இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 27 வாரம்

இருவர் அல்ல ஒருவராக ஒன்றிணைக்கப்பட.....

தொடக்கநூல் 2:18-24
எபிரேயர் 2:9-11
மாற்கு ;10; 2-16

br />
இன்றைய இறைவழிபாட்டு வாசகங்கள் அனைத்தும் நம்மை இறை குடும்ப உறவோடு ஒன்றித்து வாழ அழைக்கின்றன. முதல் வாசகம், படைப்பின் தொடக்கத்தில் இருவர் ஒருவராக இணைந்து ஒன்றித்தது பற்றியும் , இரண்டாம் வாசகம் இயேசுவோடு நாம் மாட்சியில் பங்குகொள்ள ஒன்றிக்கப்பட வேண்டும் என்பது பற்றியும், நற்செய்திவாசகமோ கணவன் மனைவி திருமண உறவில் ஒன்றித்து வாழ்வது பற்றியும் எடுத்துரைக்கின்றன. தமிழ் சங்க இலக்கியங்களில் கணவன் மனைவி உறவு, ஆண் பெண் திருமண உறவு எப்படி இருந்ததை பாடல்கள் மூலம் அழகாக சொல்லி இருப்பர்.
"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்,
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே". என்பது பாடல் வரிகள் நீ யார் ,நான் யார் என்று தெரியாது . உனது தாய் தந்தையர்கள், எனது தாய் தந்தையர்கள் யார் என்று அறீயோம். ஆயினும் நமது நெஞ்சம் செம்மண்ணில் கலந்த நீர் போல இரண்டறக் கலந்து விட்டது என்று தலைவன் தலைவியை நோக்கி பாடுவதாக பாடலின் பொருள். திருமணத்தன்றும் அதன்பின் சிலகாலமும் இப்படி தான் நமது திருமணத் தம்பதியர்கள் இருக்கின்றனர். ஆனால் அதன் பின் செம்மண், நீர் கலக்க முடியாத படி இறுகியும் , நீரானது திரவ நிலை மாறி திட நிலைக்கு தன்னை மாற்றியும் காட்சியளிக்கின்றன. இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உன்னோடு இருப்பேன் என்று அனைவர் முன்னிலையிலும் அறிக்கையிட்ட மனிதர்கள் தான் , தங்களது துணைவன் துணைவியை தமது சுயநலத்திற்காக விட்டுச்செல்கின்றார்கள். இப்போதெல்லாம் விவாகரத்து ஒரு நிமிடத்திற்கு பத்து உலகளவில் நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த பிரச்சனை இன்று நேற்று மட்டுமல்ல . இயேசுவின் காலத்திலும் ஏன் மோசே காலத்திலும் இருந்தது என்பதற்கு நம்முடைய இன்றைய வாசகங்கள் சான்று. ஏன் ? எதனால்? இந்நிலையில் எவ்வாறு ஒன்றித்து வாழமுடியும் ?
கணவன் மனைவி உறவு மேம்பட நம் ஒவ்வொருவரின் குடும்பமும் திருக்குடும்பமாக வாழ என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி சிந்தித்து தியானிக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பர், ஏனெனில் பல்கலைக்கழகத்தில் தான் சிறப்பாக கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் முடியும் . நமது குடும்பங்களில் நாம் ஒருவர் மற்றவரிடம்(கணவன்,மனைவி) இருந்து நல்லவற்றை, சிறப்பானவற்றைக் கற்றுக்கொள்ளவும், (பிள்ளைகளுக்கு) கற்றுக்கொடுக்கவும் முடியும். அதனால் தான் குடும்பத்தைப் பல்கலைக்கழகத்தோடு ஒப்பிடுகின்றார்கள். நமது குடும்ப உறவு மேம்பட, நாம் ஒன்றிப்புடன் வாழ நம்மில் தளிர்க்க வேண்டியவையும் தவிர்க்க வேண்டியவையும் இரண்டு.
தளிர்க்க வேண்டியவை அன்பும் அளவளாவுதலும். தவிர்க்க வேண்டியவை அகங்காரமும் அலட்சியமும். நம்மில் தவிர்க்க வேண்டியவற்றை நாம் தவிர்த்தால் தளிர்க்க வேண்டியவை தானாய்த் தளிர்க்கும்.
அகங்காரம்: அகந்தை, தான் என்னும் முனைப்பு, ஈகோ என்று இதனை எத்தனை பெயர்களில் வேண்டுமானாலும் சொல்லலாம். அகம் தன்னை கொல்லும் அந்த 'ஐ' யை அடியோடு விட்டொழிக்க முயல்வோம். குடும்பத்தில் நான் தான் பெரியவன், அறிவாளி, புத்திசாலி என்று ஒரு கணவனோ மனைவியோ எண்ண ஆரம்பித்தால் குடும்பம் சிதைந்து சின்னா பின்னமாகி விடும். அங்கு வளர்ச்சி இருக்காது தளர்ச்சி தான் இருக்கும். "நான் தான் எல்லாம் " என்னும் அகந்தையை சுமந்து கொண்டு வாழ்ந்தால் , வாழ்வில் காணக்கிடக்கும் ஆயிரம் ஆயிரம் வசந்தங்களை நாம் காண முடியாது போய் விடும். காகம் ஒன்று தனக்கு கிடைத்த ஒரு மாமிசத்துண்டை வாயில் கவ்வியபடி வானில் பறக்கத் தொடங்கியது. இதனைக் கண்ட பிற காகங்கள் அதனிடம் இருந்து அதை பறிக்க எண்ணி அதைப் பின்தொடர்ந்தன. கூடவே கழுகுகள் இரண்டும் அதை துரத்தின. வாயில் வைத்திருக்கும் உணவா? வாழ்வா என்று எண்ணி காகம் வேகமாக பறக்க ஆரம்பித்தது. உயரத்தில் பறந்த காக்கையை பிற காக்கைகளும் கழுகுகளும் துரத்திய படியே சென்றன. ஒரு நிலையில் காகம் தன் வாயில் வைத்திருந்த மாமிசத்துண்டை கீழே போட்டது. பிற காகங்களும் கழுகுகளும் மாமிசத்தைப் பிடிக்க தொடர்ந்து சென்றன. இப்போது தான் காக்கைக்கு மூச்சு வந்தது. மாமிசம் தான் நிம்மதி என்று எண்ணி அதை பிடித்துக் கொண்டிருந்த போது இல்லாத மகிழ்வு, காக்கைக்கு இப்போது வந்தது. தன் கண்முன் இருந்த அழகான வானத்தை அப்போது தான் ரசிக்க தொடங்கியது. நாமும் நமது குடும்பங்களில் பல நேரங்களில் இப்படி தான், தேவை இல்லாத ஏதாவது ஒன்றை பிடித்துக் கொண்டு நமக்கு எதிரே உள்ள மகிழ்வான தருணங்களை மறந்து விடுகிறோம். எப்போது நமது தான் என்னும் அகந்தையை கீழே வீச ஆரம்பிக்கின்றோமோ அப்போது நம் கண்முன் இருக்கும் அழகிய வாழ்வினை நாம் அணுஅணுவாக ரசித்து வாழ்வோம்.
2. அலட்சியம்: குடும்பங்களில் கணவன் மனைவியையோ இல்லை மனைவி கணவனையோ அலட்சியம் செய்வது மிக சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. என்னை விட நீ உயர்ந்தவர்/ள் அல்ல . உனக்கு ஒன்றும் தெரியாது. என்று சொல்லிலும் செயலிலும் பலமுறை நாம் அதை செயல்பாட்டில் காட்டுகின்றோம். ஆணோ பெண்ணோ அவரவர் செயலில் அவரவ்ர் சிறப்பு. ஒருவர் மற்றவரை செய்யும் அலட்சியம், இறுதியில் மோசமான விளைவுகளுக்கு காரணமாகின்றது. ஒருவர் மற்றவரிடம் இருக்கும் நன்மைகளை பாராட்டி மகிழ்வோம். சிறு பாராட்டு தான் என்றாலும் அதன் நல்ல பலனை உடனடியாக காண முடியும். அலட்சியத்தின் மிக முக்கியமான செயல் ஒருவர் பேசும் போது அவர் சொல்லுக்கு செவிமடுக்காதது. எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை அப்படியே வைத்து விட்டு அவர்களது சொல்லுக்கு மதிப்பளியுங்கள். நாம் சொல்வதை இவர் கேட்கிறார் என்னும் போதே உங்கள் மீதான அன்பும் மதிப்பும் உயர ஆரம்பிக்கும். நாம் இப்போதெல்லாம் இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் ஆற்றல் பெற்றவர்களாகிக் கொண்டிருக்கிறோம். விளைவு இரண்டு வேலைகளையும் ஒழுங்காக முடிக்க முடியாது அல்லாடுகிறோம். அலட்சியத்தை அகற்றி அன்பை நம் குடும்பங்களில் புகுத்துவோம். குடும்ப செபம் இதற்கு மிக முக்கிய பங்காற்றும். கூடி செபிக்கும் குடும்ப நிலை மாறி இப்போது கணினியில் குழு உரையாடல்களில் நேரம் செலவழிக்கும் குடும்பங்களாக மாறி இருக்கின்றோம். அந்நிலையை மாற்றி குடும்ப செபம் செபித்து பழகுவோம்.ஒருவரோடு ஒருவர் அன்போடு (உரையாடுவோம்) அளவளாவுவோம்
இறுதியாக, தவிர்க்க வேண்டியவைகளான அகங்காரத்தையும் அலட்சியத்தையும் தவிர்த்து அன்பையும் அளவளாவுதல் என்னும் உரையாடல் (பேசிப் பழகுதல்) பண்பையும் நம்மில் தளிர்க்க வைக்க இறையருள் நாடுவோம். இருவராக இணைந்த தம்பதியினரை ஒருவராக ஒன்றிணைப்பது/மாற்றுவது அன்பின் வலிமை என்றால், பல நபர்களால் ஆன குடும்பத்தை ஒரு அன்பின் கூடாக ஒன்றிணைப்பது/மாற்றுவது குடும்ப செபத்தின் வலிமை. நாம் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே, உருவாக்கப்பட்டவர்கள். இருவர் ஒன்றிணைந்தால் அது திருமணம், பலர் ஒன்றிணைந்தால் அது குடும்பம் எனவே ஒன்றிணைக்கப்பட அருள் வேண்டுவோம். குடும்பமாக குழுமமாக, ஒன்றிணைக்கப்பட அருள் வேண்டுவோம். செம்புலப்பெயல் நீர் போல இறைவனின் அன்பில் இரண்டறக் கலந்து இறையருள் பெறுவோம். இறைவனின் ஆசீரும் அருளும் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தாரோடும் இருந்து நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பதாக ஆமென்.