இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 30 வாரம்

.....விழி திரை விலக்கு.....

எரேமியா 31:7-9
எபிரேயர் 5:1-6
மாற்கு 10:46-52

br />கண்ணுடையோர் என்பவர் கற்றோர் என்று திருவள்ளுவரும் , உள்ளத்து ஊனமே உண்மையான ஊனம் ; உடல் உறுப்பின் ஊனம் ஊனமே அல்ல என்று உலகில் வாழ்ந்த பெரியவர்கள் பலரும் கூறியிருப்பதை நாம் நன்கறிவோம் . இன்றைய நற்செய்தியில் இயேசுவும் கண் பார்வையற்ற பர்த்திமேயுவின் நிலையை, நிகழ்வை நமக்கு எடுத்துக் கூறி நாமும் அவர் போல பார்வை பெற்று மகிழ அழைப்புவிடுக்கின்றார். உடல் உறுப்புக்களில் கண் மிகவும் முக்கியமானது. ஐம்புலன்களில் கண்ணையே நாம் அதிகமாக பயன் படுத்துகிறோம். கண்ணைக் கவரும் பொருட்களே நாக்கிற்கும் நலத்திற்கும் சுவை தரக் கூடியது என எண்ணுகிறோம். உண்ணும் பொருளாக இருந்தாலும், உடுக்கும் உடையாக இருந்தாலும், உறைவிடத்திற்கான உபயோகப்பொருளாக இருந்தாலும், கண்ணின் சுவைக்கே நாம் முதலில் இடம் கொடுக்கின்றோம். இப்படியிருக்க இந்த விழி இல்லாத மக்களின் நிலை மிகவும் வருத்தத்திற்குரியது. ஆனால் இவர்கள் விழிகளின் குறைபாட்டை பிற புலங்களின் வழி நிறைவு செய்து கொள்வர். உதாரணத்திற்கு இவர்களின் செவித்திறன், தொடு உணர்வு, நுகரும் திறன், இனிமையான குரல், பேச்சுத் திறன் என மற்ற அனைத்து புலன் உறுப்புக்களின் நுண்ணறிவும் மிகக் கூர்மையானது. ஆனால் கண் பார்வை உடைய நமது பிற புலன் உறுப்புக்களின் நுண்ணுணர்வு இவர்களை விட மிக மிகக்குறைவே... நிற்க....
இன்றைய நற்செய்தியில் பார்வை இழந்த பர்த்திமேயுவிற்கு இயேசு பார்வை வழங்கிய நிகழ்வினை நாம் வாசிக்கக் கேட்டோம். இந்நிகழ்வில் இடம்பெறும் கதைமாந்தர்களான பர்த்திமேயு, இயேசு, மக்கள் கூட்டம் இவர்களின் செயல்பாடுகள் வழி இறைவன் நமக்கு கொடுக்கும் செய்தி என்ன என்பதை உணர முற்படுவோம். மனத்திரை அகற்றிய பர்த்திமேயு, விழித்திரை நீக்கிய இயேசு , முகத்திரை களைந்த மக்கள் கூட்டம்.
மனத்திரை அகற்றிய பர்த்திமேயு;
பர்த்திமேயு பார்வையற்றவர் தனது இயலாமையினால் ஊரின் வெளியே அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றார். விழிகளில் திரை விழுந்தாலும் மனதினை விசாலமாக்கி மனத்திரை அகற்றி காத்திருக்கின்றார். தாவீதின் மகனே என்மேல் இரங்கும் என்ற வரிகளை செபமாக மாற்றி, தனது இயலாமையிலும் இறைப்புகழ் பாடும் மனவலிமை பெற்றவராயிருக்கிறார். கண் பார்வை இல்லாவிட்டாலும் கேட்கும் திறன் வைத்து தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியும் வல்லமை பெற்றவராயிருக்கிறார். தனது தேவை என்ன என்பதை நன்கறிந்தவராயிருக்கிறார். புதிய வாழ்வு கிடைத்தவுடன் பழையனவற்றை தூக்கி எறியும் மனப்பாங்கு உடையவராயிருக்கின்றார். நாமும் பல நேரங்களில் பர்த்திமேயுவின் நிலைக்கு தள்ளப்படுகின்றோம். துன்பத்திலும் இறைப்புகழ் பாடும் மனவலிமை நம்மிடம் இருக்கிறதா? நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியக் கூடியவர்களாக நாம் இருக்கின்றோமா? நமது தேவை என்னவென்றும் , பழையனவற்றை தூக்கி எறியும் மனப்பாங்கும் நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்திப்போம்..... பர்த்திமேயு போல மனத்திரையை அகற்றி அதை விசாலமாக்கி அதில் இறைவனின் பிரசன்னம் நிலைத்திருக்க அருள் வேண்டுவோம்.
விழித்திரை நீக்கிய இயேசு:
கண் தான் உடலுக்கு விளக்கு என்பதை நன்கறிந்த இயேசு, விழி திறன் இழந்த அவருக்கு திறன் தருகின்றார். தன்னைச்சுற்றி கூச்சல் போட்டுக் கொண்டு வரும் மக்களின் மத்தியில் பர்த்திமேயுவின் குரலினை கண்டு கொள்கின்றார். நின்று, அவரை தன்னிடம் அழைத்து வரச்சொல்லுகின்றார். அவரின் மன்றாட்டுக்களுக்கு மதிப்பளிக்கின்றார். உனது தேவை என்ன என்று கேட்டு அதனை நிறைவு செய்கின்றார். அவரது விழியினை மூடியிருந்த திரையினை அகற்றி அவருக்கு புது வாழ்வு கொடுக்கின்றார். பல நேரங்களில் நாம் புலம்புவது உண்டு .. என்ன வேண்டுதல் செய்து என்ன புண்ணியம் கடவுள் என் குரலுக்கு செவிமடுப்பதே இல்லை என்று. பார்வையற்ற பர்த்திமேயுவை மக்கள் கூட்டம் அமைதியாயிருக்குமாறு சொன்ன பிறகு தான் அவர் இன்னும் வேகமாக கத்த தொடங்குகின்றார். அந்த அவரின் விடாமுயற்சி நம்பிக்கையைப் பார்த்து தான் இயேசு சொல்கின்றார். உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று என்று. இயேசு பல நேரங்களில் நாம் வேண்டுபவற்றை உடனே தருவதில்லை. பல இடையுறுகளை நாம் மன்றாடும் போதே கொடுப்பார். சிலர் தொடர்ந்து உரக்கக் கத்தி, தொடர்ந்து செபித்து வேண்டியதை பெற்றுக்கொள்வர். சிலர் தொய்வடைந்து அப்படியே உட்கார்ந்து விடுவர். நாம் எப்படி என்று சிந்திப்போம். இயேசு நமது குரலை நன்கு கேட்குமளவுக்கு நமது வேண்டுதல்களையும் செபங்களையும் தொடர்ந்து செய்வோம்.
முகத்திரை களைந்த மக்கள் கூட்டம்;
ஏராளமான மக்கள் இயேசுவைப்பின் தொடர்கின்றனர். பலர் அவரவர்களது தனிப்பட்ட நலனுக்காக அவரைப் பின்பற்றி இருப்பர். சிலர் ஊரே செல்கிறது நாமும் உடன் செல்வோம் என்ற எண்ணத்தில் சென்றிருப்பர். பர்த்திமேயுவை அதட்டி அமைதியாக்க முயன்றிருப்பர். சிலர் அவருக்காக இயேசுவிடம் பரிந்து பேசி நலம் பெற உதவி இருப்பர். இப்படி பலர் இருக்க இதில் பர்த்திமேயுவிற்கு ஆறுதலும் நம்பிக்கையும் கூறிய மக்கள் கூட்டத்தார் போல நாம் இருக்க அருள் வேண்டுவோம். தன்னுடைய தேவைகள் பல இருக்க தன்னுடன் வாழ்பவர்களின் நலனுக்காக பாடுபடும் மக்கள் போல நாமும் மாற முற்படுவோம். தங்களது தேவைகள் என்னும் முகத்திரை களைந்து பிறரின் நலன் நாடும் அவர்கள் போல நாம் வாழ இறைத்துணை நாடுவோம். நம்முடன் வாழும் துன்புறும் மக்களுக்கு ஆறுதல் கூறி அவர்களை இயேசுவிடம் அழைத்து வருபவர்களாக மாறுவோம். பத்தோடு ஒன்று பதினொன்று அத்தோடு ஒன்று நானொன்று என்று வாழாமல், தனித்தன்மையோடு வாழ முற்படுவோம். நமக்காக வாழ்வதோடு மட்டுமல்லாமல் பிறரின் நலனுக்காகவும் வாழ்பவர்களாவோம்.
இவ்வாறாக மனத்திரை அகற்றி, விழித்திரை நீக்கி, முகத்திரை களைந்து தூய மக்களாக வாழ இறைவன் அழைப்புவிடுக்கின்றார். நன்மைகளைக் காணாதவாறு நமது பார்வையை மறைத்திருக்கக் கூடிய கோபம், வன்மம், பொறாமை, தீய எண்ணம் என்னும் திரைகளை இறை முன்னிலையில் சுட்டெரிப்போம். இயேசுவை இறைவனை நோக்கி நமது மன்றாட்டுக்களை எழுப்பிக் கொண்டே இருப்போம். இதைதான் பவுலடியார் தனது திருமுகங்களிலே இடைவிடாது செபியுங்கள் என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள் என்கிறார். நாமும் தொடர்ந்து செபிப்போம். நம் குரல் இறைவனின் காதுகளை எட்ட இடையூறாக இருக்கக் கூடிய அனைத்து சூழ்நிலைகளையும் தகர்த்தெறிவோம். பிறரின் வேண்டுதல்களுக்கும் மதிப்பளிப்போம். நமக்காக நம்முடைய தேவைகளுக்காக மட்டுமன்றி பிறருக்காகவும் பிறரின் தேவைகளுக்காகவும் செபிப்போம் . எல்லாவற்றிற்கும் மேலாக பிறரை இயேசுவிடம் கொண்டு சேர்க்கும் ஒரு காரணியாக மாறுவோம். நமது விழித்திரை அகற்றி புதியதோர் உலகம் காண முயல்வோம் . இறைவனின் அருள் என்றும் நம்மீதும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்.