இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 25 வாரம்

நீங்கள்லாம் பெரிய ஆளுங்க ....

I. சாலமோனின் ஞானம் 2:12, 17-20
II. யாக்கோபு 3:16-4:3
III. மாற்கு 9:30-37

/>
நம்முடன் இருக்கும் நமது நண்பர்கள் யாரையாவது நாம் கிண்டல் செய்ய, கலாய்க்க இந்த வார்த்தையை வாக்கியத்தை நாம் அதிகமாக பயன்படுத்துவோம். நீங்கள்லாம் யாருப்பா பெரிய ஆளுங்க... எங்களெல்லாம் உங்களுக்கு கண்ணு தெரியுமா என்றெல்லாம் சொல்லியிருப்போம். ஒன்று அவர்கள் நம்மை விட்டு தொலைவில் சென்று விட்டார்கள் என்ற வருத்தம் இல்லையென்றால் எங்கே நம்மை விட அதிகமான தொலைவு உயரம் சென்று விடுவார்களோ என்ற பயம் . எனவே அதனை அங்கலாய்ப்பாக மாற்றி இவ்வாறு சொல்வோம்.
உலகில் வாழும் அனைவருக்கும் தாம் இன்னும் அதிகமாக வளர வேண்டும் பொருளளவில் மதிப்பளவில், செல்வாக்களவில் என்ற எண்ணம் உண்டு. யாரும் நான் வளர வேண்டாம் குறைய வேண்டும் என்று நினைப்பது கிடையாது (திருமுழுக்கு அருளப்பரைத் தவிர...) அப்படியிருக்க இயேசுவின் சீடர்களுக்குள் இத்தகைய கேள்வி எழுந்ததில் வியப்பேதும் இல்லை. பெற்றோர்களின் உயிர் பிரியும் முன் சொத்தினை பங்கு போட விவாதம் செய்யும் மனிதர்கள் வாழும் காலத்தில் இயேசுவின் பிரிவிற்கு பின் அவர் பணியை செய்ய, மக்களை வழிநடத்த தங்களுக்குள் உயர்ந்தவர் யார் என்ற விவாதம் அவர்களுக்குள் எழுகிறது. அதனைக் கவனித்த இயேசு மூன்றே வார்த்தைகளில் அதற்கு பதிலளிக்கிறார். அவரின் இப்பதில் இன்றைய காலகட்டத்தில் யார் பெரியவர் என்று கேட்டுக்கொண்டிருக்கும் நமக்கும் பொருந்தும். யார் பெரியவர்? நீயா? நானா? என்று நாம் வாழ்கின்ற சமூகத்தில் சில சமயம் சப்தமாகவும் பல சமயம் மௌனமாகவும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
இன்றைய நற்செய்தியின் மூலமாக இயேசு யார் பெரியவர் என்பதை நமக்கு மூன்று வார்த்தைகளில் சொல்கிறார்.
1. தொண்டனாயிருப்பவர்.
2. வெறுமையாக்குபவர் .
3. ஏற்றுக்கொள்பவர்.
தொண்டனாயிருப்பவர்...
தொண்டன் என்பவன் ஒரு அடிமட்ட நிலை மனிதன் . தனது தலைவன் மற்றும் மக்களைப் பற்றியும் அவர்களின் சூழல் பற்றியும் நன்கு அறிந்தவன். எந்நிலையிலும் தயாராக இருப்பவன் பிறருக்கு உதவ பகிர விருப்பமுடையவன். நல்ல தொண்டனே சிறந்த தலைவனாக முடியும் என்பதை நன்கு உணர்ந்ததனாலே தான் இயேசு , உங்களில் முதன்மையானவராக இருக்க விரும்புபவர் முதலில் தொண்டராக இருக்கட்டும் என்கிறார். சொன்னதோடு மட்டுமல்லாமல் அவர் அப்படி இருந்தும் காட்டினார் தன்வாழ்வினால். நமது வீடுகளில் யார் தலைவர் யார் தொண்டர்.? வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து குடும்பத்தை நிர்வகிக்கும் தாய்மார்கள் ஒரு போதும் தங்களை தலைவர்களாக எண்ணியது கிடையாது. சாதாரண தொண்டர்களிலும் கீழான பணிவிடை புரிபவர்களாகவே தங்களை நினைத்து பணியாற்றுவர். ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவரின் உடல் உள்ள நலன் ஏற்றம் இறக்கம் அனைத்தையும் நன்கு அறிந்தவர் அவர் ஒருவரே. அன்னையர்கள் தொண்டர்கள் போல் செயலாற்றும் தலைவர்கள். எனவே தான் இயேசு ஒரு தொண்டனாக இருந்து ,முதன்மை பெற்று பெரியவர்கள் என்னும் நிலையில் நம்மை நிலைத்து நிற்கச் சொல்கின்றார். அடித்தளத்தை பற்றி நன்கு அறிந்து கொள்வோம் அப்போது தான் அதன் மேல் எப்படிப்பட்ட கட்டிடம் கட்டலாம் என்பதை உறுதி செய்ய முடியும். தொண்டனாயிருந்து தூய தலைவராக முயல்வோம்.
2. வெறுமையாக்குபவர் .....
வெறுமையாக்குதல் என்பது ஒன்றுமில்லாமை . வெற்றிடம். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் விஞ்ஞானி ஒருவர் வெற்றிடத்தில் புவி ஈர்ப்பு விசை குறித்த சோதனையை நிகழ்த்தினார். முதலில் சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட உயரமான இடத்திலிருந்து ஒரு இரும்புக் குண்டு, மற்றும் ஒரு பறவையினது மெல்லிய இறகு இரண்டையும் மேலிருந்து கீழே போட்டார். இரண்டும் அதன் அதன் எடைக்கேற்ப, இரும்பு விரைவாகவும் இறகு தாமதமாகவும் பூமியை தரையை வந்தடைந்தது. அதன் பின் ஒரு காற்று புகா வெற்று அறையினுள் இரும்பு இறகு இரண்டையும் வைத்து, தன் ஆராய்ச்சியை மீண்டும் துவக்கினார். அறை முழுதும் வெற்றிடம் . காற்று கூட இல்லை அனைத்தும் வெளியேற்றப்பட்டு, வெறுமையின் கூடாரத்தில் சோதனை நிகழ்த்தப்பட்டது. எடையில் வேறுபாடுடைய இரும்பு இறகு இரண்டும் மேலிருந்து கீழே வர ஒரே அளவு நேரம் எடுத்துக்கொண்டன. காரணம் வெற்றிடத்திற்கு தெரியாது எடை . அதைப் பொருத்தவரையில் இரண்டும் ஒரு பொருள் . மேலிருந்து போடப்பட்ட அவை இரண்டும் பூமியை அடைய வேண்டும் என்பது மட்டுமே அதன் இலக்கு. சாதாரண ஒரு இடம் வெற்றிடமாகும் போதே இவ்வளவு மாற்றம் என்றால் நமது மனம் வெற்றிடமாகும் போது நம்மில் எவ்வளவு மாற்றாம் உண்டாகும் என்று சிந்திப்போம் . இத்தகைய ஒரு வெற்றிடம் நமது மனதிலும் தோன்றி ஏற்றத்தாழ்வு பார்க்காது பணிபுரிய இயேசு அழைக்கிறார். நம்மை வெறுமையாக்கி, வெறுமையில் நிறைவு காண அழைக்கிறார்.
3. ஏற்றுக்கொள்பவர்.....
மேதினியில் இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் என்பது தமிழ்க்கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகள். தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களிடம் பகிர்ந்து இட்டு வாழ்பவர்கள் பெரியவர்கள் .பகிர்ந்திடாதோர் எல்லாம் இருந்தும் இல்லாதவர்கள் போலாவர் என்கிறார். பொருள் இருப்பவன்- இல்லாதவன், உயர்ந்தவன் -தாழ்ந்தவன் என அனைவருமே சமம் என உணர்ந்து ஏற்று வாழும் மனிதர்களே நல்ல தலைவர்கள் பெரியவர்கள் என இயேசு எடுத்துரைக்கின்றார். ஏற்றுக் கொள்ளுதல் மிகவும் முக்கியமான ஒன்று . எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவரவர் நிறை குறைகளோடு ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். நான் தான் உங்கள் அனைவரின் தலைவன் என்று வீடு வீடாய் சென்று சொல்ல வேண்டிய தேவை இல்லை மாறாக, உடன் வாழும் மக்களின் தேவைகளையும் அவர்களின் ஏற்ற இறக்கங்களையும் நன்கு அறிந்திருந்து செயல்பட்டாலே போதும். அவர்களே சொல்வார்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்கள் நாம் தாம் அவர்களின் தலைவர் பெரியவர் என்று.
எனவே அன்பு உள்ளங்களே செய்வதற்கரிய செயல்களைச் செய்யும் பெரியவர்கள் போல் நாம் செயல்பட முயல்வோம். ஏனெனில் சிறியோர் அத்தகைய செய்வதற்கரிய செயல்களை செய்ய மாட்டார். உடலளவில் சிறியவர்களாக இருந்தாலும் உள்ளத்தளவில் பெரியோராக செயல்பட்டு வாழ அருள் வேண்டுவோம். நம்மால் முடிந்த உதவிகளை தொண்டனைப் போல செய்து , நமது பிறப்பிற்கும் இருப்பிற்கும் (வாழ்க்கைக்கும்) அர்த்தம் இருக்கிறது என்று எடுத்துரைத்து வாழ்வோம். நமது இருப்பால் ஒருவர் பயனடைகிறார் என்றால் நாம் பெரியவர்களே. அப்போது நம்மைப் பார்த்து யாராவது நீங்கள்லாம் யாருப்பா பெரிய ஆளுங்க என்றால், மறுக்காமல் சொல்வோம் ஆம் நாங்களும் பெரியவர்களே என்று..... இறையருள் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தோடும் இருப்பதாக ஆமென்.