இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் 22 வாரம்

பட்டை தீட்டுங்கள் --- எண்ணம் சொல் செயலை......

இணைச்சட்டம் 4; 1-2,6-8.
திருத்தூதர் பணிகள் ; 1; 17-18, 21-22
மாற்கு ; 7 1-8, 14,15, 21,22.


இறை இயேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே இன்றைய வாசகங்கள் அனைத்தும் நமது உள்ளத்தைப் பட்டை தீட்ட, இறைவனின் வார்த்தை கொண்டு மெருகேற்ற அழைக்கிறது. பெரும்பாலும் நாம் தீட்டு என்று சொன்னவுடன் உடல் தீட்டைத் தான் முதலில் நினைவு கூர்வோம். நமது முன்னோர்கள் தமிழர்கள், தீண்டத்தகாததை தீண்டுவது தீட்டு. தீட்டுள்ளவர்(ரால்) தூய இறைவனை வழிபட இயலாது என்பர். ஏன்? எதனால்? அப்படியானால் தீண்டத்தகாதது எது? காமம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம் ஆகிய ஐந்துமே தீட்டு.
முதலாவது காமம் என்னும் ஆசை. ஆசைப்பட்ட பொருளை அடைய நினைப்பது.(உறவுகள் மட்டுமல்ல உடைமைகள் மீதும் ஆசைப்படுதலும் காமம் தான்) அதை தனதாக்கும் காலம் வரை சதா அதே நினைப்பாக இருப்பது. வேறு எதிலும் கவனம் செலுத்தாது இருப்பது. இதில் இவர்களால் கடவுளை எப்படி நினைக்க முடியும்.
இரண்டாவது குரோதம் என்னும் கோபம் . சிலர் இதனை செயல் மூலம் வெளிப்படுத்துவர், (நமது வீட்டு பொருள்கள் சொல்லும் இதனை) சிலர் வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்துவர். கோபத்தில் கடவுளை அல்ல கண்ணில் காணும் நபரைக் கூட நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியாது.
மூன்றாவது லோபம் என்னும் சுயநலம். தான், தனது என்று தன்னை பற்றி மட்டுமே நினைத்து செயல்படுபவர். இவர்களால் பிறரைப் பற்றியும் எண்ண முடியாது இறைவனைப் பற்றியும் நினைக்க முடியாது.
நான்காவது மதம் என்னும் கர்வம் ஆணவம். என்னால் மட்டுமே இதை செய்ய முடியும் என்ற ஆணவம் அகங்காரம் இருப்பவர்களால் நிச்சயம் கடவுளை துதிக்க முடியாது.
ஐந்தாவது மாச்சர்யம் என்னும் பொறாமை. இவர்கள், தான் நன்றாக இருந்தாலும் பிறர் நன்றாக இருக்கிறார்களே என்று எண்ணி பெருமூச்சு விடுபவர்கள் இவர்களாலும் கடவுளை வழிபட முடியாது. ஆக இந்த ஐந்தும் தான் தீட்டு தீண்டத்தகாதவைகள். இவர்களால் கடவுளை முழுமனதுடன் அணுக இயலாது. எனவே தான் இறைவனின் ஆலயத்திற்கு செல்லும் முன் குளித்து விட்டு உடல் அழுக்கோடு மன அழுக்கையும் அகற்றி விட்டு செல்ல சொல்வர். இதனால் உடல் தூய்மையால் உள்ள மாற்றத்திலும் சிறிதளவாவது மாற்றம் வரும் என்று நம்பிக்கை. தீட்டு என்பதற்கு வேறு பல அர்த்தங்களும் தமிழ் மொழியில் உண்டு. வர்ணம் தீட்டுதல், வைரத்திற்கு பட்டை தீட்டுதல், கூர்மை தீட்டுதல் மை தீட்டுதல் என்று சொல்லிக் கொண்டே போகலாம் .நிற்க...
இன்றைய அனைத்து வாசகங்களும் நாம் நமது உள்ளத்தின் தீட்டு எவை? எவைகளெல்லாம் நம் உள்ளத்தை தீட்டுப்படுத்துகின்றன என்பதைப் பற்றியும், அவற்றை இறைவார்த்தை மூலம் களைந்து நல்ல முறையில் பட்டை தீட்டுதல் பற்றியும் நமக்கு எடுத்துரைக்கின்றன. முதல் வாசகம், கடவுளின் கட்டளைகளை நீங்கள் கடைபிடித்தால் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட பேரினம் என பிற மக்கள் உங்களைப் போற்றுவர் என்கிறது. இரண்டாம் வாசகம், இறைவார்த்தையை கேட்கின்றவர்களாக மட்டும் இல்லாமல் அதன் படி நடக்கின்றவர்களாகவும் இருங்கள் என்கிறது. நற்செய்தி வாசகமோ, உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தளவில் இறைவனைப் போற்றுங்கள் என்கிறது.
மனிதனுக்கு இறைவன் கொடுத்த கட்டளைகள் அனைத்தும் அதன் வழி இறைவனை அடைவதற்காக தான். உதாரணத்திற்கு நமது புறவழிச்சாலைகள் அனைத்தும் நாம் சென்றடைய வேண்டிய இடத்தை நல்ல முறையில் அடைவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. அதைவிடுத்து எனக்கு சாலை தான் முக்கியம் எனது இலக்கு முக்கியமல்ல என்று இருந்தால் அதனால் பாதிக்கப்படுவது நாம் தான். சாலைகளை பராமரித்து விட்டு பயணத்தை கைவிட்டால் யாருக்கு லாபம்.? நம்முடைய பல செயல்பாடுகள் பல நேரங்களில் அப்படித்தான் இருக்கின்றன. நம்முடைய சட்ட திட்டங்களும் கோட்பாடுகளும் கொள்கைகளும் நம்மை இறைவனிடம் அழைத்துச்செல்வதற்காகத் தான் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். அப்படி உணர்ந்து செயல்பட சிறிது நேரம் நின்று நமது இலக்கை பற்றிய செயலைக் கூர்மைப்படுத்தி அதன் பின் நமது பயணத்தைத் தொடங்க வேண்டும்.
வைரம் மாணிக்கம் பவளம் போன்ற விலை மதிக்க முடியாத கற்கள் பெரும்பாலும் சாதரண மண்ணோடும் கற்களோடும் இணைந்து காணப்படும். எனவே அந்த தேவை இல்லாத பொருள்களிலிருந்து தேவையான அந்த கற்களை எடுப்பதற்கு பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றுவர். பின் எடுத்த கற்களை பட்டை தீட்டீ மெருகேற்றி காண்போர் கண்களைக் கவரும் கவின்மிகு கற்களாக அதனை உருமாற்றுவர். நமது உள்ளமும் இந்த விலைமதிக்க முடியாத கற்களைப் போன்றதே. நமது உள்ளத்தை சுற்றி மேலே சொன்ன இந்த ஐந்து வகை மண் கற்களும் படிந்திருக்கின்றன. இவற்றை இறைவார்த்தை கொண்டு பிரித்தெடுத்து, நமது நற்செயல்கள் மூலம் மெருகேற்ற இறைவன் அழைக்கிறார். முதலில் நமது எண்ணத்தை பட்டை தீட்டுவோம் நல்லவற்றை சிந்திப்பதன் மூலம். நமது நல்ல எண்ணம் நம்மை மட்டுமல்லாது நம்மை சுற்றி இருப்பவர்களையும் நல்ல விதத்தில் பாதிக்கும். உதாரணத்திற்கு கொட்டாவி நாம் விட்டால் நம் அருகில் இருப்பவரும் உடனே கொட்டாவி விடுவார். ஒருவர் தூங்கி வழிந்தால் உடனே அடுத்தவருக்கும் தூக்கம் கண்ணைச்சுற்றி வரும். சாதாரண ஒரு நடைமுறை செயலே அருகில் இருப்பவரை எளிதில் மாற்றும் போது நம்முடைய ஆக்கமுள்ள ஒரு நல்ல எண்ணம் நிச்சயம் நம் அருகில் இருப்பவரை மாற்றும் என்று நம்புவோம்.
ஒரு செயலை செய்யத் தொடங்கும் முன் அது நல்லபடியாக நடக்கிறது, நடக்கப் போகிறது, நடந்து முடிகின்றது என்று எண்ணுவோம். அது அப்படியே நடக்கும். நமது நல்ல எண்ணம் நல்ல சொல்லாகும் . நல்ல சொல் நல்ல செயலாகும் . நமது உள்ளத்திலிருந்து வெளியே வருகின்ற நல்ல வார்த்தை பிற மனித உள்ளங்களிலும் நல்ல பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தளவில் இறைவனை வழிபடுபவர்களாக நாம் மாறுவோம். நல்ல கொடைகளையும் நிறைவான வரங்களையும் இறைவனிடம் இருந்து பெறுபவர்களாவோம். நாம் குரல் எழுப்பும் போதெல்லாம் கடவுள் நம்மோடு இருக்கும் அருள் பெறுவோம். எனவே அன்பு உள்ளங்களே தீட்டு தீட்டு என்று உடல் தீட்டையும், கட்டளைகளை கடைபிடிக்கும் வரைமுறைத் தீட்டையும் பற்றி எண்ணாது நமது உள்ளத்தை இறைவன் பக்கம் திருப்பும்படி எண்ணத்தை சொல்லை செயலை பட்டை தீட்டுவோம். பட்டை தீட்ட தீட்ட பளிச்சிடும் பவளக் கற்கள் போல நம் வாழ்வும் இறை ஒளியால் சுடர் வீச அருள் வேண்டுவோம் .இறைவன் நம்மையும் நம் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக ஆமென்.