இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் 28 வாரம்

அருளா? ???பொருளா????

I. சாலமோனின் ஞானம் 7:7-11
II. எபிரேயர் 4:12-13
III. மாற்கு 10:17-30

br />மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இருந்தும் இல்லாதது போலவே என்பார் திருவள்ளுவர். கடவுளின் அருள் நம்மிடம் இல்லை என்றால் அவ்வுலகமாகிய நிலைவாழ்வு நமக்கு இல்லை. பொருள் இல்லையென்றால் நாம் வாழும் இவ்வுலகத்தில் எதுவும் நமக்கு இல்லை. நம்மிடம் இருப்பது அருளா பொருளா ? அதைக் கொண்டு நாம் பெற விரும்புவது அவ்வுலகத்தையா இவ்வுலகத்தையா என்பதை சிந்தித்தறிய இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் சாலமோன் அரசர், பொன், வெள்ளி, மாணிக்கம், உடல் நலம், அழகு, ஒளி ஆகிய எல்லாவற்றையும் விட உயர்ந்ததாக ஞானத்தைக் கருதுகின்றார். அதன் முலம் மேற்கூறிய அனைத்து செல்வங்களையும் நான் பெற்றுக் கொள்வேன் என உறுதிகூறுகிறார். இரண்டாம் வாசகத்தில் கடவுளின் வார்த்தையே செல்வங்களுக்கெல்லாம் சிறந்த செல்வம் என்று நம்பிக்கை ஊட்டுகிறார். நற்செய்தியிலோ இயேசு, நாம் பெற்ற செல்வங்களை செயல்களின் மூலம் பிறருக்கு பகிர்ந்தளிக்கச்சொல்கின்றார். ஞானம்,வார்த்தை செயல் என மூன்று வாசகங்களும் ஒவ்வொன்றை செல்வமாகக் கருதுகின்றன. நாம் நமது செல்வமாக கருதுவது எதை என்பதை கண்டறிய இறைவன் நம்மை அழைக்கின்றார்.
இன்றைய நற்செய்தியில் நாம் காணும் செல்வந்தர் போலவே நாமும் பல நேரங்களில் நமது வாழ்வில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
தனது உண்மையான மகிழ்வைத் தேடுபவர்.
தன்னை நல்லவராக காட்டிக்கொள்பவர்.
இழக்க மனமில்லாதவர்.
உண்மையான மகிழ்வைத் தேடுபவர்:
தான் மிகப்பேரிய செல்வந்தனாக இருந்த போதிலும் தனக்கு ஏதோ ஒன்று குறைவுபடுகின்றது , அது என்ன என்று தேடும் எண்ணம் உடையவராக இருக்கின்றார். நிலைவாழ்வு ஒன்றே தனக்கு மனநிம்மதி மகிழ்வு தரக்கூடியது அதை அடையும் வழி இயேசுவிடம் இருக்கின்றது என்று நன்கு அறிந்து அவரை எதிர்கொண்டு வருகின்றார். நாமும் இந்த செல்வந்தர் போல செயல்பட்ட தருணங்கள் பல இருக்கலாம். எல்லாம் இருந்தும் வெறுமையாகவும், எதுவும் இல்லாமல் மன நிம்மதியுடனும் இருந்த நாட்கள் ஏராளம். நம்முடைய உண்மையான மகிழ்வை மனநிம்மதியை நாம் எங்கு தேடிக்கொண்டிருக்கின்றோம் என்று சிந்திப்போம். செல்வந்தர் நிலை வாழ்விற்கான வழி ஒன்றே தனது மகிழ்விற்கான காராணம் என்பதை கண்டறிந்தார். அதைக் கண்டடைய விரும்பி இயேசுவை எதிர் கொண்டார். நாம் நமது பயணத்திற்கான பாதையை கண்டறிந்துவிட்டோமா? சிந்திப்போம்.
தன்னை நல்லவராகக் காட்டிக் கொள்பவர்:
நல்ல போதகரே என்று கூறி இயேசுவின் அன்பைப் பெற எண்ணுகின்றார். முழந்தாள்படியிட்டு அனைவரும் தன்னை பார்க்கும் நிலைக்கு ஆளாக்குகின்றார். உணவிற்காகவும் உடல்நலத்திற்காகவும் அவரைப் பின் தொடரும் மக்கள் மத்தியில் நிலைவாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியைக் கேட்டு அனைவரையும் வியக்க வைக்கின்றார். சிறுவயது முதலே தான் அனைத்து கட்டளைகளையும் கடைபிடிப்பதாக அனைவர் முன்னிலையிலும் எடுத்துரைக்கின்றார். நாமும் இப்படித்தான் இந்த செல்வந்தர் போல செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றோம். நம்மை அடுத்தவர் முன்னிலையில் பெரியவர்களாக காட்டிக்கொள்ள என்ன என்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்கின்றோம். வீண் பகட்டும் ஆடம்பரமும் நம்மை நம்முடைய இயல்பு வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிக் கொண்டிருக்கின்றது. அதை உணராது நாம் பிறர் முன் நம்மை நல்லவர்களாக காட்டிக்கொள்ள முயன்று கொண்டிருக்கின்றோம். மனிதர் முன் தன்னை பெரியவனாக காட்டிக் கொள்ள முற்படுபவன், கடவுள் முன் சிறியவனாகக் கருதப்படுவான். மனிதர் முன் சிறியவனாக தன்னை தாழ்த்துபவன் கடவுள் முன் பெரியவனாக உயர்த்தப்படுவான். நாம் என்ன நிலையில் இருக்கின்றோம் சிந்திப்போம்.
இழக்க மனமில்லாதவர்:
நல்ல தொடக்கம் பாதி வெற்றி என்பர். செல்வந்தரின் விசயத்தில் அது பொய்யாகிப் போனது. நிலைவாழ்வைப் பெற வேண்டும் அதற்கான வழி இயேசுவிடம் உள்ளது என்று கண்டறிந்து அவரை எதிர்கொண்டு வந்தார். ஆனால் முடிவு நினைத்தது போல் இல்லை. இயேசு சொன்ன வார்த்தைகளை அவரால் வாழ்வாக்க முடியவில்லை. அதனால் பயணத்தில் வெற்றியும் பெற முடியவில்லை. உண்மையான நிலைவாழ்வு பெற உனக்குரியதை விற்று ஏழைகளுக்குக் கொடு என்று சொன்னதை அவரால் செயல்படுத்த முடியவில்லை.விளைவு பயணத்தில் திருப்பம். எதையும் இழக்காமல் எதையும் பெற முடியாது. ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றைப் பெறமுடியும். இதை உணராமல் வாழ்வதினால் தான் எந்த ஒரு புதிய மாற்றத்தையும் பெறாமல் இருக்கின்றோம். இறைவன் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கும், நாம் அவருக்காக இழக்க நினைக்கும் ஒன்றை இழக்க துணிவோம்,முயல்வோம். இழப்போம் மீண்டும் பெற்றுக்கொள்வோம் என்ற நம்பிக்கையில்.
இயேசுவைப் பின்பற்றிய சீடர்கள் போல எல்லாவற்றையும் இழப்போம் நம்மிடம் சேரும் செல்வம் பொருள் , பெயர் பதவி என் அனைத்தையும் இறைவனுக்காக இழப்போம். நூறு மடங்காக திரும்ப பெற்றுக் கொள்வோம் என்னும் நம்பிக்கையில். அருளா? பொருளா ? என்றால் பொருளை பகிர்ந்து அருளை பெற்றுக்கொள்வோம். இவ்வுலகில் வாழும் மனிதர்களோடு நம்முடைய அனைத்தையும் பகிர்ந்து அவ்வுலகத்திற்கு செல்ல அடிக்கல் நாட்டுவோம். நிலைவாழ்வை நோக்கிச்செல்லும் நமது பயணத்தில் எந்த ஒரு திருப்பமும் இல்லாமல் நேரடியாக பயணிக்க அருள் வேண்டுவோம்.இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து பகிர்வு என்னும் செல்வத்தை நம்முடையதாக்குவோம் . இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும் இருப்பதாக ஆமென்.