இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

அன்னை மரியின் பிறப்பு விழா.

தாய்மையின் தாய் பிறந்த தினம்.

மீக்கா; 5:2-5
உரோமையர்: 8: 28-3-
மத்தேயு : 1: 1-16,18-23

அன்னை மரியின் பிறப்பு விழா.

எதைப் பற்றி வேண்டுமானாலும் திட்டவட்டமாக சொல்லிவிட முடியும். ஆனால் தாயின் அன்பை பற்றி முழுமையாக விவரிக்க வார்த்தைகளே கிடையாது. கடலின் ஆழம், கோபுர உயரம், மலையின் அகலம், இது அனைத்திற்கும் ஏதாவது ஒன்று ஈடு / நிகர் இருக்கும். ஆனால் தாயின் அன்பிற்கு நிகர் / ஈடு எதுவுமில்லை. தாய்மையின் மேன்மை குறித்து பலரும் பல கருத்துக்களை கூறியுள்ளனர். கவிஞர் திருவிக.
உலகெல்லாம் உதுப்பிடம் தாய்மை,
உதித்து தங்கி ஓங்குமிடம் தாய்மை,
கலையின் மூலம் கமழுமிடம் தாய்மை, என்று பாடியிருக்கிறார்.
வீரமாமுனிவர், உருவிலான் உருவாகி உலகில் ஓர் மகன் உதிப்ப,
கருவிலான் கருத்தாங்கி கன்னித்தாய் ஆயினயே என்று அன்னை மரியின் தாய்மையைப் பற்றி பாடுகிறார். இத்தகைய தாய்மையின் பிறப்பிடமான அன்னையின் பிறப்பு விழாவையே நாம் இன்று கொண்டாடுகிறோம். அன்னை மரியின் பிறப்பு விழா நாளான இன்று அவரின் மூன்று பண்புகள் வழி அவரைப் போல் வாழ அழைப்புவிடுக்கிறார்.
1. தன் அன்னைக்கு தாய்மை பட்டமளித்தவர்.
2. கேள்விக்குறியை ஆச்சரியக் குறியாக மாற்றியவர்.
3. தாயாவதற்காக தரணி வந்தவர்.

1.தன் அன்னைக்கு தாய்மை பட்டமளித்தவர்.:
வீட்டின் மூத்த குழந்தைகள் மேல் பெற்றொருக்கு எப்பொழுதும் தனிப்பட்ட அக்கறை , பாசம், கவனம் இருக்கும். ஏனெனில் தம்பதியர்களாகிய அவர்களுக்கு பெற்றோர்கள் என்னும் பெரும் பேற்றினைத் தந்தது அந்த முதல் குழந்தை தான். அதிலும் நீண்ட வருடம் கழித்து பிறந்த குழந்தையாய் இருந்தால் சொல்லவே வேண்டாம். மொத்த பாசமும் அதன் மேல் தான் இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் மரியாள், அன்னா சுவக்கீன் என்னும் வயது முதிர்ந்த தன் பெற்றோருக்கு மகளாய்ப் பிறந்து, அவர்களின் புத்திர சோகத்தைத் தீர்க்கின்றார். இதுவரை பிறரால் மலடி என அழைக்கப்பட்டு வந்த அன்னாள், தாய் என்னும் உயரிய மதிப்பினைப் பெற காரணமாகிறார் அன்னை மரியாள். பிறரது ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்கும் தூற்றுதலுக்கும் உள்ளான அன்னாள், இன்று பிறரால் ஆச்சரியமாக மகிழ்வாக, விரும்பி பேசப்படும் ஒரு நபராக மாற காரணமாயிருக்கிறார் அன்னை மரியாள். எத்தனையோ பேருக்கு அன்னாள் தனது வாழ்நாளில் பிற பெண்களின் பிரசவ காலத்தில் உறுதுணையாய் இருந்திருப்பார். இன்று தான் அன்று செய்த நற்செயல்களுக்கான கைம்மாறை பெற காத்துக் கொண்டிருக்கும் ஒரு ஆளாக மாறி இருக்கின்றார். அன்னை மரியாள் பிறப்பின் போதே பலருடைய இன்னல்களைப் போக்கி இனிமையைக் கொண்டு வந்திருக்கிறார். நாம் அன்னை மரியாள் போல என்றாவது செயல்பட்டிருக்கிறோமா சிந்திப்போம். பிறரை மகிழ்விக்கும் ஒரு நபராக, பிறரின் மகிழ்விற்கு காரணமாக இருப்பவராக இருக்க முயல்வோம். பிறரின் இன்னல் நீக்கி இனிமை சேர்ப்பவர்களாவோம்.
ஆச்சரியக் குறியைக் கேள்விக் குறியாக்கியவர்.:
முதிர் வயதினருக்கு மகிழ்வே, தன் பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளின் உடன் இருப்பும் உறவும் தான். அவர்களது எதிர்காலமே, குழந்தைகளின் வாழ்வும் வளர்ச்சியும் தான். அவர்களது சிறு சிறு அசைவிலும், சொல்லிலும், செயலிலும் உலகத்தையும் தன்னையும் மறந்து மகிழ்வடைவர். அத்தகையதொரு எல்லையில்லா மகிழ்வை அன்னாள் சுவக்கீன் என்னும் தன் பெற்றோருக்கு கொடுக்கின்றார் அன்னை மரியாள். தங்களது வாழ்வு இப்படியே முடிந்து விடுமோ என்று எண்ணி ஏங்கியவர்களுக்கு புது வாழ்வாய் உதயமாய் பிறக்கின்றார். பெரியவர்களின் எதிர்கால வாழ்வு பற்றிய கேள்விக்குறியை ஆச்சரியக் குறியாக மாற்றி மகிழ்வு தருகின்றார். அன்னை மரியாள். நாம் என்றாவது கேள்விக்குறியாக இருப்பவர்களின் வாழ்வை ஆச்சரியக் குறியாக மாற்றி இருக்கின்றோமா? அதாவது, பிறரின் வாழ்விற்கு வளம் சேர்த்த நாட்கள் நேரங்கள் உண்டா? என சிந்திப்போம். குறைந்த பட்சம் ஆச்சரியக்குறியுடன் (மகிழ்வுடன் ) வாழ்பவர்களின் வாழ்வை கேள்விக்குறியாக ( குழப்பமாக ) மாற்றாதிருக்க முயல்வோம். பெரியவர்களோ சிறியவர்களோ அவர்களின் மகிழ்விற்கு மகிழ்வு சேர்க்கும் காரணிகளாக வாழ முயல்வோம்.
தாயவதற்காக தரணி வந்தவர்:
நம் ஒவ்வொருவரின் பிறப்பிற்கும் ஒரு காரணம் உண்டு. அதுபோல நாம் வாழ்கிறோமா என்றால் அது யோசிக்க வேண்டிய ஒரு விசயம். ஆனால் அன்னை மரியாளின் பிறப்பிற்கு காரணம் அவர் இறைமகனின் தாயாக வேண்டும் என்ற ஒரு காரணமே. நான் மருத்துவராவேன் பொறியியலாளராவேன் விஞ்ஞானியாவேன் என்று சிறு வயதில் சொல்லித் திரியும் குழந்தை, காலப் போக்கில் அதை மறந்து விடும். ஒவ்வொரு முறையும் யார் அதன் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறார்களோ அவராக மாறவேண்டும் என முடிவு செய்யும். அதையே பிறரிடம் வெளிப்படுத்தவும் செய்யும். உதாரணத்திற்கு தன் அம்மா அப்பா போல,தன் உறவினர்கள் போல, தான் பார்க்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளின் கதை மாந்தர் போல என் தன் முடிவை மாற்றிக் கொண்டே இருக்கும். இறுதியில் தனக்கென்று ஒரு துறையை, வளர்ந்த பின் தேர்ந்தெடுத்து அதுவாக மாற முயற்சிக்கும். ஆனால் அன்னை மரியாள் அப்படியில்லை. சிறுவயது முதலே இறைவனின் தாயாகும் நிலைக்கு தன்னை தகுதிப்படுத்துகிறாள். அவர் அறியாமலேயே அப்பண்பு அவரை அந்நிலைக்கு உயர்த்துகிறது பிறக்கும் போதும் வளரும் போதும் வளர்ந்த பின்பும் என எல்லா நேரத்திலும் இறைவனின் தாயாகவே உருமாறுகிறார். நமது பிறப்பின் நோக்கம் என்ன? நமக்கென்று கொடுக்கப்பட்டுள்ள இறைத்திருவுளத்தை நாம் நிறைவேற்றுகின்றோமா? சிந்திப்போம். எனவே அன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் இந்நாளில் அன்னையைப் போல துன்புறும் மனிதர்களுக்கு தூய மகிழ்வைத் தருபவர்களாவோம். எதிர்காலத்தைப் பற்றிய ஏக்கங்களுடன் காத்திருப்பவர்களுக்கு விடைதரும் விழுதுகளாவோம். பிறப்பின் நோக்கத்தை உணர்ந்து செயல்படும் செயல் வீரர்களாகத்திகழ்வோம். அன்னையின் பண்பில் மிளிர்ந்து அவரைப் போல வாழ முயற்சிப்போம். இறையாசீர் என்ன்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்.