இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் 31ம் ஞாயிறு.

உள் மன ஆற்றல் உடையவரா நீங்கள்?

எண்ணிக்கை 11:25-30
உரோமையர்: 8: 28-3-
மாற்கு ; 9; 39-48"உள் மனம் தான் உன்னை வீழ்த்தக் கூடிய ஆயுதம். அது தெளிவாக இருக்கும் வரை யாரும் உன்னை வீழ்த்த முடியாது." என்று தியான ஆசிரமங்களில் சொற்பொழிவு ஆற்றும் பலர் கூறக் கேட்டிருப்போம். உள் மன ஆற்றல் என்பது நம் அனைவருக்கும் இருக்கக் கூடிய ஒன்று. அதை சரியான விதத்தில் பயன்படுத்தி, அரிய பெரிய சாதனைகள் படைத்து, வாழ்வில் முன்னேறியவர் பலர். முறையாக பயன்படுத்தாமல் மூளை குழம்பி போனவர் சிலர். அப்படி என்றால் என்ன என்று அறியாமல் வாழ்பவர் சிலர். நிற்க......
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மறை நூல் அறிஞர் ஒருவரின் கேள்விக்கு பதில் கூறுவது போன்ற பகுதி இடம் பெற்றுள்ளது. அதில் முதன்மையான கட்டளை என இரண்டினை இயேசு நமக்கு எடுத்துரைக்கின்றார். கடவுள் ஒருவரே அவரை முழு இதயத்தோடும், உள்ளத்தோடும், மனத்தோடும், ஆற்றலோடும் அன்பு செய்வாயாக, என்றும் உன்னைப் போல் பிறரையும் அன்பு செய் என்றும் கூறுகின்றார். இப்படி அன்பு செய்து வாழ்ந்தால் நாம் இறையாட்சிக்கு அருகில் இருக்கின்றோம் என்று அர்த்தம். இல்லையென்றால் வெகு தொலைவில் இருக்கின்றோம் என்று அர்த்தம். இறையாட்சிக்கு மிக அருகில் வர நாம் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று அன்பு செய்வது. அதுவும் சாதாரணமாக அல்ல முழு உள்ள மன ஆற்றலோடு..... இத்தகைய உள்ளம் மனம் ஆற்றல் சிறப்புள்ள மனிதர்கள் போல் நாமும் வாழ வேண்டும் என்று இன்றைய இறைவாக்கு வழிபாடுகள் வழி இறைவன் நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.
மறை நூல் அறிஞரின் செயல் பாடு:
மறை நூல் அறிஞர் முதலில் இயேசு சதுசேயர்களோடு உரையாடியதை கவனித்து விட்டு, அவர் அவர்களுக்கு சரியாக பதிலடி கொடுப்பதை பார்த்துவிட்டு அவரிடம் வருகின்றார். சதுசேயர்கள் இறந்து உயிர்த்த பின் என்ன நடக்கும்? யார் யாருக்கு கணவன் மனைவியாக இருப்பார் என்பதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில் இவர், நிகழ்காலத்தில் எப்படி வாழ வேண்டும் ,அதற்கு என்ன கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்கிறார். இயேசுவை அணுகி வருகிறார். தூரமாக இருந்தோ, அல்லது யாரையும் அனுப்பியோ கேட்கவில்லை. மாறாக அவரே வருகின்றார். இயேசுவின் பதிலைக் கண்டு வியக்கின்றார். அதை நன்று என்று பாராட்டுகின்றார். அத்தோடு விடவில்லை அவர் சொன்ன கருத்தை தனக்கு என்று எடுத்துக் கொண்டதை திருப்பி சொல்கின்றார். நம்மத்தியில் இப்பழக்கம் இப்போது இருக்கிறது. ஒரு வகுப்போ அல்லது கருத்தரங்கமோ நடைபெற்றால் சொற்பொழிவு ஆற்றியவர் இறுதியில் அதை மதிப்பீடு செய்வார். அப்போது ஒவ்வொருவரும் தங்களுக்கு எந்த கருத்து அவர் சொன்னதில் ஆழமாக மனதில் பதிந்ததோ அதை அனைவர் முன் கூறி அவருக்கு நன்றி செலுத்துவர். இதனால் சொற்பொழிவு ஆற்றியவர், மகிழ்ந்து தான் கூறிய கருத்துக்கள் மக்கள் மனதில் நன்றாக பதிந்திருக்கின்றது என்று எண்ணி நிறைவு அடைவார். அதுவே ஆசிரியராக இருந்தால் நீ முதல் மதிப்பெண் எடுப்பவர்களின் நிலை அருகில் இருக்கின்றாய் என்று பாராட்டுவார். இத்தகைய சூழல் தான் இன்றைய நற்செய்தியில் இடம் பெறுகின்றது. இயேசு அவர் கேள்விக்காக மகிழ்ந்து அவரை பாராட்டி இறையாட்சிக்கு அருகில் உள்ளீர் என்று சொன்னார் என்பதை விட அவரது உட்கிரகிக்கும் ஆற்றல் கண்டு வியந்தே அவரை இறையாட்சிக்கு மிக அருகில் இருக்கின்றீர் என்று சொல்லி இருப்பார்.
நாம் யார் சதுசேயர் போல் இறப்புக்கு பின் நடப்பதைப் பற்றி பேசிக்கொண்டிருப்பவர்களா? இல்லை மறைநூல் அறிஞர் போல நிகழ்காலத்தில் எப்படி வாழ வேண்டும் என்று சிந்தித்து அதன்படி வாழ்பவரா? நாம் யார் என்று சிந்திப்போம். நமது உட்கிரகிக்கும் ஆற்றல் எப்படி இருக்கிறது என்று சீர்தூக்கி பார்ப்போம்.
இன்றைய காலகட்டத்தில் ஏராளமான கருத்துக்களும் செய்திகளும் நமது தொலைதொடர்பு சாதனங்களின் வழி நம்மை வந்து அடைகின்றன. பார்த்தவுடன் நினைவில் இருக்கும் பல கருத்துக்கள் அடுத்த நிமிடம் மனதில் இருப்பதில்லை. அடுத்த நிமிடமே இந்நிலை என்றால் வாழ்க்கைக்கென்று அது எதையும் நாம் எடுத்துப்போவதில்லை என்பது நிச்சயம். நல்லவற்றை நாம் மனதில் பதிய வைக்க வேண்டும் பதித்தவற்றை வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும். அதனால் தான் பள்ளியில் கூட கேள்வி பதில்களை புரிந்து மனப்பாடம் செய்து ஒப்புவிக்கச் சொல்வர். ஏனெனில் மனதில் பதிந்த ஒன்று, வாழ்க்கைக்கும் சில நேரங்களில் பயன்படலாம் அல்லவா? அதனால் தான். இன்று நாம் எதையும் மனதில் வைப்பது கிடையாது. அவரவர் தொலைபேசி எண் கூட எத்தனை பேருக்கு நினைவு இருக்கும் என்று சொல்லமுடியாது. அவ்வளவுக்கு நமது நினைவுத்திறன் பழுதடைந்துள்ளது. நமக்கு வரும் செய்திகளுக்கு நன்று, வாழ்த்துக்கள் அருமை என்று கூற சோம்பல் பட்டுகொண்டு சுருக்கமாக அதற்கேற்ற முக வடிவங்களை அனுப்பிக் கொண்டிருக்கும் காலத்தில் இருக்கின்றோம். வாக்கியங்களை வார்த்தைகளாக சுருக்கினோம் . வார்த்தைகளை வடிவங்களாக சுருக்கி இருக்கின்றோம். நம் முன்னோர்கள் வடிவங்களை வாக்கியங்களாக மாற்றினார்கள் நாம் சுருக்குகின்றோம் . அவ்வளவுதான்.. நாம் சுருக்கியது வாக்கிய வார்த்தைகளை மட்டுமல்ல, நமது வாழ்வையும் சேர்த்து தான். அன்றைய மறைநூல் அறிஞர் போல நாம் இயேசுவின் அருகில் இருந்து அவர் நம் கேள்விக்கு பதில் கூறிய பின் நாம் என்ன சொல்லி இருப்போம்? சூப்பர் என்று ஸ்மைலி வடிவம் காட்டியிருப்போம். அவர் நம்மை பிலாக் செய்து விட்டு போய்க்கொண்டே இருந்திருப்பார்.
நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் எங்கு போய்க்கொண்டிருக்கின்றோம் என்றே பலருக்கு தெரியவில்லை. ஓடிக்கொண்டே இருக்காதீர்கள் நில்லுங்கள். நிதானமாக யோசியுங்கள் எங்கு செல்கின்றீர்கள் யாருக்காக எதற்காக என்ற கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேளுங்கள். நமது சொல் செயல் வாழ்க்கை மூன்றும் ஒன்றோடொன்று இணைந்து செல்கின்றதா? என்று கவனியுங்கள். நாம் செய்யும் செயலில் நம் உள்ளம் நிறைவு அடைய வேண்டும். அப்படிப்பட்ட மனநிலையில் நாம் செயல்பட வேண்டும். உதாரணத்திற்கு பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்து காலையில் வேலைக்கு போகும்போது, நமது மனம் அதையே நினைத்துக் கொண்டிருக்கும் நமது கால்கள் உடலில் உள்ள எல்லா ஆற்றலையும் பெற்று வேகமாக நடைபோடும். பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் நமது உள்ளம் நிறைவை அடையும். ஒரு செயலை செய்யத் தொடங்கி அது நிறைவு பெறும்வரை நமது உள்ளம் மனம் ஆற்றல் அனைத்தும் இணைந்து செயலாற்றும் . இத்தகைய மனதோடு இறைவனை அன்பு செய்ய சொல்கிறார் இயேசு. உனது உள்ளமும் மனமும் ஆற்றலும் ஒன்றோடொன்று இணைந்து செயலாற்றும் போது இறைவன் உன் வசம். இறைவனே உன் வசம் என்றால், நமக்கு அடுத்திருப்பவரை அன்பு செய்வது எளிதான செயலாகிவிடும்.
நமது உள் மன ஆற்றலை வளர்ப்பதில் கவனம் செலுத்துவோம். நிகழ்காலத்தை நிதானமாக ரசித்து வாழ்வோம். நம் வாழ்க்கைக்கு வளம் சேர்ப்பவற்றை மனதில் நிறுத்துவோம். மற்றவர்களோடும் பகிர்வோம். உள் மன ஆற்றல் பெற்று உயர இறைவனின் அருள் வேண்டுவோம். உள்ளமும் மனமும் தெளிவாக இருந்தால் இவ்வுலகில் எல்லாவற்றையும் பெறும் ஆற்றல் சாத்தியம். உடல்வலியோடு உலகத்தை கூட அசைத்து விடலாம் ஆனால் மனவலியில் மண் துகளைக் கூட நகர்த்த முடியாது என்பதை உணர்வோம். உள்ள மன ஆற்றல் பெற்று வாழ்வோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்.