இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் 26 வாரம்

எல்லோரும் இறைவாக்கினர்களே

எண்ணிக்கை 11:25-30
யாக்கோபு 5:1-6
மாற்கு ; 9; 39-48


நாம் எல்லோரும் இறைவாக்கினர்கள் என்று கூறி அதன் படி வாழ நம்மை அழைக்கிறது இன்றைய வாசகங்கள் அனைத்தும். இறைவாக்குரைப்பது ஒரு கொடை அதை அனைவராலும் செய்ய முடியாது. இறைவார்த்தையை எவனொருவன் உள் வாங்கி அதை தன் வாழ்வில் செயல்படுத்துகிறானோ அவனே உண்மையான இறைவாக்கினராக இருக்க முடியும். இறைவாக்குரைக்கும் திறன் நம்மில் மறைந்திக்கிறது. நாம் தாம் அதை நம் செயல்களாலும் சொற்களாலும் வெளிப்படுத்தவேண்டும். இதனையே மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் இவ்வாறு கூறுவார், "இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகத்தையே படிக்க வைப்பது நம் ஒவ்வொருவரின் கைகளில் இருக்கிறது" என்பார். அது உண்மை தான். நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை எது என்பதை கண்டறிந்து அதை வெளிப்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும். இதற்கு உறுதுணையாகவே நமது புலனுறுப்புகள் இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி நமக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய உறுப்புகள் நமது நன்மைக்கு உதவாது நம்மை தீமை செய்யும் பாவத்தில் விழச்செய்தால் அதை வெட்டி எறிந்து விடவும் தயங்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார் இயேசு. கண் கை கால் இவை மனிதனுக்கு மிகவும் முக்கியமான உறுப்புகள். அதுவும் இன்றைய தலைமுறையினராகிய நமக்கு கண்ணும் கையும் மிக மிக முக்கியம். அலைபேசியில் நம்மை ஐக்கியப்படுத்த...
இன்றைய முதல் வாசகத்தில் நிகழ்வது போலவே நற்செய்தியிலும் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அது நம்மைச்சாராத ஒருவர் நம் பணியைச்செய்கிறார் என்ற புகார். அதற்கு மோயீசனும் இயேசுவும் கூறும் பதில் ஒன்று. நமக்கு எதிராக இராதவர் நமக்கு சார்பாக இருக்கிறார் என்று உறுதி தருகிறார் இயேசு. ஆண்டவரின் மக்கள் அனைவரும் இறைவாக்கினராகும்படி அவர் அவர்களுக்கு தம் ஆவியை அளிப்பது எத்துணை சிறப்பு என்று எண்ணி மகிழ்கிறார் மோயீசன் . முதல் இரண்டாம் வாசகத்தில் இறைவாக்குரைக்கும் பணி நற்செய்தியில் பேயோட்டும் பணி என்று அவரவர் பெற்ற கொடைகளுக்கேற்ப இறைப்பணியாற்றுகின்றனர் இறைப்பணி ஆற்றுபவர்களால் தூண்டப்பட்டவர்கள். நாமும் இறைவாக்கினர்கள் என்றால் நமது நற்பணியால் நாம் பிறரை தூண்டி இழுக்க வேண்டும். நமது செயல்பாடுகளால் நாம் பிறரை நற்செயல் செய்ய தூண்டுகிறோமா என்று சிந்திப்போம்.
இறைவன் ஏராளமான அருட்கொடைகளால் நம்மை நிரப்பியுள்ளார் . பேசுதல், பார்த்தல், செய்தல், நடத்தல், உணர்தல், எழுதுதல், வரைதல், பாடுதல், என எல்லாவிதமான செயல்களையும் செய்யும் அளவிற்கு ஆற்றல் தந்திருக்கிறார். இந்த திறன்களின் ஆற்றல் உணர்ந்து நம்மை நாம் வளப்படுத்தி கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் மிக முக்கியமானது பேசும் திறன். பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். நமது வார்த்தைகளுக்கு வலிமை உண்டு. அவை நம்மை நல்ல வழிக்கும் இட்டுச் செல்லும், தீய வழிக்கும் இட்டுச் செல்லும். வார்த்தைக்கும் வாழ்விற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. துறவி ஒருவர் தனது சீடர்களுக்கு வார்த்தையின் வலிமை பற்றி போதனை செய்து கொண்டிருந்தார். வார்த்தை வலிமையானது அதை கவனமாக கையாள வேண்டும். எதை நீங்கள் சொல்கீன்றீர்களோ அதுவாகவே மாறுகின்றீர்கள் எனவே நல்லவற்றை சொல்லுங்கள் நல்லவர்களாக வாழுங்கள் என்றார். சீடன் ஒருவனுக்கு சந்தேகம் எனவே உடனே எழுந்து துறவியிடம் தனது சந்தேகத்தைக் கேட்டான். குருவே நான் கடவுளாகிறேன் கடவுளாகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் கடவுளாகி விடுவேனா இல்லை. சாத்தானாகிறேன் சாத்தானாகிறேன் என்று சொல்வதனால் சாத்தானாகி விடுவேனா . அதனால் வார்த்தைக்கும் வாழ்வின் செயலுக்கும் சம்மந்தம் இல்லை என்பதே என் கருத்து என்றான். துறவி சற்று நேரம் அமைதியாயிருந்து விட்டு சீடனைப் பார்த்து, முட்டாளே அதிகமாகப் பேசாதே உட்கார் என்றார். முட்டாள் என்ற வார்த்தையைக் கேட்டதும் கோபமடைந்த சீடன் கொதித்தெழுந்து, நானா முட்டாள் , தெளிவான விளக்கம் சொல்லத் தெரியாத நீ தான் முட்டாள் உன்னிடம் சீடனாய் சேர்ந்தது என் தவறு என்று தனது கோபத்தை எல்லாம் வார்த்தைகளால் கொட்டித் தீர்த்தான். சற்று நேரத்துக்கு பின் துறவி அவனிடம், உன்னை முட்டாள் என்று சொன்னதற்காக என்னை மன்னித்து விடு தெரியாமல் சொல்லி விட்டேன் என்றார். அவரது மன்னிப்பு என்ற வார்த்தையைக் கேட்டதும் சீடனும் தன் தவறினை உணர்ந்து அமைதியானான். துறவி, வார்த்தைக்கு வலிமை உண்டு அது நம் வாழ்வின் செயல்பாடுகளை மாற்றும் என்பதை இப்போது உணர்ந்து கொண்டீர்களா? முட்டாள் என்று சொன்னதும் வந்த கோபம் மன்னித்துவிடு என்றதும் மறைந்து விட்டது கவனித்தீர்களா? என்றார். எனவே தான் சொல்கிறேன் வார்த்தை வலிமையானது என்றாராம்.
பலநேரங்களில் நமது வாழ்க்கையையும் நமது வார்த்தைகள் தான் தீர்மானிக்கின்றன. நாம் தான் அதை கண்டுணர்வதில்லை. நமக்கு வாழ்வை கொடுப்பதும் நம் வாழ்வைக் கெடுப்பதும் நம் வார்த்தைகள் தான். நமது நல்ல வார்த்தைகளினால் செல்வங்களான விலையுயர்ந்த ஆடை,பொன் வெள்ளியையும் பெருக்கிக் கொள்கிறோம். நமது தீய வார்த்தைகளினால் அவற்றை மக்கிப் போக அரித்துப் போக,துருப்பிடிக்கச்செய்கிறோம். வார்த்தைகளில் கவனம் செலுத்துவோம். வளமாக வாழ்வோம். பெரும்பாலும் நமது வாழ்வின் சிக்கல்களுக்கு காரணம் நமது வார்த்தைகள் தான் தகுந்த நேரத்தில் சொல்லாமல் விட்ட வார்த்தைகளும், தேவை இல்லாத இடத்தில் சொல்லிவிட்ட வார்த்தைகளும் தான். ஒரு தவறு நடந்தால் முதலில் பிழைகளை நம்மிடம் இருந்து தேடுவோம். பிறரில் தேடத்துவங்கினால் மீண்டும் தவறுகள் பெரிதாகும் சூழல் ஏற்படும். பிள்ளைகள் வைத்திருக்கும் அலைபேசி பழுதனால் பிள்ளைகளால் தான் அவ்வாறு ஆனது என்று குழந்தைகளை திட்டுகிறோம். அதே பிள்ளைகள் படிக்காமல் போனாலோ காதல் வயப்பட்டு பழுதானாலோ அலைபேசியால் தான் அவ்வாறு ஆனார்கள் என்று அலைபேசியைத் திட்டுகிறோம். தவறை நம்மிடம் இருந்து களைய முற்படுவோம். அன்பான வார்த்தைகளினால் அனைவரையும் கவர முயல்வோம். நமது இறைவாக்குப் பணியை நம் இல்லத்தில் இருந்து தொடங்குவோம். சிறு துளி பெரு வெள்ளம். சிறு கனல் பெரு நெருப்பு என்பதை உணர்ந்து செயலாற்றுவோம். எனவே அன்பு உள்ளங்களே நாம் அனைவரும் இறைவாக்கினர்களாக வாழ அழைக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல. இறைவாக்கினர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதை உணர்வோம். எதிர்கால இறைவாக்கினர்கள் அல்ல நிகழ்கால இறைவாக்கினர்கள். எனவே நம் குரலை இரக்கத்துக்காகவும், காதுகளை கருணைக்காகவும், கைகளைக் கொடைகளுக்காகவும் மனதை உண்மைக்காகவும் கொடுத்து வாழ்வோம். நமது இறைவாக்குப் பணியால் பிறரையும் நற்செயல் செய்யத் தூண்டுவோம். வரலாற்றின் பக்கங்களில் நமது பக்கத்தை அலங்கரிக்க அழகான செயல்களை அன்பாக செய்ய தொடங்குவோம் இறைவனின் ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்.