இவ் மறையுரையை வழங்குபவர்

Sr.Merina O.S.M
Chiesa parrocchiale san Vittore rho, Milan, Italy
Email: srmerina31@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் 20 வாரம்

எது ஞானம்?

நீதிமொழிகள் ; 9; 1-6
எபேசியர்: 5; 15-20
யோவான் 6; 51-58


மாயையிலிருந்து விடுப‌ட்டு ஞான‌த்தை நோக்கிச் செல்வ‌தே உண்மையான‌ ஆன்மீக‌ம் அல்ல‌து நிலை வாழ்வு என்று ஆன்மீக‌ வாதிக‌ள் ப‌ல‌ர் அருட்பொழிவு ஆற்றுவ‌துண்டு. ஞான‌ம் , மாயை என்னும் ம‌திகேடு, நிலைவாழ்வு இதனைப் ப‌ற்றித் தான்‌ இன்றைய‌ அனைத்து வாசக‌ங்க‌ளும் பேசுகின்ற‌ன‌. எது ஞான‌ம்? எது மாயை? நாம் திரைப்ப‌ட‌ம் அல்ல‌து நாட‌க‌ம் பார்க்கின்றோம். ந‌ம‌க்கு மிக‌வும் பிடித்த‌ க‌தாபாத்திர‌ங்க‌ள் ந‌டிக‌ர்க‌ள் திரையில் துன்புற்றால், நாம் இங்கு க‌ண்ணீர் வ‌டிக்கின்றோம். அதுவே ந‌கைச்சுவை சொல்லி ம‌கிழ்வித்தால் புன்ன‌கைத்து பூரிப்ப‌டைகிறோம். இது நிஜ‌மில்லை என்று தெரிந்திருந்தும் ஏன் இவ்வாறு செய‌ல்ப‌டுகிறோம். கார‌ண‌ம், நாம் நிழ‌லை நிஜ‌மாகவே எண்ணி அத‌னை பின்தொட‌ர்கிறோம் . அது சொல்வ‌து செய்வ‌து அனைத்தும் உண்மை என்றே எண்ண‌ ஆர‌ம்பித்து விடுகிறோம். நாம், ந‌ம் முன் இருக்கும் திரை, என்ற‌ இர‌ண்டு நிலையில் இருந்து மாறி அந்த‌ திரையை இய‌க்குப‌வ‌ர் என்ற‌ மூன்று ஆள் நிலைக்கு நாம் மாறும் போது ஞான‌முள்ள‌வ‌ர்க‌ளாக‌ மாறுகிறோம்.
நாம் பெரும்பாலும் ஞான‌ம் என்ற‌ வார்த்தையை அதிக‌மாக‌ உப‌யோகிப்ப‌தில்லை. அத‌ற்கு மாறாக‌ புத்திசாலி, அறிவாளி என்று கூறி விடுகிறோம். எத‌ன் அடிப்ப‌டையில் ஒருவ‌ரை புத்திசாலி என்றோ அறிவாளி என்றோ நாம் கூறுகிறோம்? ந‌ம‌க்கு தெரியாத‌ ஒன்றை, அல்ல‌து நாம் கேட்ட‌றியாத‌ ஒன்றை யாராவ‌து செய்தால் சொன்னால் உட‌னே அவ‌ரை அறிவாளி,புத்திசாலி என்று கூறுகிறோம். அவ‌ர்க‌ள் எல்லாம் உண்மையிலேயே அறிவாளிக‌ளா? இப்போதுள்ள‌ குழ‌ந்தைக‌ளுக்கு நாம் ப‌ய‌ன்ப‌டுத்தும் தொலை தொட‌ர்பு சாத‌ன‌ங்கள் ப‌ற்றிய‌ அனைத்தும் ந‌ம்மை விட‌ அதிக‌மாக‌வே தெரிகிற‌து. அதனால் அவ‌ர்க‌ள் அறிவாளிக‌ளாக‌ ஆகிவிடுவார்க‌ளா? முடியாது. அத்தியாவ‌சிய‌மான‌ காரிய‌ங்க‌ள் ப‌ற்றி தெரியாம‌ல், ஆட‌ம்ப‌ர‌மான‌ காரிய‌ங்க‌ள் ப‌ற்றிய‌ அறிவு இருப்ப‌தால் ஒரு ப‌ய‌னும் இல்லை. குழ‌ந்தைக‌ளுக்கு எது ந‌ல்ல‌து எது கெட்ட‌து எது தேவை , தேவை இல்லை என்று ப‌குத்தறிய‌க்‌ கூடிய‌ அறிவு அனுப‌வ‌ம் தான் முத‌லில் தேவை.
இன்றைய‌ முத‌ல் வாச‌க‌ம் ஞான‌த்தின் செய‌ல்க‌ளை , ஞான‌முள்ள‌வ‌ர்க‌ள் செய்யும் செய‌ல்க‌ளைப் ப‌ற்றிக்கூறுகின்ற‌து. ஞான‌ம் த‌ன‌க்கென்று ஒரு வீடு க‌ட்டுகிற‌து. அதாவ‌து த‌ன்னை ஒரு நிலைக்கு நிறுத்துகிற‌து. ஏழு தூண்க‌ள் கொண்டு அதை நிலையான‌ வீடாக‌ ஆக்குகிற‌து. இத‌ன்மேல் இன்னும் ப‌ல‌ வீடுக‌ள் க‌ட்டும‌ள‌வுக்கு அடித்தள‌த்தை திட‌மாக‌ போட்டு க‌ட்டுகிற‌து. த‌ன‌து ம‌கிழ்வை பிற‌ருட‌ன் ப‌கிர‌ விரும்பி அனைவ‌ரையும் அழைக்கிற‌து. சுவையான‌ விருந்து சமைக்கிற‌து. த‌ன‌க்கு நேர், எதிர் குண‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளையும் விருந்திற்கு அழைக்கிற‌து. த‌ன்னைப் போல‌ வாழ‌ அறிவுரை கூறுகிற‌து. நாம் ஞான‌முள்ள‌வ‌ர்க‌ளாக‌ வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா? ந‌ம‌து எதிராளிக‌ள் என்று நாம் எண்ணிக் கொண்டிருப்ப‌வ‌ர்க‌ளையும் அழைத்து அவ‌ர்க‌ளோடு விருந்துண்ண‌ விரும்புகிறோமா? சிந்திப்போம். ப‌கிர்த‌ல் இன்று ந‌ம்மில் மிக‌ அரிதாகி விட்ட‌து. முன்ன‌ர் எல்லாம் கூட்டுக் குடும்ப‌ வாழ்வு . ஓரு திண்ப‌ண்ட‌ம் பெரிய‌வ‌ர்க‌ள் வாங்கி வ‌ந்தால் அனைவ‌ருக்கும் ச‌ம‌மாக‌ பிரித்து இணைந்து உண்போம். உன‌க்கு இது பிடிக்கும் அல்ல‌வா நீ அதிக‌மாக‌ சாப்பிடு என்று அன்போடு ப‌கிரும்போது, உண்மையான‌ அன்பு அங்கு நிலைக்கிற‌து. ம‌று முறை யாரும் சொல்லாம‌லே நாம் ந‌ம்மிட‌ம் இருப்ப‌தை ப‌கிரும் நிலைக்கு மாறுகிறோம். இப்ப‌டியாக‌ ந‌ல்ல‌ குண‌ங்க‌ள் வாழ்க்கை செய‌ல்பாடுக‌ள் மூல‌மாக‌ க‌ற்பிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. இன்றோ வ‌ள‌ர்க்கும் போதே பிரிவு. த‌னிக்குடித்த‌ன‌ம் , ஒன்று அல்ல‌து இர‌ண்டு பிள்ளைக‌ள். பொருள் வாங்கும் போதே இது அக்காவிற்கு இது த‌ம்பிக்கு . ச‌ண்டை போட‌க்கூடாது. அவ‌ர‌வ‌ர் பொருள் அவ‌ருக்கு என்று பிரித்து கொடுக்க‌ ஆர‌ம்பிக்கின்றோம். அப்போது எங்கிருந்து வ‌ரும் உறவு? ‌ விளையாட்டுப் பொருளில் ஆர‌ம்பிப்ப‌து க‌டைசியில் வாழ்வில் இறுதி வ‌ரை நிலைத்துவிடுகிற‌து. இதில் எப்ப‌டி ப‌கிர்வ‌து? எப்ப‌டி ஞான‌த்தைப் போலாவ‌து?. உட‌ன் பிற‌ப்புக்க‌ளோடு ப‌கிராத‌வ‌ன் ஊரானோடு எப்ப‌டி பகி‌ர‌ முடியும்? ந‌மது பிள்ளைக‌ளை ஞான‌முள்ள‌வ‌ர்க‌ளாக‌ வ‌ள‌ர்க்க‌ வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். ஆண்ட‌வ‌ரைப்ப‌ற்றிய‌ அச்ச‌மே ஞான‌த்தின் தொட‌க்க‌ம் என்கிற‌து நீதி நூல்.
என் பிள்ளைக‌ள் கோவிலுக்கே வ‌ர‌ மாட்டேன் என்கிறார்க‌ள் என்று அங்க‌லாய்க்கும் பெற்றோர்க‌ள் ஏராள‌ம். கோவிலுக்கு போ க‌ட‌வுளை கும்பிடு என்று சொல்வ‌தை விடுத்து, நான் போகிறேன் ந‌ம‌து குடும்ப‌த்திற்கு இவ்வ‌ள‌வு ஆசீர்வாத‌ம் கிடைத்திருக்கிற‌து என்று உங்க‌ளுடைய‌ க‌ட‌வுள் அனுப‌வ‌த்தை சொல்லி வ‌ள‌ருங்க‌ள். உங்க‌ள் பிள்ளைக‌ள் உங்க‌ளைப் போல‌ அல்ல‌ உங்க‌ளை விட‌ அதிக‌மாக‌ க‌ட‌வுள் ப‌க்தி கொண்டு விள‌ங்குவார்க‌ள். சொல்லை விட‌ செய‌லுக்கு அதிக‌ வ‌லிமை உண்டு . என‌வே தான் இயேசு சொன்ன‌தோடு ம‌ட்டும‌ல்லாம‌ல் செய்தும் காட்டினார். அவ‌ர்த‌ம் சீட‌ர்க‌ள் அவ‌ர் க‌ட‌ல் க‌ட‌ந்து செய்த‌ ப‌ணியை , க‌ண்ட‌ம் க‌ட‌ந்து செய்தார்க‌ள்.
ஞான‌ம் விடுக்கும் அழைப்பு ; வாருங்க‌ள் ,உண்ணுங்க‌ள், வாழுங்க‌ள் என்று ந‌ம்மை அழைக்கிற‌து. அழைப்பவ‌ர் யார்? எங்கு எத‌ற்காக‌ அழைக்க‌ப்படு‌கிறோம்? என‌ உண‌ர்ந்து வாழ்ந்தால் வாழ்வு சிற‌க்கும்.
நாம் ந‌ல‌முட‌ன் வாழ‌ வேண்டும் , துடிப்புட‌ன் தொட‌ர்ந்து ப‌ணி செய்ய‌ வேண்டும் என‌ எண்ணுப‌வ‌ர்க‌ளே ந‌ம‌க்கு உண‌வ‌ளிப்ப‌ர். உதார‌ண‌த்திற்கு ந‌ம‌து அன்னைய‌ர் அனைவ‌ருமே ( அன்ன‌ம் அருள்ப‌வ‌ர் ) ஞான‌ம் சுவையான‌ உண‌வை ச‌மைத்து வைத்து ந‌ம்மை அழைக்கிற‌து. அத‌ன் உண‌வை உண்டு, நாமும் அதுபோல‌ மாற‌ அழைக்கிற‌து.
வாருங்க‌ள் உண்டு உற‌ங்குங்க‌ள் என்று சொல்ல‌வில்லை. இந்த‌ உண‌வினை உண்டு பேதைமையை விட்டு வில‌குங்க‌ள், உண‌ர்வை அடையும் வ‌ழியில் செல்லுங்க‌ள் என்று ந‌ம‌க்கு பாதை காட்டி அறிவுறுத்துகிற‌து.
இயேசுவும் இதைத் தான் சொல்கிறார். கொஞ்ச‌ம் வித்தியாச‌மாக‌ அழைக்கிறார். ஞான‌ம் போல‌ த‌ன் தோழிகளை அனுப்பி அழைக்க‌வில்லை. தானே நேர‌டியாக‌ சென்று அழைக்கிறார். 7 அருட்சாத‌ங்க‌ளைக் கொண்ட‌ திருச்ச‌பை என்னும் நிலையான‌ வீட்டிற்கு அழைக்கிறார். சுவையான‌ உண‌வை ச‌மைக்க‌வில்லை. த‌ன்னையே சுவை மிகு உண‌வாக‌ த‌ருகிறார்.
என் உண‌வை உண‌வாக‌ உண்டு இளைப்பாறுங்க‌ள் என்னோடே த‌ங்குங்க‌ள் என்று கூற‌வில்லை . மாறாக‌ நிலைவாழ்விற்கு நீங்க‌ள் அழைத்துச்செல்ல‌ப்ப‌டுவீர்க‌ள் என்கிறார். முத‌ல் வாச‌க‌த்தில் ஞான‌ம் ந‌ம்மை அழைக்கிற‌து. ந‌ற்செய்தி வா‌ச‌க‌த்தின் மூல‌ம் ஞான‌மாம் இயேசு ந‌ம்மை அழைக்கிறார். இர‌ண்டாம் வாச‌க‌த்தில் இந்த‌ ஞான‌த்தை விட்டு வில‌காதிருங்க‌ள் ஞான‌த்தோடு வாழுங்க‌ள் என்று அழைப்பு விடுக்கின்றார். ஞான‌மாம் இயேசுவை அடைய‌ அவ‌ரை உண்டு அவ‌ரைப் போல‌ வாழ‌ ஆசிப்போம். ந‌ம் மாயைக‌ளைக் க‌ளைந்து அவ‌ரை அணிந்து கொள்ள‌ முய‌ல்வோம். அவ‌ர்த‌ம் ஞான‌ம் ந‌ம்மை வ‌ழிந‌ட‌த்த‌ட்டும் ஆமென் .