இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் 32ம் ஞாயிறு.

தானமா? தர்மமா?

I. 1 அரசர்கள் 17:10-16
II. எபிரேயர் 9:24-28
III. மாற்கு 12:38-44

<

கேட்டு பெறுவது தானம். கேட்காமல் கொடுப்பது தர்மம். இரண்டிற்கும் சிறு நூலிலை வேறுபாடு தான் என்றாலும் விளங்கவைக்கும் பொருள் பெரிது. நம்மில் பலரும் தானங்கள் பல செய்து இருப்போம். ஆனால் தர்மம் ஒரு சிலரே செய்து இருப்போம். தான தர்மங்களில் பல வகைகள் உண்டு. அவை அன்ன தானம் பொருள் தானம், பண தானம், கண் தானம் இரத்த தானம், உடலுறுப்புக்கள் தானம், என சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது இதனோடு நீர் தானத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இருப்பவன் இல்லாதவனின் நிலை அறிந்து பகிர்வது தர்மம். இல்லாதவன் இருப்பவனிடம் கேட்டுப் பெறுவது தானம். நாம் யார்? தானம் செய்பவர்களா? இல்லை தர்மம் செய்பவர்களா? என்று சிந்திக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன.
தானம் செய்யும் சாரிபாத் பெண்
இன்றைய முதல் வாசகத்தில் சாரிபாத் கைம்பெண் தானம் செய்பவராக காட்டப்படுகிறார். அன்னத்தையும் நீரையும் எலியா இறைவாக்கினருக்கு தானம் செய்யும் நபராகக் காட்டப்படுகிறார். தன்னிடம் எதுவும் இல்லை . எல்லோரையும் போல தானும் தன் மகனும் பசியால் மடியப் போகிறோம் என்று எண்ணி இருந்தாலும், வாழும் கடவுளின் மேல் நம்பிக்கைக் கொண்டு, அதை எலியா இறைவாக்கினருக்கு கொடுக்க முனைகின்றார். இதுதான் உண்மையான தானம். தானத்தின் உச்ச நிலையும் இதுதான். தனக்கே இல்லை என்ற நிலை வரும் வரை பிறருக்குக் கொடுத்துக் கொண்டே இருப்பது. அந்த உச்ச நிலையை எட்டுகிறார் அப்பெண்.
தண்ணீர் கேட்டதும் மறுவார்த்தை பேசாது எடுக்கச்சென்றவர், அப்பம் கேட்டதும் வாழும் கடவுள் மேல் ஆணையிட்டு சொல்கின்றார் தன்னிடம் அப்பம் இல்லையென்று. இருப்பதை பகிர முனைந்தவர், இல்லாததை வெளிப்படையாகச்சொல்லவும் தயங்கவில்லை. நாம் எப்படி ?? இருப்பதை நாம் இல்லாதவரோடு பகிர்கின்றோமா? நம்மிடம் இல்லாததை இல்லை என்று ஒப்புக் கொள்கின்றோமா? சிந்திப்போம். இப்போது பெரும்பாலும் இல்லாததை இருப்பது போல காட்டுவது தான் நாகரிகமாக கருதப்படுகிறது. நமது இயல்பையும் இயலாமையையும் இறை முன் வெளிப்படுத்துவோம் சாரிபாத் நகர் கைம்பெண் போல...
தனக்கும் தன் மகனுக்கும் எலியா இறைவாக்கினர் மூலம் பஞ்சத்திலும் பசியாற உணவு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்ததோடல்லாமல், அதைதன் வீட்டாராகிய உறவினர்களுடனும் பகிர்கின்றார். நமக்கு அப்படிப்பட்ட பகிரும் மனப்பான்மை இருக்கிறதா?? இயல்பான நேரங்களில் இருப்பது போல நம்மால் இயலாமையிலும் இருக்க முடிகிறதா? என்று சிந்திப்போம். சாரிபாத் கைம்பெண் நமக்கு விடுக்கும் செய்தியும் இதுதான். இயல்போடிரு இயலாமையிலும், இருப்பதை பகிர் இல்லத்தாரோடு, இறுதி வரை தானம் செய்.......

தர்மம் செய்த ஏழைக் கைம்பெண்.:
கேட்காமல் கொடுப்பது தர்மம் என்னும் கூற்றை தன் வாழ்வால் நிரூபித்தவர். தனது வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை கோவிலுக்கு தானம் செய்வது என்பது கடமை என்ற போதிலும், வருமானமே இல்லாத பட்சத்திலும் தன் கடமையை நிறைவேற்ற கோவிலுக்குள் வருகின்றார்.
யாரும் அவரிடம் சென்று நீ உன் பங்கை செலுத்த கண்டிப்பாக வர வேண்டும் என்று கூறியிருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனாலும் வரிசையில் வந்து மக்களோடு தன்னை இணைத்து தன் காணிக்கையை செலுத்துகிறார். நாம் எப்படி இருக்கின்றோம்? நமது கடமைகளை செய்யும் போது நேரம் காலம் அசதி என்று கூறி அயர்ந்து விடுகின்றோமா இல்லை ,கருத்தாய் செயலாற்றுகின்றோமா? நமது ஏழ்மையிலும் நம்மை மக்களோடு இணைத்துக் கொள்ள விரும்புகிறோமா? சிந்திப்போம்
கைம்பெண்களைக் கடவுள் ஆதரிக்கின்றார் என்ற திருப்பாடல் வரிகளை, வாழ்வாக்கி வாழ எண்ணி, தன்னிடமுள்ள அனைத்தையும் கடவுளுக்கு கொடுக்க திறந்த மனமுடையவராக இருக்கின்றார். கடவுளின் கரத்தில் தனது வாழ்வை அர்ப்பணித்து வாழ தயாராயிருக்கின்றார். நாம் எப்படி இருக்கின்றோம்??? கடவுள் மேல் நம்பிக்கை கொண்டு வாழ நாம் தயாரா?/.....
ஏழைக் கைம்பெண் நம்மிடம் கேட்பது எல்லாம் இது தான், கடமையை செய் காலத்தோடு, மக்களோடு உன்னை இணைத்து மகிமை காண், இறைவார்த்தையை இதயத்தில் ஏற்று வாழ்.

இயேசு உற்று நோக்கி யார் முழு மனதுடன் கடவுளுக்கு காணிக்கை செலுத்துகிறார்கள் என்று கவனிக்கின்றார். பல நாணயங்களை அள்ளிக் கொட்டும் செல்வந்தர்களின் காணிக்கை சத்தத்தைக் காட்டிலும் இரண்டு செப்புக் காசுகளின் சிறு கீச்சிடும் சத்தம் அவருக்கு தெளிவாய் கேட்டிருக்கின்றது. காரணம் இயேசு, வெளிப்பகட்டின் ஆரவாரத்தை விரும்புபவரல்லர். மாறாக உள் மனதின் அமைதியை விரும்புபவர். நமது ஆழமான செபத்தின் சத்தத்தை விரும்புபவர். எனவே ஏழைக் கைம்பெண் போலவும் சாரிபாத் கைம்பெண் போலவும் தான தர்மங்கள் செய்து இறைவனின் அடி நாட அருள் வேண்டுவோம்.. தானமோ தர்மமோ இறைத்துணையோடும் இறை நம்பிக்கையோடும் செய்ய பெற இறைவன் அருள் புரிவாராக . இறாய்யாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்.