய்தல் புதுத்துணி எடுத்தல் என்று பல வேளைகளை நாம் முன் தயாரிப்பாக செய்வோம். இவை மட்டும் போதுமா? நமது முன்னேற்பாடுகளும் காத்திருப்புக்களும் வெளிப்புறத் தயாரிப்புக்களாக மட்டுமே இருந்துவிடக் கூடாது. அதையும் தாண்டி நமது காத்திருப்பு தனிப்பட்டதாக, உள்ளம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று அழைக்கிறார் இறைவன்.
இப்போதெல்லாம் காத்திருப்பு என்பது அடியோடு இல்லாமல் போய்விட்டது. பசித்த பின் சமைத்து உண்ட காலம் போய், துரித உணவு கடைகளில் வரிசையில் நிற்கும் காலமாகிவிட்டது. பேருந்திற்கு காத்திருந்த காலம் போய், மகிழுந்து வண்டிகளை நாடும் காலம் வந்துவிட்டது. சிலர் பொழுதை போக்குவதற்காக பார்க்கும் காணொளிகளைக் கூட நிதானமாக காத்திருந்து பார்ப்பது கிடையாது. எவ்வளவு நேரம், கடைசியில் எப்படி இக்காணொளி முடிகிறது என்பதை முங்கூட்டியே அறிய, சிகப்பு வரியை கடைசி வரை இழுத்து பார்த்துவிடுவது. ஏனெனில் எல்லாமே நமக்கு உடனடியாக நடக்க வேண்டும். பிறப்பு வளர்ப்பு, உணவு, படிப்பு, வேலை, வருமானம் சொத்து என எல்லாமே துரிதமாக இருக்க வேண்டும் என நினைத்தால் இறப்பும் துரிதமாக வந்துவிடும் அபாயம் இருக்கிறது. எனவே காத்திருப்போம் காத்திருக்க பழகுவோம்... நிற்க.....
திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிற்றில் அடியெடுத்து வைத்திருக்கும் நாம் எந்த நிலை காத்திருப்பில் இருக்கின்றோம் என்பதை சிந்திக்க இன்றைய நாளும் வாசகங்களும் நமக்கு அழைப்புவிடுக்கின்றன. நமது காத்திருப்பு எப்படிப்பட்டது? ஆர்வமுள்ள காத்திருப்பா, அணுகுமுறை காத்திருப்பா, சவாலான காத்திருப்பா, என்னும் தலைப்புக்களில் நம்மை நாமே மதிப்பீட்டாய்வு செய்ய உங்களை அழைக்கின்றேன்.
அணுகுமுறை காத்திருப்பு:
நமது வீடுகளுக்கு விருந்தினர்களோ உறவினர்களோ வரும்போது அவர்களுக்காக நம்மையும் நமது வீட்டையும் தூய்மை செய்யும் நிகழ்வுக்கு பொருந்தும். வருபவர்களை எப்படி வரவேற்பது , என்ன சமையல் செய்து அவர்களை நிறைவிப்பது, எப்படிப்பட்ட பரிசுப் பொருள்கள் கொடுத்து மகிழ்விப்பது, என்றெல்லாம் பலவாறாக எண்ணி அவர்களை மையமாக வைத்து நமது செயல்களை செய்வோம். (இப்போதெல்லாம் இதுபோல் இல்லை . எளிமையாக, வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்து , உணவகத்திற்கு அழைத்து சென்று, விரும்பியதை தேர்ந்தெடுத்து உண்டு வீடு திரும்புதல் தான் பழக்கத்தில் பெரும்பாலும் உள்ளது ) விருந்தினர்களை மகிழ்வித்து செய்யும் இச்செயல்கள் எல்லாம் நமக்கும் அவர்களுக்குமான உறவினை பலப்படுத்த, ஆழப்படுத்துவதற்காக செய்யப்படுபவை. விவிலியத்தில் இதற்கு உதாரணம் மார்த்தா மரியாள் இவர்களின் எதிர்பார்ப்பு. இயேசுவுடனான அவர்களின் உறவினை ஆழப்படுத்த தங்களையே தயார் செய்தவர்கள் இவர்கள். சாதாரண மனிதர்களுடனான உறவிற்கே இவ்வளவு ஏற்பாடுகள் தேவைப்படுகிறதென்றால் இறைவன் அவர்தம் மகனை நம்மிடம் அனுப்ப இருக்கின்றார் . அப்படியென்றால் நமது ஆயத்த ஏற்பாடுகள் எத்துணை சிறப்பு மிக்கதாக இருக்க வேண்டும். நமது வீட்டை அல்ல, நமது மனத்தை தூய்மை செய்ய வேண்டும். நற்செயல்கள் கொண்டு அவரை வரவேற்க வேண்டும். பிறர் உதவிப் பணிகள் கொண்டு அவருக்கு மகிழ்வினை தரவேண்டும். இவ்வாறாக அவருக்கும் நமக்குமான உறவு பலப்பட ஆழப்பட தேவையான அணுகுமுறை செயல்களை செய்து அவருக்காக காத்திருக்க நம்மை அழைக்கின்றார்.
ஆர்வமுள்ள காத்திருப்பு;
மேற்படிப்புக்காக பள்ளி கல்லூரியில் இருந்து வரும் செய்திக்காக காத்திருத்தல், திருமண நாளுக்காக காத்திருத்தல், குழந்தைக்காக காத்திருத்தல் இவை அனைத்தும் ஆர்வமுள்ள காத்திருப்பு. பெரும்பாலும் இவ்வகைக் காத்திருப்பு காலம் எல்லாம் கனவில் தான் கடந்து போகும். நான் எதிர்பார்க்கும் பள்ளி கல்லூரியில் இடம் கிடைத்தால் நன்றாக படிப்பேன். நிறைய மதிப்பெண்கள் எடுப்பேன் என்றும், இந்த திருமணம் நடந்தால் அதன் பின் நன்றாக வாழ்வேன். எல்லோரையும் அன்பு செய்து வாழ்வேன். இந்த குழந்தையை நன்றாக வளர்ப்பேன். எல்லா கலைகளையும் கற்றுக் கொடுப்பேன். என்று கனவிலே அந்த வாழ்க்கையை பாதி வாழ்ந்துவிடுவார்கள். ஆர்வத்தோடு அதன்பின் நடக்க இருப்பவற்றை நல்லமுறையில் செய்ய காத்திருக்கும் காலம் அது. விவிலியத்தில் ஊதாரி மைந்தனின் தந்தை இதற்கு ஒரு நல்ல உதாரணம். தன் மகனின் வருகையை தூரமாக நின்று எதிர்பார்த்தார். மகன் திரும்பி வந்தவுடன் அவனது எதிர்பார்ப்பிற்கும் மேலாக அவனை அன்பு செய்து அவனுடனான உறவை புதுப்பிக்கிறார். அதனால் தான் இரக்கமுள்ள தந்தை என்று அழைக்கப்படுகின்றார். இத்தகைய காத்திருப்பு நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். நாமும் நம் அன்பர் இயேசுவின் வருகைக்காக காத்திருக்கின்றோம். நமது காத்திருப்பும் அவர் வந்த பின் என்ன மாற்றம் எல்லாம் நம்முள் நிகழப்போகிறது என்ற ஆர்வத்தை மையமாக வைத்தே இருக்க வேண்டும் என இறைவன் நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.
சவாலான காத்திருப்பு:
தேர்வு நாளுக்காக நம்மையே தயார் செய்தல், போட்டிகளுக்காக நம்மை ஆயத்தம் செய்தல், போன்றவை இதில் அடங்கும். எல்லாவற்றையும் படித்து தயார் செய்து இருந்தாலும் ஒருவித பய உணர்வுடனே அந்நாளை நாம் எதிர்கொள்வோம். இதை நான் எப்படியாவது நல்ல முறையில் எதிர்கொள்ள வேண்டும் என்னும் ஒரு ஆர்வத்துடன் கூடிய பயம் அதில் இருக்கும். கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும் எனும் இலட்சிய நோக்கு அதில் இருக்கும். பெரும்பாடுள்ள பெண் இதற்கு ஒரு சான்று. இயேசுவை கண்டால், அவரது ஆடையின் நுனியைத் தொட்டால் தன் நோய் நீங்கும் என்று உறுதி கொண்டாள். ஆனால் அவரை அருகில் நெருங்குவது அவளுக்கான சவால். தன்னை யாரும் பார்த்து விடக்கூடாது, ஆனாலும் ஆடையைத் தொட வேண்டும் என்று எண்ணினாள். பயத்துடனும் ஆர்வத்துடனும் இயேசுவை அணுகினாள். வெற்றி கொண்டாள். நாமும் இயேசுவை எதிர் கொண்டு காத்திருக்கின்றோம். இதனால் நமது பழைய வாழ்வு மாற்றமடையலாம். புதுவிதமான செயல்பாடுகள் நம்மில் ஏற்படலாம். நாம் இத்தகைய சவாலுக்கு தயாரா ? நமது வாழ்வில் இருக்கும் தேவையற்ற எண்ணங்களும் செயல்களும் நம்மை விட்டு நீங்க, புது மனிதனாக மாற்றமடைய சவாலை எதிர்கொண்டு நாம் காத்திருக்க இறைவன் நம்மை அழைக்கின்றார்.
இவ்வாறாக நமது காத்திருத்தல் ஆர்வமுள்ளதாக அணுகுமுறையானதாக சவாலானதாக இருக்கின்றதா என்பதை சிந்தித்து பார்க்க இன்றைய நாளும் இத்திருவருகைக்காலமும் நமக்கு அழைப்பு விடுக்கின்றது. காத்திருப்பவன் கண்டடைவான். நாம் காத்திருந்தோமானால் நாமும் கண்டடைவோம். ஆனால் எப்படி காத்திருக்கிறோம் என்பது ஒவ்வொருவரைப் பொருத்தது. காத்திருத்தல் அனுபவம் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. அதை அனுபவித்தால் மட்டுமே அந்த மகிழ்வை உணர முடியும். நாமும் காத்திருப்போம் நமது வாழ்வின் முறைகளை நல்ல முறையில் மாற்ற வரும் நம் பாலன் இயேசுவிற்காக காத்திருப்போம். நமது காத்திருப்பு இன்று முளைத்து நாளை மறையும் காளான் போன்ற திரைத்துறை, அரசியல் தலைவர்களின் வருகைக்காக இல்லாமல் நம்மை படைத்து மீட்க காத்திருக்கும் ஆண்டவனுக்காக மட்டுமே இருக்கட்டும். காத்திருப்போம் காலம் கடந்த கருணாமூர்த்திக்காக.... கொன்னூர்த் துஞ்சினும் யாந்துஞ்சலமே.... என்னும் வரிகளுக்கேற்ப காத்திருப்போம் ...... இறைவனின் அருளும் ஆசீரும் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தாரோடும் இருப்பதாக ஆமென்.